Saturday, September 26, 2009

அன்பென்ற மழையிலே - 3

எனக்கு வார நாட்களில் அதிகாலையில் எழுந்திருப்பது மிக கஷ்டமான விஷயம். ஆனால் வார இறுதி நாட்கள் அப்படியல்ல. வார இறுதி நாட்களில் எப்படி தான் விரைவில் விழிப்பு வருகிறதோ தெரியவில்லை. அலுவலகம் செல்ல வேண்டாம் என்பதற்காகவே பாயசம் சுவைத்து கொண்டாடலாம் வார இறுதி நாட்களை. இன்று புதன்கிழமை இன்னும் மூன்று நாட்களை நகர்த்த வேண்டும் சென்னை செல்ல என யோசித்தபடியே சற்று படுத்து கிடந்தேன். கொசு கொசுவென இரவு முழுதும் மழை தூறிக் கொண்டிருந்தது. அதனாலேயே இன்று குளிர் சற்று அதிகமாய் இருக்கிறது. இந்த குளிருக்கு இதமான மெத்தையின் சுகம் இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே கிடக்கச் சொல்லியது. சோனாவும் சகானாவும் இன்னும் உறக்கத்தில்.

நாங்கள் மூன்று தோழிகள் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருக்கிறோம். சோனா டெல்லியை சார்ந்தவள் சகானாவின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தின் சிக்மங்களூர். இங்கு வந்த பிறகு தான் எனக்கு இவர்கள் பழக்கம். இருவருமே இனிய தோழிகள். சகானா முதலில் எழுந்து சென்றாள். அவளை தொடர்ந்து நானும். இருவரும் பல் துலக்கி விட்டு பக்கத்தில் இருந்த மெஸ்ஸுக்கு காபி குடிக்க வந்தோம். சோனாவுக்கு காபி பழக்கம் இல்லாததால் இன்னும் உறக்கத்தில் இருந்த அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வந்தோம். நாங்கள் டோக்கன் வாங்க போவதற்கு முன்னேயே நாங்கள் நுழைவதை பார்த்ததும் கல்லாவில் இருந்தவர் இரண்டு காப்பிக்கான டோக்கன் கிழித்து வைத்திருந்தார். தினமும் செல்வதால் எங்களைப் பரீட்சயம் அவருக்கு. சகானா நமஸ்காரா ரீ என்றாள். நானும் அவளுடனேயே புன்னகைத்து வணக்கம் செலுத்துவது போல் தலையை மட்டும் ஆட்டினேன். அவரும் புன்னகைத்தபடியே பதில் வணக்கம் செலுத்தினார். எனக்கு சகானாவை இந்த விஷயத்தில் பிடிக்கும். எந்த கூச்சமுமில்லாமல் எல்லாரோடும் ஒரு சகஜமான உரையாடலில் அவளால் எளிதில் ஈடுபட முடிகிறது. எனக்கு புதிதாக பார்பவர்களிடம் மட்டுமல்ல எத்தனை முறை பார்த்தாலும் ஒரு சிலரிடம் பேச எப்போதுமொரு வித தயக்கம் இருக்கும். அவர்களாக முன் வந்து பேசினால் தான் என்னால் பேச முடியும். வயதானவர்களிடமும் குழந்தைகளிடமும் எளிதில் பழக முடிகிறது. அவர்களிடம் இருக்கும் ஒளிவு மறைவற்ற பழக்கமும் பேச்சும் என்னை அவர்களோடு இணைக்கிறது.

சகானா கூட அவளாக தான் என்னொடு வந்து பேசினாள். சகானா மூலமாகத்தான் எனக்கு சோனாவையும் தெரியும். நான் வேலைக்கு வந்த புதிதில் தங்கி இருந்த ஒரு விடுதியில் அறிமுகமாகி பின் மூவரும் வீடு பார்த்து வெளி வந்துவிட்டோம். எனக்கு கன்னடம் சொல்லி கொடுத்தவள் இவள் தான். இங்கு பெரும்பாலான பேருந்துகளில் எந்த இடம் செல்லும் என்கிற குறிப்பு கன்னடத்தில் எழுதி இருக்கும். நம்பர் பார்த்து போகலாம் என்றாலும் முதலில் சற்று சிரமமாக இருந்தது. உனக்கு சந்தேகம் இருந்தால் டிரைவரிடம் ஏறுவதற்கு முன் இடத்தின் பெயரை சொல்லி போகுமா என்பதற்கு ஹோகத்தா என்று கேளு என்று சொன்னாள். நானும் ஜெய்நகர் ஹோகித்தா என்று கேட்டேன். அவர் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே ஆம் என்று தலையாட்டினார். நான் சகானவிடம் அன்று இரவு சொல்கையில் அது ஹோகித்தா அல்ல ஹோகத்தா என்று சொல்லி சிரித்தாள். நானும் ஒப்பிடுவதற்காக போகுமாக்கு பதிலா போகிமான்னு சொன்னா எப்படி இருக்கும் என்று யோசித்து சிரித்துக் கொண்டேன்.

