Thursday, October 16, 2014

பெனி எனும் சிறுவன் - Kico Blushi - தமிழில் யூமா வாசுகி

 பெனி எனும் சிறுவன் என்ற அல்பேனிய நாவலை இன்றைக்கு படித்து முடித்தேன். இதை எழுதியவர் கிகோ புளூஷி, தமிழில் யூமா வாசுகி மொழி பெயர்த்திருக்கிறார். இதை ஒரு மாதமாக  தூக்கிக் கொண்டு சுற்றினேன் என்றாலும் படித்து முடிக்க தோதாய் ஒரு பொழுது அமையவில்லை.  நேற்று உடல்நலக்கேடால் நள்ளிரவு உறக்கம் தொலைந்தது நல்ல சமயமாகப் போய்விட்டது. இரவு துவங்கி காலையில் படித்து முடித்தேன். இந்த நாவல் பெனி என்ற சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப் பட்டிருக்கிறது. சமீப காலமாக எனக்கு குழந்தை உளவியல் மீது பெரும் ஆர்வம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் ஆசிரியை ஆகவேண்டும் என்பது தான் என் கனவாக இருந்தது. ஒருவேளை பிரியப்பட்டு உடுத்திக் கொண்ட காட்டன் புடவைகளால் வந்த கனவாக இருக்கலாம்.எனவே படித்து முடித்து ஒரு வருடம் வேலை இல்லாமல்  இருந்தபோது தீவிரமாக ஆசிரியப் பணிக்கு முயன்று கொண்டிருந்தேன். அப்போது ஹிந்து நாளிதழில், வணிகவியல் ஆசிரியை தேவை என்று ஊட்டி குட் ஷெப்பெர்ட் பள்ளியில் இருந்து கேட்டிருந்திருந்தார்கள். அதற்கு எழுதிப் போட்டதில் அவர்கள் என்னை நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தார்கள். அதற்காக என் சித்தப்பாவும், மாமாவும் என்னை ஊட்டிக்கு அழைத்துப் போனார்கள். அப்பொழுது தான் நான் முதல் முறை ஊட்டிக்கு சென்றேன். மலையின் ஊடான பயணம் என்னை திளைக்கச் செய்தது. திக்கு முக்காடிப் போனேன். அடடா இங்கேயே வேலை கிடைத்தால் இதை விட வேறென்ன வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் பள்ளிக்குள் நுழைந்ததும் மாணவர்களைப் பார்த்து திகிலடைந்தேன். நல்ல ஆரோக்கியமாக, வாட்ட சாட்டமாக வெளிநாட்டு மாணவர்கள். இதென்ன பதினொன்றாம் வகுப்பு தானே இவர்கள் நம்மைக் காட்டிலும் பெரிதாக இருக்கிறார்களே? இறைவா! நான் இவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க முடியும் என்று என் உள்ளங்கை வியர்க்கத் துவங்கியது. நேர்முகத் தேர்வும் நடந்தது. ஐந்து வருடம் கான்ட்ராக்ட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். நான் என் பெற்றோரிடம் கேட்டு சொல்கிறேன் என்று வெளியே வந்தேன். சித்தப்பா ஒப்பவில்லை பிறகு திரும்பும் வழியில் நல்ல வேளை உனக்கு இங்கே வேலை கிடைக்கவில்லை வரும்போது வழியெல்லாம் வேலை கிடைக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே வந்தேன் என்றார்.உன்னை இந்த மலை மேல் விட்டு விட்டு எப்படி நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றார். நானும் அந்த மாணவர்கள் மத்தியில் இருக்கத் தேவை இல்லை என்று நிம்மதி அடைந்தேன்.அதன் பிறகு திருப்பூர் கல்லூரி ஒன்றில் முயற்சித்தும் கிடைக்காமல் பிறகு ஆசிரியை ஆகும் முயற்சியை கைவிட்டேன். பெங்களூர் வந்தடைந்தேன்.

