Monday, December 31, 2012

பேலே (Ballet)



Photo Courtesy: Koushik

 
கார்த்திகேயன் சார் தலைமையில் ஒரு நேர்த்தியான ட்ரெக்கிங் குழு அமைந்திருப்பது இப்பொழுதெல்லாம் எங்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. குழுவில் ஒவ்வொருவருக்கும் புகைப்படம், கடினமான ட்ரெக்கிங்,  என ஒவ்வொரு ஆர்வம் என்றாலும் எனக்கு எதில் ஆர்வம் என்று இன்னும் தெளிவாக விளங்கவில்லை. ஒரு விஷயம் எனக்கு காடு பிடித்திருக்கிறது. காட்டின் அழகை அதன் மர்மத்தை ரசிக்கிறேன். காடு எல்லோருக்குமான இடமாக இருக்கிறது. அதன் அன்பு எல்லையற்றதாக இருக்கிறது. காடு எப்போதும் திறந்திருக்கிறது என்றாலும் மனிதனின் குரூரங்களுக்கு பயந்து மனிதனுக்கு மட்டும் அதையும் பூட்டி வைக்கிறார்கள். காடு ஒவ்வொரு க்ஷணமும்  உயிர்தெழுகிறது. அதன் மெல்லிய மூச்சை உணர நாம் ஆழ்ந்த மௌனத்தோடு இருக்க வேண்டும்.

போன முறை போனது தார்னி ஸ்ரப் பாரெஸ்ட்(thorny shrub forest). இந்த முறை ஒரு  கிராஸ் லாண்ட் பாரெஸ்ட்(Grass Land Forest). அதுவும் புலிகள் காப்பு பகுதி.பஸ் மாறி மாறி இடத்தை சென்று சேரவே மாலை ஆகி விட்டது.அங்கிருந்து கொஞ்ச தூரத்திற்கு ஜீப் பயணம். ஜீப்பில் செல்லும்போது நிறுத்தி டைகர் ஸ்கேட்(Tiger Scat) பார்த்தோம்.  
ஸ்காட்ன்னா வேற ஒன்னுமில்லங்க அது  புலியோட ஆய். ஸ்காட்டில் மான்  அல்லது அது சாப்பிட்ட வேறு ஒரு விலங்கின் முடிகள் இருந்தது.முடிகளை வைத்தும் மற்றும் ஸ்காட்டின் சுற்றளவை வைத்தும்  
அது இன்ன  விலங்கு என  கண்டறிகிறார்கள்.ஜீப் பயணம் முடிந்து குவாட்டர்ஸ் சென்றடைந்தோம்.அது மிக   மிக அழகான ஒரு இடம். 

உள்ளே சென்று பேக்கை போட்டுவிட்டு கொஞ்சம் மேலேறி காட்டுக்குள் நடந்தோம்.அந்தக் காடு  நிறைந்த புல்வெளிகளைக் கொண்டிருந்தது.அது மேடுபள்ளமாக இருந்தது. மேடுகளெல்லாம் புல்வெளிகளாகவும் பள்ளங்களில் மரங்களையும்  கொண்டிருந்தது. வளைந்து நீளும் இரண்டு மேடுகளுக்கு மத்தியில் இருந்த சிறு பள்ளங்களில் திட்டுகளாக அடர்ந்திருந்த மரங்களை ஷோலாஸ் என்றனர். அந்த புல்வெளிகள் மற்றும் மரங்கள் மழை நீரை சேமிக்க உதவி செய்வதை அறிந்தேன். உச்சியை அடைந்து சற்று இளைப்பாறி விட்டு  இருட்டத் துவங்கவே கீழே இறங்கி வந்தோம். எங்கள் உடன் சமைக்கவென ஒருவரை அழைத்து வந்திருந்தோம். அவர் கொடுத்த சப்பாத்தியை சாப்பிட்டு முடித்து குளிருக்கென வளர்க்கப்பட்ட தீயை சுற்றி நடு இரவு  வரை பேசி இருந்தபோது குளிர் தெரியவில்லை. குழுவில் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள அந்தப் பேச்சு உதவியது. நேரம் ஆகிவிடவே எழுந்து சென்று படுத்து ஒரு அரை மணிக்குள்ளாகவே உடலின் துளைகளை குத்தத் துவங்கியது குளிர். தலை முதல் பாதம் வரை முழுக்கப் போர்த்தியும் குளிர் விடவில்லை. பாகில் இருந்த எல்லா பான்ட், ஸ்வெட்டர்,  சாக்ஸ், குல்லா க்ளௌவ்ஸ் என்று எல்லாவற்றையும் எடுத்துப் போட்டும் குளிர் அடங்கவில்லை. குளிரோடேயே விடியத் துவங்கியது. ஒருவர் பின் ஒருவர் எழுந்து கொள்ள ஒரு நிமிடம் எல்லோர் கம்பளியையும் போர்த்திக் கொண்டு உறங்கினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. எப்படியோ நானும் எழுந்தேன். 

