Friday, May 13, 2011

ஒற்றைச் செம்பருத்தி

மையிட்டு, மலர் சூடி
உறங்குவதற்கு முன்
உறக்கத்தின் இடையில்
உறங்கி எழுந்ததும்

என எத்தனை கனவுகள்
அப்போதெல்லாம்

தொலையுமெனில்,
கலையுமெனில்,
எல்லாமே எல்லாமே
எல்லாமே எதற்கு?

வாசச் செடியில்
ஒற்றைச் செம்பருத்தி
அதனாலென்ன
இருந்துவிட்டு போகட்டும்

அடுக்களை ஜன்னலைத்தான்
திறப்பதேயில்லை
அந்தப்புரம் ஜோடிப் புறாக்கள்

Saturday, May 7, 2011

இறுக்கம் கழைந்து

மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந்து விழுந்த கேள்வியை எதிர்கொள்ள அவகாசம் வேண்டி இறுக்கமென எதை சொல்கிறாய் திருப்பி அவளிடமே கேட்டேன். ஒரு நேசத்தை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயங்குகிறோம், நேசம் மட்டுமல்ல எல்லா உணர்வுகளையுமே ஏன் இப்படிக் கட்டுப் படுத்திக் கொண்டு இறுகிக் கிடக்கிறோம். இலகுவாக எதையும் வெளிப்படுத்த ஏன் அஞ்சுகிறோம். இப்படி எங்கேயோ பார்த்துக் கொண்டு கேட்ட தொடர்ச்சியான கேள்விகளை அவள் உரக்கச் சிந்திக்கிறாள் என்று ஒன்றும் பேசாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டு என் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் படத்தின் ஏதோ ஒரு காட்சி தான் அவளை பாதித்து இந்த ரீதியில் சிந்திக்கத் தூண்டி இருக்கும் அது எதுவாய் இருக்கும் என்று தனி கோட்டில் அலையத் துவங்கிய மனதை அவள் என்னை பார்த்துக் சொன்ன அடுத்த வாக்கியம் திருப்பிக் கொண்டுவந்தது. நீ கூடத் தான் அப்படி இருக்கிறாய் என்றாள். எதை வைத்து சொல்கிறாய் கேட்டுவிட்டு எது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னேயே பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியாய் அப்படி இல்லையென எப்படி நிரூபிப்பது என்பதாய் மனம் சிந்திக்க துவங்கியது. அவள் என் கேள்வியில் ஆர்வமில்லாமல் நான் கூடத்தான் அப்படி இருக்கிறேன் என்றாள். துரித கதியில் சென்று கொண்டிருந்த மனம் சற்று நிதானமாகி அவள் என்ன சொல்கிறாள் என்று கவனிக்கத் துவங்கியது. தனியாக குற்றம் சாட்டப் படும்போது வருகிற பதற்றம் நானும் கூட இருக்கிறேன் எனும்போது ஆசுவாசம் அடைகிறது. குற்றம் என்பதை விட வரவேற்கப்படாத ஒரு செயல் அல்லது பழக்கம். எப்போதுமே பிடித்தமானவர்களின் குட் புக்ஸில் இருப்பதைத்தான் விரும்புகிறோம். யார் என்ன நினைத்தால் என்ன இது தான் நான் என்று வெளிக்காட்டிக் கொள்கிற தைரியம், தெளிவு எப்போதும் கூடவே இருப்பதில்லை.

