Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, December 18, 2016

கண்ணம்மா

அன்று நேத்ராவும் நானும் அவளது சித்திர பயிற்சி வகுப்பு  முடிந்து வந்து கொண்டிருந்தோம். மாலை மணி ஆறரையிலிருந்து ஏழுக்குள் இருக்கும். குளிர்காலம் ஆதலால் சீக்கிரமே இருளத் துவங்கி இருந்தது. முன் சென்று கொண்டிருந்த வண்டியின் வேகத்தை பொறுத்து இயல்பாய் என் கைகள் வேகத்தை கூட்டி, குறைத்துக் கொண்டிருந்தது. மனமெல்லாம் அடுத்த நாள் வகுப்பிற்கான முன்னேற்பாடுகள், இரவு உணவுக்கான திட்டம், என் பள்ளியில், நேத்ராவின் பள்ளியில், வரவிருக்கும் நிகழ்வுகளை குறித்த எண்ணங்கள் என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்தன. மேலும் மனம் அதற்கான நுணுக்கமான திட்ட மென்பிரதியை உருவாக்கிக் கொண்டிருந்தது.  எண்ண ஆக்ரமிக்குகள் கொடுத்த அழுத்தமும், முடிக்கவேண்டிய வேலைகளின் நீளமும், திட்டத்தை செயலாக்கும் தீவிரமும் என்னை இயக்கியது. ஆனாலும் நான் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்ததாகத்தான் நினைவு. இதோ இன்னும் அரை கிலோமீட்டர் சென்றால் வீடு சென்று அடையலாம் என்னும்போதில் தான் அது நடந்தது .

அது இரு-வழி சாலை, சற்று அகலமான  பாதையும் கூட. சாலை விளக்குகள் அற்ற பாதை எனவே இருண்டே கிடந்தது. வாகனங்கள் இப்புறம் சென்று கொண்டும், அப்புறம் வந்து கொண்டும் இருந்தன. இருபுறம் செல்லும் வாகனங்களை பிரிப்பதற்காக சாலையின் மத்தியில் இருந்த பிரியாயத்தின் மீது,  நடுத்தர வயது கொண்ட  பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அதை மனதின் ஏதோ ஒரு பகுதி கவனித்தது. அவர் நின்று கொண்டிருந்த விதம் நாங்கள் சென்று கொண்டிருந்த பாதையை கடப்பதற்கான ஆயத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் தலையை பின்புறம் திருப்பி வந்து கொண்டிருந்த வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தார். மிக சரியாக நான் அந்தப் பகுதியை கடக்கும் தருவாயில் அவர் எதிர்புறம் பார்த்துக் கொண்டே துரிதமாக ஓடி வந்து என் இருசக்கர வாகனத்தில் பாய்ந்தார்.  எவ்வளவு தான் பிரேக்கை அழுத்தினாலும் வண்டி அவரில் மோதியது, நானும், அவரும் மற்றும் நேத்ராவும் நிலை தடுமாறி கீழே விழுந்தோம். வினாடிக்கு குறைவான நேரத்தில் சுதாரித்து எழுந்தேன். முதல் நினைவு நேத்ரா. ஓடிப் போய் அவளைப் பார்த்தேன். அவள் நல்ல படியாக இருந்தாள். நல்லவேளையாக அவளுக்கும் தலைக்கவசம் அணிவித்திருந்தேன். அவளை மேலும் கீழுமாக உற்று நோக்கினேன். அந்த குறைந்த வெளிச்சத்தில் சரியாக பார்க்க முடியவில்லை என்றாலும் அவளுக்கு பெரிதாக அடி எதுவும் இல்லை என்பது புரிந்தது. அந்த விபத்தின் அதிர்விலிருந்து நிதானிப்பதற்குள்ளாகவே எங்களின் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் பொறுமையை இழந்து ஆரனை அடிக்கத் துவங்கினர். நான் நேத்ராவின் கையைப் பற்றி இருந்தேன். தங்கள் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் எங்களை சாலையின் ஓரத்திற்கு கொண்டுவந்தார்கள். வண்டியில் பாய்ந்த அந்த பெண் கூட ஒரு சித்தாளைப் போலத்தான் இருந்தாள்.

ஓரத்திற்கு வந்த நான் நடை பாதையில் அமர்ந்தேன். நேத்ராவை என் அருகே அமர்வித்தேன். எனக்கு கை, கால் மூட்டுகளில் சிராய்ப்பு. அந்த பெண்மணிக்கும் பெரிதாக எதுவும் இல்லை. என்னுள் மிகுந்த கோபம் மூண்டிருந்தது. அந்த பெண்ணின் படு முட்டாள் தனத்தால் விளைந்த விபத்து இது. எங்கள் மூவரின் உயிரையும் ஒரு கணத்தில் இழந்திருப்போம். நான் அந்தப் பெண்ணை கடுமையாக கடிந்துகொண்டேன். எங்களை சூழ்ந்த கூட்டம் நல்லவேளையாக எங்களுக்குப் பின்னால் எந்த வாகனமும் அப்போதைக்கு வரவில்லை என்றும், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும் ஒருவருக்கொருவர் கூறி நிம்மதித்துக் கொண்டிருந்தது.  அவர்கள் குறிப்பிட்ட பிறகு அப்படி தப்பித்துக் கொண்ட அசம்பாவிதத்தை எண்ணி மனம் திடுக்குற்றது. சுறு சுறுவென அழுகை மூண்டது. திரும்ப திரும்ப அந்த பெண்ணை சுட்டி கடிந்து கொண்டிருந்தேன்.