கல்கூட்டி ஒரு பெரிய சட்டியை வைத்து தண்ணி காயவைத்துக் கொண்டிருந்தார் சமையல் உதவிக்கு வந்திருந்த ஒரு தாத்தா. அதை சுற்றி இருவர் அமர்ந்திருக்க நானும் சென்று அமர்ந்தேன். குளிர் குறைந்தது. ஒரு ப்ளாக் டீ குடித்துவிட்டு நானும்  தோழிகள் இருவரும் (ஸ்ரீ மற்றும்  சுமா) சிறிது தூரம் நடந்து வரலாம் எனக் கிளம்பினோம். ரோட்டை ஒட்டி இருந்த  எல்லாப் புதருக்குள் இருந்து எப்போது பாயலாமென புலியின் கண்கள் பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருந்தது. அந்தப் பயணம் கொஞ்சம் திகிலாய் இருந்தது. இன்னும் நன்றாக விடியவில்லை. ஒருகட்டத்தில் எல்லோரும் தேடுவார்கள் என திரும்பி வந்தோம். நினைத்தது போலவே காத்திருந்தார்கள். மறுபடியும் ஒரு டீ குடித்துக் கொண்டு ட்ரெக்கிங் சென்று மதியம் சாப்பிட உணவுப் பொட்டலத்தையும் நீரையும் எடுத்துக் கொண்டு ட்ரெக்கிங் கிளம்பினோம்.


சிறிது தூரம் நடந்துமெல்ல புதர்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கத் துவங்கினோம். வெயில் அப்போதுதான் ஏறத் துவங்கி இருந்தது. நடந்த கொஞ்ச தொலைவிலேயே  உயர்ந்து அடர்ந்து நின்ற பைன் மரங்கள்  (தேவதாரு) நிழலைப் பரப்பி இருந்தன. மரங்களுக்கு ஊடே ஓடிய பாதையில் காய்ந்த பைன் இலைகள் விழுந்து மூடி இருந்தது. அந்த இலைகள் மேல் நடக்கையில் ஒரு சில இடங்களில் கால் வழுக்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக தேவதாரு இலைகளை உதிர்த்தபடியே இருந்தது. அடுக்கு இதழ்களைக் கொண்ட பைன் கோன்கள் காடு முழுக்க இறைந்து கிடந்தது. 

தேவதாரு மரங்களைத் தாண்டி நடக்கையில் எங்கள் முன் நீண்டிருந்த மிக அழகான புல்வெளியைப் பார்த்தோம். அது மிக மிக அழகான சமவெளி. புல்வெளியில் சற்று தூரம் நடந்து சுற்றிலும் ஒரு முறை பார்க்கையில் தூரத்தில் தெரிந்த தேவதாரு மரத்தின் அழகிய வடிவம் அந்த இடத்திற்கு மிகுந்த அழகைக் கொடுத்தது. புகைப்பட பிரியர்கள் புகைப் படங்களை எடுக்கத் துவங்கினர். நாங்கள் எல்லோரும் நின்று குழுவாக புகைப் படம் எடுத்துக் கொண்டோம்.அப்போது  வானம் சுத்தமான நீலத்தில் இருந்தது. 