திடீரென்று அனு, ஜூலியட்டைப் பாரேன் ஒரு பறவை போல் இருக்கிறாள் என்றாள். ஜூலியட் எங்கள் பல்கலைகழகத்திற்கு வந்திருக்கும் கேரளத்துப் பெண். இதுவரை பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் அவளைப் பற்றி எதற்கு பேசுகிறாள் என்று தோன்றியது. இவள் இப்படிதான் ஒரு விசயத்திலிருந்து மற்றொரு விசயத்திற்கு தாவி விடுவாள். சில சமயம் சுவாரஷ்யமாய் இருக்கும் சில சமயம் எரிச்சலாய் இருக்கும். எங்கேயாவது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் முடிச்சிருக்கும் ஒரு கட்டத்தில் அவிழும்போதுதான் எதற்கு சொல்கிறாள் என்று புரியும். ஜூலியட் என்றதும் எனக்கு அவள் ஒரு நாள் ரூமில் திருட்டு தம்மடித்து கொண்டிருந்தது நினைவில் வந்தது. பயப்படாம தம்மெல்லாம் அடிக்கறா அதனால சொல்றியா என்றேன். நீயும் எல்லோர் மாதிரியுந்தான் அவளைப் பாக்கற எனக்கு இப்போ ஜூலியட் வேற மாதிரி தெரியறா என்றாள். வேற மாதிரின்னா? ஒரு வகையில் அவள் ஒரு தேவதை போலவும், பல வண்ணப் பட்டாம்பூச்சி போலவும், பறவை போலவும் இப்படி எல்லாம் என்றாள். ஏன் திடீர்ன்னு என்றேன்? நான் நிறைய நாள் அவளைப் பாத்திருக்கேன். ஏன் தேவதைன்னு சொல்றேன்னா, அந்த தாத்தா இருக்காரில்ல தகர வீட்டு தாத்தா என்றாள். நாங்கள் தினமும் நடக்கும் வழியில் நாலு தகர சுவர்கள் அமைந்த போன் பூத்தை ஒத்த தகர வீட்டில் ஒரு கண் தெரியாத தாத்தா இருப்பர். அவரை பார்க்கும் போதெல்லாம் எங்கள் மனம் மிகுந்த சங்கடம் கொள்ளும் ஆனால் ஒரு நாள் கூட அவரோடு பேசியதில்லை. அந்த தாத்தாவுக்கு என்ன என்பது போல் அனுவைப் பார்த்தேன். இன்று வகுப்பு முடிந்து வருகையில் ஜூலியட் தாத்தா கையை பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். நமக்கு ஒரு நாள் கூட அவர்கிட்ட பேச தோணல இல்ல, உபயோகமில்லாத பரிவு அவசியமில்லாதது இல்லையா என்றாள். சட்டென நினைவு வந்தது போல் மஞ்சு கூப்ட்டா அப்போவே என்னன்னு கேட்டுட்டு வந்தர்றேன் என்று சென்றேன்.

எங்கள் அறைக்கு நேர் எதிர் அறைதான் மஞ்சுவுடையது என்றாலும் நேருக்கு நேராய் போக முடியாது. தொட்டி வீடு போல இது தொட்டி விடுதி. வட்ட வடிவம் போல் இருக்கும் விடுதியில் எல்லார் அறைக்கு முன்னேயும் சுற்று கைச் சுவர் இருக்கும். இடையில் வட்டமாய் இருக்கும் வெற்று இடத்தில் செம்மண் போட்டு தோட்ட தாத்தா நிறைய செடிகள் வைத்திருப்பார். அதன் மத்தியில் தான் நடை பாதை இருக்கும். நான் சுற்றிக்கொண்டு மஞ்சுவின் அறை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். மஞ்சுவும் நானும் ஒரே துறை. அவள் அறையில் எப்போதும் என் துறைத் தோழிகள் இருந்து கொண்டே இருப்பார்கள். அவள் சகஜமாக, சரளமாக உரையாடுவாள். எப்படி வந்தது என்று தெரியாது அவளை எல்லோரும் சித்தி என்று அழைப்போம். நான் வகுப்பு முடிந்து அனேக தினங்கள் அனு வரும் வரை மஞ்சுவின் அறையில் இருப்பேன். அங்கே நிலவும் குதூகலம் எனக்கு பிடிக்கும். ஒரு கட்டத்துக்குமேல் எல்லாம் சலித்து அனு எப்போது வருவாள் என்றிருக்கும். அனு வேறு துறை வகுப்பு முடிந்ததும் நேராக அறைக்கு வர மாட்டாள். அவளுக்கு அவள் வகுப்பில் எல்லோருமே நெருக்கம். அவளிடம் எல்லோருமே எப்படி வெகு சீக்கிரம் பழகிவிடுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கும். அனுவும் நானும் பேசாத விசயங்களே இருக்காது. அனுவோடு யாராவது பேசினாலோ அவள் யாரை பற்றியாவது சிலாகித்து பேசினாலோ எனக்கு ஒருவித அமைதியின்மை வந்து விடுகிறது.

