Monday, June 22, 2009

தொலைத்து விடுங்கள் என்னை

என்னை விரல்பற்றி
உச்சி வானுக்கு அழைத்து சென்று
ஒற்றை மேகத்துக்குள்
தொலைத்து விடுங்கள்
முடியாதா
அத்துவானக் காட்டில்
அடர் மரங்களின் இடுக்கில்
இட்டாவது திரும்புங்கள்
என் உணர்வுகள் புரியா
இந்த உறவுகளையும்
மனதை பீடித்து படர்ந்திருக்கும்
நினைவுத் தேமலையும்
இந்த மனிதர்களையும்
இந்த உலகையும் துறந்து
தனியாய்
என்னை, என் பெயரை
இந்த பெண் கூட்டை
எனக்கு வேண்டாது
என்னோடு ஒட்டிகொண்டிருக்கும்
எல்லாம் ஒதுக்கி
கட்டுப்பாடுகள் அறுத்து
பறந்து அலைவேன்
எல்லைகளற்ற நித்திய வீதியில்

Thursday, June 18, 2009

Friday, June 12, 2009

காதலுடல்

திரண்டு நிற்கும் வயது
தொடுகையில் கனிகிறது
சுருண்டு விரிந்து
திமிறித் துடிக்கிறது
உச்சி முடி பற்றி இழுத்து
உதடுகளில் சொல்கிறது
தேவையை
ஊர்கிற விரல்களில்
வெடிக்கிறது வெட்கம்
புரண்டு நழுவி
சேர்ந்து விலகி
உருகி கரைந்து
எல்லாம் தீர்ந்ததும்
மறுபடி துவங்க
மனது கேக்க
களைத்து புன்னகைக்கிறதுடல்

Wednesday, June 10, 2009

துரோகமும் வலியும்

எனக்கு எப்போதுமே நீங்கள் தான் வழிகாட்டி. உங்களை தவிர வேறு யாரையுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆனால் நீங்கள் என்னோடு இல்லை இன்று. உங்களுக்கு எழுதுவதாய் நினைத்து இதை எழுதுகிறேன்.

இந்த நாளை என்னால் மறக்க முடியுமா தெரியவில்லை. சமீப காலத்தில் இப்படி ஒரு நிம்மதியற்ற இரவை நான் கழித்ததில்லை. இப்படி ஒரு பச்சை துரோகத்தை எனக்கு யாரும் செய்திருக்கவில்லை இதுவரை. என்னால் ஏற்றுகொள்ளவே முடியாத ஒரு துரோகம் இது. துரோகத்தில் என்னது ஏற்று கொள்ள முடிவது, ஏற்று கொள்ள முடியாதது. எல்லா துரோகமுமே ஏற்று கொள்ள முடியாததுதான். செய்வதை எல்லாம் செய்து விட்டு அதற்க்கு சப்பை கட்டு கட்டுவது தான் சகிக்க முடிய வில்லை. ஐந்து வருடமாய் என் மனதில் கட்டி வைத்திருந்த ஒரு மிக அழகிய பிம்பம் தூள் தூளாய்.எனக்கு நடந்ததை யோசிக்க யோசிக்க கண்ணீர் பெருகுகிறது. எல்லாவற்றிலும் ஒரு கொடுமை என்னவென்றால் என் வலியை பகிர்ந்து கொள்ள கூட எனக்கு யாரும் இல்லை. என்னை புரிந்து கொள்ள கூடிய யா..ருமே... இல்லை. நான் என்றுமே ஒரு தனி மரம் தான். என் மனதை ஒட்டி வந்த நீங்களும் என்னோடு இல்லை. இந்த நிதர்சனம் எனக்கு புரிகிறது. ஆனால் நான் யாரிடம் சொல்வது. இந்த ஷணம் நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணறேன். என்னால் அழுகை என்ற உணர்வை கட்டுப்படுத்த முடிந்ததே இல்லை. இன்று எல்லாம் நடந்த பிறகும் எதுவுமே நடக்காதது போல புன்னகைத்து கொண்டு என் தனிமையான நேரம் வரும் வரை காத்திருந்து அழ வேண்டி இருக்கிறது. பன்னிரண்டு மணி நேரம் பொறுத்திருந்து மனதை மிகமும் பாதித்த ஒரு விஷயத்துக்கு ரியாக்ட் செய்வதை விட கொடுமை வேறென்ன? எனக்கு இரண்டு விஷயம் ஒப்புக்கொள்ளவோ செய்யவோ இயலாதது. மனதின் உணர்ச்சிகளுக்கு முகத்தில் திரை போட என்னால் முடியாது. இன்னொன்று என் விஷயத்தை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது. உங்களுக்கே தெரியும்.

முன்னொரு சமயம் கிட்டத்தட்ட இந்த மாதிரி சம்பவம் எனக்கு நிகழ்ந்தபோது உங்களால் மட்டுமே என்னை சமாதானம் செய்ய முடிந்தது. இன்றும் உங்களோடு பேச முடிந்திருந்தால் எனக்கு சற்றேனும் ஆறுதலாய் இருந்திருக்கும். நீங்கள் என்னோடு இல்லை. இனி எப்போதும் நீங்கள் என்னோடு இல்லை. ஏன் சென்றீர்கள் என்னை விட்டு தொலை தூரம்? ஏன்?

Sunday, June 7, 2009

என்னுள்ளே என்னுள்ளே

நீ இந்த வார இறுதியில்
காலி பண்ணவிருப்பதை
அப்பா அம்மாவிடம் சொன்னார்கள்
சிறு தவிப்பு மனதில்
அதை மறைத்து
புத்தகம் படிப்பதாய்
பாவனை செய்தேன்
தனித்திருந்த எனக்கு
உன் வருகை வசந்தமாய்
இந்த ஒரு வருடம்
எனக்குள் எத்தனை எத்தனை மாற்றம்
உன் மௌனமே என்னை
உன்னிடத்தில் பற்றி இழுத்தது
உன் குரல் எப்படி இருக்கும்
கேட்க ஆசை இருந்தது
பழகிய நாய்க்குட்டியாய்
உன் வண்டியின் ஓசையை
பழகிக்கொண்டது என் காதுகள்
எதிரெதிர் பார்க்கும் தருணங்களில்
ஒரு முறை நிமிர்வாய்
உன் கண்களை பார்க்கவே
நான் காத்துக்கிடப்பேன்
உன்னை பார்க்க முடிகிற
அந்த நிமிடங்களே
என் வாழ்கையை சுவாரஸ்யமாக்கியது
சொல்லவா வேண்டாமா
மருகித் தவித்திருந்து
பொழுதுகள் கழிந்தது
இன்று நான் எழுந்ததும்
நீ சென்றுவிட்ட செய்தி
செவி எட்டியது
உன் அறையை சுத்தம் செய்ய
அம்மா என்னை மாடிக்கு அனுப்பினாள்
திறந்ததும் எனக்குள் வெறுமை
அறையெங்கும் உன் வாசனை
நீ விட்டு சென்றிருந்த
பல் முறிந்து கிடந்த
ஒரு பாக்கெட் சீப்பு
எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன்
ஜன்னலோரம் கிடந்த
ஒற்றை காலுறை
உனக்கு வந்திருந்த
ஏதோ வங்கி கடிதத்தின் மேலுறை
கீழே கிடந்த
ஒரு பழைய பேனா எடுத்து
உன் பெயருக்கு முன்
என் பெயரை எழுதினேன்
பின் அவசரமாய் கிழித்து
குப்பைக்குள் பதுக்கிவிட்டேன்
ஒரு ஓரத்தில்
காகிதங்கள் குவிந்து கிடந்தது
ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கையில்
உள்ளேயிருந்து புன்னகைத்தது
காணாமல் போயிருந்த என் புகைப்படம்

Wednesday, June 3, 2009

நீயின்றி

காலையில் அணிந்த

கச்சையின் ஊக்கினில்

தொங்கி மடிகிறது இரவு

எல்லாம் முடிந்து

வியர்வையின் மத்தியில்

நனைகிற முத்தம்

நினைவில் மட்டும்