இன்னும் சிறிது தூரத்தில்புல்வெளியின் நடுவே ஓடிய ஓடை புல்வெளியை  
இரண்டாக பிளந்து கொண்டிருந்தது. ஓடையை ஒட்டி கள்ளிச் செடி வகையை சார்ந்த செடி அங்கங்கே முளைத்திருந்தது. அதன் அத்தனை இதழ்களும் ஒரே சுற்றிலிருந்து துவங்கி அடுக்குகளாக விரிந்திருந்தது. அதன் இலைகள்  நீளமாகவும்முனை கூர்மையாகவும் இருந்தது. அது ஒரு தனி அழகாக இருந்தது. இருக்கை கூட்டி நீரை சேமியுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துவது போல அதன் இலைகள் நடுவில் இறுக்கமாக பிணைந்து நீரை சேமித்து வைத்திருந்தது. ஓடையில் மிக குறைந்த நீர் வடிந்து கொண்டிருந்தது. ஓடையின் நடுவே இருந்த வட்ட கற்கள் மேல் கால் வைத்து ஓடையைக் கடந்தோம்.


கடந்து மீதமிருந்த புல்வெளியை தாண்டி இன்னொரு ஷோலாவுக்குள் 
நுழைந்தோம். அது எங்களை முழுவதுமாய் மறைத்தது. புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நண்பர்கள் பின் தங்கி இருந்தார்கள். ஸ்ரீ உள்ளிட்ட சிலர் விறு விறுவென மேலேறிக் கொண்டிருந்தார்கள். நானும் சுமாவும் இடையில் நடந்தோம். உடன் சமைக்க வந்தவர் தான் எங்களுக்கு 
 வழிகாட்டியும் கூட.அவர் அப்போதுதான் 25சதவீதம் நடந்திருக்கிறோம் என்றார்.
நின்று நின்று மேலேறத் துவங்கினோம்.  எனக்கு முழுவதும் நடந்து முடிப்போமா  
என்றிருந்தது.   உச்சியை அடைவது என் இலக்காக இருக்கவில்லை.இன்னும்  
கொஞ்ச தூரம் நடக்கையில் நான் சுமாவிடம் என்னால் முடியவில்லை என்றேன்.
அது மேடுகளாக இருந்தது.முடியும் சற்றும் இளைப்பாறி வா என்றாள் சுமா.
ஆனந்த் வந்து உடன் சேர்ந்தார்.அவருடன் பேசியபடியே சிறிது தூரம் ஏற  
முடிந்தது.நின்று நின்று ஒரு வழியாய் முக்கால் பாகம் வந்தேன். அதற்கு மேல் செங்குத்தாக இருந்த மேட்டில் ஏறி  
உச்சியை அடைய வேண்டும். எனக்கு முடியும் என்று தோன்றவில்லை. அங்கே பாறையில் அப்படியே நானும் சுமாவும் அமர்ந்தோம். ஆனந்த் மேலே செல்லலாம் என்றார். என்னால் முடியாது என்று நான் பாறையில் சுமாவுடன் நின்றுவிட்டேன்.

ஸ்ரீ உச்சியை அடைந்திருந்தாள்.  அவளுக்கு இலக்கு அது. அவள் அதை ஒரு விளையாட்டாய் செய்தாள். எனக்கு மிகுந்த களைப்பாய் இருந்தது. இளைப்பாற சிறிதேனும் நிழல் கூட இல்லை.தங்க நிறத்தில் காய்ந்த புற்கள் நிறைந்திருந்தது. வெயிலிலும் குளிரை அங்கேதான் உணர்ந்தேன். மேலே இருப்பவர்கள் கீழே இறங்கும் வரை இந்த இடத்தை ரசிக்கலாம்.   வெயிலையும் பொருட்படுத்தாது பாறையின் மேல் அப்படியே படுத்து அயற்சியில் கண் மூடினேன். அதற்கு பிறகு சில நிமிடங்கள் ஒரு மாய உலகத்தில் இருந்தது போல் இருந்தது. கண்விழித்து பார்க்கவும் கடலின் தூய அலையைப் போல திரண்டு வந்த வெண் மேகம் முகட்டில் மோதி மோதி தெறித்தது. ஒரு மேகம் அதில் மோதி உருமாறி பெண்ணுருக் கொண்டது. நான் படுத்த படியே பார்த்தேன். வெண்ணிற உடைதரித்தஅது நீலவானப் பின்னணியில் தன்  பேலே நடனத்தை நிகழ்த்தியது.   

