Tuesday, December 22, 2009

வாகை மரக்கிளி

எனக்கு முழுப் பரீட்சை விடுமுறை விட்டிருந்தார்கள். நான் சித்தப்பா வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். என் விடுமுறை நாட்களை என் சித்தப்பா வீட்டில் கழிப்பது எனக்கு பேரின்பம். அங்கே காலையில் நேரத்தில் எழுந்திருக்கவேண்டியதில்லை . நிறைய வண்ணங்களில் பட்டாம்பூச்சி பார்க்கலாம். இன்னும் நிறைய, நினைத்துக் கொண்டிருக்கும்போதே வெளியில் புல்லட் சத்தம் கேட்டது. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் சித்தப்பாவோடு ஊருக்கு கிளம்பினேன். முக்கியமாய் அங்கே அந்த பெரிய தொட்டியில் நீச்சல் கத்துக் கொள்ள பெரும் ஆர்வமாய் இருக்கும். ஊருக்கு போனவுடனே நானும் என் தங்கையும் சித்தப்பாவிடம் கேக்க ஆரம்பித்துவிட்டோம். சித்தப்பா நீத்தடிக்கப் போலாமாங் சித்தப்பா. அது பெரிய தொட்டி என்பதால் தண்ணீர் ஒரு இரண்டடிக்கு குறைவாக இருந்தால் தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இன்னிக்கு தொட்டி நெறைய தண்ணி இருக்குது நாளைக்கு கம்மி ஆயிரும் நாளைக் போலாம் என்றார்கள். கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது.

சித்தி துவைக்க துணியை எடுத்துக் கொண்டு கிணற்றுக்கு சென்றார்கள். நான் சித்தியுடன் சென்றேன். சித்தி மோட்டார் எடுத்து விட்டு துணி துவைக்கத் துவங்கினார்கள். நான் வாய்க்காலில் இறங்கி ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் காலை நனைத்தபடி நின்று கொண்டிருந்தேன். பிறகு துவைத்து முடித்து சித்தி துணிகளை கூடைக்குள் போட்டு எடுத்துக் கொண்டார்கள். நான் சோப்பு டப்பாவை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தேன்.

மதியம் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு எழுந்தேன். அங்கே போனால் எனக்குத் தோழி சுபா. அவள் அப்புச்சி ஊரும் இது என்பதால் அவளும் விடுமுறைக்கு வருவாள். சுபாவின் அப்புச்சி தோட்டத்திலிருந்து பால் எடுத்து வந்திருந்தார்கள். நான் அவரைப் பார்த்தவுடன் ஐயா சுபா வந்துட்டாளாங்கியா என்று கேட்டேன். நாளிக்கு வருவா நீ எப்ப வந்த என்றார். நான் இன்னிக்காலீல வந்தனுங் என்றேன். பிறகு சித்தியிடம் நான் மேவறத்து திண்ணைக் போறங் சித்தி என்று கூறி விட்டு, வீட்டை சுற்றிக் கொண்டு மேவற சுவரை ஒட்டி இருந்த திண்ணைக்கு சென்றேன். மேவறத்து திண்ணை, சுவரை ஒட்டி, வீட்டின் இந்த கடைசியிலிருந்து அந்த கடைசி வரை, நிலத்திலிருந்து ஒரு அடிக்கு மேலாய் நீண்டிருக்கும். திண்ணைக்கு அருகில் ஒரு பெரிய வாகை மரம் இருக்கும். திண்ணையின் ஓரத்தில் எங்கள் ஐயா அமர்ந்திருந்தார்கள். அவருடன் அவருடைய நண்பர் இன்னோர் ஐயா அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கு போய் அவர்களருகே அமர்ந்து கொண்டு தோட்ட வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் தோட்டத்தில் இருந்தும் ஆட்கள் வேலையிலிருந்து திரும்பி வந்தார்கள். என்னைப் பார்த்து எப்ப வந்த என்று என்னிடம் வினவி என் பதில் கேட்டு பின் எத்தனை நாள் ரீவு (லீவ்) என்று கேட்டு என் பதில் வரக் காத்திருந்து பின் வாசலுக்குள் நுழைந்தார்கள். அவர்களிடமிருந்து வியர்வையும், மண் வாசனையும் கலந்து ஒரு ரம்மியமான மணம் வந்தது.நான் ஒரு முறை ஆழமாக சுவாசித்தேன். பிறகு சுவற்றுக்கு பின்னாலிருந்து கொத்து, கூடை எல்லாம் வைக்கும் சத்தம் கேட்டது. எல்லாம் வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றார்கள்.

நானும் சுபாவும் தவறாமல் பண்ணாங்கல் விளையாடுவோம். நீச்சலைத் தவிர எங்களுக்கு மிக பிடித்த இன்னொரு விளையாட்டு இது. ஏனோ பண்ணாங்கல் விளையாடினால் மழை வராது என்றொரு நம்பிக்கை இருந்தது பெரியவர்களுக்குள். நாங்கள் விளையாடுவதைப் பார்த்தால் மொதலையே மழை இல்ல இதுல இது வேறயா என்பார்கள். நாங்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவே மாட்டோம். நாளை சுபா வந்துவிடுவாள் கல் விளையாடலாம் என்று அதற்காக கற்கள் பொறுக்க தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் கற்களை எவ்வளவு பாதுகாப்பாய் வைத்தாலும் அடுத்த முறை தேடையில் அது கிடைக்காது.அதனால் ஒவ்வொரு முறையும் தேடவேண்டும்.

ஒரே அளவில் கொஞ்சம் மொழு மொழுப்பாய் இருந்த கற்களை தொலாவினேன். எனக்குள் நாங்கள் பண்ணாங்கல் விளையாடும் போது பாடும் பாட்டை நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். ஒண்ணானே ஊசி மேலூசி, ரெண்டானே ரத்னப் பதக்கம், மூணானே முத்து சிப்பி அதுக்கு மேல் நினைவு வரவில்லை. சுபா தான் முதலில் பாடிக் கொண்டே ஆடுவாள். அவளிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். கற்கள் கண்டெடுத்துவிட்டேன். இருட்டாயிருச்சு உள்ள வா என்று விட்டு ஐயா உள்ளே சென்றார்கள்.

பொழுது சாய்ந்து அந்தி வானம் மிக அழகாய்த் தோன்றியது. எங்கிருந்தோ கிளிகள் கூட்டம் கூட்டமாய் பறந்து வந்தது. வாகை மரத்தில் தஞ்சம் கொண்டது. ஒவ்வொரு விடுமுறையும் இந்த கிளிகளைப் பார்ப்பேன். எனக்கு எல்லா கிளியும் ஒரே மாதிரித் தெரிந்தது. அதனதன் இடம் சென்றடையும் வரை கீ கீ கீ என ஓயாது சத்தம்.அத்தனை கிளிகளும் என்ன பேசிக்கொள்கிறது புரியவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பிய என் மனமிடும் குதூகலம் ஒத்திருந்த ஒரு இனிய ராகம் அதில் இருந்தது. பார்த்துக் கொண்டிருந்த என் மனதை அந்த கணம் என்னவோ செய்தது.

வாகை மரத்தில் ஒரு பொந்து இருக்கும். அங்கு எப்போதும் எந்நேரமும் ஒரு கிளி இருக்கும். இன்று காலையிலிருந்து நான் அதைப் பார்கவில்லை. இப்போது ஒரு கிளி அதற்குள் போனது. நானும் உள்ளே சென்று அதன் கூடு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாய் இருந்தது. எனக்கு அந்த கிளியுடன் பழக ஆசையாய் இருந்தது. சற்று நேரம் பொறுத்து கவனிக்கிறேன் அந்தக் கிளி பொந்திலிருந்து தலையை வெளியில் விட்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

15 comments:

யாத்ரா said...

அந்த நாள் ஞாபகங்கள் எப்போதுமே இனிமையானவை, இதில் நீங்கள் எழுதியிருக்கும் கோயம்புத்தூர் வட்டார வழக்கு படிக்க இனிமையாக இருந்தது, வாமு கோமு அவர்களிடம் இந்த வட்டார வழக்கை மிக மிக ரசித்துப் படித்திருக்கிறேன், நானும் சிறுவயதில் எப்போது விடுமுறை விட்டாலும் சித்தப்பா வீட்டுக்கு தான் சென்றுவிடுவேன், எவ்வளவு விளையாட்டுகள், ஐஸ்பாய், கல்லா மண்ணா, கபடி, கோலி, கில்லி, பம்பரம், சீட்டு, கேரம், சதுரங்கம், டிரேட், ஒத்தையா ரெட்டையா, கல்லாங்காய் (பண்ணாங்கால்), திருடன் போலீஸ், தாயக்கட்டை,,,,,,,,,, இப்படி நிறைய, சமீபத்தில் கூட கலாப்ரியா அவர்கள் அவர் பதிவில் சில பால்ய விளையாட்டுகளைப் பற்றி எழுதியிருந்தார். வாகை மரம், கிளிகள்,,,,, அருமை. உங்கள் தோழி சுபா பாடும் பாட்டை இப்போது தான் கேள்விப்படுகிறேன். இந்த ஞாபகப்பகிர்வு ரொம்ப இனிமையாக இருக்கிறது. கடந்த எதிர் நிகழ் காலங்களின் கவலைகளற்று, நிகழின் எல்லா கணங்களிலும் அற்புதங்களை மட்டுமே துய்த்துக் கொண்டிருந்த பால்ய காலங்களை எப்போதுமே எழுத எழுத இனிமை தான்.

Sugirtha said...

நன்றி யாத்ரா! மனதின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கும் அந்த நாட்களின் நினைவுகளை எழுதும்போது திரும்ப அருகில் சென்று பார்க்கும் உணர்வு.

மண்குதிரை said...

இது போன்ற மனதினுள் காயாத ஈரம் தான் உங்களை இத்தனை அழகான எழுத்துக்காரியாக வைத்திருக்கிறது இல்லையா?

எனக்கு என் பால்யா நினைவு நெஞ்சை அழுத்துகிறது.

உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு


‘பண்ணாங்கல்’ இது என்ன் விளையாட்டு நாம் இதுவரை விளையாடியதில்லையே :-(

Sugirtha said...

நன்றிங்க மண்குதிரை! ஐந்து சிறு கற்களை மேலே தூக்கிப் போட்டு விளையாடுவோம். அதைதான் பண்ணாங்கல் என்போம். யாத்ரா கல்லாங்காய் என்று குறிப்பிட்டிருக்காங்க. வேற பெயர் இருக்கான்னு தெரியல. உங்கள் விரிவான கருத்துப் பகிர்வுக்கு மறுபடியும் நன்றி.

Maddy said...

Good Nostalgia.

Neenga namma ooru pakkam pola. Coimbatore slag irunthaalum, koncham erode salem vaasam veesuthu. Nalla irukeengala ammini!

மண்குதிரை said...

ம்ம் ஆமாம் ஆமாம் இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

ஆனால் பெயர் மறந்து போச்சு :-(

நன்றி

Sugirtha said...

@ Maddy - நல்லா இருக்கறனுங்க! :) நீங்க?
ஈரோடு இருக்கலாம்... சேலம் கூடவா?
----------------------------------------------------------------
@ மண்குதிரை - கண்டுபிடிச்சுடீங்களா :)

Maddy said...

நம்மூரு பக்கம் இத ""அஞ்சான் கல்லு"" ன்னு சொல்லுவாங்க! சேலத்துக்கும் நாமக்கலுக்கு நடு ஊருங்கோ நம்மூறு!! புது வருச வாழ்த்துக்கள் சொல்லிக்கிறெனுன்கோ

Sugirtha said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் Maddy!!

Maddy said...

Enga? aalaye kanom?

ராகவன் said...

அன்பு சுகிர்தா,


உங்கள் பத்திகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். வசீகரமாய் இருக்கிறது உங்கள் நடை.

என்னுடைய பழைய நினைவுகளையும் போகிற வாக்கில் கிளறி விடுகிறது இந்த பதிவு... என்னுடைய முழுபரீட்சை விடுமுறைகளும் என் கிராமத்தையும், புழுதியையும், நண்பர்களையும் ஞாபகத்தில் நிறுத்துகிறது.

வாழ்த்துக்கள்,

அன்புடன்
ராகவன்

Sugirtha said...

இனிய ராகவன்!

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

இந்த பதிவு உங்களுக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தியதை அறிந்து மிக மகிழ்கிறேன். மறுபடியும் ஒரு நன்றி :-)

Sugirtha said...

@ Maddy - ஹ்ம்ம் ஒரு சின்ன இடைவெளி. சீக்கிரம் வர முயற்சி பண்ணறேன்.

ஆர்வா said...

நினைவுகளை விட சுகமான விஷயம் எதுவும் இல்லை..

நல்லா இருந்துச்சு

Sugirtha said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றிங்க கவிதை காதலன்.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...