அப்போது என் வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தன் அலுவலகப் பணி முடிந்து அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். நான் பேசியதை கவனித்து என்னை புரிந்து கொண்டவராக அந்தப் பெண்ணை நோக்கி நிதானமாக, "பார்த்து வந்திருக்கக் கூடாதா, பாருங்கள் கூட குழந்தையும் இருக்கிறது. ஏதாவது மோசமாக ஆகி இருந்தால்..." என்றார். சற்று என்னை ஆற்றுப் படுத்தினார். அந்தப் பெண்ணும் நான் பார்க்க வில்லை என்று சொல்லிக் கொண்டே தன் மூட்டை அழுத்திக் கொண்டிருந்தார். இவர் என்னிடம் நீர் வேண்டுமா என்று வினவ நான் இல்லை என்றேன். யாரோ வண்டியை சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். என் வண்டி சாவியை என் கையில் கொடுத்த ஒருவர் நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு பிறகு விடைபெற்றார். நானும் நேத்ராவை அழைத்துக் கொண்டு கிளம்பினேன். கால்கள் நடுக்கமுற்றிருந்தன. வண்டியின் முன்புற பிரேக் உடைந்திருந்தது. மெதுவாக உருட்டிக் கொண்டே வீடு வந்தேன்.


வீட்டுக்குள் நுழைந்து நேத்ராவை நன்றாக அளந்தேன். நல்லவேளையாக அவளுக்கு ஒரு சிறு கீறலும் இல்லை. அந்த நிம்மதி என்னை சற்றே ஆற்றுப்  படுத்தியது. அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால்.. என்றே சிந்தித்ததில் தீவிரமான வலி மனமெல்லாம் பரவியது. அவள் தனக்கு ஒன்றுமில்லை என்று திரும்ப திரும்ப என்னிடம் உறுதி படுத்திக் கொண்டிருந்தாள். நான் அழத் துவங்கி இருந்தேன். இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் போய் அழலாமா என்று என் கண்ணீரைத்  துடைத்தாள். பிறகு அவள் எனக்கெங்கே அடிபட்டது என்று அறிந்து கொள்ள விளைந்தாள். என்னுடைய பாண்டை மேழே இழுத்து மூட்டில் இருந்த புண்ணை ஆராய்ந்த அவள் ஓடி சென்று டெய்ட்டால் மற்றும் பஞ்சு எடுத்து வந்து காயத்தை சுத்தம் செய்தாள். என்னை அமைதிப் படுத்தினாள். பிறகு அவளிடம் நான் அவள் கீழே விழுந்தபோது தலைக்கு அடிபட்டதா என்றேன். இல்லையே நாந்தான் ஹெல்மெட் போட்டிருந்தேன் என்றாள். பிறகு அவள் விழுந்த விதத்தை விவரித்தாள். வண்டி சாயும்போது அவள் கால்களை மேலே தூக்கி கொண்டதாக கூறினாள். தலையின் ஹெல்மெட் மட்டும்தான் சாலைக்கு முட்டியது என்றாள். அவளின் இந்த நிதானம், விபத்து அதிர்ச்சியிலும் கூட செயல்பட்ட முறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவள் வயதுக்கு மீறின, அந்த நேரத்தில் எனக்கு தேவைப்பட்ட ஒத்துழைப்பை  முழுமையாக எனக்கு கொடுத்தாள். என் தாயின் ஆறுதலையும், தந்தையின் பாதுகாப்பையும் எனக்கு அவள் கொடுத்தாள். பிறகு அவள் தன் தோழியோடு விளையாட சென்றாள். நான் அந்த அனுபவத்தைக் குறித்த என் அணுகுமுறை பற்றியும் அவளின் அணுகுமுறை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். நேத்ரா எனக்குப் புதிதாகத் தெரிந்தாள். 


~விபத்தில் அவளை பாதுகாத்த சக்திக்கும், அவளை புதிதாக அறியக் கொடுத்த அனுபவத்திற்கும், கூடி உதவிய கூட்டத்திற்கும் என் நன்றிகள்~


சுய  பிரதிபலிப்பு: நிதானத்திற்கு வந்த பிறகு, கோபத்தில் அந்த பெண்மணிக்கு என்னவாயிற்று என்று கூட சரியாக தெரிந்து கொள்ளாமல் வந்த என் சுயநலத்தை எண்ணி வெட்கினேன்.