சகானாவோடு பழகத் துவங்கியிருந்த துவக்க நாட்களில் அவள் ஊருக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன். குளுமையான மழை சூழ்ந்த இடம் அது. அங்கு ஒரு சிற்றோடை கூட இருந்தது. சகானா தன்னைப் பற்றி அன்றைய தினம் என்னிடம் நிறைய சொன்னாள். ஒரு வேளை அவள் சிறு வயது நினைவுகள் அந்த இடங்களை பார்த்ததும் மேலெழும்பி இருக்கலாம் என்று நினைத்தேன். அவர்கள் முன்னோர்கள் விவசாய குடும்பம் என்றாள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பெங்களூர்க்கு வந்து விட்டார்கள். அவள் அம்மா இப்போது அண்ணனோடு ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார். இப்போது சகானாவின் அஜ்ஜி (பாட்டி) மட்டும்தான் அங்கே. அவருக்கு துணையாக ரேணுகா அக்கா இருக்கிறார். தூரத்து சொந்தமாம் அக்காவின் கணவர் இறந்ததனால் அக்கா இங்கே விவசாய வேலை பார்த்து கொண்டு அஜ்ஜியோடே தங்கிக் கொண்டார் என்றாள் சகானா. தாய் மகளின் பிரியம் போன்றிருந்தது அவர்களுக்கிடையிலான பரிவு. என்னால் அவர்கள் பேசிய கன்னடம் புரிந்து கொள்ள முடியவில்லை. சகானா தான் இருவருக்கும் இடையில் பாலமாய் இருந்தாள். புதி புதிதாக நிறைய வகை உணவுகள் தயாரித்து கொடுத்தார். இன்னும் விறகு வைத்துதான் சமைக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாய் இருந்தது. அவர்களுக்கு காஸ் அடுப்பு சமையல் பிடிப்பது இல்லை என்றாள் சகானா. அஜ்ஜி இந்த வயதிலும் எவ்வளவு துடிப்பாய் இயங்குகிறார்கள். இயற்கையோடு ஒட்டி தன் வாழ்கையை அமைத்துக் கொண்டவர்கள் இறந்து போகும் நிமிடத்திற்கு முன்பு வரை தன்னால் முடிந்தமட்டிலும் உயிரோட்டத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கேது ஓய்வு. ஓய்வு வயது என்பதே நம்மை ஏய்த்துக் கொள்ளும் ஏற்பாடாய் தோன்றியது எனக்கு. ஒருவரை முடக்கிபோடுவதற்கு ஓய்வு பெற்றுவிட்டார் என்ற வார்த்தையே போதுமாய் இருக்கும். இயற்கையோடு தன்னை இணைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் அழகாக்கி வாழ்ந்து கொண்டிருந்த அஜ்ஜியும் அவர்களின் உற்சாகமும் மனதுக்கு சுகமாய் இருந்தது. எனக்கு அந்த இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.

சகானா அஜ்ஜி எப்படி இருக்காங்க என்றேன். என்ன திடீர்னு கேக்கறே என்றாள். நான் அந்த நாட்களுக்கு திரும்ப தனியே போய்வந்தது அவளுக்கெப்படி தெரியும். இல்ல சும்மாதான் நினைவு வந்தது என்றேன். ஷி இஸ் குட் என்றாள்.

Wednesday, September 16, 2009

அன்பென்ற மழையிலே - 2

அதி காலையில் எழுந்த போது கண்களில் சிறு எரிச்சல் இருந்தது. நண்பர்களோடு சேர்ந்து இரவு வெகு நேரம் பேசியபடியே தண்ணி அடித்ததின் விளைவு. எங்கேயோ ஒரு மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது. எத்தனை இனிமையாய் இருக்கிறது. சற்று நேரம் இழுத்து இழுத்துக் கூவியது. பிறகு வேறு மாதிரி. குயிலுக்கு எத்தனை வகை ராகங்கள் தெரியும் என யோசித்தபடியே நடக்க துவங்கினேன். இந்த பல்கலைகழகத்துக்கு முதல் முறை வந்தபோது மலைகள் சூழ்ந்த இந்த இடம் பார்த்ததுமே மிக பிடித்துவிட்டது. இத்தனை பெரிய இடத்தில் ஒவ்வொரு மூலையில் ஒவ்வொரு துறையும், தனி தனி விடுதிகளும், குடியிருப்புகளுமாய் இந்த பல்கலைக்கழகம் அமைந்திருந்தது வியப்பாய் இருந்தது. நான் நினைத்துக் கூட பார்த்திருப்பேனா இப்படி மறுபடியும் வந்து படிப்பேன் என்று. கொஞ்ச காலம் சினிமாவை சுற்றி என் கனவுகள் இருந்தது. சென்னையில் விசுயல் கம்யுனிக்கேஷன் படித்து விட்டு அங்கே சினிமாத் துறையில் வெகு சில நாட்கள் பணிபுரிந்து விட்டு என்ன உந்துதலாலோ கோவைக்கு உயர் கல்வி படிக்க வந்து விட்டேன்.