உண்மையில் பேலே நடனம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. கேட்டதுமே ஒரு சில பெயர்களை பிடித்துப் போகிறது. அப்படித்தான் எனக்கு பேலேயும். வெண்ணிற உடையில் ஒரு பெண் தன் கால்களையும் கைகளையும்  நீட்டி நளினமாக ஆடிக் கொண்டிருக்கும்  ஒரு ஸ்டில்லை பார்த்துவிட்டு  என் மனது தனக்கு பிடித்த வகையில் ஒரு விளக்கத்தை அதற்கு கொடுத்திருந்தது. அது என்னவென்றால் பேலே ஒரு அக விடுதலை. அதுவும் ஒரு பெண் பேலே ஆடும்போது அவள் தன்னை மறந்து தன் சிறகுகளை விரித்து ஆடுகிறாள். 


உண்மையில் பேலே நடனத்திற்கு பாரம்பரிய இசையும், நுட்பமும் தேவைப் படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நடனம் ஆடுபவள் புற உலகின் எந்த இசைக்கும் கட்டுப்படாமல் தன் ஆத்ம இசைக்கு ஆடுகிறாள். ஆடும்போது அவள் உடல் கரைந்து இறகுகளின் மென்மையை எட்டுகிறது.
இடையற்ற இந்த மேகமும் தன்னை மறந்து ஒரு காலை மேலுயர்த்தி ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னொரு காலின் நுனியில் சுற்றி சுற்றி காற்றின் கலந்து  தன்  ஆத்ம இசைக்கு ஆடிக் கொண்டிருக்கிறது.

நன்றி: இந்தப் பயணத்தை சாத்தியமாக்கிய மற்றும் ஸ்கேட்
ஷோலாஸ் குறித்த விளக்கம் கொடுத்த கார்த்திக் சார்க்கு   நன்றி.
இடம்: Hush Suspense 

         
   



Saturday, December 29, 2012

வெளியேற்றம்

மழையும் வெயிலும் நிமிடத்திற்கொரு முறை மாறி மாறி வந்து கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அத்தனை சந்தடியிலும் அமைதியாய் படுத்திருந்த ஒரு நாயை கவனிக்கத் துவங்கினேன். அது எதிர்த்த பிளாட்பார  மேடையில் படுத்திருந்தது.அந்த நாயை ஈக்கள் மொய்த்தபடி இருந்தன. ஈக்களைத் தவிர அங்கே படுத்திருக்கும் நாயை வேறு யாரும் கவனித்ததாய் தெரியவில்லை. அது முன் கால்களை சற்றே முன்னால் நீட்டி தளர்ந்து படுத்திருந்தது. அந்த நாய் இன்ன நிறம் என சொல்ல முடியாத ஒரு நிறத்தில் நன்றாக அழுக்கேறி இருந்தது. ஒருவேளை அது வெண்ணிறத்தில் இருந்திருக்கலாம். சில ஈக்கள் கூட்டமாக நாயின் தொடைப் பகுதியை மொய்த்துக் கொண்டிருந்தது. ஒன்று நாயின் முதுகுக்கு ஊர்ந்து கொண்டிருந்தது. நாய் அதை சுற்றிலும் நடந்த எது ஒன்றையுமோ அல்லது தன்னை மொய்த்திருந்த ஈக்களையோ கண்டுகொண்டதாக தெரியவில்லை. அது வெறுமனே படுத்திருந்தது.

