Saturday, April 18, 2009

தொடரும் கதை - பாகம் இரண்டு

இனிய என்னவருக்கு,

நமக்குள் ஏதேதோ குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. நமது உறவு நம்மிடமிருந்து சொல்லாமலே விடை பெற்றுக்கொண்டது. எதையுமே வெளிப்படையாய் பேசிக்கொள்ளாமலே இருந்து விட்டோம். பேசிய பிறகோ பேசாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எத்தனையோ முறை பட்டு பட்டு துளிர்த்திருக்கிறது இந்த உறவு. தவறான புரிதலுக்கு பிறகு மனம் நிலைகொள்ளாமல் தவிக்கும். பின் வெளிப்படையான உரையாடல்களுக்கு பிறகு பிணைந்து கிடக்கும். அப்படியான ஒவ்வொரு முறையும் நாம் நம் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறோம். அந்த உங்களுக்கான எனது உருகலும் எனக்கான உங்களது பரிவும் எத்தனை இனிமையாய் இருந்திருக்கிறது.

நம் அனுமதியின்றி நம் மேல் திணிக்கபட்டிருக்கும் நிறைய விதி முறைகள் நம்மை பிரிக்கிறதா? இதுதான் அனுமதிக்கப்பட்ட அன்பு செலுத்தல்கள் இந்த முறையில் தான் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். இப்படிதான் உறவு முறைகளை அமைத்து கொள்ள வேண்டும். இப்படியான நிறைய வாழ்வியல் நியதிகள் சேர்ந்து நம் உறவை ரத்து செய்து விட்டது. நம் உறவு உடல் கடந்த அழகியல் சேராத ஒரு அற்புத உறவு. அதை இன்ன பெயரிட்டு அழைக்கவும் தேவையில்லை. நமக்கு மட்டுமே புரிகிற ஒரு புது உறவுமுறை. அது அன்பின் அடிப்படையில் அமைந்தது.

நீங்கள் தான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தீர்கள். என் கஷ்ட காலங்களில் உங்கள் அன்பே என் துணை இருந்தது. உங்களோடு பேசி பேசியே நான் நிறைய பக்குவப்பட்டேன். என் வழிகாட்டியாய் உங்களை மட்டுமே என் மனம் ஏற்றது. என் கோபங்களையெல்லாம் உங்கள் நகைச்சவை நிமிடத்தில் துடைத்தெடுத்து விடும். நேரத்தை பற்றிய பிரக்ஞை இல்லாமல் நீங்கள் என்னோடு பேசுவீர்கள். உங்கள் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு அத்தனையும் கேட்டுக்கொள்ள ஆசைபட்டிருக்கிறேன்.
எத்தனை பேசினாலும் நாம் இந்த சமூகத்தில் வாழவேண்டி இருக்கிறது. இஷ்டம் இல்லாவிடிலும் நாம் பிரிவதை தவிர வேறு வழியில்லை. நான் இனி உங்களின் ஊமை உறவாய் உங்களை விட்டு போகிறேன். அதைதான் நீங்களும் விரும்புகிறீர்கள்.

நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு முழுக்க எனக்கு புரிகிறது. அதை முழுமையாக காட்ட முடியாத நிலையில் நீங்கள் இருப்பது எனக்கு தெரிகிறது. என்னிடம் பேசும்போதெல்லாம் நீங்கள் எல்லா அன்பையும் உள்விழுங்கிக் கொண்டு பேச திணறுகிறீர்கள். அதனாலேயே என்னை தவிர்கிறீர்கள். முன்பு போல இந்த உறவை இனி தொடர முடியாது எனக்கு தெரிகிறது. இந்த புரிதலெல்லாம் சேர்ந்து என்னை ஒரு இயலாமை நிலைக்கு தள்ளுகிறது. அந்த இயலாமை எனக்கு ரணமாய் இருக்கிறது. இருந்தாலும் என்னுள்ளேயே எல்லாவற்றையும் புதைத்துக்கொள்ள முயல்கிறேன். இதை யாரோடும் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை.

நாம் பிரசவித்து அனாதையாக்கிவிட்ட இந்த உறவை யார் தத்தெடுக்க கூடும். நம் வாழ்க்கையை யார் வாழக்கூடும். விடை இல்லாத கேள்விகள் சேர்ந்து கொண்டு என்னை முற்றுகை இடுகிறது. யோசனைகளின் வீதியில் மனம் அலைந்து அலைந்து ஓய்ந்து போகிறது.

ஈடுகட்டமுடியாத பேரிழப்புகளுக்கு பின்னும் வாழ்கை நகரத்தான் செய்கிறது. நம் வாழ்கையும் அப்படியே. என் தனிமையில் எனக்கான என் நேரத்தில் உங்கள் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்த நினைவுகளை என்னோடேயே வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து நுகர்ந்து கொள்வேன்.

முற்றிலும் உங்களிடமிருந்து விலகுவதற்கு முன் இந்த என் கடைசி கடிதத்தை எழுதி விட நினைத்தேன். எப்போதாவது மானசீகமாய் நலம் விசாரித்து கொள்கிறேன். நீங்களும் என்னை நினைத்து கொள்வீர்களா?

உங்கள்,
அம்மு.


கடிதத்தை வாசித்து முடிக்கையில் தான் கண் விழித்தேன். நான் என்ன முயன்றாலும் உன் கடைசி கடிதம் என்னை துரத்துகிறதே அம்மு.
--முற்றும்--

6 comments:

யாத்ரா said...

இரண்டு பதிவுகளையும் ஒரு சேர படித்தேன், மனம் ஏனோ மிகவும் கனக்கிறது, உணர்வுக்குவியல், மிக வலி நிரம்பியதாயிருக்கிறது. துடிக்கும் இதயமாய் இந்தக் கடிதம் கதை என்னை நிலைகுலையச்செய்து விட்டது.

Sugirtha said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி யாத்ரா.

மண்குதிரை said...

உங்கள் மொழி எளிமையாக, அழகாக இருக்கிறது.

தொடருங்கள்......

மண்குதிரை said...

உங்கள் மொழி எளிமையாக, அழகாக இருக்கிறது.

தொடருங்கள்......

மண்குதிரை said...

பிரஞ்கை / பிரஞ்சை

Sugirtha said...

பிரக்ஞை - மாற்றிவிட்டேன் நன்றி நண்பரே!! இனிய நாள்!!