எனக்கு நானே ஒரு புரியா புதிராய் இருக்கிறேன். என்னை புரிந்துகொள்வதே எனக்கு சமயங்களில் சுவாரஷ்யமாய் இருக்கிறது. சில கணங்கள் நேற்று இரவு பெய்திருந்த மழையின் ஈரத்தை அமைதியாய் பார்த்தபடியே நடந்தேன். சிவப்பு நிற வெல்வெட் பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருந்தது. சிறு வயதில் அதை எத்தனை ஆர்வமாய் பார்த்திருக்கிறோம். அப்போதெல்லாம் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் அனுபவிக்கக் கூடிய மனம் இருந்தது. ஒவ்வொரு சிறிய விஷயமும் ஒரு வித வியப்பை தந்தது அப்போது. பள்ளி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது. எத்தனை சந்தோஷமாய் நாட்கள் நகர்ந்தது.வளர வளர
ரகசியங்கள் சேர ஆரம்பித்தது. பிறகு பேச்சு ஒரு சுமையாகி போகும் அளவுக்கு மௌனம் பிடித்தது. எத்தனை எத்தனை மாற்றங்கள்.

இந்த வாரம் சென்னைக்கு செல்ல வேண்டும். நேற்று சரண்யா என்னை அழைத்து வர சொல்லி இருந்தாள். முதலில் நான் அவளை பார்த்தது அந்த குடியிருப்பின் மொட்டை மாடியில். சிலு சிலு தூரலில் நனைந்து கொண்டிருந்தாள். எனக்கு மழை பிடிக்கும் என்பதால் நான் மொட்டை மாடிக்கு சென்றேன். நான் சமீபத்தில் தான் இந்த குடியிருப்புக்கு வந்திருந்தேன். அவள் கல்லூரிக்கு செல்லும் காலை வேளையில் அவளை பார்த்திருக்கிறேன். இப்போது தனியாக மழையில் நனைந்து கொண்டிருந்தாள். அவள் என்னை பார்க்க இருவரும் புன்னகைத்து கொண்டோம். பிறகு நான் சற்று தள்ளி நின்று மழைத் தூரலை அனுபவித்தேன். உங்களுக்கும் மழை பிடிக்குமா என்றாள். நான் ஆமாமென்று தலையாட்டினேன். சற்று மழை வலுக்க ஆரம்பித்தவுடன் அவள் கீழே சென்று விட்டாள். நான் படிக்கட்டின் துவக்கத்தில் நின்று ஒரு சிகரெட் பிடித்து விட்டு கீழிறங்கினேன். அது தான் நான் கடைசியாக பிடித்த சிகரெட் என நினைக்கிறேன். அதற்கு பிறகு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன். ஏன் நிறுத்தினேன் என்பதற்கு காரணம் எதுவும் இல்லை.

நான் என் அறையை நோக்கி திரும்பி நடந்தேன். அன்றைய வகுப்புக்கு தயாராக வேண்டி இருந்தது. ஒரு மரத்தின் அடியில் வெள்ளை இதழ்களும் நடுவே இள மஞ்சள் வண்ணமும் கொண்ட மலர்கள் உதிர்ந்து கிடந்தது. மிதிக்காமல் சற்று தள்ளி நடந்தேன். வசந்தி தான் சொல்வாள் அவளோடு நடக்கும்போது மலர்களை மிதிக்காதீர்கள் என்று. காரணம் கேட்கவில்லை என்னவோ எனக்கும் பழகி விட்டது. ஏதாவதொரு பெண்ணின் நட்பு எனக்கு எல்லா கால கட்டத்திலும் இருந்திருக்கிறது. எல்லாரோடும் எனக்கு இப்போது தொடர்பில்லை என்றாலும் இந்த மாதிரி அழகான, இனிமையான அல்லது சோகம் நிறைந்த ஏதோ சில நினைவுகள் மிஞ்சி இருக்கிறது.

Friday, September 11, 2009

அன்பென்ற மழையிலே

அலுவலகம் முடிந்து எல்லோரும் வெளியேறி கொண்டிருந்தார்கள். நானும் அவர்களை தொடர்ந்தேன். இரண்டு நாட்கள் விடுமுறை என்பது நினைக்கவே சுகந்தமாய் இருந்தது. மானசா என்னை அழைத்து என்ன சரண்யா எதையோ யோசிச்சிட்டே நடந்துட்டிருக்கே என்றபடியே அவளது வாகனத்துக்கு விரைந்து கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாய் உதிர்த்து விட்டு தொடர்ந்து நடந்தேன்.

எனக்கு
தனியாக நடப்பது தற்போது மிகவும் பிடித்தமாயிருந்தது. கோர்வையற்று என்னென்னவோ யோசனைகள். இன்று ஆட்டோவைத் தவிர்த்து வீடு நோக்கி நடக்கலாம் என்று முடிவு செய்தேன். எப்போதும் செல்லும் தெருவை விடுத்து இன்று மரங்களடர்ந்த நடப்பதற்கு ஏதுவான அமைதியான தெருவை தேர்ந்தெடுத்து நடந்தேன்.

அந்த தெரு பணம் படைத்தவர்கள் வாழும் தெரு என்பதால் மற்ற தெருக்களை போல் வாகனங்கள் வீட்டுக்கு வெளியில் தெருவை அடைத்துக்கொண்டு இருக்கவில்லை. பெரிய பெரிய வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருந்தது. மனதில் நெருக்கியடித்துக் கொண்டிருந்த சிந்தனைகளுக்கு கொஞ்ச நேரம் விடுதலை கொடுத்து ஒவ்வொரு வீட்டின் அமைப்பையும் ரசித்தபடி நடந்தேன். இந்த வீடுகளை ரசிக்க மட்டுமே முடியுது யாராவது வாழ்கிறார்களா தெரியவில்லை.

மரங்கள் அடர்ந்திருந்ததாலும் மாலை வேலையானதாலும் குளுமை சற்று அதிகமாகவே இருந்தது. பெங்களூரில் எனக்கு மிகவும் பிடித்த விசயங்களில் இந்த சீதோஷணமும் ஒன்று. எப்போதுமே நீண்டதூரம் நடப்பதற்கு ஏதுவாய் ஒரு ரம்மியமான குளுமை. பிறகு அந்த குளுமையை கொடுக்கும் இந்த மரங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணப் பூக்களை தருகிறது. அவை என்னை வியக்க வைக்கிறது. இங்கு ஆப்பிரிக்கன் டியூலிப் என்ற வகை மரங்கள் நிறைய இருக்கிறது. ஆரஞ்சு வண்ணத்தில் அகல அகலமான பூக்களை தன்னை சுற்றி பரப்பி வைத்திருக்கிறது. பெங்களூர் வந்த புதிதில் இந்த மரம் என்னை ஆச்சர்யப் படுத்தியது. என்னோடு வசுதா வந்திருந்தால் ஒவ்வொரு மரத்தின் பெயரையும் கேட்டு என்னை துளைத்திருப்பாள். அவளுக்கு மரங்களின் பெயர்களையும் அதன் பூர்வீகத்தையும் அறிந்துகொள்வதில் அப்படி ஒரு விருப்பம்.

இப்போது எனக்கு என் ஊரில் என் வீட்டை ஒட்டி இருக்கும் சரக்கொன்றை மரம் நினைவில் ஆடியது. அப்படியே அமுதனும் என் நினைவில் வந்தார். அவருக்கு மிகவும் பிடித்த மரம் அது. சரண்யா இந்த சரம் சரமான மலர்கள் என் கண்களுக்குள் மஞ்சள் மழை பொழிகிறது என்பார். அவர் பேசக் கேட்பதே ஒரு ஆனந்தம் எனக்கு. ஒவ்வொரு விஷயத்தை பற்றிய அவரது ஆழமான பார்வையும் அதை பகிர்ந்து கொள்ளும் விதமும் என்னை மணிக்கணக்கில் கட்டி போடும். அடுத்த வாரம் ஊருக்கு போகணும் என்று எண்ணியபடியே எதிர்பட்ட பூங்காவுக்குள் சென்றேன். அங்கே அமர்ந்து கைய்யோடு கொண்டு வந்திருந்த பிரபஞ்சனின் புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.

Tuesday, September 8, 2009

கவனமாய்

உறங்குவதற்கு முன்
கதவின் எல்லா தாழையும்
சரிபார்த்த பிறகும்
நடுஜாமக் கனவில்
திறந்தே கிடக்கிறது கதவு