Showing posts with label தொடரும் கதை. Show all posts
Showing posts with label தொடரும் கதை. Show all posts

Saturday, October 10, 2009

அன்பென்ற மழையிலே - 4

அந்த தனியார் பேருந்து நிறுவனத்தின் காத்திருக்கும் இருக்கையின் ஒன்றில் அமர்ந்தேன். இன்னும் சென்னை பேருந்து கிளம்புவதற்கு நேரம் இருக்கிறது. சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மறுபடியும் படிக்கத் துவங்கினேன். முதலில் நான் இந்த புத்தகம் படித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வின் நினைவு வந்தது. அப்போது எனக்கு சுஜாதா கதைகள் மீது அவ்வளவு ஈடுபாடு இருந்ததில்லை. ஆண்களுக்கு சுஜாதாவைத் தவிர வேறு யாரையும் தெரியாது. அப்படி என்ன அந்த எழுத்தில் இருக்கிறது இப்படி உருகுவதற்கு என்று தோன்றும். ஆனால் இப்போது என்னாலும் அந்த எழுத்தின் ஊடே ஓடும் நகைச்சுவையை ரசிக்க முடிகிறது. அவர் பெண் வேடம் போட்ட பகுதியை படித்து என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் சற்று இருமி ஆசுவாசப் படுத்திக்கொண்டேன். அந்த காட்சியை தொடர்ந்து கற்பனை பண்ணிய எனக்கு சிரிப்பை கட்டுபடுத்துவது சற்று சிரமமாய் இருக்கவே அதை மாற்றிக்கொள்ள சுற்றிலும் பார்வையை ஓட்டினேன்.

என் அருகே அமர்ந்திருவர் அவரது குழந்தைக்கு விளையாட்டுக் காமித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் அதை ரசித்தபடி இருந்தேன். அன்றைய நாளிதழை சுருட்டி ஒரு குழலைபோல அமைத்தார் பிறகு அந்த குழந்தையிடம் ஊவென மென்மையாய் ஊதிக் காட்டினார். அதுவும் அவரிடம் இருந்து அதை வாங்கி அதையே செய்து காட்டியது. குழந்தைகள் நம்மிடம் இருந்து எல்லாவற்றையும் எவ்வளவு அழகாய் கற்றுக்கொள்கிறார்கள். இன்னொரு சிறுவன் போர் அடிக்குது என்று அம்மாவை நச்சரித்துக் கொண்டிருந்தான். நமக்கு காத்திருப்பு என்பது எவ்வளவு சுமையாகிப் போய் விட்டது. ஒவ்வொரு நிமிடத்தையும் ஓடிக் கடப்பதே பழகிப் போய் விட்ட நமக்கு நின்று நிதானமாக பார்க்கவும் பேசவும் பழகவும் பொறுமை வற்றிப் போய் விட்டது.

பேருந்து வந்து அதில் ஏறி அமர்ந்தாயிற்று. என் கைப்பேசியை எடுத்து அமுதனை அழைத்தேன்.
ஹலோ.
சரண்யா சொல்லுங்க.
நான் கிளம்பிட்டேன் அமுதன்.
நானும் வந்திட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்.
சரி, பத்திரமா வாங்க என்றுவிட்டு வைத்தேன்.

ஒரு வருடம் முன் ஒரு மழை நாளின் குளுமையில் பார்த்தேன் அமுதனை முதலில். அதற்கு பிறகு ஒரு விடுமுறை நாளின் மதியம் என் குடியிருப்பு பகுதிக்கு பக்கத்திலிருந்த நூலகத்தில். இருவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டதற்கு அடையாளமாக பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். 'எனக்கென்றொரு முகம்' என்ற புத்தகம் என்னைக் கவர்ந்தது. சில பக்கங்களை புரட்டையில் எனக்கு பிடித்திருந்தது. அதை பதிவு செய்து எடுத்துக் கொண்டு திரும்பையில் அமுதனும் கிளம்பிக்கொண்டிருந்தார்.

என்ன புத்தகம் என்றார். அட்டையை திருப்பிக் காட்டினேன். உங்கள் பெயர் என்று ஒரு சிறு இடைவெளி கொடுத்தார்.
சரண்யா என்றேன்.
நான் அமுதன் என்றார்.
ரொம்ப நல்ல பெயர் என்றேன்.
நன்றி என்று புன்னகைத்தார்.
என்ன படிக்கறீங்க சரண்யா?
எம்.பீ. கடைசி வருடம் என்றேன்.
இப்படியாக நாங்கள் அறிமுகமாகிக் கொண்டோம். எனக்கு அவர் பேசிய விதமும் அணுகுமுறையும் பிடித்திருந்தது. பிறகு ஒவ்வொரு வாரமும் நூலகத்தில் சந்தித்து பேசினோம். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தேர்ந்த அனுபவத்தோடும் முதிர்ந்த பக்குவத்தோடும் விளக்கியதும் பகிர்ந்து கொண்டதும் என்னைக் கவர்ந்தது.

ஒரு முறை தன் அம்மாவுக்கு தங்க வளையல்கள் வாங்க வேண்டும் என்று வந்து தேர்வு செய்து தருமாறு அழைத்தார். எனக்கு அதில் அவ்வளவு அனுபவம் இல்லாவிடிலும் நான் உடன் சென்றேன். அவர் அம்மாவிடம் கொடுக்க ஊருக்கு போய் வந்த பிறகு அம்மாக்கு பிடிச்சிருந்ததா என்று கேட்டேன். பிடிச்சிருந்துச்சுன்னு நினைக்கறேன் என்றார். என்ன சொன்னாங்க என்றேன். ஒண்ணும் சொல்லல என்றார். நான் விடாமல் எப்படி கொடுத்தீங்க சந்தோசப்பட்டாங்களா என்றேன். அம்மாவுக்கு கண்ணாடி வளையல்களும் பிடிக்கும் அதனால ஒரு வித்யாசமா அது ஒரு பாக்ஸ் வாங்கி அதன் நடுவில் இதை வைத்துக் கொடுத்தேன். முதலில் கண்ணாடி வளையல்களைப் பார்த்தார்கள் அதுவே அவங்களுக்கு சந்தோஷம். பிறகு இடையில் இதைப் பார்த்தாங்க. அப்புறம் ஒவ்வொன்னா எடுத்து கைகள்ல போட்டாங்க. கண்ணாடி முன்னாடி ஒரு நிமிடம் நின்னு பார்த்துட்டு கலட்டி வெச்சுட்டாங்க என்றார். எனக்கு கண்களில் சிறு ஈரம் ஊறிய உணர்வெழுந்தது அப்படியே ஒரு சில நிமிடங்கள் மௌனமாய் அமர்ந்திருந்தேன். அவரை அவர் அன்பை நிறைய புரிந்தது. அதைகாட்டி கொண்ட விதம் என்னைக் கவர்ந்தது.

அதற்கு பிறகு எனக்கு அமுதனுடன் எத்தனையோ வருடங்கள் பழகிய உணர்வு ஏற்பட்டது. என்னால் அவரோடு இயல்பாய் பழக முடிந்தது. அவ்வப்போது என் வீட்டுக்கு வருவார். அம்மா அப்பாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். சிறுது நேரம் இருந்து விட்டு சென்று விடுவார். அப்பாவுக்கு நான் நிறைய நேரம் அவரோடு பேசுவதில் இஷ்டம் இல்லாததால் வெளியில் பார்த்து பேசிக்கொள்வோம். பிறகு படிப்பதற்கென்று கோவை சென்று விட்டார். நான் இங்கு வந்து விட்டேன். அவ்வப்போது போனில் பேசிக் கொள்கிறோம். மூன்று மாதமாயிற்று பார்த்து நாளை பார்க்க போகிறேன். அப்படியே உறங்கிப்போனேன்.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...