Sunday, May 4, 2014

பார்த்ததும் கேட்டதும்

முன்னிரவு கிளம்பிய நானும் தோழியும் ஜென் தியான மையத்தை சென்று சேர்ந்தபோது மதிய உணவு வேளை ஆகி இருந்தது. அத்தனை அழகான இடத்தை அதற்கு முன்பு நான் எங்கும் பார்த்ததில்லை. அங்கே செல்வது இது இரண்டாவது முறை என்றாலும் கூட அந்த அழகை ஏற்கனவே பார்த்ததுதான் என்று ஒருபோதும் ஒதுக்க முடியாது. அது இருப்பது இயற்கை பூரணிக்கும் மலைப் பிரதேசத்தில் எனவே மனம் பிசிறாத அமைதியை வேண்டும்போதெல்லாம் அந்த தியான மையத்திற்கு செல்லலாம். மேலும் அந்த மையம் தன் எளிமையான அமைப்பாலும், தன்னை சூழ்ந்துள்ள இயற்கையாலும், தான் தழுவிக் கொண்ட மோனத்தாலும், ஒருவரை எளிதில் தன் வசப்படுத்தி கொள்ளும் தன்மை உடையது. மையத்தை சுற்றி இருக்கும் தோட்டத்தில் பன்னீர் ரோஜாக்களும், வெள்ளைக் கொடி ரோஜாக்களும், இன்னும் இதர வண்ணப் பூக்களும் கொத்து கொத்தாக மலர்ந்தலங்கரிக்க அங்கே செல்லும்போதெல்லாம் மனம் பொங்கிக் கசியும். இரண்டடுக்கு கட்டிடம் கொண்ட அந்த மையத்தின் அமைப்பு செவ்வக வடிவில் வெகு எளிமையாக இருக்கும். நுழைவாயிலில் தியானிக்கும் புத்தரின் சிலை நம்மை வரவேற்கும். பிறகு உள்ளே அடி எடுத்து வைத்ததும் நான்கு பக்கங்களும் நீண்டோடும் வெராண்டா. மையத்தின் அமைப்பை தொட்டிக்கட்டு வீட்டின் அமைப்போடு ஒப்பிடலாம். ஏனெனில் சுற்றிலும் அறைகள் இருக்க மத்தியில் மிக அழகாக பராமரிக்கப் படும் புல்வெளியும், திறந்திருக்கும் வான்வெளியும் உண்டு. வாய்க்கால் போன்று தோட்டத்தின் ஊடே இருக்கும் நீர் வழியில் தங்க மீன்கள் நீந்தும்.

உட்புற கட்டிடத்தை தழுவி போகன்வில்லாக்கள் மலர்ந்திருக்கும். ஒவ்வொரு அறைக்கு முன்னும் ஒரு மூங்கில் இருக்கை இருக்கும். அதில் அமர்ந்தபடி ஓரிருவர் ஏதாவது புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பர். பெரும்பாலும் மாதக் கணக்கில் வந்து தங்கி தியானிக்கும் வெளிநாட்டவரே அங்கு அதிகம். அதிலும் முக்கியமாக ஐரோப்பர்கள். அங்கே வருபவர்கள் அனைவருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப்படும். எனவே எந்த இடையூறுகளும் அற்ற பூரண தனிமை கிடைக்கும். பெரும்பாலும் தனியாக இருக்கும் எல்லோரும் ஒன்று கூடுவது இரண்டிடங்களில். ஒன்று கீழ் தளத்தில் இருக்கும் உணவுக் கூடம். இரண்டு மாடியில் இருக்கும் தியானக் கூடம். அது தவிர கீழ் தளத்தில் ஒரு நூலகமும் உண்டு. அங்கே எல்லோரும் வருவதில்லை. முதல் தளத்தைத் தாண்டி மொட்டை மாடிக்கு சென்றால் மேகப் பொதிகள் மலை முகட்டில் உரசிப் போவதைப் பார்க்கலாம்.

தோழியும் நானும் உள்ளே சென்று எங்கள் அறைக்கான சாவியை வாங்கிக் கொண்டு உணவுக் கூடத்துக்கு முன்னே இருந்த அறிவிப்பு பலகையில் இருந்து தியான நேரம், உணவு நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டு தோழி அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கும் நான் எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு சென்றோம். பிறகு மதிய உணவு முடித்து கொண்டு மாலை தியானத்திற்கு நேரம் இருந்ததால் சற்று நேரம் இளைப்பாறலாம் என்று திரும்பவும் அவரவர் அறைக்கு வந்து உறங்கினோம். உறக்கத்தின் இடையில் யாரோ அறைக்கதவை தட்ட திறந்து பார்த்தால் முதல் முறை வந்தபோது நூலகத்தில் தற்காலிக நூலகராக இருந்த அவன் நின்றிருந்தான். ஹாய், ஆர் யூ கைஸ் ஸ்கிப்பிங்க் யுவர் டீ என்றான். உறக்கத்தின் இடையில் எழுந்ததாலும் நாம் தேநீரைப் பருகாதது குறித்து இவனுக்கு ஏன் அக்கறை என்று குழம்பியதாலும் ஸாரீ வாட் என்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். சரி விசயத்திற்கு வருகிறேன் என்பது போல ஓகே யூ ஆர் நாட் ஃபர்ஸ்ட் டைமர்ஸ் ரைட் என்று வினவினான். நோ என்றேன். சரி தியான கூடத்திற்கு வந்து உங்கள் இடத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள் என்றான். ஒரு ஐந்து நிமிடத்தில் வருகிறோம் என்று சொல்லி தியானக் கூடத்தின் பொறுப்பாளி இன்னொருவர் தானே இவன் எதற்கு நம்மை அழைக்கிறான் என்று யோசித்தபடி தோழியை தேடி சென்றேன். இருவரும் முகம் கழுவி தயாராகி மேலே சென்றபோது அவன் எங்கள் இடத்தை தேர்வுசெய்யக் கோரினான். அவன் சொன்ன படி செய்ததும் தியான நேரம் ஆகி இருந்தது. எல்லோரும் வரத் துவங்கினர். இந்த முறை தியான நேர அறிவிப்பு, தியான கூட ஒருங்கிணைப்பு எல்லாம் அவனே செய்தான். மாலை தியான நேரம் முடிந்து இரவு உணவும் முடிந்த பிறகு திரும்பவும் ஒரு அமர்வு இருந்தது. அது முடிந்து நாங்கள் அவரவர் அறைக்குத் திரும்பினோம்.

அடுத்த நாள் காலை நேர தியானம் முடித்து உணவருந்திய பிறகு ஒரு மணி நேர சேவை நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. சேவை நேரப் பங்களிப்பாக எனக்கும் தோழிக்கும் காய்கறி வெட்டும் வேலை கொடுக்கப் பட்டிருந்தது. எங்களோடு கார்‌மென் என்ற ஜர்மானியப் பெண்மணியும் இருந்தார். அவரோடு பேசியபோது நீண்ட வருடங்கள் அவர் பெர்லினில் டாக்ஸி ஓட்டுனராக இருந்ததாக அறிந்தேன். பிறகு தன் இளமைக் காலத்தில் பெரும்பாலும் தனியாகவும் சமயங்களில் தம் தங்கையோடும் அவர் சென்ற மோட்டார் ஸைக்கிள் பயணங்களைக் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். தாம் சென்ற இடங்களிலேயே இதுவரை தனக்குப் பிடித்த இடமாக க்ரீஸ் இருப்பதாக சொன்னார். எனக்கும் க்ரீஸ் செல்லவேண்டும் என்று நெடு நாள் ஆசை இருப்பதாக சொன்னேன். தொடர்ந்து நானும் தோழியும் கோவையிலிருந்து கொடநாடு வரை ஆக்டிவாவில் சென்றதை நினைவு கூர்ந்தவளாக நீங்கள் தனியாக மோட்டார் ஸைக்கிளில் செல்லும்போது அங்கே அதை எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டேன். அவருக்கு என் கேள்வி சரியாக புரியாததால் இங்கே நாங்கள் இருவரும் தனியாக சென்றபோது நிறுத்தி வழி கேட்டபோது அறிவுரைகளும், காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்தாற்போன்ற முக பாவங்களையும் எதிர்கொண்டோம் என்றேன். ஹா… என்று உடனே நறுக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு மேஜைக்கு இரண்டடி பின்னே சென்று விரிந்த கண்களோடும், உதடுகளோடும் சிலை போல் ஒரு கணம் நின்றார். புன்னகைத்துக் கொண்டே எல்லா இடத்திலும் அப்படிதான் போல என்றேன்.

அவருடன் பேச பேச எனக்கு மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டது. நீங்கள் சென்ற இடங்களில் சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்ததா என்றேன். அவர் தான் தென் ஆப்ரிக்காவின் ஒரு கிராமத்திற்கு சென்றபோது அங்கே நடக்க முடியாத ஒரு முதியவர் இருந்தார் என்றும் அவரின் மகன் தினமும் காலையில் அவரை ஏந்திக் கொண்டு வெளியில் இருந்த ஒரு மரத்தடியில் அவருக்கு படுக்கை அமைத்து அதில் அமர வைப்பார் என்றும் அந்த வகையில் அந்த முதியவர் நாளெல்லாம் காட்சிகளை பார்த்துக் கொண்டு கழிப்பார் என்றும் மாலையானதும் பள்ளி சென்ற பேரக் குழந்தைகள் திரும்ப வந்து அன்றைய கதைகளை எல்லாம் அவருக்கு சொல்வார் என்றும் சொன்னார். அந்த மக்களின் வயதானவர்களை பேணும் வழக்கம் என்னுள் மிகுந்த ஆச்சரியத்தை எழுப்பியது என்றார். எனக்கும் உண்மையிலேயே மிகுந்த ஆச்சர்யம் எழுந்தது. தற்கால தொழில்நுட்பத்துள் தொலைந்து போகாத குழந்தைகளும் நிறையப் பெறுகின்றன என்று ஒரு எண்ணம் உள்ளே ஓடியது. வயதானவர் என்ற பேச்சு வந்தபோது ஜர்மனியில் தனித்திருக்கும் வயதானவர்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் அரசே மூன்று வேளை உணவு வழங்குவதாக சொன்னார். வயதானவரின் வீடுகளுக்கு வந்து மூன்று வேளையும் உணவு விநியோகிக்கிறார்கள் என்றும் சொன்னார்.

சற்று நேர மௌனத்திற்கு பிறகு தன் வீட்டிற்கு பக்கத்தில் வயதான தம்பதியர் மிகவும் அன்னியோன்யமாக இருந்தார்கள் என்றும் மனைவி கணவனுக்கு என்று எல்லாக் காரியங்களையும் பார்த்துப் பார்த்து செய்தார் பிறகு திடீரென ஒரு நாள் இறந்து போனார் என்றும் சொன்னார். கணவருக்கு நேர நேரத்திற்கு உணவு வந்தாலும் அவர் எதையும் தொடவில்லை. நாளாக நாளாக அவர் உடைகள் உடலில் தொங்கத் துவங்கின. நிறையக் குடித்தார். நாங்கள் பார்க்க பார்க்க அவர் தேய்ந்துகொண்டே வந்தார். இவர் இப்படித் தேய்ந்தே ஒரு நாள் கரைந்து போவார் என்று நான் நினைத்தேன். அவர் இறந்து நாற்றம் வரத் துவங்கியதும் தான் அவர் இறந்ததை அறிந்தோம் என்றார். அவரை வேரு யாரும் வந்து பார்த்ததாக அறியவில்லை என்றார். வயதானவர்கள் நிராகரிக்கப் படுகின்றனர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அன்யோன்யம் என்பது கணவன் மனைவியை இந்த அளவு சார்ந்திருப்பதிலா இருக்கிறது என்றேன். மிகவும் நேசித்தவர்களை இழப்பது பெரும் துயரம் அதைக் கடப்பதும் பெரும்பாடு என்றாலும் அன்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று அன்றாட காரியங்களில் அடி முதல் முடி வரை தானின்றி இயங்காமல் செய்துவிடுவிடல் நேசிப்பவருக்கு இழைக்கும் அநியாயம் என்றும் வழங்கும் கடுமையான தண்டனை என்றும் கருதுகிறேன் என்றேன்.

தொடர்ந்து ஜர்மனியில் மத உணர்வு எல்லாம் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டேன். எல்லாம் கலவையாக இருக்கிறது என்றவர் இளைஞர்கள் யாரும் ஆலயத்திற்கு வருவதில்லை என்றும் வயதானவர்களைக் கொண்டு இன்னும் ஆலயங்கள் இயங்குகின்றன என்றும் சொன்னார். மதம் கொள்கைகளைப் பொருத்தவரை நின்ற இடத்திலேயே இன்னும் தீவிரமாக நின்று கொண்டிருக்கின்றன என்றார். என் புரியாத பார்வையைப் புரிந்தவர் போல அதாவது எங்கள் போப் ஏழை நாடுகளுக்கு செல்கிறார், எய்ட்ஸ் கொடுமையையும் அறிவார் என்றாலும் இன்னும் ஆணுறையைத் தவிருங்கள் என்றுதான் உபதேசிக்கிறார் என்றார். ஆணுறையை தவிர்த்துவிட்டு நோயைத் தடுக்க மக்களே உறவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்றா சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்கள் என்றார். ஒருவேளை மறைமுகமாக அவர் அதைத்தான் வலியுறுத்துகிறாரோ என்று சிந்தித்தவளாக அஃப் கோர்ஸ் நோ என்றேன் அழுத்தமாக.

-தொடரும்


Sunday, March 2, 2014

5. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம், ஜெயம் கொண்டான்



நான் கோவில் வளாகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றதற்கு ஸ்ரீ உடனே ஆமோதித்தாள். சுமா நிச்சயமாக வேண்டாம் என்றாள். ஒரு வேளை கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் இரண்டையும் பார்க்க முடியாவிட்டால் கும்பகோணத்தில் தங்கலாம் என்று பயணத்திற்க்கு முன்பு நான் சொன்னதற்கு ஸ்ரீ கும்பகோணம் மக்கள் கூட்டம் அதிகமாக மிக நெருக்கடியாக இருக்கும் அங்கே தங்க நன்றாக இராது என்றிருந்தாள். சரி அப்படியானால் எவ்வளவு நேரமானாலும் இரண்டையும் பார்த்துவிட்டு கடைசி பேருந்தை பிடித்து இரவை பயணத்தில் கழிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இருட்டில் ஒன்றையும் பார்க்க முடியாது என்பதையும் கோவில்கள் பூட்டப்படும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள மறந்து விட்டிருந்தோம். இப்போது எங்கே தங்குவது என்று யோசனையாக இருந்தது. இங்கேயே தங்கலாமா என்று பலமாக யோசித்தோம். சரி இந்த ஊரிலேயே தங்க முடிந்தால் காலையில் சீக்கிரம் எழுந்து இந்தக் கோவிலை பார்த்துவிட்டு கும்பகோணம் செல்லலாம், கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் மிக அருகில் இருக்கிறது திரும்பவும் இங்கே வருவதானால் பயணத்தில் நேரம் கழியும் எனவே, இந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தோம். நாம் கோவில் உள் நுழையும்போது கோவில் பூஜை நேரங்கள் குறித்து ஒரு பலகையில் குறிப்பிட்டிருந்தார்கள். நான் போய் பார்த்து வருகிறேன் என்றேன். அங்கே யாரேனும் இருந்தால் எங்காவது தங்க இடம் கிடைக்குமான்னு கேட்டுப் பார், நமக்கொன்றும் ஹைஃபை இடம் தேவை இல்லை, ஸிம்ப்பிலா இங்கேயே  யாருடைய வீடானாலும் கூட சரிதான் என்றாள் ஸ்ரீ.

 
உள்ளே சென்றதும் வாயிலுக்கு அருகில் இருந்த பலகையில் கோவில் திறக்கும் நேரம் குறித்து படித்தேன். அதை தொட்டாற்போல இடது புறம் இரு பெண்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களின் சகஜ பாவத்தை வைத்து இவர்கள் இந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து தினமும் இங்கே பூ, பூஜை சாமான் விற்பவர்கள் என யூகித்தேன். ஏங்க இங்கே தங்க எதாச்சும் இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பார்த்ததும் என்ன தோன்றிற்றோ நீங்க தங்கற மாதிரி இங்கே எதுவும் இல்லை. ஜெயம் கொண்டான் போகனும் இல்லையானால் கும்பகோணத்தில் தான் நல்ல அறை கிடைக்கும் என்றார்கள். கும்பகோணம் போக எவ்வளவு நேரம் ஆகும் என்றதற்கு இடையில் ஏதோ பாலம் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் அதனால் பேருந்துகள் சுற்றி போவதாகவும் காரானால் நேராகவே செல்ல முடியும் என்றும் சொன்னார்கள். பஸ்ஸில் ஒன்றரை மணி நேரம் ஆகும், காரில் தானே வந்திருக்கிறீர்கள் அப்படியானால் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றார். நான் கார் இல்லை பஸ் தான் என்றேன் அப்போ ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார்கள். கொஞ்சம் போல தயங்கி குடும்பம் எல்லாம் கூட இருக்கு தானே என்று அவர்கள் வினவ ஆமாம் வெளியில் இருக்காங்க என்று விடைபெற்றேன்.

திரும்பி வந்து சேகரித்த விசயங்களை இவர்களிடம் தெரிவிக்க, ஜெயம் கொண்டானில் அறை கிடைக்குமா என நாம் பைகளை வைத்துவிட்டு வந்த வெளிக்கடைக்காரரிடம் சென்று கேட்கலாம் என்றாள் ஸ்ரீ. அங்கே சென்று அவரிடம் கேட்க கூட்டு ரோட்டிலேயே நல்ல லாட்ஜ் ஒன்றிருப்பதாக சொன்னார். ஜெயம் கொண்டான் சென்றால் அங்கே நிறைய அறைகள் இருப்பதாகவும், ஆனாலும் கூட்டு ரோட்டில் இருக்கும் அளவுக்கு அத்தனை சுத்தமாக இருக்காது மேலும் ரேட்டும் அதிகமாக இருக்கும் என்றும் சொன்னார். இதானால் இப்போதான் கட்டி இருக்கிறார்கள் அறைகள் நன்றாக இருக்கும் என்று சேர்த்து சொன்னார். எங்களுக்கு ஜெயம் கொண்டானா கூட்டு ரோடா எங்கே செல்லலாம் என்று யோசனை எழுந்தது. ஒரு முடிவுக்கு வர முடியாது அங்கே டீ கிடைத்ததால் மூவரும் முதலில் டீ குடிக்கலாம் என்று முடிவு செய்தோம். கடையை ஒட்டினாற்போல் இருந்த கூரைக்கடியில் ஒரு மேசையும் சில ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. 3 டீ சொல்லி விட்டு அங்கே சென்று அமர்ந்தோம். 

அவரது கடையில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன பொம்மைகள், வித விதமான சாவிக் கொத்துகள், கழுத்தில் கட்டும் புனிதக் கயிறுகள், கங்கை கொண்ட சோழபுர சிறப்பை சொல்லும் புத்தகங்கள், இன்னும் நிறைய நிறைய நிறைய பொருட்கள் இருந்தன. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த படியே நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடையில் கடைக்காரர் போக இன்னும் சில ஆண்கள் குழுமியிருந்தார்கள். கடையில் இருந்த பொருட்களை நான் பார்த்தது போல அவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் எங்களைப் பற்றிய எத்தனை கற்பனைகள் ஓடி இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை. கடையில் வாங்கி இருந்த புத்தகத்தை ஸ்ரீ புரட்டிக் கொண்டிருந்தாள். சுமா கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நான் கடைக்குள் திரும்பவும் சென்று அங்கே மாட்டி இருந்த கயிறுகளை ஆராய்ந்தேன். கருப்பு கயிறில் தெய்வப் படங்கள் கோர்க்கப் பட்டிருந்தன. அதில் ஒரு கயிறில் 'சே' வின் படமும் இருந்ததைப் பார்த்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுதுதான் 'motor cycle diaries' பார்த்திருந்தேன். தவிரவும்

‘சே’வை எனக்கு ஏனோ பிடிக்கும். அதுவும் ஒருபக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரின் கருப்பு வெள்ளைப் படம் என்னவோ என்னை வெகுவாக ஈர்த்தது. உடனே அதை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டேன். அங்கே 'சே' படம் போட்ட கயிறுகள் நிறைய இருந்ததை அறிந்தும் நிச்சயம் ஸ்ரீயும் இதை வேண்டுவாள் என நினைத்தும் அவளிடம் சென்று ஏய் இங்கே பாரு டா என்று வேண்டுமென்றே அவளை உசுப்பினேன். எனக்கும் வேணும் எனக்கும் வேணும் என்றாள். அவளுக்கும் ஒன்றை வாங்கிக் கொடுக்க அவளும் அதை அணிந்து கொண்டாள். அணிந்ததும் இன்னதென தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. ஹ்ம்ம் அதை எப்படி விளக்குவது ஒரு வித உல்லாச மனநிலை, ஒரு விதத் திமிர், தான்தோன்றித்தனம். அந்த நேர சிறு மகிழ்ச்சியை எதுவும் குலைத்து விடமுடியாததைப் போன்ற ஒரு நிச்சயம் மிளிரத் தலை நிமிர்த்துத் திரிந்தோம். சுமா எங்களை ஒருமாதிரியாகப் பார்த்து யாரிந்த 'சே' என்றாள். He was a revolutionary, a good hearted human-being as far as I know என்றேன். நீ Motor Cycle Diaries பார்க்க வேண்டும் நான் உனக்கு பதிவு செய்து தருகிறேன் என்றேன்சரி நாம் திரும்பியதும் கொடு என்றாள் 

டீ வந்ததும் குடித்துக் கொண்டே மீண்டும் எங்கே தங்குவது என்ற சம்பாஷனை வந்தது. பேசாமல் கூட்டு ரோட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் ஸ்ரீ இப்போது மணி ஏழு தான் இப்போதே சென்று நான்கு சுவருக்குள் அடைய முடியாது சும்மாவேனும் ஜெயம் கொண்டான் வரைக்கும் சென்று வரலாம் என்றாள். எனக்கும் இரவு நேரத்து ஜெயம் கொண்டானை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சுமா வேறு வழியின்றி சரி என்றாள். உடனே ஸ்ரீ எஏய்ய் நாம் ஏன் ஒரு படத்துக்கு செல்லக் கூடாது என்று கேட்டாள். உடனே கடைக்காரரிடம் இங்கே நல்ல தியேட்டர் இருக்கா என்று கேட்டாள். இருக்கு ஆனா காலிப் பயலுக தான் இந்நேரம் படத்துக்கு போவாங்க நீங்க போறாதான கும்பகோணம் போங்க என்றார். கும்பகோணத்திற்க்கு போக தன் நண்பர் ஒருவரிடம் taxi இருப்பதாகவும் எண்ணூறு ரூபாய் கொடுத்தால் போய் பார்த்துவிட்டு திரும்பி வரலாம் என்றார். எண்ணூறா என்று பின் வாங்கினோம். சரி கூட்டு ரோடு சென்று முகம் கழுவி தயாராகி ஜெயம் கொண்டான் சென்று உணவருந்தி வரலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்தோம். திரும்பவும் ஸ்ரீ ஏய் படத்துக்கு போலாமா என்றாள். நான் தயக்கத்துடன் சுமாவை பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போலவே அவள் நீங்கள் இருவரும் தனியாக செல்லும்போது இதை எல்லாம் செய்யுங்கள் இப்போது வேண்டாம் என்றாள். நான் ஒன்றும் பேசாமல் மௌனம் ஆனேன்

கூட்டு ரோடு வந்து அந்த லாட்ஜை எளிதாக கண்டு பிடித்து அங்கே விசாரிக்க சென்றால் எங்கே இருந்து வரீங்க என்ற படியே எங்கள் பின்னால் ஒருவர் வந்தார். இவர் தான் பராமரிப்பவர் போல என்று நினைத்து கோயமுத்தூர் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் என்மேல் தடுமாறி விழ வந்தார். சுதாரித்து உள்ளே தள்ளி நின்றேன். எங்களைப் பார்த்து லாட்ஜ் ஒட்டி இருந்த மருந்துக் கடையில் இருந்து வந்தவர் தாத்தா இப்போதான் வெளியே போயிருக்கார் இருங்க வந்துடுவார் இல்லேன்னா அந்த நம்பர்க்கு கூப்டு பாருங்க என்று லாட்ஜ் போர்ட்டில் இருந்த நம்பரைக் காட்டினார். ஸ்ரீ அந்த நம்பரை அழைத்து அறை வேண்டும் எனவும் லாட்ஜ் வாசலில் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னாள். உரிமையாளர் லாட்ஜில் தங்கி பராமரிப்பவரிடம் தகவலை சொல்லி அனுப்பி வைப்பதாக கூறி வைத்தார். அந்த தாத்தாவும் இரு நிமிடங்களுக்குள் வந்தார்.

வந்தவர் நேராக மருந்துக் கடைக்காரரிடம் செல்ல இருவரும் ஏதோ பேசியபடி குரலை சற்று உயர்த்தி நீங்க யாரு எதுக்கு உங்களுக்கு அறை வேண்டும், நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க படிக்கிறீங்களா என்றார். நான் ஆமாம் போலீஸ் ட்ரைனிங் எடுத்துட்டிருக்கோம் என்று துவங்க, கோவில் சுத்திப் பார்க்க வந்தோம் நேரம் ஆயிட்டதால இங்கயே தங்கிட்டு காலைல கோவிலைப் பார்த்துட்டு போகலாம் என்று தான் அறை கேட்கிறோம் என்று ஸ்ரீ முடித்தாள். சுமா மௌனமாக சிரித்தபடி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். உடனே அவர் இறுக்கம் இளக அப்டியா சரி சரி வாங்க என்று எங்களை மேலே அழைத்து சென்றார். 

வாடகை பற்றி கேட்க அவர் கொஞ்சம் அதிகமாக சொல்லவும் காலையில் சீக்கிரம் கிளம்பிவிடுவோம் அப்படியும் இவ்வளவு வாடகையா என்று ஸ்ரீ கேட்டாள். அவர் உரிமையாளரிடம் பேச சொல்லவும் லாட்ஜ் உரிமையாளரிடம் ஸ்ரீ போலீஸ் என்றே சொல்ல அவரும் எங்களுக்கு கம்மி வாடகையில் அறைகளைத் தருவதாக சொன்னார். பிறகு தாத்தா உற்சாகம் தொற்ற எங்களுக்கு அறைகளைக் காட்டினார். இங்க வந்தாச்சில்ல இனிமே உங்க பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றார். கலக்கறீங்க தாத்தா என்றேன்.
பக்கத்தில் ஏதோ ஒரு ஊர்ப் பேரை சொல்லி அந்த ஊர் DSP எனக்கு சொந்தம் என்றார். அப்படியா சந்தோசம் என்றேன்.
எங்களுக்கு காட்டிய அறையில் சுடு நீர் வசதி இல்லாததால் காலையில் சுடு நீர் கிடைக்குமா என்றேன். உங்களுக்கு வேற அறை காட்டறேன் வாங்க என்று எங்களை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு வந்தார். அந்த லாட்ஜ் அறைகள் எல்லாம் காலியாகவே இருந்ததாக நினைத்தேன். இதோ இது ஐய்யர்களுக்கு மட்டும் கொடுக்கறது உங்களுக்கு கொடுக்கறேன் என்றார். ஸ்ரீ சுமாவைக் காட்டி இது ஐய்யர் பொண்ணுதான் என்றாள். அடப் பாவி என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். பிறகு அவரிடம் ஸ்ரீ நாங்க கொஞ்சம் வெளில போகனும் போய்ட்டு வந்துடறோம் என்றாள். சரி பதினோரு மணிக்குள்ள வந்துடுங்க என்றார். அவர் நல்ல மனிதராகத் தெரிந்தார். ஒரு சில நிமிடங்களில் தயாராகி ஜெயம் கொண்டான் சென்றோம். காட்டு யானைகள் வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டதைப் போல சிலர் மிரட்சியாக பார்த்தனர். ஆண்கள் மிக நெருக்கமாக வருவதைப் போல் உணர்ந்தேன். எதற்கு வம்பு என்று கைகளைக் குறுக்காக கட்டிக் கொண்டே நடந்தேன்சுமா மிகவும் அசௌகரியாமாக இருந்ததைப் போல உணர்ந்தேன்
ஊரை ஒரு சுற்று வரலாமா என்று ஸ்ரீ கேட்க சுமா வேண்டாம் பிறகு ஏதாவது நடந்து விட்டால் அதற்கு பிறகு உட்கார்ந்து பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று மறுத்தாள். நான் இவர்களின் சம்பாசனையை சும்மா கேட்டுக் கொண்டு மட்டும் நடந்தேன். தென்பட்ட ஒரு சிறிய மெஸ்ஸில் சென்று கொத்து பரோட்டா கிடைக்குமா என்று நான் கேட்டேன். கல்லாக்காரர் கொத்து பரோட்டா போடலாமா என்று உள்ளே பார்த்துக் கேட்க உள்ளே இருந்தவர் சற்று யோசித்து சரி என்றார். அப்போதேனும் நான் கொஞ்சம் யோசித்திருக்கலாம் இருந்தும் ஒரு ஆர்வக் கோளாறில் காத்திருந்தேன். நன்றாக காய்ந்து போன பரோட்டாவை கொத்திக் கொத்திக் கொண்டு வந்து கொடுத்தார். எப்படியோ விக்கி தக்கி உண்டு முடித்தேன் என்றாலும் 50 ரூபாய் பில்லைப் பார்த்ததும் நிஜமாகவே விக்கியது. பரோட்டா போட்டு பழகவே இத்தனை விலைன்னா நல்லாப் போடக் கத்துக்கிட்டா எங்கயோ போய்டுவாங்க என்று நினைத்து கொண்டேன்.

பில்லைக் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் சில மாத்திரைகள் வாங்க மருந்துக் கடைக்கு உள்ளே சென்றோம். கடைகாரர் உதவும் மனோபாவத்தில் இல்லை. ஏனோ தானோவென்று நாங்கள் கேட்டவைகளை எடுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அவரிடம் இங்கே தியேட்டர் எங்கே இருக்கு என்று கேட்டாள். இவள் ஏன் திரும்பவும் இதைக் கேட்கிறாள் என்று யோசித்தபடியே லேசாக மாறுபடும் அவரின் முக பாவங்களை    கவனித்துக் கொண்டிருந்தேன். கணத்திற்கு கணம் மாறுபட்டுக் கொண்டே இருந்த பாவத்துடன் கைகளை நேராக நீட்டி அங்கே இருக்கிறது என்றார். பிறகு எடுத்த மருந்துகளை கண்ணாடி மேஜையின் மீது வைத்திருந்த என் கைகளுக்கு சற்று தள்ளி வைத்தார். சில்லறைகளையும் அவ்வாறே வைத்தார்.அவரின் எண்ண ஓட்டம் புரிந்தபோலும் இருந்தது, புரியாதது போலும் இருந்தது. அப்படியே சற்று தூரம் நடந்து வந்து கூட்டு ரோடு பஸ் பிடித்து லாட்ஜ்க்கு வந்து படுக்க போகும் முன் ஸ்ரீ உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா என்றாள். நானும் சுமாவும் என்ன உதவி கேள் என்றோம். தயவு செய்து நாலு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்றாள். அஞ்சு மணிக்கு போனாலும் இருட்டா இருக்கும் ஒன்னும் பாக்க முடியாது டா என்றேன். அவள் முறைக்கவும் சரி அங்க போய் காத்திருந்து பார்ப்போம் என்று படுத்தேன். படுத்தபடியே அந்த மருந்துக் கடைக்காரனைக் குறித்த பேச்சு வந்தது. நான் கவனித்ததை சொன்னபோது அதையே அவளும் உணர்ந்திருக்கிறாள் என்று அறிந்தேன்.
 
காலையில் சுமா என்னை மட்டும் சீக்கிரம் எழுந்து போய் குளிக்க வைத்து விட்டு நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய், பாத்ரூம் பத்து நிமிடமாக காலியாக இருக்கிறது என்று எழுப்பினாள். இவர்கள் இருவருக்கும் எங்கு சென்றாலும் ஒரே நேரத்தில் பாத்ரூம் தேவைப்படம் எனவே நான் எப்போதுமே கடைசியாக கிளம்புவேன். உள்ளுக்குள் இவர்களின் சம்பாஷனையை ரசித்துக் கொண்டே படுத்திருந்தேன். அதற்குள் விடிந்து விட்டிருந்தது.
-தொடரும்-

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...