ஒரு நாள் எனக்கு மழையில் நனைந்து கொண்டே பாட்டுக் கேக்கணும் என்றேன் அனுவிடம். ஆசையை வெளியிட்ட அடுத்தநாள் லேசாகத் தூறியது அவள் வாக்மேனை எடுத்துக் கொண்டு வா போகலாம் என்றாள். நாங்கள் தூறலில் இயர் போனை ஆளுக்கொரு காதில் வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் பாட்டுக் கேட்டுத் திரும்பினோம். அதென்ன ரோட்டோர டீ கடைல பசங்க தான் டீ குடிக்கனுமா ஏன் நாம குடிக்கக் கூடாதா என்ற மறு நாள் ஆண்களுக்கு மத்தியில் நாங்கள் இருவர் மட்டும் டீ குடித்துக் கொண்டிருந்தோம். அனுவின் வார்த்தைகளில் மற்றுமின்றி செயல் படுத்தும் தைரியம் எனக்கு மிகப் பிடிக்கும். அனு என்னை நிறைய வேளைகளில் கூட்டை கிழித்து விட்டு வெளியே அழைத்து சென்றிருக்கிறாள்.இப்போது மஞ்சு கூப்பிட்டாள் என்று எதற்கு பொய் சொன்னேன் என்று என்னையே திட்டிக் கொண்டு சென்றேன். என் வாழ்வில் அனு போன்ற ஒரு ஆத்மாவை கண்டெடுத்தது அதிர்ஷ்டம், மனம் அதை பாதுகாக்க வேண்டுமே என்று அலைமோதித் தவித்தது. ஏன் இப்படி? யார் அன்பை திருடி விட முடியும். எனக்கானது எப்போதும் எனக்கு இருக்கும் இல்லையா? அவள் அன்பு மொத்தமும் எனக்கே வேண்டும் என்று நினைக்கிறேனா? இது இயல்பா இல்லை இதனால் அவளைமுற்றிலும் இழந்து விடுவேனா? ஓரிருமுறை இந்த உரிமை நிலைநாட்டலை நான் வெளிகாட்டிக் கொண்டபோதே அவள் அதை ரசிக்கவில்லை. மாறாக அது அடிமைத் தந்திரம் என்றாள். வென் யு ரியல்லி லவ் சம்திங் யு ஹாவ் டூ லெட் தட் ப்ரீ என்பாள். அதனால் நான் அவள் யாரோடு பேசினாலும் உள்ளுக்குள் எத்தனை பயந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். அவளுக்கு இதெல்லாம் புரிவதே இல்லை. இப்போதும் அவள் ஜூலியட்டை பற்றிப் பேசுகையில் எங்கே வெளிக்காட்டி விடுவேனோ என்று பயந்து மஞ்சு அழைப்பதாய் பொய் சொல்லி வந்தேன்.

மஞ்சுவின் அறைக்கு சென்று பார்க்கையில் மஞ்சு அறையில் இல்லை துணி துவைக்க சென்று விட்டாள் என்று கல்பனா சொன்னாள். திரும்பி வருகையில், ஜீ 50 அனுராதா என்று மூன்று முறை ரிசப்சன் போன் பூத் மைக்கில் அழைத்தார்கள். எங்களுக்கு போன் வந்தால் அறை எண், பேரை சொல்லி அப்படிதான் அழைப்பார்கள். நான் ரிசப்சனை கடக்கையில் அனு போனில் பேசிக் கொண்டிருந்தாள். அவளை கடந்து வந்து வெறுமனே மூடி இருந்த அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். மூடி இருந்ததால் அறையும் இறுக்கமாகவே இருந்தது. ஒரு மூன்று நிமிடத்தில் போன் பேசி முடிந்து அனு வந்தாள். முகத்தில் ஒரே சந்தோச களை. மஞ்சு கிட்ட பேசிட்டியா என்றாள். முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அவ ரூம்ல இல்லே என்றேன். அதை அவள் கவனிக்காமல் அக்கா கூப்டாங்க பெரியக்கா என்றாள். அப்டியா என்றேன். ம்ம் கன்சிவா இருக்காங்க என்றாள். எல்லாவற்றையும் மறந்து என்னது என்றேன் சற்று உரக்க நம்ப முடியாமல். அவள் பெரியக்காவுக்கு பத்து வருடமாய் குழந்தைகள் இல்லை. சின்னக்காவுக்கு ரெண்டு குழந்தைகள். எனக்கும் தாள முடியாமல் சந்தோஷம். ரொம்ப சந்தோசமா இருக்குடீ என்றேன். ஆமா என்னால கூட முதல்ல நம்பவே முடில எவ்ளோ நாள் ஏக்கம் தெரியுமா என்றாள். எனக்கும் தெரியும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு வாட்டியாவது புலம்பி விடுவாள். அக்கா இப்போவே ரெண்டு பெட்டி நிறைய துணி சேத்த ஆரம்பிச்சாச்சு என்றாள். ஒன்னு பொண்ணு துணி இன்னொன்னுல பையனுக்கு என்றாள்.ம் இருக்காதா பின்னே என்றேன் சிரித்துக் கொண்டே. அன்று வெளியே சென்றபோது அனு இரண்டு மர பொம்மைகள் வாங்கினாள். திரும்பி வருகையில் ஜூலியட் தகர வீட்டு தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தாள். அனு வா நாமும் பேசலாம் என்றாள். எங்கிருந்து தான் வந்ததோ அத்தனை இறுக்கம், நீ வேண்டுமானால் பேசிவிட்டு வா நான் இங்கேயே இருக்கிறேன் என்றேன். அவள் எதையும் கண்டுக்காமல் ரோட்டை கடந்து சென்று ஐந்து நிமிடம் தாத்தாவோடும், ஜூலியட் உடனும் பேசிவிட்டுத் திரும்பினாள்.

