Monday, November 11, 2013

எ திங் ஆஃப் ப்யூட்டீ

ஜன்னலருகே நாற்காலியை இழுத்துப் போட்டு வெளியே பார்த்தான். வெட்டப்பட்ட கிளையில் அமர்ந்திருந்த காகம் விடாமல் கரைந்தது. வெளிக்காட்சிகளில் ஒன்றும் மனம் நிலைக்கவில்லை. நள்ளிரவில் துவங்கி மிச்ச இரவை விழுங்கிய அந்தக் கனவை, எவ்வளவு முயன்றும் தன் நினைவிலிருந்து துரத்த முடியவில்லை. அந்தக் கனவு மேலும் மேலும் சிறு வயதிலிருந்து தான் துரத்த விரும்பிய பிற எல்லாக் கனவுகளையும் எழுப்பிக் கொண்டு வந்து இந்த நாளை ஒரு துர் நாளாக்கியது. தான் செல்ல அஞ்சும் பாதையைப் பற்றி விரைந்தது எண்ணம். அதன் வேகமும், உறுதியும் இவனை குலைக்க அவன் வேறொரு ஆளாக மாறிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். கைகள் நடுங்க இப்போது இந்தத் தனிமை ஆபத்தானதென உணர்ந்தான். ஏதோ உணர்வு தூண்ட எழுந்து வேக வேகமாக உடைகளை அகற்றி மூலையில் எறிந்தான்.

அறையின் அடுத்த மூலையிலிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் நிர்வாணத்தை பார்த்தான். பின் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டான். இரண்டும் வேறு வேறு உருவைக் காட்டியது. இரண்டும் ஒன்றுதான் என்றாலும் கூட பார்வையின் கோணம் வேறுபாடு காட்டிற்று. மீண்டும் மீண்டும் குனிவதும் நிமிர்வதுமாய் தன்னை மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான். அச்செயல் அவன் நினைத்ததைப் போல அவனை அவன் மனப் பிடியிலிருந்து தளர்த்தவில்லை. மாறாக அவ்விரண்டு காட்சியும் மேலும் எண்ணத்தை தூண்டி சிக்கலை இறுக்கியது. யாருமற்ற அறையில் தன்னை உணர்ந்த துணை வேண்டி கண்ணாடியை தெரிவு செய்தது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று தன்னையே நொந்துகொண்டான். சிக்கல்கள், சிக்கல்கள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அங்கிருந்து விலக திரும்புகையில் கால் சுண்டு விரல் மேஜையின் விளிம்பில் இடித்துக் கொண்டது. ஸ்ஸ்ஸ் என்று ஒரு முறை கண்களை இறுக மூடி பல்லைக் கடித்தான். ஃபக் யூ என்று முணுமுணுக்கத் துவங்கி பட் ஐ கான்ட் என்று தேய்ந்தான்.
 
தான் இவ்வுலகின் வேண்டப்படாத உயிரினமாக, மிகவும் பலகீனமானவனாக உணர்ந்தான். இல்லை இல்லை இதிலிருந்து என்னை நான்தான் தப்புவிக்க வேண்டும், ஒரு பக்கம் உணர்வு மனம் சொல்ல அறையை சுற்றி நடக்கத் துவங்கினான். மொசைக் தரையின் பெட்டிகளுக்குள் கரங்களுக்கு முட்டாமல் எட்டு வைத்து நடை பழகினான். சில விநாடிகளுக்குப் பிறகு இழுபட்டவனாக மீண்டும் கண்ணாடியின் முன் வந்து நின்றான். தன் பிம்பத்தையே உற்றுப் பார்த்தான். கண்ணாடியின் காட்சிக்குள் தற்போது எதிர் சுவற்றிலிருந்த இரண்டு பல்லிகளின் பிம்பமும் விழுந்தது. ஒன்று வாலை வளைத்துக் கொண்டு மற்றொன்றை துரத்தியது. துரத்தியபடியே இரண்டும் காட்சியிலிருந்து அகன்றது. அவனும் அகன்று கழிவறைக்குள் நுழைந்தான். வெளியே வந்த அவன் மீண்டும் உடையை எடுத்து அணிந்து கொண்டான். அறையை பூட்டிக் கொண்டு வெளியேறினான்.
 
அவள் என்ன செய்வதெனத் தெரியாமல் சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அந்த ஒற்றையடிப் பாதை அதோடு முடிந்து பெரும் வெளி முன் விரிந்தது. அது நீர் வற்றிய ஏரி என்பதை அவள் சற்று தாமதமாக உணர்ந்தாள். தூரத்தில் எருமைக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. நடுவில் ஒரு பாறை மல்லாந்து வெயில் காய்ந்து கொண்டிருந்தது. சரியாக சொல்லப் போனால் அது ஒரு பாறை அல்ல, ஒரு பாறைக் குடும்பம் அல்லது கூட்டம். தான் தனியாக வண்டியை எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கக் கூடாதோ என்று ஒரு கணம் நினைத்தாள். மறு கணம் டு ஹெல் வித் ஸேஃப்டீ, திஸ் இஸ் ஜஸ்ட் பர்ஃபெக்ட் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். தான் கிடாரை பயிற்சி செய்ய இதைவிட சரியான இடம் இருக்க முடியாது என்று நம்பினாள். வண்டியை நிறுத்திப் பூட்டிக் கொண்டு அந்தப் பாறையை நோக்கி நடந்தாள். அருகே செல்ல பாறையில் முளைத்திருந்த செடிகள் மறைத்திருந்த அவன் தெரிந்தான். அதுவரை இருந்த அவள் உற்சாகம் வருந்தியது.
 
தொடர்ந்து செல்லலாமா வேண்டாமா என்று யோசித்து நின்றாள். அவன் மேய்ந்து கொண்டிருந்த எருமைகளையே பார்த்தபடி இருந்தான். ஒரு முடிவுக்கு வந்தவளாக பாறையை நோக்கி மீண்டும் நடந்தாள். அருகே சென்றதும் உங்களின் ஏகாந்தத்தை குலைக்கும் எந்த எண்ணத்தோடும் நான் இங்கு வரவில்லை என்றாள். அவன் பதிலேதும் சொல்லாமல் அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பின் திரும்பவும் எருமைகளை மேய்ந்தான். அவனின் மௌனம் அவளுக்கு ஒரு அசௌகரியத்தை கொடுக்கவே அவள் தூரத்தில் இருந்த மேட்டை நோக்கி நடந்தாள். மறைந்து கொண்டிருந்த சூரியனை நோக்கி நடக்க கண்கள் கூசியது. மேட்டின் மேலேறி மாட்டி இருந்த கிடாரைக் கழற்றிக் கீழே வைத்தாள். அங்கே இருந்து சரிவை நோக்கி வேகமாக கீழே ஓடி வந்தாள். பின் திரும்பவும் மேலேறினாள். திரும்பவும் சறுக்கினாள்.
 
இப்படியாக விளையாடிக் கொண்டிருந்தவளை அவன் பார்த்தபடி இருந்தான். அவளை பார்க்க பார்க்க மன இறுக்கம் சற்றே தளர்ந்தாற் போல் இருந்தது. இந்த குழந்தை மனநிலை தனக்கும் வாய்த்திருந்தால் வாழ்க்கை எத்தனை எளிதாய் இருந்திருக்கும் என நினைத்தான். அப்போது ரம்மியமான மணிச் சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான். அப்போது தான், தான் இவ்வளவு நேரம் அருகே இருந்த அந்த சர்ச்சை கவனிக்காமல் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தான். கூடவே அறையை பூட்டிக் கொண்டு கால் போன போக்கில் நடந்து வந்து இங்கே அமர்ந்திருக்கும் பிரக்ஞை வந்தது. மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த சர்ச் வெகு உயரமாக மிக கம்பீரமாக நின்றிருந்தது. அதை ஒட்டி அதே போல வடிவமைப்புடன் வேறு சில கட்டிடங்களும் இருந்தது. ஒரு வேளை ஏதாவது கிரிஸ்துவ கல்வி நிலையமாக இருக்கலாம் என்று நினைத்தான். வெள்ளையும், ராயல் ப்ளூவும் பூசப் பட்டிருந்த அந்த சர்ச்சும் பிற கட்டிடங்களும் அந்த இடத்திற்கு பூரணத்தை தருவித்தது. பிறகு அந்த மணி ஓசையோ அவன் இதுவரை கேட்டிறாத இனிமையில் ஒலித்தது. இது எல்லாம் சேர்ந்து தன்னை மீட்டெடுத்ததாய் உணர்ந்தான். எ திங் ஆஃப் ப்யூட்டீ என கீட்ஸை நினைத்துக் கொண்டான்.
 
அப்போது அவள் அவனை கடந்து போய்க் கொண்டிருந்தாள். தெரிந்தவளைப் போல அவளிடம் கிடார் வாசிக்க தெரியுமா என்றான். அவள் கற்றுக் கொண்டிருக்கிறேன் பயிற்சி செய்யவே இங்கு வந்தேன் என்றாள். பயிற்சி செய்யுங்கள் நான் கிளம்புகிறேன் என்றான். நீங்கள் இங்கே இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று அருகே அமர்ந்தாள். எருமைகள் மேய்ந்தபடி கிட்டே நெருங்கி இருந்தன. அதைப் பார்த்த அவள், இந்த எருமைக் கூட்டத்தைப் பார்க்க அந்நியன் நினைவு வருகிறதா உங்களுக்கும் என்றாள். தொடர்ந்து அவளே பயந்து விடாதீர்கள் விலக்கப்பட்ட எல்லாத் தவறுகளையுமே நான் செய்திருக்கிறேன் அதனால் மிதித்துக் கொல்லப்படப் போவது நான் தான் என சிரித்தாள். நானும் ஒன்னும் குறைந்தவனல்ல என்றான். ஓ அப்போ நம்ம சேர்ந்து சாகப் போறோமா என்றாள். ஆறு மணிக்கு திரும்பவும் சர்ச்சின் மணி ஒலித்தது.

 இந்த ஓசை மனசை என்னவோ பண்ணுதில்ல என்றாள். ம்ம் என தலை அசைத்தான். சில விநாடிகள் இருவரும் ஒன்றுமே பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். உணர்வு வந்தவளாக அவள், மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கடந்து போயிருந்த எருமைகளை சுட்டினாள். இருவரும் இணைந்து சிரித்தனர். அபூர்வமாக இப்படி ஒரு நாள் அமைந்து விடுகிறதில்லையா என்றாள்.  அவன் அண்ணாந்து வானத்தை பார்த்தான். வானத்தில் மைனாக் கூட்டம் சேர்ந்தும் கலைந்தும் ஜாலங்களை நிகழ்த்தியது. அவன் பார்வையை தொடர்ந்து மேலே பார்த்து,  வாவ் Murmuration என்றாள். எ திங் ஆஃப் ப்யூட்டீ என்று அவன் துவங்க, அவள் இஸ் எ ஜாய் ஃபாரெவர் என்று முடித்தாள்.

Sunday, September 15, 2013

மூக்கி

பல அடுக்குகள் அல்லது திரைகளை உதிர்த்து நின்ற ஆத்மாவின் அசலான நிர்வாணத்தை நான் நேற்றுப்  பார்த்தேன். 'மூக்கி' அத்தனை அற்புதமான கூத்து (Theatrical Dance Performance). எத்தனயோ முறை பார்க்க நினைத்தும் முடியாமல் நேற்று தான் காணக் கிடைத்தது. அது நடை பெற்ற இடம் 'valley School'. எத்தனையோ முறை போக நினைத்தும் நேற்று தான் அங்கேயும் முதன் முதலாக சென்றேன். மூக்கி ஆறரை மணிக்குதான் என்றாலும் valley இயற்கை சூழலில் அமைந்திருந்ததால் கொஞ்சம் முன்னாடியே செல்லலாம் என்று நானும் என் தோழிகளும் ஐந்து மணிக்கு அங்கே சென்று சேர்ந்தோம். அந்த வில்டர்‌நெஸ் (Wilderness) என்னை அப்படியே உள்ளே வாங்கிக் கொண்டது. சுற்றி பார்த்தபடி வந்தபோது சற்று முன்னாக நடந்திருந்த என் தோழி Open Theatre யின் கடைசிப் படியில் அமர்ந்தபடி யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் என்னுடன் நடந்து வந்த இன்னொரு தோழியிடம் அவங்கள பாக்க எங்க அம்மா மாதிரியே இருக்காங்க என்றேன். பக்கத்தில் போனதும் தான் முகம் அம்மாவைப் போல் இல்லை என்று தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்த்தபோது அவர்களின் நரைத்த முடி எனக்கு அப்படி தோண செய்திருக்கலாம். தோழி எங்களுக்கு அவரை நளினி என்று அறிமுகப் படுத்தியதும் அவர் எங்களைப் பார்த்து புன்னகைத்தார். அவர் முகத்தில் தான் எத்தனை கனிவு என்று நினைத்துக் கொண்டேன். சில விநாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டு நீங்கள் மூன்று மணிக்கு கிளம்பியது அல்லவா நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்க வில்லையே மேலே செல்லுங்கள் அங்கே பழம் இருக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் மூ..ன்று மணிக்கு என்று சொல்லும்போது தொனித்த புரிதலும், பரிவும் அவர் கையை பற்றிக் கொண்டு அம்மா என்று மடியில் தலை சாய்த்திருக்கலாம். பிறகு அவர் கீழே இருந்த மண் பாதையை சுட்டிக் காட்டி நீங்க அது வழியாக நடந்தால் study center போகலாம் பார்பதானால் பார்த்து விட்டு வாருங்கள் என்றார். நாங்கள் மூவரும் விடைபெற்று கீழே இறங்கினோம்.


ஆறு மணிக்கு நடனம் நடை பெரும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு சிறு குடில். அதன் படிகளில் இடப்பட்டிருந்த கோலமும் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த எண்ணைய் தீபங்களும் விரிக்கப்பட்டிருந்த பாயும், நிகழ்ச்சிக்கென குடிலின் ஒரு பக்கத்தை மறைத்துக் கட்டியிருந்த மேரூன் பார்டர் கொண்ட கருப்பு பருத்தி சேலையும் இருள் கவிழ கவிழ பூரண அழகில் மிளிர்ந்தது. விரிக்கப்பட்டிருந்த பாயில் வரிசையாக அமர்ந்து நாங்கள் 'மூக்கி' பார்க்க தயாரானோம். மூக்கி ஒரு நாடக நடனம். 'மூக்கி' என்றால் கன்னடத்தில் ஊமை என்று பொருள். தாகூரின் 'சுபா' என்ற ஊமைப்பெண் சிறுகதை தான் அதன் உள்ளுயிர்ப்பு. என்றாலும் அதில் நடித்தவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களையும் உள்ளிழைத்திருந்தார்கள்.
ஒரு மணி நேரம் மிக உணர்வுபூர்வமாகக் கடந்தது. பங்கு பெற்ற ஐந்து பேரும், ஒரு கட்டத்தில் கன்னடத்திலும், தமிழிலும், ஹிந்தியிலும் 'எனக்கு பேச்சு வராது, என்னால பேச முடியாது, அதனால் ஜனங்க நினைச்சுக்கறாங்க எனக்கு உணர்வுகளே இல்லை' மாறி மாறி சொன்னார்கள். மனம் அங்கேயே நின்று கனத்தது. மிக சொற்பமான சொற்கள் ஆனால் அதன் உள் இருக்கும் உணர்வுகள் எத்தனை எத்தனை. நடன அசைவுகளிலும் இது தான் சாரம். இதன் மூலம் அவர்கள் சொல்ல வந்தது, பேச்சு வராதது ஊமைக்கு மட்டுமே இல்லை என்பது, உரத்த குரல்களின் இரைச்சலில் மென் குரல்கள் அமிழ்ந்து போய் விடுகிறதென்பது, சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் வரையறைக்குள் அல்லது ஏற்றுக்கொள்ளும் உறவுகளுக்குள் வந்துவிடாத 'Gay' ஒருவரின் கொந்தளிப்புகள் எப்படியிருக்கும் என்பது, ஒருவருக்கு பேச்சு திக்குவது  அவரின் குறை அல்ல அதை கேட்கும் அளவு பொறுமை கூட இல்லாதது நம் குறையே என்று சுட்டுவது, பின் மௌனியான இயற்கை எனக்கு வலிக்கிறது என பல வேளைகளில் சொல்லியும் நாம் கண்டுகொள்ளாமல் கடந்து விடுவது, இப்படி இன்னும் நிறைய நிறைய. நிகழ்ச்சியின் முடிவில் அவர்கள் ஐவரும் தங்கள் சொந்த வாழ்வோடு எப்படி இதை தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள் என்று பகிர்ந்து கொண்ட போது மூக்கி இன்னும் அர்த்தம் பொதிந்ததாக ஆனது. எனக்கு மட்டும் தமிழ் இன்னும் நன்றாக தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.

நானும் மூக்கியை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.என் போதாமைகளை, இயலாமைகளை இன்னும் இன்னும் என்னுள் புரளும் கேள்விகளை இவ்வுலகுக்கு விளங்கும்படி எப்படி சொல்வேன்? என்கிற ஆயாசம் மிகும் தினங்களில் நான் ஊமை ஆகி விடுகிறேன். என்னை தனிமை படுத்திக் கொள்கிறேன். ஆனால் உள்ளே பொங்கும் கொந்தளிப்புகளை நான் என்ன செய்வேன்? என்னுள்ளே அடைத்துக் கொண்டதெல்லாம் 'மூக்கி' யைப் பார்த்துக் கொண்டிருந்தபோது வெளிவந்தது. நான் அழுதேன்.  எனக்கு மற்றவர் முன் அழுவது பிடிக்காது, பிறகு அவர்கள் கேலிக்கு உள்ளாவதும். அதனாலயே நான் படங்களை தனித்துப் பார்க்க விரும்புவேன். ஆனால் நேற்றோ என்னை சுற்றிலும் அமர்ந்திருந்த யாரையும் பொருட்படுத்தாது அழுதேன். விழிகள் பொங்கி பொங்கி துளிகள் கன்னங்களில் உருண்ட படி இருந்தன. எங்கே என் கேவல் எல்லோருக்கும் கேட்டு விடுமோ என்று ஒரு கட்டத்தில் பயந்து என் முன் வரிசையில் அமர்ந்திருந்த என் தோழியின் முதுகை தொட்டு ஐ யாம் நாட் ஏபில் டு கன்ட்ரோல் என்றேன். அவள் தன் கைப்பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து என்னிடத்தில் கொடுத்து விட்டு என் கால்களை மெதுவாக தட்டிக் கொடுத்தாள். அது மேலும் என்னை கரைத்து நான் தலை கவிழ்ந்து அழுதேன். அந்த அழுகை அப்போதைக்கு என்னை மீட்டது என்றாலும் என்னால் இன்னும் மூக்கியிலிருந்து வெளிவர முடியவில்லை. பங்குபெற்றவர்களில் ஒருவரான பூர்ணிமா நடனம் முழுக்க இசைத்த அ அஆ அஆ ஆஆ வை தான் மனம் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது.

Monday, September 2, 2013

ஒரு நாளும், நீயும் - நானும்உன்னிடம் இப்படி என் நாட்களையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதில் எத்தனை நிறைவு தெரியுமா? நேற்று ஒரு முழுமையான நாள், மதியம் 'நீரின்றி அமையாது உலகு' என்பதை வலியுறுத்தி, அதை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து குழந்தைகளுக்கு உணர்த்தவென திரையிடப்பட்ட படங்களைக் காண  குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு (Water Film Festival)  சென்றேன். அதில் 1984 ல் வெளியான 'Hen in a Boat' (Flußfahrt mit Huhn) என்ற ஜர்மன் படம் திரையிடப் பட்டது.
 
