Thursday, April 16, 2009

தொடரும் கதை

நான் இந்த வெயில் காலத்தின் மாலை நேர காற்றை சற்று சுவாசித்து வரலாம் எனக் கிளம்பினேன். இன்று சற்று சீக்கிரமே வேலை முடிந்து விட்டது. தெருவின் முடிவில் இருந்த அந்த ஏரியை ஒட்டியிருந்த பூங்காவுக்குள் நுழைந்தேன். சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தார்கள். இங்கு குழந்தைகள் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள். எல்லா மாநிலங்களும் கலந்திருப்பதால் அவர்களுக்கு அதுவே சாத்தியமாகிறது.

அவர்களை கடந்து சென்று சற்று நேரம் ஏரியை பார்த்திருந்தேன். எத்தனை விதமான வாத்துக்கள். அதில் ஒன்று தன்னையே சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இன்னொன்று தண்ணீரில் மூழ்குவதும் சற்று தள்ளி எழுவதுமாய் வித்தை காட்டிக் கொண்டிருந்தது. எனக்கு பார்த்து கொண்டிருப்பது சுவாரஸ்யமாய் இருந்தது. இந்த மாதிரி சமயங்களில் என்னை அந்த காட்சிக்குள் தொலைத்து கொள்வதில் எனக்கு என்னவோ மகிழ்ச்சி. நான் எல்லாம் மறந்து எத்தனை நேரம் நின்றேன் தெரியவில்லை.

ஏரியின் அக்கரையில் உயர உயரமான ராட்சச கட்டிடங்கள் ஒவ்வொன்றாய் ஒளிரத் துவங்கியது. அங்கிருந்து என்னை விடுவித்து கொண்டு புல் தரை நோக்கி நடந்தேன். பச்சை புற்களின் மேல் அமர்ந்தேன். அது என்னை தாங்கிக்கொண்டது. கைகளை தலைக்கடியில் கொடுத்து படுத்தேன். காற்று சுகமாய் இருந்தது. மெல்ல கண் மூடி என்னென்னவோ யோசித்தேன். பூங்காவின் விளக்குகளும் ஒளிரத் துவங்கியது. ஒரு புத்தகம் எடுத்து வந்திருக்கலாமோ இப்போது யோசித்தேன். மறுபடியும் கண் மூடினேன். என்னவோ வெறுமையாய் இருந்தது இப்போது. எதுவுமே யோசிக்காமல் இருப்பதே நன்றாய் இருக்கும் போல் தோன்றியது.

காற்று சட்டைக்குள் புகுந்து கொண்டு ஒளிந்து விளையாடியது. பிறகு அது தன்னை நிதானித்து கொண்ட பொழுதில் என் அருகில் ஏதோ படபடப்பதை உணர்ந்தேன். வெள்ளை காகிதம் ஒன்று ஒரு செடியில் மாட்டிக்கொண்டு அல்லாடியது. அதை எடுத்து ஏதாவது கிறுக்கலாம் என்று பாக்கெட்டில் பேனாவை எடுத்தேன். காகிதத்தை கையில் எடுத்து பார்க்கையில் என்னவோ எழுதி இருந்தது. கடிதமா? படிக்கலாமா? யோசிக்கையிலேயே கடிதம் என்னை உள்வாங்கத் துவங்கியது.
--- தொடரும்---

2 comments:

மண்குதிரை said...

அழகான, மிருதுவான நடை

காத்திருக்கிறேன் சுகிர்தா.

Sugirtha said...

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்!! எனக்கு நிறைய எழுத ஊக்கமளிக்கிறது.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...