நாய்  படுத்திருந்த பிளாட்பார மேடைக்கு கீழே, அப்போதுதான் யாரோ சாப்பிட்டு முடித்து கழுவி விட்டிருந்த சோற்றுப் பருக்கைகளும் நீரும் இறைந்து கிடந்தது. ஈரத் தரையில் ஏற்கனவே சில ஈக்கள் பருக்கைகளை மேய்ந்து கொண்டிருந்தது.  ஒரு ஈ நாயின் மேலிருந்து எழுந்து ஈரத் தரைக்கு சென்றது. இன்னொன்று அதை தொடர்ந்தது.  ஒரு ஈ மேலெழுந்தால் இன்னொன்றும் அதையே செய்தது. அது ஒரு ஈ விளையாட்டு.  அப்படி  ஈக்கள் நாயின் புண் மேலிருந்து ஈரத் தரைக்கு மாறி அமரும்போது,  நாயின் தொடைப்  பகுதியில் இருந்த காயங்கள் சிவப்பாக தெரிந்தது. நினைவுகள் வலிகளை கிளருவதைப் போல ஈக்கள் காயத்தை கிளறி விட்டிருந்தன.  ஈக்கள் எப்போதும் எதற்கோ பறந்தபடியே இருக்கின்றன. ஈக்கள் மிகுந்த தொந்தரவு கொடுப்பவை. ஈக்கள் மேலமர்ந்து விட்டு சென்றபிறகும் அந்த குறுகுறுப்பு சில நிமிடங்கள் அது ஊர்ந்த இடங்களெல்லாம் ஊறிக் கொண்டிருக்கிறது.


இறைந்து கிடந்த பருக்கைகளை இன்னொரு கருப்பு  நாய் வந்து நக்கிக் கொண்டிருந்தது.  கருப்பு நாயின் இடையூறால் தரையிலிருந்த சில ஈக்கள் மீண்டும் வெள்ளை நாயின் மேல் போய்  அமர்ந்தன. வேறு சில அங்கிருந்து பறந்து சென்று பஸ் ஸ்டாண்ட் பழக் கடையில் அழுகிய திராட்சை பழங்கள் மேல் அமர்ந்தது. பச்சை ஸ்கார்ப் கட்டிய ஒரு பெண் நாயைக் கடந்து பழக் கடைக்கு சென்று சிறிது நேர பேரத்திற்கு பிறகு பழங்களை வாங்கினாள். அந்தம்மாள் கை பிடித்திருந்த சிறுமி பாதி கடித்து கையில் வைத்திருந்த பிஸ்கட்டை நாய் ஒருபக்கம் தலையை உயர்த்தி பார்த்தது. அதன் காதுகள் கூர்மை அடைந்தன. ஒரு பக்கம் தலையை சாய்த்து அந்த சின்ன பெண்ணை பார்த்தது. அந்த சிறுமியும் நாயையே பார்த்துக் கொண்டிருந்தது. நாய் மெல்ல வாலாட்டத் துவங்கியது. திராட்சையை மொய்த்த ஈக்கள் ஒன்றிரண்டு அந்த சின்ன விரல்களையும் பிஸ்கட்டையும்   சுற்றி மொய்த்தது. நாய் எழுந்து சென்று அந்த சிறுமியின் கைகளுக்கு மிக அருகில் நின்றது. பழங்களை வாங்கித் திரும்பிய  பெண், குழந்தையின் பக்கத்தில் நின்றிருந்த நாயை விரட்டினாள். நாய் பழைய இடத்திலேயே வந்து படுத்தது.

பழக்கடையை ஒட்டி இருந்த டீக்கடையில் வடை வாங்கிக் கொண்டு தள்ளாடி வந்த ஒருவன் எதிர்பாராமல் நாயின் வால் மேல் விழுந்தான். நாய் துள்ளி எழுந்தது. வடை அவன் கையில் இருந்து கீழே  தள்ளி  விழுந்தது. அதே நேரத்தில் நகரும் பேருந்தை அவசரமாக பிடிக்க ஒருவன் ஓடினான். மிதிபட்ட நாய் ஓடியவனே தன்னை மிதித்தவன் என நினைத்தோ என்னவோ அவனை துரத்தியது. துரத்தி ஓடும்போது நாயின் காதுகள் மேலும் கீழுமாய் ஆடின. நாயின் திடீர் ஓட்டத்தால் குழப்பமடைந்த ஈக்கள் நாயின்  உடலுக்கு சற்று மேலே நாயின் உடனே பறந்தது. ஓடியவன் பேருந்தை பிடிக்கவே ஏமாந்த நாய் திரும்பி வந்தது. ஈக்கள் மீண்டும் அதை மொய்த்தன. அப்பொழுதுதான் பிரக்ஞை வந்தது போல் நாய் பட பட பட வென ஈக்களை உதறியது.   உதறி விட்டு நாய் மிதிபட்டு உதிர்ந்து கிடந்த வடை துணுக்குகளை நக்கித் தின்றது. கடைசியில் மீதமிருந்த ஒற்றைத் துண்டை கவ்வி எடுத்து லபக்கென விழுங்கியது .வடை மேலும் பசியை கிளப்பிவிட  அது சற்று தள்ளி ஓடி வந்து டீக்கடைக்கு முன் வைத்திருந்த அட்டைபெட்டியை சுற்றி முகர்ந்து, அட்டைபெட்டியில் மீதம் இருந்த பழையவைகளை தின்னத் துவங்கியது. குடித்து முடித்த  டீ கோப்பையைப் போட வந்த யுவதி நாயைப் பார்த்து தயங்க டீக்கடைக்காரன் நாயை விரட்டினான்.  