நீர் சேமிப்பை பற்றிய வெளிப்படையான வலியுறுத்தல்கள் இல்லை என்றாலும், நீர்நிலைகள் மாசுபடுதலுக்கான காரணிகள் குறித்த சில ஸட்டிலான காட்சிகள் இருந்தன. ரோபேர்டின் திட்டப்படி ஜோஹன்னா என்ற சிறுமி உட்பட 4  குழந்தைகள், ராபர்ட் ஜோஹன்னாவின் தாத்தாவை ஏமாற்றிவிட்டு அவரின் படகை எடுத்துக் கொண்டு, ஆற்றின்  வழி  கடலைச் சேரும் பாதையை கண்டுபிடிக்க மேற்கொள்ளும் சாகசப் பயணம் தான் இந்த படம். கடலின் துர்சக்திகளிடமிருந்து தங்களை ஒரு கோழி பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு கோழியையும் படகில் கொண்டு செல்கிறார்கள். அவர்களோடு ஒன்றரை மணி நேரம் மீண்டும் குழந்தையானேன்.

பிறகு மாலை 'Short + Sweet Dance Festival' finale க்கு சென்றேன். Ballet, Hindustani/classical, Flamenco போன்ற பல நடன வடிவங்களை பயிற்சி செய்யும் நடனருக்கான போட்டி. ஒரு பத்து பர்ஃபார்மென்ஸ் இருந்தது.பத்து  நிமிடங்களுக்குட்பட்ட எல்லாமே நன்றாக இருந்தது. இருந்தாலும், அதில் எனக்கு ஸோலோ பர்ஃபார்மென்ஸ் இரண்டு மிகப் பிடித்தது. ஒருவன், மனவளர்ச்சி குன்றியவரின் உலகை பிரதிபலிக்கும் வகையில் மனம் பிறழ்ந்தவர்களின் சிதைந்த உணர்வுகளை முகத்திலும், அவர்களின் குலைந்த அசைவுகளை டான்ஸிலும் தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்தான். இன்னொருத்தி, கட்டுக்கடங்காத உணர்வுகளை, கொந்தளிப்பை, இயலாமையை, அலைக்கழியும் மனத்தை, ஐயோ! அத்தனை அற்புதமாக வெளிப்படுத்தினாள். நான் இதை மிக நெருக்கமாக உணர்ந்தேன். நீர் மட்டுமா, நம்மைப் போன்றவர்களுக்கு கலை தான் எத்தனை ஆறுதல்?

நீ 'Groundhog Day' படம் பார்த்திருக்கிறாயா? இப்போது அந்தப் படத்தைப் பற்றி உன்னிடம் ஒன்றும் பேசப் போவதில்லை. ஒரே நாள் திரும்ப திரும்ப வருகிறது என்ற இந்த எண்ணம் மனதில் வந்தபோது அந்தப் படமும் நினைவில் வந்தது. அதாவது ஒரே நாளையே திரும்ப திரும்ப எந்த வித விரக்தியும், வெறுப்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களை பற்றி நீ என்ன நினைக்கிறாய்? உணர்வைக் கூட விடு ஒரே நாளையே வருடக் கணக்கில் வாழ்கிறோம் என்ற புரிதலே இல்லாமல் இருக்கும் இவர்கள் நம் மனச் சிக்கல்களை  எல்லாம் எப்படி புரிவார்கள்? நான் இவர்களிடம் மனதின் முதல் தளத்தில் நின்றுகொண்டுதான் பேசுகிறேன். மேல் தளத்தில் நின்று கொண்டு ஆன்மாவின் பேச்சை எப்படி பேச முடியும்? இவர்களோடு உன்னாலும் என்னாலும் பொருந்த முடிவதில்லை

இன்று உன்னிடம் பேசிக் கொண்டிருந்த போது நீ காரணம் அறியா வெறுப்புணர்வில் இருப்பதாக சொன்னாய். இன்றைக்கு நீ பார்த்த மனிதர்களை எல்லாம் சபித்தாய். எல்லாவற்றிலிருந்தும் பெரும் விடுதலையை நாடினாய். அதற்கு மேல் எதுவும் நீ விளக்காமலே அந்த உணர்வை நான் நன்கறிந்தேன்.அந்தக் கணம் மானசீகமாய் உன் தலை முடிகளை கோதினேன். உஷ்ணத்தில் வியர்திருந்த உன் உச்சந்தலையை விரல் நுனிகளால் அழுந்தத் துடைத்தேன். கண்ணாஉன் மூர்க்கங்களை சாந்திக்கும் வழியறிவேன் - என் மடியில் இளைப்பாறுவாய் வாஆழ முத்தத்தில் உன் கசப்புகளையும் வெறுப்புகளையும் உறிஞ்சி, உனை நான் மீட்பேன்!

Sunday, August 25, 2013

How to Name it???

எழுதுவதற்கான நேரமும் மனநிலையும் எப்போதாவது தான் இணைந்து வருகிறது. எழுத்தின் மீது எப்போதுமே எனக்கு தீராத ஆசையும் நேசமும் உண்டு. எதிர்பாரா உணர்வுச் சுழியில் சிக்கிக்கொள்ளும்போதும், மனச் சிக்கலின் போதும் என்னை நான் மீட்டெடுக்க/புரிந்துகொள்ள எழுதிப் பார்க்கிறேன். பேச்சு கைகொடாத நேரங்களிலும் எழுத்து தான் துணை வருகிறது. அது எந்த நிபந்தனைகளும் அற்று நான் விரும்பிச் செய்கிற காரியமாக இருக்கிறது. வாசிப்பும், அறிதலும் முதிர்வைக் கொடுக்கிறதென்றால், எழுத்து என்னை தன்மையாக்குகிறது, கனியச் செய்கிறது. அப்போது மனம் பசும் பெருவெளியில் புற்களை மேயும் ஆட்டுக்குட்டிகளை வாஞ்சையோடு நாளெல்லாம் பார்த்திருக்கும் கிழ மேய்ப்பனின் தியான நிலையை எட்டுகிறது. அதெல்லாம் சரி இப்போது எதை எழுதிப் பார்க்க நினைக்கிறேன்? இப்போது மனம் ஏனோ ஒரு எதிர்ப்பு உணர்வில், ம்ம் யோசிக்கிறேன் இது எதிர்ப்பு உணர்வா இல்லை குற்ற உணர்வா? இல்லை குற்ற உணர்வெல்லாம் இல்லை, நான் குழப்பத்திலும் இல்லை. இது ஒருவகை ஏமாற்ற உணர்வு என்றே நினைக்கிறேன்.

அது சரி யார் மீது? எதனால் இந்த ஏமாற்றம்?

எல்லாம் இந்த சமூகத்தின் மீது தான்.

அப்படியா, சமூகம் என்று எதை குறிக்கிறாய் நீ?

நான் புழங்கும் மனிதர்கள், புழங்காத மனிதர்கள், இதோ இந்த மனிதக் கூட்டம்.

சரி அவர்கள் மேல் என்ன ஏமாற்றம்?

எனக்கு சமூகத்தின் மீது எப்போதுமே ஒரு ஒவ்வாமை உணர்வு இருந்ததுண்டு. இப்போதும் இருக்கிறது.

அதுதான் ஏன்?

ஏன் ஏன் ஏன்? ஏனென்றால் அது மிக போலியானது, செயற்கையானது.

அதன் சுயநலத் தன்மையின் மீது, அதன் பயங்களின் மீது, அதன் பாதுகாப்பு உணர்வின் மீது, அதன் நிபந்தனைகளின் மீது, அதன் கட்டுப்பாடுகள் மீது,  அதன் ஆசைகளின் மீது, இதோ இந்த கணம் என்னுள் மிகுந்த வெறுப்பு எழுகிறது. இந்த அழுகிப் போன சமூகத்தை விட்டு, ஏதாவது காட்டுக்குள் சென்று தனியாக வாழ முடியாதா?

வாழலாமே உன்னை யார் பிடித்து வைத்திருக்கிறார்கள்?

இதோ இந்த சமூகம், அது கட்டமைத்திருக்கும் குடும்பம், பொறுப்புகள்.

தெளிவாக சொல் சமூகமா நீயா?

ம்ம்ம்...???

Tuesday, June 25, 2013

ஹாலந்த் - 4

இன்று அலுவலகத்தில் ஏதோ யோசனையில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். ஹேய்  மேல பறக்காதடி கொஞ்சம் கீழே இறங்கு என்றாள் பாரதி. ஐயோ பாக்கலடா என்று அவள் பக்கம் சென்று அணைத்துக் கொண்டு, அவளின் மேடிட்ட வயிற்றை தடவிக் கொண்டே எப்படி டா இருக்கே என்றேன். ம்ம் நல்லா இருக்கேன், அப்றோம் என்றாள். அப்றோம் என்ன அப்டியே போகுது என்றேன். நீ பாக்கதான் டி ஹோம்லி ஆனா என்று இழுத்து சிரித்தாள். நானும் அவளைப் போலவே ஹோம்லி ஆனா என்று இழுத்து, ஆனா என்ன பெரிய கேடியா என்று முடித்தேன். செம அட்வென்ச்சரஸ் என்றாள். யாரும் என்ன முதல்ல ஹோம்லி ன்னு  தான் நினைப்பாங்க கொஞ்ச நாள் போனா கேடின்னு தெரிஞ்சுக்குவாங்க என்றேன். கொஞ்ச நாள் எல்லாம் இல்லே மூணு நாள்லயே தெரிஞ்சுதே நீ சரியான திருடி என்றாள். நான் சிரித்துக் கொண்டேன். நான் எங்க அப்பாகிட்ட சொன்னேன் உன்னைப் பத்தி என்றாள். என்ன சொன்னே என்றேன். நெதர்லாந்த்ல எப்படி சுத்தினோம் அதெல்லாம் சொன்னேன் என்றாள். திரும்பவும் நினைவில் அந்த கணத்துக்கு போனவளாக நம்ம நைட் சுத்தும்போது எதாச்சும் ஆயிருந்தா என்று கேட்டு நிறுத்தினாள். அதெல்லாம்  நெதர்லாந்த்ல நம்மளவிட அழகான பொண்ணுங்க நிறைய இருக்காங்க அதனால நம்மள யாரும் கண்டுக்க மாட்டாங்க என்றேன். இருந்தாலும் பணம் கேட்டிருந்தா என்றாள், கேட்டா என்ன கொடுக்க வேண்டியது தான் என்றேன்.ம்ம் நீ சொல்லுவே டி என்று விட்டு என் கையில் இருந்த வளையலை பார்த்து நல்லா இருக்கு டா தங்கமா என்றாள். இல்லை உனக்கு வேணுமா என்றேன். ம்ம் தங்கத்துல வாங்கி தா என்றாள்.அதனாலென்ன வாங்கிட்டாப் போச்சு என்று சிரித்தேன். இப்படியாக தொடர்ந்த சம்பாஷனை என்னுடைய சோம்பேறித்தனத்தால் நான் எழுதாமல் விட்டுப் போன நெதர்லாந்த் அனுபவத்தின் மிச்சத்தை நினைவில் கொணர்ந்தது. அப்படியே சைத்ராவையும்! எனக்கு பாரதியை பார்க்கும்போதெல்லாம் நெதர்லாந்தும் சைத்ராவும் நினைவுக்கு வருகிறார்கள். நவம்பரில் வேறொரு தேசத்தில் எங்களோடு சுற்றிய சைத்ரா ஏன் டிசெம்பர் முப்பத்தி ஒன்னு அதிகாலை தூக்கில் தொங்கினாள்? சொல்லப்போனால் அந்த அதிர்வை கடக்கத்தான் இதை எழுதத் துவங்கினேன். மீண்டும் எழுதத் துவங்குகிறேன், இப்போது அந்த அதிர்வை கடந்து விட்டேன் ஆனாலும் அந்த நாட்கள் என்னை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

முதல் இரண்டு நாள் நான் சைத்ரா லீனாவுடன் தான் இருந்தேன் என்றாலும் இரண்டாவது நாள் பின்பகுதியில் நான் பாரதி மற்றும் பிரமிளாவுடன் நெருக்கமானேன். அவர்கள் எங்கும் என்னை அழைத்துக் கொண்டு சென்றார்கள். லீனாவும், சைத்ராவும் தனித்தியங்குபவர்கள்
 எனவே நான் அவர்களை தொந்தரவு செய்யவில்லை. பிரமிளா பச்சரிசி பல்லழகி, சிரிக்க சிரிக்க பேசினாள். எனக்கு பாரதி, பிரமிளா இருவரையும் பிடித்துப் போனது. இரண்டாவது நாள் மதிய உணவுக்கு அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு லிப்ட்டில் நுழைந்தபோது அவர்களிடம் சொன்னேன் எனக்கு உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுருக்கு, உங்க கூட இருக்கும்போது கம்பர்ட்டபிளா  இருக்கு என்றேன். அவர்கள் அப்படியா என்று கேட்டு சிரித்தார்கள். நான் அப்படி சொன்ன பிறகு அவர்கள் என்னிடம் கம்பர்டபிளாக இருந்ததாக தோன்றியது. உணவை முடித்துக் கொண்டு மேலே வந்தபோது பாரதி எங்களை அறைக்குள் அழைத்தாள். அலுவலக நண்பர்களை குறித்தும் எங்கள் வேலையை குறித்தும்  பேசிக்கொண்டிருதோம். பிறகு பேச்சு திசை மாறி, பாரதி எங்களிடம் வாழ்கையிலேயே இப்போது தான் முதல் முறை தனியாக இருக்கிறேன், தனியா இருப்பது எனக்கு மிகுந்த பயத்தை கொடுக்கும் அதனால பாரு என்று கட்டிலை சுற்றிலும் செருப்பும்,  கடவுள்களையும் வைத்திருக்கிறேன் என்று சுட்டிக் காட்டினாள். நானும் பிரமிளாவும் அதை கேட்டு சிரித்தோம். தனிமை கொடுக்கும் சுதந்திரத்தை நேசிப்பவள் நான்,ஆனால் அது பாரதிக்கு பயத்தை கொடுக்கிறது என்கிற யோசனை என்னுள் ஓடியது. இப்படி ஏதேதோ கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, நானும் பிரமிளாவும் பயிற்சி அறிமுகத்திற்கு நேரம் ஆகிறது என்று சொல்லி விடை பெற்று அறைக்கு சென்று உடை மாற்றி கிளம்பி கீழே வந்தோம்.

அது பிரமாண்டமான அரங்காக இருந்தது. எல்லோரும் காமெராவும் கையுமாக இருந்தார்கள்.பணியாளர்களுக்காக இவ்வளவு மெனக்கெடுவதை எங்கள் கம்பனியில் தான் நிறையப் பார்கிறேன்.  அறிமுக விழா ஒரு இரண்டு மணி நேரம் நீடித்தது. இந்த பயிற்சியின் நோக்கமே உங்களை உங்கள் நண்பர்களிடம் இருந்து பிரிப்பது என்றார்கள். நீங்கள் உங்கள் கம்போர்ட் ஜோன்னிலிருந்து வெளியே வந்து மற்றவர்களோடு நெட்வொர்க் செய்யவேண்டும் என்றார்கள். அதனால் வேறு வேறு தேசத்திலிருந்து வந்த இருபத்தி ஐந்து நபர்கள் கொண்ட வகுப்புகளை அமைத்திருக்கிறோம். விழா முடிந்து காக்டெயில் பார்ட்டி அதை தொடர்ந்து டின்னெர் இருக்கும், டின்னெர் முடிந்து வெளியே வரும்போது நீங்கள் எந்த வகுப்பு என்று நோட்டீஸ் போர்ட்டில் பாருங்கள் என்றார்கள். காக்டெயில் பார்டியில் அறிமுகம் அற்றவர்களோடு அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். இந்த நெட்வொர்கிங் என்கிற விஷயம் எனக்கு எப்போதுமே மிகவும் போலியாக தோன்றும். மேலும் இன்னொருவரிடம் பழக ஒருவரை ஃபோர்ஸ் செய்வது எத்தனை அபத்தம். ஒரு கூட்டத்தில்/சபையில் இருக்கும்போது முதலில் எப்போது வெளியே செல்லலாம் என்று தான் இருக்கும். அதனாலேயே நான் அப்படியான நிகழ்வுகளை தவிர்த்து விடுவேன். ஆனால் நான் இப்படி எப்போதும் ஒரே மாதிரி இருப்பது எனக்கு போர் அடிப்பதாலும், அலுவலகத்தில் வேறு வழி இல்லாமல் இந்த ஈவண்டில் மாட்டிக் கொண்டதாலும், இந்த நெட்வொர்கிங்கயும் தான் முயற்சித்து பார்க்கலாம் என்று நினைத்தேன்.

அரங்கை விட்டு வெளியே வரும்போது ஹோட்டலின் கீழ் தளத்திலிருந்த  இருந்த பார் நிரம்பி வழிந்தது. கூட்டத்தோடு கூட்டமாக பாரினுள் நுழைந்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. அங்கே எங்கள் முன் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் எங்களிடம் பேச முன் வந்தார். பாரதியும் அவரும் ஒரே துறையை சார்ந்தவர்கள் என்பதால் அவர் அவளிடம் திரும்பி திரும்பி ஏதேதோ கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். நான் பாரதியின் காதில் என்னடா ரொம்ப ஆர்வமா இருப்பாரு போல என்று கிசுகிசுத்தேன். அவள் என்னை ஏதோ சொல்லி திட்டினாள். வரிசை முன்னேறி பார்டெண்டெரிடம் பாரதியும் நானும் வைட் வைனை பெற்றுக் கொண்டு வெளியே வந்தோம். பாரதி எவ்வளவு வற்புறுத்தியும் பிரமிளா குடிப்பதில்லை என்றாள். அவளுக்கு என அவள் ஒரு கோக்கை வாங்கிக் கொண்டாள். பாரிலிருந்து வெளியே வந்து நின்று பார்த்தால் யாரும் அறிமுகம் அற்றவர்களோடு பேசிக் கொண்டிருந்தது போல தெரியவில்லை. எல்லோரும் தத்தம் நண்பர்களோடு தான் இருந்தார்கள்.

 கொஞ்ச நேரம் சுற்றிலும் பார்த்துவிட்டு பாரதி என்னிடம் நம்ம பெட் வெச்சுக்கலாம் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள ஒரு அஞ்சு பேர் கிட்ட பேசிடனும் சரியா என்றாள். எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருந்ததால் சரி என்றேன். பிரமிளா சரியான லூசுங்க என்பது போல சிரித்து அங்கேயே நின்று கொண்டாள். நாங்கள் இருவரும் வேறு வேறு திசையில் சென்றோம். தனியாக யாரேனும் நின்றிருக்கிறார்களா என்று பார்த்தேன். ம்ஹூம் அப்படி யாரையும் காணோம் வேறு வழி இல்லாமல் பேசிக் கொண்டிருந்த இரண்டு வெளி நாட்டு தோழிகளுக்கு இடையில் புகுந்து ஹாய் என்றேன். அவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்து ஹாய் என்றார்கள். இருவரும் சொன்னதால் அதை ஒண்ணுன்னு கணக்கில் எடுத்துக்கவா இல்லை அது ரெண்டாகுமா என்று யோசித்தேன். அப்படி இப்படி எப்படியோ ஐந்து சேர்ந்ததாக நியாபகம். திரும்ப பிரமிளா நின்றிருந்த இடத்திற்கு வந்தேன். பாரதியும் திரும்பி வந்தாள். ஸ் ஸ் முடியலடா யாரும் முகம் கொடுத்தே பேசல என்றாள். ஆமா ஒரு மாதிரி தான் பார்த்தாங்க என்றேன். என் கையில் வைட் வைன் அப்படியே இருந்தது. ஏன் குடிக்கலயா என்றாள். இல்ல பிடிக்கல என்றேன். சரி உன்னோட டேபிள்க்கு எடுத்துட்டு போ அதான் டேபிள் மானேர்ஸ் என்றாள். நான் பிரமிளாவிடம் திரும்பி அப்படி ஒன்னு இருக்கா என்ன என்றேன். அவள் தெரியாது எனவே அங்கேயும் இங்கேயும் நடந்து கிளாஸ்களை வாங்கி கொண்டிருந்தவரை அழைத்து  க்ளாஸை திரும்ப கொடுத்தேன். நான் சொல்றத சொல்லிட்டேன் எனக்கென்ன உன் இஷ்டம் என்றாள்.

உணவு மேஜையிலும் தெரிந்தவர்கள் இருந்துவிடாதபடி  சிரத்தையாக பிரித்திருந்ததால் எங்களுக்கு வெவ்வேறு உணவு மேஜைகள் வழங்கப் பட்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டே கூடத்துள் நுழைந்து எங்கள் உணவு மேஜைக்கு செல்வதற்காக பிரிந்தோம். எனக்கு அறியாதவர்களோடு அமர்ந்து சாப்பிட கொஞ்சம் உதறலாக இருந்தாலும், எங்கேயோ ஒரு மூலையில் அது கொஞ்சம் பிடித்தும் இருந்தது. அங்கே பெரும்பாலும் பாரதி சொன்னதுபோல் மக்கள் தங்கள் ட்ரிங்க்கை கையில் வைத்திருந்தார்கள். அட டா அவள் சொன்னதை கேட்டிருக்கலாமே என்று நினைத்தேன். நான் என்னுடைய இருக்கையை தெரிவு செய்து அமர்ந்தேன். என் வலப் பக்கத்தில் இருந்தவர் என்னை வரவேற்று என்னுடைய பெயர் மற்றும் நாட்டை தெரிந்து கொண்டார். என்னுடைய இடது இருக்கைகள் இரண்டு காலியாக இருந்தது. அதற்குள் என் கையில் எதுவும் இல்லாததை கவனித்த பணிப்பெண் கேன் ஐ கெட் யூ எ ட்ரிங்க் என்றாள். நான் நோ தேங்க்ஸ் என்றேன். இந்த பதிலை சற்றும் எதிர்பாராதவள் போல ஆர் யூ ஆன் எ ஸ்பெஷல் டயட் என்றாள். நோ ஐ டோன்ட் ட்ரிங்க் என்றேன். அவள் என்னை ஒரு விதமாக பார்த்துக் கொண்டு சென்றாள். எனக்கு நேர் எதிர்புற இருக்கையில் ஒரு இத்தாலியனும், அவனுக்கு அருகில் லி என்ற சீனப் பெண்ணும் அமர்ந்திருந்தனர். லியும், இத்தாலியனும் ஏதோ முன்னேயே அறிமுகமானவர்களைப் போல பேசி பழகிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவனை பார்த்துக் கொண்டிருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. அவன் பேசும் விதம், அவன் மானரிசங்கள் பிடித்திருந்தது. ஓரிரு நிமிடங்களில் ஒரு பெண்  வந்து என்னருகில் அமர்ந்தாள், தொடர்ந்து இன்னொருவன் வந்து அவளருகில் அமர்ந்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டோம். அவள் ஹங்கரி என்று தெரிந்தது அவன் சொன்ன நாட்டின் பெயர் பிடிபடவில்லை. அவள் ஹங்கேரி என்றதும் வி ஆர் நெய்போர்ஸ் அங்கேயும் இங்கேயும் என்று சிரித்தான். அவளும் சிரித்தாள். அவனுடைய நாடு ஹங்கரியின் அண்டை நாடாக இருக்க வேண்டும் என புரிந்து கொண்டேன். ஆனால் ஏனோ அவள் அவனை விடுத்து என்னோடு பேசுவதில் தான் ஆர்வமாக இருந்தாள். அவள் பேசிக் கொண்டே இருந்தது எனக்கு ஒரு வகையில் வசதியாக இருந்தது. என்னிடம் அவள் எங்களுக்கு அண்டை நாட்டோடு சுமுகமான உறவில்லை என்றாள். எல்லா இடத்திலும் அப்படித்தான் என்றேன் நான். அவளின் அந்த கருத்துக்கு/எண்ணத்துக்கு ஏன் என்று ஏதோ விளக்கமும் கொடுத்தாள். நான் அப்படியா என்று கேட்டுக் கொண்டேன். அவளுக்கு இந்தியாவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நிறைய இருந்தது. அவள் மிதமாக குடித்துக் கொண்டே என்னோடு பேசிக் கொண்டிருந்தாள். எங்களை வெட்டி வேறு ஒரு பணிப்பெண் திரும்பவும் அதே கேள்வியை என்னிடம் கேட்டதும்  விட்டால் போதும் என்று ப்ளீஸ் கெட் மீ எ கோக் என்றேன். இரவு பன்னிரண்டு மணி வரை டின்னெர் நீடித்தது.


...இன்னும்

Wednesday, June 12, 2013

தமிழ்க் கன்னடத்தி

இன்று என் டீமில் புதிதாக சேர்ந்திருக்கும் நவீன் எந்த ஊர் என்று என்னைக் கேட்டான். மைசூர்காரனான அவனுக்கு ஊர்ப் பெயரை சொன்னால் புரியாது என்று தமிழ்நாடு என்று சொன்னேன். ஓ நான் நீங்கள் பெங்களூரை சார்ந்தவர் என்று நினைத்தேன் என்றான். இல்லை என்று சொன்னாலும் எனக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. நான் பெங்களூர் வந்து ஒன்பதுவருடம் முடியப்போகிறது. ஒரே ஊரில் ஒன்பது வருடம் இருந்தது இதுவே முதல் முறை. அப்பாவோடு தர்க்கித்துதான் வேலை தேட பெங்களூர் வந்தேன். அப்போது என்னோட முதுகலை  படித்திருந்த ஒரே தோழி இன்போசிஸ்ல் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளோடு அவள் தங்கி இருந்த விடுதியில் சேர்ந்து கொள்வதாக திட்டம். அப்பாதான் அழைத்து வந்து விட்டார். என்னை விடுதியில் சேர்த்து விட்டு, ஒன்னு விட்ட சொந்தம் ஒரு அண்ணாவின் வீட்டுக்கு திரும்பி போய்  விட்டார். அது ஒரு ஜூலை மாதம் மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. அப்பா கிளம்பியதும் என்னுடைய வீம்பு எல்லாம் காணாமல் போனது. அப்பாவுக்கு தொலைபேசி  அழைத்து அழத் தொடங்கினேன். அப்போதே வந்து திரும்ப கூட்டிப் போகிறேன் என்றார். இல்லை நான் ஒரு மாதம் இருந்து பார்கிறேன் என்றேன்.

முதலில் பெங்களூர் மிரட்சியாக இருந்தது. புரியாத மொழி நர பர என்று காதினில் விழுந்தது.தீவிர முயற்சியின் காரணமாக எப்படியோ முட்டி மோதி ஒரு மாதத்திற்கு பிறகு வேலை கிடைத்தது. முதல் நாள் டீமில் எல்லோரையும் அறிமுகப் படுத்தினார்கள். அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது. கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சுமாவை அறிமுகப் படுத்தியபோது அத்தனை பரவசமாக இருந்தது. அப்படியே தமிழ் முகம். நீங்கள் எந்த ஊர் என்று திரும்பத் திரும்பக் கேட்டேன். பெங்களூர் என்று சொன்னார்கள். இல்லை நான் உங்கள் நேடிவ்வைக் கேட்கிறேன் என்றேன். பெங்களூர் தான் என்று அவர்கள் திரும்பவும் சொல்ல, இன்னொருவர் நான் ஏன் கேட்கிறேன் என்பதை சரியாக புரிந்து கொண்டு அவங்க தமிழ்நாடு இல்லே என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பெங்களூர் வந்த புதிதில்  தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேசன் வண்டியைப் பார்த்தாலே மனம் குதூகலமாகும். எங்கேயாவது தமிழ் பேச்சுக் கேட்டால் அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

சுமாதான் எனக்கு சீனியராக இருந்தாள். சேர்ந்த ஒரு வாரத்திலேயே ஏதோ ஒரு விசயத்தில் சுமாவோடு மனஸ்தாபம் ஏற்பட்டது. பிறகு அது சரியாகி எந்தப் புள்ளியில் தோழிகளானோம் என்று தெரியவில்லை. அவளின் மற்ற தோழிகளோடு முதல் பயணமாக பிலிகிரிரங்கசாமி மலைக்கு சென்றேன். அவர்கள் கன்னடத்திலேயே பேசிக் கொண்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் எனக்கு நானே கன்னடத்தை பரீட்சயமாக்கிக் கொண்டேன். அவர்கள் பேசப் பேச  ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ் படுத்தி புரிந்து கொண்டே வந்ததால் தலை வலி மண்டையைப் பிளந்தது. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். எப்போது என்று தெரியவில்லை பெங்களூரை பிடிக்கத் துவங்கி விட்டது. அதற்கு முக்கியமான காரணம் முதல் காதலாக இருக்கலாம். நடந்த தெரு, சென்ற கோயில், அமர்ந்த பூங்கா என ஒவ்வொன்றும் செண்டி ஆகி விட்டது. பிறகு இங்கே கிடைத்த மட்டற்ற சுதந்திரம். இன்னாரின் பெண் என்றோ, இந்த ஊர் என்றோ,  இன்ன பேர் என்றோ யாருக்கும் தெரியாது. யாரும் எதையும் கண்டு கொள்ளவும் இல்லை. அதுவரை ஒட்டிக் கொண்டிருந்த அடையாளங்கள் உதிர்ந்து போனது எனக்கு மிக வசதியாக இருந்தது.

இதோ ஜூலை 11 வந்தால், இங்கே வந்து சரியாக ஒன்பது வருடங்கள் முடிந்து விடும். இதுவரை கொஞ்சம் பேச மட்டுமே கற்றுக் கொண்டிருந்த கன்னடம், இப்போது ஓரளவிற்கு படிக்கும்  அளவுக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் சாகர் ஹசே அங்கிள். அவருக்கு தமிழ் கற்க மாளாத ஆசை. போன வருடம் நான் அங்கே போயிருந்த போது அவர் தான் அ ஆ இ ஈ வரிசை (ಅ ಆ ಇ ಈ ) சொல்லிக் கொடுத்தார். இந்த வருடம் சென்றபோது ஓரளவிற்கு படிக்க முடிகிறது என்று அவர் மேசை மேல் இருந்த கன்னடப் புத்தகத்தின் தலைப்பை வாசித்துக் காட்டினேன். பரவால்லையே நீ தமிழ்க் கன்னடத்தி என்றார். எனக்கு சட்டென அந்தப் பெயர் பிடித்துப் போனது. ஒரு வேளை அவர் ஆசைப் படி அவரின் படைப்புகளை என்னால் தமிழில் மொழி பெயர்க்க முடிந்தால் இந்தப் பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றேன் சுமாவிடம்.

எனக்கு கன்னடம் மட்டுமல்ல எல்லா மொழியையும் கற்றுக் கொள்ள ஆசையாய் இருக்கிறது. ஏதாவது ஒரு மொழியிலாவது உணர்வுக்கு மிக மிக நெருக்கமான வார்த்தைகளை கண்டு கொள்ள முடியாதா என்ற பேராவல். தற்போது சுமா தன்னுடைய அக்கா மகன் தாய் மொழியாம் கன்னடம் படிக்க வில்லை மாறாக ஹிந்தி படிக்கிறான் என்று வருந்துகிறாள். அதற்கு ஏன் வருந்துகிறாய் என்று கேட்கிறேன், பிறகு தாய் மொழி அழிந்து விடாதா என்கிறாள். அழிந்தால் என்ன என்ற கேள்விக்கு கன்னம் சிவக்க பிறகு எப்படி அவர்கள் நம் கலாச்சாரம், நம் பண்பு எல்லாம் எப்படி கற்றுக் கொள்ள முடியும் என்கிறாள். கற்றுக் கொள்ளாவிட்டால் தான் என்ன என்கிறேன்? தொடர்ந்து கலாச்சாரத்தை, சமூகத்தை குப்பையில் போட அன்பு மட்டுமே நித்தியம்,அதை எந்த மொழியில் செய்தால் தான் என்ன என்கிறேன்.மொழியின் தேவை புரிகிறது, மொழிப் பற்றுதான் புரியவில்லை. 

Saturday, March 23, 2013

அமுதனுக்கு


அமுதன்,

நலமா? சமீபமாக என்ன படம் பார்த்தீர்கள்? என்ன வாசிக்கிறீர்கள்? உங்கள் காதலி நலமா? இரண்டு வாரங்களுக்கும் மேலாயிற்று நாம் பேசி. இங்கே வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது அமுதன். பெங்களூர் ஒரு பக்கம் வேர்க்க வியர்க்க என அதன் குளுமையை இழந்திருந்தாலும் ஜாக்கரண்டா மற்றும் பிங்க் ட்ரம்பெட் மரங்கள் வசந்தத்தை மிக மிக அழகாக வரவேற்கின்றன. இன்று நான் போன சாலையின் இரண்டு பக்கத்திலும் நின்றிருந்த பிங்க் ட்ரம்பெட் பூக்கள் என்னை இன்னொரு உலகுக்கு கடத்தி சென்றது. கூடிய விரைவில் அந்த மாயப் பூக்களை உங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

அமுதன், கடிகாரத்தின் முள் வெகு இயல்பாக நேரத்தை சுட்டி நகர்வது போல மிக இயல்பாக இப்போது என்னைத் தொட்டு நகர்கிறது ஒரு பிரிவு. தான் துல்லியமாகக் காட்டிய ஏதோ ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்ட அத்தனை விபத்துகளின் குரூரத்தையும்  இதுவரை எந்த கடிகாரம் சரியாக உணர்ந்திருக்கிறது? எல்லாவற்றிக்கும் காலமே மௌன சாட்சி அதுவே சிறந்த மருந்தும் கூட, இல்லையா? எதிர்பாராத தருணத்தில் கன்னத்தில் பளார் என விழுந்தது போல இந்த பிரிவு  கொடுக்கும் எரிச்சலையும் வலியையும் எப்படி சொல்வது? இவ்வளவு நாட்கள் விளையாட்டாகவே வாழ்ந்து விட்டிருக்கிறேனோ அல்லது ஏதோ மன நோயுடன் வாழ்ந்திருக்கிறேனோ எனக்கே புரியவில்லை. திடீரென படரும் வெறுமைக்கும் தனிமைக்கும் என்னை ஒப்புக் கொடுக்காமல் இருக்க  உங்களுக்கு எழுதுகிறேன் அமுதன். உங்கள் பரந்த மார்பின் தேற்றுதல் என்னை இளைப்பாற அழைத்தாலும் சற்று தள்ளியே நின்று கொள்கிறேன். ஏனென்றால் மருந்துக்கு பழகிய உடல் தன்னியல்பான தாங்கும் சக்தியை இழந்துவிடுவது போல பிறகு நீங்களில்லாமல் என்னால் இயங்க முடியாது. நீங்கள் அற்புதமானவர் அமுதன் நெருக்குவதுமில்லை, விலகுவதுமில்லை.

எந்த ஒரு விசயத்திலும் நீங்கள் தர்கிக்கும்போது உங்கள் கருத்தை எவ்வளவு நிதானமாகவும், அழுத்தமாகவும் முன் வைக்கிறீர்கள். அது உங்கள் தெளிவான சிந்தனையை காட்டுகிறது. எனக்கு இப்போதெல்லாம் எந்த ஒரு விசயத்திலும் அத்தனை தீர்மானம் இருப்பதில்லை. எல்லோருக்கும் விட்டுக் கொடுப்பவளாகவே ஆகி விட்டேன். இதில் எனக்கு எந்த  வருத்தமும் இல்லை என்றாலும் இது சரியா தவறா என குழப்பமாக இருக்கிறது. நான் பிரிவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா இதுக்கு முழுப் பொறுப்பாளி நானே. எனக்கு ஜப் வி மெட் படம் மிகப் பிடிக்கும், குறிப்பாக அந்த சுதந்திரமான கரீனாவின் பாத்திரப் படைப்பு.  அதில் ஒரு இடத்தில் கரீனா சாஹித்திடம் நான் நினைக்கிற மாதிரி இந்த வாழ்கையை வாழ  விரும்புகிறேன், அப்பொழுது என்ன நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு வேறு யாருமல்ல என்று எனக்குத் தெரியும் எனவே சந்தோசமாகவே இருப்பேன் என்பாள். இப்போது மீண்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியை பார்த்தேன் உங்களுக்காக இங்கே அதை இணைக்கிறேன் நீங்களும் பாருங்கள். எத்தனை அற்புதமான வரிகள்.

உங்கள் புன்னகை தவழும் முகம் இப்போது எனக்கு நினைவில் ஓடுகிறது அமுதன். நீங்கள் எப்படி இத்தனை அமைதியானவராக இருக்கிறீர்கள்? உங்களுக்குள் இப்படி  ரகசியப் பக்கங்கள் எதுவும் கிடையாதா? நீங்கள் யாரையும் பாதிக்கவில்லையா? அல்லது உங்களை யாரும் பாதித்ததில்லையா? நான் உங்களிடம் எதை சொல்ல வருகிறேன் அல்லது எதை சொல்ல விரும்புகிறேன் என எனக்கே தெரியவில்லை. உங்களுக்கு எழுதத் தோன்றியது எனவே தோன்றுவதை எல்லாம் எழுதுகிறேன். ஒன்று புரிகிறது எனக்கு, நான் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன் அமுதன். எனக்கே புரிகிறது என்றாலும் என்னால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் அமுதன்? என்னையே புரிந்து கொள்ள முடியாதது எனக்கு பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது. எனக்கு என்னைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இதோ இதைப்  படிக்கும்போது நீங்கள் என் கையை எடுத்து  உங்கள் உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் அமுதன். அல்லது நீங்கள் அப்படி வைத்துக் கொள்வதாக நான் நினைத்துக் கொள்கிறேன். அது என் பாவங்களுக்கான  மன்னிப்பாக இருக்கட்டும். யாருக்கோ இழைத்த பாவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மன்னிப்பு சமாதானம் அளிக்குமா அமுதன்? எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கிறது என் கோரிக்கை. என் பாவம் என்னவெனில்... எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நிராகரிப்புகள் எத்தனை வலி நிறைந்தது என்று தெரிந்தாலும் கூட நான் ஏன் எப்போதும் மறுதலிப்பவளாக இருக்கிறேன்? இப்பொழுது  அன்பு என்னை நிராகரித்து விட்டது ஆனால் நான் அதை தேடி பின்தொடர்ந்து அலைகிறேன். இப்படி  ஏன் முரண்களால் ஆனவளாக  இருக்கிறேன் நான். வேண்டும்போது விலகியும், விலகும்போது வேண்டியும்,  என்னதான் வேண்டுமாம் எனக்கு? உங்களுக்காவது என்னைப் புரிகிறதா அமுதன்?

உங்கள் அருகில் இருக்கும் போது நான் நிறைய கிறுக்கு தனங்கள் செய்தபடி இருக்கிறேன். உங்கள் இடது கையில் இருக்கும் கடிகாரத்தை வலது கைக்கு மாற்றுகிறேன். திரும்பவும் அதை இடது கைக்கே மாற்றுகிறேன். உங்களின் பிரெஞ்சு தாடியை கொஞ்சம் இழுத்துப் பார்கிறேன். உங்கள் காதுக்குள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வந்து ஹூ என்று கத்துகிறேன். என்னை நீங்கள் ஒரு குழந்தையாகவே பார்கிறீர்கள் அமுதன். குழந்தைக்கு உரிய அத்தனை சலுகைகளும் எனக்குக் கிடைக்க, உங்களிடம் நானும் ஒரு குழந்தை ஆகத்தான் இருக்கிறேன். கள்ளத்தனங்கள் எதுவுமே அறியாத ஒரு பரிசுத்தமான குழந்தையைப் போல. என்னை உங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளுங்களேன் அமுதன், உங்கள் தோள்களில் புரளவேண்டும் எனக்கு...

ப்ரியமுடன்,
இனியாThursday, March 21, 2013

ஹாலந்த் - 3

என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தபடி ட்ராம் உள்ளே டிரைவருக்கு அருகில் நின்றிருந்தேன். அவரிடம் ஆல்பர்ட் மார்க்கெட் என்று ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டேன். வரும் வழியில் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது நாங்கள் சிலரிடம் ரயில் குறித்த தகவல்கள் கேட்டோம். அவர்கள் ஆங்கிலம் பேச  நிறையவே  சிரமப்பட்டார்கள் என்றாலும் உதவி செய்ய முன் வருபவர்களாகவே இருந்ததனர். ட்ராமின் இயக்குனர் அவர்களைப் போல அல்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசினார். இடையிடையே ஒரு சில வார்த்தைகள் ஹிந்தி பேசினாற்  போல் கூட இருந்தது. எனக்கு இருந்த பதற்றத்தில் நான் அதை கவனிக்கவில்லை. கவனித்தால் மட்டும் என்ன புரிந்து விடவா போகிறது? அவர் என்னிடம் அந்த டிக்கெட்டை கதவை ஒட்டி இருந்த  ஆக்செஸ் போர்டில் உரைக்க சொன்னார். நானும் அப்படியே செய்தேன்.பின்பு இறங்கும் போதும் அப்படி செய்ய சொன்னார் நான் சரி என்றேன். தொடர்ந்து அவர் ஏதோ ஹிந்தியில் சொல்ல நான் விழித்தேன். என் முகத்தை பார்த்து புரிந்து கொண்டவராக டூ யு நோ ஹிந்தி என்றார். நான் தெரியாது என்றேன். ஆர் யு ப்ரம் இந்தியா என்றார். நான் ஆம் என்றேன்.  இந்தியா என்கிறாய் உனக்கு ஹிந்தி தெரியாதது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றார். நான் எந்த  பதிலும் சொல்லாமல் இந்த ட்ராமின் உள்ளிருந்து கடைசி வரை செல்ல வழி இருக்கிறதா என்று கேட்டேன்.  அவர் விடாமல் அப்படியானால்  நீ என்ன மொழி பேசுவாய் என்றார். ஐ யாம் ப்ரம் சௌத் இந்தியா ஐ ஸ்பீக் தமிழ்  என்றேன். இத்தனை பேச்சு  வெளியே நடந்து கொண்டிருக்க மனசு அவர்களை தேடிக் கொண்டிருந்தது. அவர்கள் ட்ராமில் தான் இருக்கிறர்களா இல்லை என்றால் என்ன செய்வது, எப்படி திரும்புவது என எண்ணங்கள் பல திக்கில் சென்று கொண்டிருந்தது. இப்படி பகுதி பகுதியாய் நான் பிரிந்து கொண்டிருந்தாலும் அவரின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. திடீரென தனித்து விடப்பட்டதால் திக்குண்டிருந்த மனதுக்கு இந்த சம்பாஷனை ஒரு வகையில் ஆறுதலாகவும் நிதானிக்க ஒரு சந்தர்பமாகவும் இருந்திருக்க வேண்டும். நான் சௌத் இந்தியா என்றதும் ஓ! ஐ நோ சித்ரா, ஐ நோ A R ரஹ்மான் என்றார். இதை எதிர்பார்க்காத நான் உற்சாகமாக எஸ் எஸ் எஸ் எஸ் நானும் அதே மாநிலம் தான் என்றேன். அவர் எனக்கு அவர்களை மிகப் பிடிக்கும் என்றார்.

இப்பொழுது பதட்டம் முட்டிக் கொண்டு மேலேற  நான் என் நண்பர்களை தொலைத்து விட்டேன் அவர்களைத் தேட இந்த ட்ராமின் கடைசி வரை செல்ல வழி இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சற்று மௌனித்து பின் இருக்கிறது என்று சொல்லி மேலும் ஏதோ சொல்ல  பேச வாயெடுக்க நான் நன்றி சொல்லி  ஐ வில் கோ லுக் பார் மை பிரெண்ட்ஸ் என்றேன். அவர் சரி எனவும் உள்ளே நுழைந்தேன். நடுவிலிருந்த வழி அருகே செல்லும்போது லீனாவை பார்த்து விட்டேன். என்னுள் அப்படி ஒரு திருப்தி பரவியது, எப்படி எனில் அதை  வார்த்தையில் சொல்ல முடியாது. என்னைப் பார்த்ததும் நான் கொடுக்க வேண்டிய எக்ஸ்ப்ரெஷெனை லீனா கொடுத்தாள். என்னுள் எழுந்த ஆசுவாசம் அவள் முகத்தில் தெரிந்தது. மை காட் வேர் ஹாவ் யூ பீன் மேன் என்றாள். அவள் வார்த்தைக்கு வார்த்தை எல்லோரையும்  மேன் என்று தான் விளிப்பாள். அவளே  தொடர்ந்து உன்னை காணவில்லை என்றதும் எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. இப்பொழுதான் உடன் நின்ற  சைத்ராவைக் காட்டி இவளிடம் சொன்னேன் இங்கே இறங்கி விடலாம் என்று. உன்னைப் பார்க்காதிருந்தால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி இருப்போம் என்றாள். எனக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்தேன். எங்களை நீ பார்காதிருந்தால் என்ன செய்திருப்பாய்  என்றாள். தெரியவில்லை வண்டி பிடித்து ஹோட்டலுக்கு போயிருப்பேன் என்றேன். உன்னிடம் முகவரி இருக்கிறதா என்றாள். இல்லை, ஒரு வேளை  ஆம்ஸ்டர்டாமில் இறங்கி இந்தியாவுக்கு அழைத்து  முகவரியை வாங்கி இருக்கலாம் என்றேன். பிறகு நீ டிக்கெட் வாங்கி விட்டாயா என்றாள். நான் ஆம் என்று எனக்கும் டிரைவருக்கும் நடந்த உரையாடலை அவளிடம் சொன்னேன். அவள் அதற்குள் இத்தனை பேசிவிட்டாயா என்றாள்.

அப்பொழுது என்னருகே ஒரு வயதான தாத்தா நின்றிருந்தார். அவர் நல்ல போதையில் இருந்தாரா அல்லது தூக்கத்திலா என்று தெரியவில்லை. ஏதேதோ பாட்டு போல ராகமிழுத்து பாடினார், தள்ளாடிக் கொண்டே டச் மொழியில்  பேசிக் கொண்டே வந்தார். நான் அவரை திரும்பிப் பார்த்து புன்னகைத்தேன். அவர் அதை வரவேற்கவில்லை என்று அவர் முகத்தில் தெரிந்தது. அவர் ஏதோ பக்கத்தில் இருந்த இளைஞரிடம் சொல்லவும்  அதற்கு அவர் ஏதோ பதில் சொன்னார். பிறகு அவர்  ஆம்ஸ்டர்டாம் டூரிஸ்ட் நிறைந்த நகரமாகி விட்டது. இங்கே வந்து யாராவது மாசு படுத்தினால் நான் அவர்களின் விரல்களை வெட்டுவேன் என ஆங்கிலத்தில் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும் நிதானமாகவும் உச்சரித்தார். அப்பொழுது  ட்ராமின் இயக்குனர்  ட்ராம் கூட்டமாக இருப்பதால் எல்லோரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு அனௌன்ஸ் செய்தார். எனக்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ள  நான் அவரிடமிருந்து சற்று முன்னே தள்ளி நின்று கொண்டேன். இயக்குனர் ஒவ்வொரு நிறுத்ததிலும் அது என்ன இடம் என அனௌன்ஸ் செய்தபடி வந்தார். ரயிலிலும் அடுத்த ஸ்டேஷன் குறித்த தகவல்கள் சீட்டுக்கு மேலே மாட்டப்பட்டிருந்த திரையில் வந்து கொண்டே இருந்தது. இது நாங்கள் சரியான இடத்தில  இறங்க உதவியாக இருந்தது.

நாங்கள் ஆல்பர்ட் மார்க்கெட் தான் என்று நினைக்கிறேன் அங்கே இறங்கினோம். எங்கள் முன் நீண்டிருந்த தெரு முழுக்க கடைகள் நிறைந்திருந்தது.  லீனா சைத்ராவிடம் இவளை நாம் இருவரும் பிடித்துக் கொண்டே நடக்கலாம் இல்லாவிட்டால் தொலைந்து விடுவாள் என்று ஒரு புறம் என் கைக்குள் நுழைத்து லீனா பிடித்துக் கொள்ள மறு புறம் சைத்ரா என் கைகளைக் கோர்த்து பிடித்துக் கொண்டு நடந்தார்கள். எனக்கு நான் தொலைந்தேனா அல்லது அவர்களா என்று குழப்பமாகவும் இப்படி அவர்கள் என்னை பிடித்துக் கொண்டு நடப்பது வேடிக்கையாகவும் இருந்தது. எவ்வளவு நேரம் தான் அப்படியே நடக்க முடியும் அதுவும் ஷாப்பிங் செய்யும் இடத்தில. அந்த தெருவுக்குள் நுழைந்ததும்  எனக்கு இடது புறம் இருந்த கடை பிடித்தது லீனாவுக்கு  வலது புறம். நான் இடது புறம் கடைக்கு செல்கிறேன் என சொல்லி விட்டு சென்றேன். மூவரும் ஒருவரை ஒருவர் பார்வையிலேயே வைத்துக் கொண்டோம். சைத்ரா அவள் நண்பர்கள் எல்லோரும் வாங்கும் ஏர்போர்ட் சாக்லேட் வாங்க வேண்டாம் எனவும் தங்களுக்கு ஹோம் மேட்  சாக்லேட் வேண்டும் எனத் தெரிவித்ததாக சொல்லி சாக்லேட் கடையில் நின்றாள். அப்படியே அந்தத் தெருவை சுற்றினோம். அங்கே அந்தக் கடைகள் நடத்துபவர்கள் மிகவும் உயிர்ப்போடு இருந்தார்கள். எதாவது பாட்டை பாடிக் கொண்டே விற்பனை செய்தார்கள். எதிர்த்த கடையிலிருந்து எதிர்பாட்டு வந்தது. இதையெல்லாம் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் குளிர் அதிகரிக்கத் தொடங்கியது கடைகள் மூடத் துவங்கின. நாங்கள் நடந்து வெளியே வந்தோம்.

பிறகு எங்கே செல்வது என புரியவில்லை. லீனாவும் நானும் இப்படியே கொஞ்சம் நடக்கலாம் என்றோம். எனக்கு இது பிடித்திருக்கிறது ஐ ஜஸ்ட் வான்டட் டு கெட் தி பீல் ஆப் திஸ் சிட்டி என்றாள்.நாங்கள் மெல்ல நடந்தோம். நகரம் என்று சொல்ல முடியாதபடி மிகவும் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் சாலைகளை மிக எளிதாக கடந்தோம். அங்கே ட்ராம்கள் நிறைய இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு ரோடு கொஞ்சம் பிஸியாக இருக்கவே  எங்கள்  அருகே சாலையை கடக்க இருந்த டச் பெண் டிராபிக் சிக்னல் கம்பத்தின் கீழிருந்த ஏதோ பொத்தானை அழுத்த அது வாகனங்களை நிறுத்தி எங்களை போக சொல்லியது. குளிர் அதிகமாக நாங்கள் டீ குடிக்கலாம் என்று  ஒரு டீ கடைக்குள் நுழைந்தோம். ஆர்டர் செய்து சர்க்கரையை கொட்டியும் குடிக்க முடியாமல் உள்ளே இருந்த ஹீட்டருக்கு வேண்டி சற்று நேரம் அமர்ந்தோம். பின் எழுந்து வெளியே வந்து திரும்பவும் நடந்தோம். சைத்ரா இன்னும் சில இடங்களை பார்க்க வேண்டும் என்றாள். நான் என்னால் இந்தக் குளிரை சமாளிக்க முடியவில்லை என்றேன். நாம் ட்ராம் பிடித்து டாம் ஸ்கொயர் செல்லலாம் அங்கே க்ரூஸ் பார்க்க வேண்டும் என்றாள். சரியான ட்ராம் எது எனக் கண்டு பிடிக்க எங்களுக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. மூன்று ட்ராம்களில் மாறி மாறி ஏறினோம். ஆனால் முதலில் வந்த ட்ராம் போல அல்லாமல் இங்கே யாரும் டிக்கெட் கொடுக்கவில்லை. பயணிகள் ஏற்கனவே வைத்திருந்தார்கள். நான் இயக்குனரிடம் சென்று டிக்கெட் என கேட்க அவர் என்ன பதில் சொன்னார் என புரியவில்லை  ஆனால் டிக்கெட் எதுவும் கொடுக்கவில்லை. பயணிகளிடம் கேட்க அவர்களுக்கும் சரியான பதில் தெரியவில்லை. நாங்கள் டிக்கெட் எடுக்காமலேயே ட்ராமில் இருந்து இறங்கினோம்.

டாம் ஸ்கொயர் ராயல் பேலஸ் முன் நின்று புகைப் படம் எடுத்தோம். அப்போது எங்களுக்கு அது இன்ன இடம் என்று தெரியவில்லை. நிறைய பேர் அங்கே நின்று புகைப் படம் எடுத்தார்கள். அப்பொழுது சைத்ரா சொன்னாள் இது ஏதோ வரலாற்று சிறப்பு மிக்க இடம் என நினைக்கிறேன் என்றாள். அங்கே இருந்து வந்த பிறகு தான்  அது ராயல் பேலஸ் என்று தெரிந்தது. அங்கே இருந்து கொஞ்சம் முன்னே நடந்து ஒரு தெருவுக்குள் நுழைந்தோம். தெருவின் துவக்கத்திலேயே இருந்த ஒரு கடையில் மூவரும் நுழைந்தோம். அந்தக் கடை முழுக்க உடைகளே நிறைந்திருந்தது. நானும் சைத்ராவும் சின்ன சின்ன நினைவுப் பரிசுகள்  வாங்கலாம் எனக் கிளம்பினோம். லீனா அந்தக் கடைக்குள்ளேயே இருப்பதாக கூறினாள். எங்கள் ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்து லீனாவை அடைந்தோம். அங்கே இருந்து ட்ராம் பிடித்து மீண்டும்  டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஸ்டேஷன் வந்து ரயில் பிடித்து நாங்கள் டாக்சியில் வந்து இறங்கி இடத்தை அடைந்தோம். அங்கே இருந்து ஹோட்டல் செல்ல பஸ்க்காக காத்திருக்கும்போது காற்று இத்தனை வினாடிக்கொரு முறை என்று  குறித்து வைத்ததுபோல தொடர்ந்து வீசியபடி இருந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்த சைன் போர்டு   நாங்கள் செல்ல வேண்டிய பஸ் இன்னும் எத்தனை நிமிடத்தில் வரும் என்று துள்ளியமாக காட்டியது. ரயில் நிலையத்திற்கு நேர் எதிர் தான் இந்த பஸ் நிறுத்தம் என்றதாலும், எங்கள் பஸ் வர இன்னும் நேரம் இருந்ததாலும் நாங்கள் திரும்பவும் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து நுழைவாயிலிலேயே நின்று கொண்டு கண்ணாடிக் கதவு வழியாக வருகிற பஸ்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது என்ன செய்வதென தெரியாமல் எனக்கு நேரே தனியாக அமர்ந்திருந்த  இந்தக் கிளியை படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.பஸ் வந்ததும் ஓடி வந்து ஏறினோம். பஸ் டிரைவரிடம் டிக்கெட் வாங்கும்போது அவர் இனிமேல் வெளியே செல்லும்போது ரவுண்டு ட்ரிப் டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு சீப் ஆக இருக்கும் என்றார். நெதர்லாந்த் மக்கள் நெகிழ்ந்த தோழமையுடன் பழகினார்கள். இப்படியாக  அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு வந்து உறங்கினோம்.
அடுத்த நாள் மதியம் தான் எங்கள் ப்ரோக்ராம் துவக்கம் என்பதால் எங்களுக்கு காலையிலேயும் கொஞ்ச நேரம் கிடைத்தது. நாங்கள் இருந்த ஹோட்டல் அருகேயே நடந்து வரலாம் என முடிவு செய்து நடந்தோம். ஹோட்டல் ரிசெப்சனிஸ்ட் பக்கத்தில் ஒரு சர்ச் இருக்கிறதெனவும் அங்கே செல்லலாம் எனவும் சொன்னார்.

வெளியே வந்ததும் நெதர்லாந்த் சைக்கிள்களுக்கு உகந்த நகரமாய்/நாடாய் இருப்பதை பார்க்க முடிந்தது. சைக்கிள்களுக்கென தனியான ட்ராக் இருந்தது எனவே சைக்கிள்கள் நிறைய புழக்கத்தில்  இருந்தன. ஈக்கோ பிரெண்ட்லியாக, தூய்மையாக, பிளாஸ்டிக் அற்ற மனதை சிறை பிடித்துக் கொள்கிற ஊர் இது.
சைக்கிள் பாதையில்  நாங்கள் மெதுவாக நடந்தோம். அத்தனை அற்புதமான வீடுகள் இதுவரை நான் நேரில் பார்த்திராதது. அந்த வீடுகள் மேல் நான் காதல் கொண்டேன். இதோ சில வீடுகளை இதில் இணைக்கிறேன்.நெதர்லாந்தில் வுட்டன்  ஷூக்கள் தங்களுக்கென பிரத்யேகமான இடத்தைப் பெற்றுள்ளன. ஏன் எங்கு  பார்த்தாலும் ஷூக்கள்  இருக்கின்றன என்று கேட்டதற்கு இங்கே விவசாயிகள் நிறைய உபயோகித்தார்கள் அதனால் அது பிரசித்தம் என்றார்கள். இதோ இந்த வீட்டிற்கு முன்னால் பாருங்கள் வுட்டன் ஷூவை எவ்வளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.


அதற்கு மேல் க்யூட்டாக இருக்கும் அந்தக் குட்டி குருவியையும் பாருங்கள்.
இதோ இந்தக் கதவும் எனக்குப் பிடித்தது.
இந்த கிரீன் ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்திருந்த பழங்கள் எடுப்பார் அற்றுக் கிடந்தது.
இப்படியே படம் பிடித்துக் கொண்டு நடந்து சர்ச் வந்தடைந்தோம். சர்ச்சை சுற்றி எடுத்த சில படங்கள்.
இப்படியாக அன்றைய பயணம் இனிதே முடிந்தது...
...மேலும் ...