Saturday, June 9, 2012

மறுதலிக்கப்பட்ட பூனைக்குட்டி



வழிதப்பி ஓடிவந்த பூனைக்குட்டி

எதிர்பட்ட ஜன்னலில் நுழைந்தது

தன் ஆதர்ஷ ஷூ பாழான

விசனத்தில் இருந்த அப்பு

வீட்டுக்குள் நுழைந்த பூனைக்குட்டியை

அள்ளி எடுத்தான்

அது மிரண்டு பார்த்தது

நீவி முத்தமிட்டான்

அது சற்று தெளிந்தது

மடியில் இட்டுக் கொஞ்சினான்

அன்றிரவு அப்புவின் நெஞ்சோடு

உறங்கியது பூனைக்குட்டி

மறுநாள் ஷூவை கடித்த

புஸுபுஸு நாய்க்குட்டியை

மன்னித்து அணைத்தான் அப்பு

அப்புவை பிராண்டியது பூனைக்குட்டி

முதலில் சிரித்தான்

பிறந்த நாள் தொட்டு

தன் மடியில் கிடக்கும் நாய்க்குட்டியை

கொஞ்ச விடாமல் தொற்றிய பூனையை

செல்லமாய் வைதான்

ஒரு கட்டத்தில்

கொடுத்த இடத்தையும் மீறி

நாய்க்குட்டியை கடித்த பூனைக்குட்டி

மறுதலிக்கப்பட்டு

தெருவோர மரச்சருகுள்

அப்புவின் மடியை நினைத்துக்

கனத்துக் கிடக்கிறது