நகர்ந்து வந்து நின்று கொண்டிருந்த பேருந்து நிழலில் நின்று, நாய் முன் கால்களை நன்றாக நீட்டி உடலை நெட்டி முறித்து கண்களை மூடி  ராகமாக முகத்தை முன் நீட்டி ஊளை விட்டது. பேருந்துக்கு அந்த பக்கம் இருந்த சற்று முன் பருக்கைகளை தின்ற கருப்பு நாய் சத்தத்திற்கு நிமிர்ந்து பார்த்தது. கருப்பு நாயுடன் நின்றிருந்த செவலை நாய் இதை எதையும் கவனிக்கவில்லை. கருப்பு நாய் மீண்டும் செவலை நாயின் அருகில் போய் நின்றது. இரண்டும் ஒன்றை ஒன்று முகர்ந்து பார்த்துக் கொண்டும், மௌனமாய் ஒன்றின் பின்புறத்தை  இன்னொன்று சுற்றிக் கொண்டும் இருந்தது. சற்று நேரத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின் டயரில் கருப்பு நாய் ஒரு காலை உயர்த்தி சிறுநீர் கழித்தது. உடன் நின்ற நாய் மெல்ல முகர்ந்து அதன் மேலேயே அதுவும் போனது. இதை பார்த்துக் கொண்டிருந்த இந்த வெள்ளை நாய் பேருந்துக்கு அடியில் புகுந்து  வந்து அந்த டயரை முகர்ந்தது. ஈக்கள் வெள்ளை நாயின் முதுகில் ஒதுங்கி என்ன நடக்கும் என  ஆர்வமாக பார்க்கத் துவங்கின. இதைப் பார்த்த கருப்பு நாய் உறுமத் துவங்கியது. உடன் நின்ற  நாய் ஒன்றும் பேசாமல் முன்னே முன்னே நடந்து சென்றது. கருப்பு நாய் திரும்பி திரும்பி குழைத்தபடியே அந்த நாயை பின் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் அவை இரண்டும் மறைந்து போயிற்று. 

இது நின்ற இடத்திலேயே நின்று உறுமி விட்டு திரும்பி வந்து படுத்தது. ஈக்கள் நாயின் முகத்துக்கு எதிராக வந்து கண்களை மூடி பறந்தது. நாய் முன்கால்களை மடக்கி ஈயை ஒதுக்கியது. ஈக்கள் பின் சென்று புண்ணை மொய்த்தது. நாய் ஆக்ரோசமாக பின் திரும்பி மேலுதட்டை மேலிழுத்து ஈக்களைப் பார்த்து கடித்து விடுவேனென தன் பற்களை எல்லா காட்டியது. ஈக்கள் அதிர்ந்து நகர்வது போல் பாவித்துப் பறந்து திரும்பவும் நாயின் மேலேயே அமர்ந்தது. பொறுக்க முடியாத நாய் எழுந்து ஈக்களை இப்படியும் அப்படியும் திரும்பிப் பார்த்து குழைத்து தன்னையே சுற்றி சுற்றி வந்தது. ஒரு கட்டத்தில் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்த நாய் ஈக்களை ஒன்றும் செய்ய கூடாமல் ம்ம் ம்ம்ம் என்று  அழுவது போல்  ஊளை விட்டது. ச்சை இதென்ன இங்க நின்னு நாய் ஊளையிடுது என்று பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு தாத்தா தோளில் கிடந்த துண்டை எடுத்து அதை விரட்டினார். நாய் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது.