Thursday, March 24, 2011

Friday, March 4, 2011

திரையோவியம்

திரைச்சீலையின் முடிவில்
கிடந்த சிலையின் மேல்
சிறகு விரித்த பறவையொன்று
இளைப்பாற இறங்க
கோச்சை சேவலின்
வீரியம் கொண்டெழுந்தது சிலை
திடீர் உயிர்தலில் திடுக்கிட்டுப் பறக்கும்
பறவையின் கால்களைப்பற்றி
தன்மேல் கிடத்திய சிலை
அலகுமுட்டி, இறகுவருடி சொல்கிறது
இதுவரையும் கேட்டிறாத கதைகளை பறவைக்கு
சொல்லியும் கேட்டும் களித்த வேளையில்
நடு சாமக் கனவின் சாபம் தொற்ற
சிலைக்கு முளைத்தன இருபெரும் சிறகுகள்
பறவைக்கு வாய்த்தது பேரழகுச் சிலையுரு
உருமாறிய அதிர்வில் குழைந்த சீலையில்
கலங்கிப் போயின பின்னான காட்சிகள்

Wednesday, March 2, 2011

ஆயாசம்

கண் குறுக்கி
தளிருதடு பிரித்து
இப்புறம் அப்புறம் துழாவியின்னும்
காம்பு பற்ற விளங்காது
வயிறொட்டக் கதறுகிறது
இன்றைக்கு பிறந்த சிசு

நெடு நேரமாய்
போராடி ஈன்ற களைப்பிலும்
ஊட்ட முயன்று
தோற்றோய்ந்த தாய்க்கும்
இது முதல் குழந்தை

அழுதழுதே தொய்ந்த குழந்தை
தீராப் பசியோடே சோர்ந்துறங்க
சுறுசுறுவென
தனம் வீங்கி ஊறிய நேசம் கட்டி
மீண்டுமொரு கூர் வலியில்
உழல்கிறாள் தாய்

இப்படி
விரல் எட்டா இடுக்குகளில்
விழுந்துவிட்ட தருணங்களை, பிரியங்களை
எதைக் கொண்டு மீட்க?
இனியும்
எந்த நம்பிக்கையோடு வாழ?