Monday, September 27, 2010

பிரியமோ சுமையோ நானறியேன்

தேன் கனிகள் சுமக்குமென
நட்டு வைத்திருக்கிறார்கள்
விதைத்தபோதோ முளைத்தபோதோ
நான் அருகிருந்து அறிந்ததில்லை

வருடங்களை உண்டு
வளர்ந்த அது
பூத்ததுமில்லை காய்ததுமில்லை
என அங்கலாய்த்த அவர்களிடம்
எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை

எதன் நிமித்தமுமில்லாமல்
விட்டு விலகி வந்து
வெகு நாட்கள் ஆனநிலையில்
போன வருடம்
மறுபடி பார்க்க நேர்ந்தது
அது இருந்திருந்த இடத்தில்
இருந்தது
பூமிக்கு மேல்
ஓர் இரண்டடி கட்டை

அருகே சென்று பார்கிறேன்
வலிகளோ காயங்களோ
இருந்த சுவடில்லை
ஒரு வேளை காய்ந்திருக்கலாம்
வெட்டுபட்டிருந்த போது
என்ன நினைத்திருக்கும்
இப்போதென் மனதை
பற்றிகொண்டது அவ்விருட்சம்

மாதங்களே இடைவெளியென
கவனித்தபடியே இருந்தேன் அதை

ஆறு மாதம் முன் பார்க்கையில்
ஒரு புறம்
கரையான்கள் பற்றி இருக்க
நின்றது நின்றபடியே இருந்தது
சில கணங்கள் பார்த்திருந்து திரும்பினேன்

இரண்டு மாதங்கள்
முன் பெய்த மழையில் தான்
அது மீண்டும் துளிர்த்திருந்தது
முதன் முறையென
என் மனமும் கூட

இன்றடித்த வெயிலுக்கோ
இலைகள் வாட்டமுற்றிருக்கின்றன
செய்வதற்கொன்றுமில்லை
இனி நான் பார்க்க போவதுமில்லை

Sunday, September 19, 2010

இப்பொழுது விடியுமா

இல்லாத ஒன்றை
இருக்கிறதாய் எண்ணி கொள்வதும்
இருக்கிற ஒன்றை
இல்லை எனக் கொள்வதும்
இதோர் வேடிக்கையான மனது

எனக்கு பிடித்த நானாய்
மற்றும் எல்லோருக்கும்
பிடித்த நானாய்
இருந்தே
அலுத்துப் போகிறது எனக்கு

தேகங்களை உரித்து போட்டு
அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்
உத்தி கற்பிக்கப்படுமெனில்
ஆங்கே முதல் மாணவியாய் நான்

அளந்து அளந்து பேசியது போதும்
வெட்கத்தை அவிழ்த்து விட்டே கேட்கிறேன்
வானை கிழித்து வரும்
மின்னலென வந்து தான்
எடுத்து போய்விடேன்
உன்னோடு என்னை

இந்நோய் முற்றிவிட்டது போல
பார்
ஏதேதோ பிதற்றியபடியே இருக்கிறேன்
உன்னை சேரும்
ஓர் வழி புலப்படுமா என

Monday, September 6, 2010

குட் மார்னிங் தாத்தா

பரீட்சை நேரத்து மணியோசை
எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்
மரங்களுக்கடியில்
புத்தகக் குவியல்கள்
இலைகளை மேயும்
பட்டு புழுக்களாய்
பத்திகளை மேயும்
சுந்தரும் சாந்தியும்
எனக்கு நேற்று பார்த்த சினிமா
இப்பத்தான் ஞாபகம் வரணுமா
சாந்தீ இழுக்கிறேன்
நிமிரக் கூட இல்லை
இந்த பிள்ளை
எப்போவுமே இப்பிடித்தான்
யாரிடம் சொல்ல
நேற்றுப் பார்த்த கதையை
சுற்றிலும் பார்க்க
ஒரே பரபரப்பு
குட் மார்னிங் தாத்தா
வந்து விட்டிருக்கிறார்
குட் மார்னிங் தாத்தா
மிக பிரசித்தம் என் பள்ளியில்
அவர் வாக்கு அப்படியே பலிக்குமென
அவரை நெருக்கிக் கொண்டு
தாத்தா குட் மார்னிங்
குட் மார்னிங் தாத்தா
கூட்டத்தில் நானும் தான்
இன்னிக்கு அந்த சனியம் புடுச்ச
சமூக அறிவியல் பரீட்சை வேறயா
தாத்தா வாக்கு என்னவோ எனக்கு
அட சீக்கிரம் இங்க பாருய்யா
ஆ என்னத்தான் பாக்குறாரு
இப்போ சொல்லிருவாரு
நீ பெயிலாப் போயிருவ
அடச்சீ
இந்த கார்த்தி முன்னால
ஏன்யா சொன்ன
மனசுக்குள்ள சொல்லிகிட்டாலும்
சத்தமாத்தான் சொன்னேன்
இந்த வாக்கெல்லாம் நான் நம்பறதில்லப்பா

Sunday, September 5, 2010

உமாக்கா

உமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு
உமாக்கவை பார்த்த உடனேயே பிடித்தது
உமாக்கா என் அறைத் தோழி
உமாக்காவுக்கு மிக பெரிய கண்கள்
உமாக்கா பெரிய பொட்டு வைப்பாள்
உமாக்காவுக்கு அழகானதொரு தெத்துப் பல்
உமாக்கா ஒரு குஜராத்தி
உமாக்கா சென்னை வாசி
உமாக்காவுக்கு சிரிக்கும் உதடுகள்
உமாக்காவுக்கு அமைதியான முகம்
உமாக்காவுக்கு நைட் ஷிப்ட், எனக்கு பகலில் வேலை
உமாக்காவை நான் அரிதாய்ப் பார்ப்பேன்
உமாக்காவுக்கு குட் மார்னிங் நோட் எழுதி அவள் கட்டிலில் ஒட்டி வைப்பேன் தினமும்
உமாக்கா எனக்கு வேலை கிடைத்தபோது ஒரு வாழ்த்து அட்டை கொடுத்தாள்
உமாக்கா எல்லாரிடமும் ஜஸ்ட் கால் மீ உமா, டோன் கால் மீ அக்கா என்றாள்
உமாக்கா என்னை மட்டுமே அக்கா என அழைக்க அனுமதித்தாள்
உமாக்காவோடு ஒரு பத்து முறை பத்து நிமிடங்கள் பேசியிருப்பேன்
உமாக்காவுக்கு இரண்டு குழந்தைகள்
உமாக்கா தன் கராத்தே மாஸ்டரை காதல் கல்யாணம் செய்து கொண்டாள்
உமாக்காவுக்கு அப்போது பாய்ஸ் படம் பிடித்திருந்தது
உமாக்கா எப்போதும் ஆங்கிலப் புத்தகம் படிப்பாள்
உமாக்கா என்னிடம் ஹாரி பாட்டர் வாங்கிப் படித்து பிடித்திருந்தது என்று சொன்னாள்
உமாக்காவிடம் நான் செய்த தவறொன்றை சொன்னேன்
உமாக்கா நீ அதை செய்திருக்க கூடாது என்றாள்
உமாக்கா நானும் உன்னோடு வருகிறேன் நாம் இதை சரி செய்யலாம் என்றாள்
உமாக்கா என்னோடு வந்து எனக்காக பேசினாள்
உமாக்கா என் தவறை சரி செய்தாள்
உமாக்கா சென்னைக்கு மாற்றலாகி போய்விட்டாள்
உமாக்கா ஒரு தேவதை
உமாக்காவை மிக பிடிக்கும் எனக்கு