சமீபமாக ஜூலியட் அனுவைப் பார்க்க அறைக்கு வருகிறாள். எவ்வளவு தான் நான் பேச தவிர்த்தாலும் ஜூலியட் என்னையும் எப்படியாது அவர்கள் சம்பாசனையில் இணைத்து விடுவாள். அவளின் கொஞ்சும் தமிழ், கலகலப்பு என எனக்கும் ஜூலியட்டை பிடிக்கதுவங்கியது.எனக்கு எப்போதும் மலையாள மொழி மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தது. நீங்க பேசினாலே பாட்டுப் பாடற மாதிரி இருக்கு என்பேன் ஜுலியட்டிடம். ஜூலியட் எனக்கு சில வார்த்தைகள் சொல்லிக் கொடுத்தாள். நானும் அவளோடு ஆர்வமாய் பேசினேன். நான் உணர்ந்து முடிக்கும் முன்னேயே எனக்கும் அவள் நல்ல தோழியானாள். தூய அன்புக்கு முன்னால் வேறு எது நிற்கும்?அதற்குதானே சதா ஓயாத தேடல். கிடைக்கும்போது பற்றிக் கொள்ளத்தானே துடிக்கும் மனது.

வகுப்பு முடிந்து மாலையில், தற்போது ஊருக்கு போயிருக்கையில் பார்த்த அக்காவின் வீங்கிய வயிற்றையும், உப்பின கன்னங்களின் அழகையும் வியந்து சொல்லிக் கொண்டே இருந்தாள் அனு. இன்னும் ஒரு வாரத்தில் டெலிவரி என்றாள். கோவை முழுக்க சுற்றி நிறைய குட்டி குட்டி துணிகள் வாங்கினோம். அந்த நாளுக்கென ஆர்வமாய் காத்திருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து அனுவிற்கு போன் வந்தது சென்றாள்.போன் என்ற அழைப்பைக் கேட்டு ஜூலியட் அறைக்கு வந்தாள். ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள என்னிடம் அனுவுக்கு போனா என்றாள். ம்ம் இப்போ அனு திரிச்சு வரும் என்று புன்னகைத்தேன். சில நிமிடங்களில் அனு அழுது கொண்டே திரும்பி வந்தாள். இதை சற்றும் எதிர்பாராத நாங்கள் என்னாச்சு என்றோம் ஒரு சேர பதறி. குழந்தை இறந்துடுச்சு என்றாள். எப்புடி என்றேன். அசைவில்லாம இருக்குன்னு டாக்டர் கிட்ட போனப்ப தெரிஞ்சுருக்கு, தொப்புள் கொடி சுத்திடுச்சாம், அதனால குழந்தை இறந்துடுச்சு. ஆபரேஷன் பண்ணி வெளியே எடுத்திருக்காங்க. அக்கா என் குழந்தையப் புதைக்காதீங்க, என்கிட்டே குடுத்துடுங்க, வயித்துக்குள்ளேயே வெச்சுகறேன்னு, எடுக்க விடாம பைத்தியமா கத்திட்டிருக்காளாம் என்று சொல்லி வெடித்து அழுதாள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஜூலியட் அவளை கைகளை பிடித்து இழுத்து மடியிலிட்டு, அவள் அழுது ஓயும் வரை ஒன்றுமே பேசாமல் முதுகை தடவிக் கொண்டே இருந்தாள். நடுக்கம் குறையாத நான் எழுந்து ஜூலியட்டிற்கு வெகு அருகே சென்று அவளை ஒட்டி அமர்ந்து கொண்டேன்.