சென்ற வருடம்
என் முதல் படம் வெளியானது
முதல் படமே வெற்றியடைந்ததை
இன்றும்
ஒன்றிரண்டு பத்திரிகைகள்
பேசிக்கொண்டிருக்கிறது
ஒளிப்பதிவு அருமை
கதாநாயகன் அறிமுகத்திலேயே அசத்தியிருக்கிறார்
வித்தியாசமான முயற்சி
இப்படி பல பல பாராட்டுக்கள்
இந்த பண்டிகை நாளில்
ஏதோ ஒரு தனியார் தொலைக்காட்சி
அதை ஒளிபரப்புகிறார்கள்
நானும் பார்க்கிறேன்
கதாநாயகன் பாறையில் எதையோ
வரைந்து கொண்டிருக்கிறான்
முகத்தில் சோகம் அப்பியிருக்கிறது
மிகவும் மோசமான உடல் நிலையில்
அம்மா தவிக்கிறாள்
வைத்தியம் பார்க்க இயலாத பண முடை
பக்கத்து வீட்டு பெண்ணை
பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு
அம்மன் சிலை செய்ய
ஏதோ ஒரு ஊருக்கு பயணமாகிறான்
கோவில் வேலை மும்முரமாய் நடக்கிறது
இவன் அம்மன் சிலை வேலையில்
தன்னை ஆழ்த்திக்கொள்கிறான்
அம்மனின் கண்கள்
அம்மாவின் கண்களை ஒத்திருக்கிறது
பார்த்து பார்த்து செதுக்குகிறான்
கோவில் வேலை முடிந்து
கும்பாபிஷேகம் நடக்கிறது
இவன் ஊர் திரும்பிகிறான்
பேசாத சிலையாய்
அம்மா இறக்கிறாள்
படம் முடிந்திருந்தது
நான் அழுகிறேன்
4 comments:
இந்தக் கவிதையோட உணர்வு எனக்கு மிகவும் நெருக்கமாயிருக்கிறது,
//அம்மனின் கண்கள்
அம்மாவின் கண்களை ஒத்திருக்கிறது
பார்த்து பார்த்து செதுக்குகிறான்//
இயக்குனரின் உளி, அருமையா இருக்கு
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர் என்ற நிலையிலிருந்து இயக்குனர் என்ற நிலைக்கு வருவதற்குள் எவ்வளவு அவலங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது எனக்கு கூடுதலாகவே தெரியும்.
ஒரு வகையில் அந்த அம்மன் சிலை செய்கிறவனோட நிலை தான், அறிமுக உதவி இயக்குனனோட நிலையும்,,,,,,
பகிர்தலுக்கு நன்றி யாத்ரா.தன்னை நிரூபிப்பதற்கான போராட்டத்தில் முனைந்திருக்கையில் எதிர்கொள்ளும் அவலங்கள், நிரகாரிப்பு எல்லாமே கொடுமையான ரணங்கள் தான்.
யாத்ரா சொல்வதுபோல் நானும் அறிவேன். இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. நன்றி சுகிர்தா!
இந்த பகிர்தல் மனதுக்கு இதமாய் இருக்கிறது. நன்றிஙக நண்பரே. உங்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது?
Post a Comment