சரி இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால் திரும்பவும் ஆசிரியை ஆகும் கனவு தொற்றிக் கொண்டு விட்டது. இம்முறை காட்டன் புடைவைக்காக அல்ல. நாம் தான் இவ்வுலகை வாழவே தகுதியற்ற ஒரு இடமாக மாற்றிவிட்டோம். நாளை நம் குழந்தைகளாவது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே குழந்தைகள் எந்தப் பயமும் அற்று சுதந்திரமாக  இயங்கவும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும், தங்கள் காரியங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்கவும், எவரையும் சாராது முடிந்தவரையில் தன் தேவைகளை தானே நிவர்த்தி செய்துகொள்ளும்  திடமுடையவர்களாகவும் ஊக்கமுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படியான ஒரு வெளியை அகமும், பள்ளியும் அமைத்துக் கொடுத்தால் எத்தனை நலமாய் இருக்கும்.அப்படி ஒரு இடத்தில் அப்படியான வேலை செய்ய  வேண்டும் என்றே இந்தக் கனவு என்னைத் தொடர்கிறது.தோழி ஒருத்தி under privileged குழந்தைகளுக்காக பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியதில் இது ஒன்றும் சினிமாவில் காட்டுவது போல காட்டன் புடவை கலையாமல் சென்று வருகிற காரியமில்லை. கடுமையான பணி என்று புரிகிறது. எனவே சிறுவர்களை அவர்களின் உலகை  முதலில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.இதில் ஆர்வம் ஏற்பட்டதிலிருந்து நான் சந்திப்பவர்கள், பார்ப்பவை படிப்பவை எல்லாம் இதற்கு ஏற்ப அமைகிறது. அந்த வகையில் இந்த நாவல் எனக்குப் பிடித்துப் போனது. இந்த நாவல் பெனியின் மன வெளியை காட்டிக் கொடுக்கிறது. படிக்க படிக்க நமக்கு மிகப் பரீட்சியமான உணர்வுகளாக தெரிகிறது. அட நமக்குள்ளும் சிறுவன் இன்னும் மிச்சமிருக்கிறானே. அவ்வப்போது எட்டிப் பார்க்கிறானே.தேன் மிட்டாயிலிருந்து வரும் ரசத்தை இன்றைக்கு நினைத்தாலும் எச்சில் ஊறுவது அந்த சின்ன நாவிலிருந்து தானே.

சரி நாம் நாவலுக்கு வருவோம். பொதுவாக எல்லாப் பெரியவர்களும் தவறாமல் செய்கிற காரியம் குழந்தைகளின் மீது பயத்தை ஏற்றுவது மேலும் அவர்களின் மீது நம் எதிர்பார்புகளை திணிப்பது. அப்படிதான் பெனியின் அம்மாவும் எந்த மாற்றமும் இல்லாமல் பெனியின் மீது பயத்தையும் மேலும் நீ நல்லவனாக வர வேண்டும். அம்மா பேச்சை கேட்க வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது அது நல்ல குழந்தைகளுக்கு அழகல்ல என்று சொல்லி சொல்லி வளர்கிறார். அவனை எங்கேயும் வெளியே அனுப்பாமல் வீட்டுகுள்ளேயே வைத்திருப்பதால் அவன் நண்பர்கள் அவனை “அம்மா பிள்ளை” என்று கேலி செய்கிறார்கள். இது அவன் மனதை பெரிதும் பாதிக்கிறது. அவன் மிகவும் சுருங்கிப் போகிறான். அவ்வப்போது அடம் பிடிக்கத் துவங்குகிறான். விடுமுறை நாட்களில் அம்மாவின் கெடுபிடி அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் அவன் மிகுந்த வெறுப்புற்று அதை நேரிடையாகக் காட்டினால் அம்மா அழுவாளே என்று மறைமுகமாக அம்மாவை பழி வாங்க எண்ணுகிறான்.கடைக்கு சென்று வாங்கி வந்த நாவல் பழங்களை மறைந்து நின்று கொண்டு வீட்டின் ஜன்னல் மீது ஒவ்வொன்றாக எரியத் துவங்குகிறான். அம்மா ஜன்னல் வெளியே எட்டிப் பார்க்கும்போது மறைந்து கொள்கிறான். அதற்கு முன்னால் அவன் நண்பன் அப்படி செய்ததை பார்த்திருந்த அம்மா அவன் தான் திரும்பவும் இதை செய்கிறான் என்று அவனை வைகிறார்.  அவனுக்கு இது வேடிக்கையாகிறது. ஆனால் எதிர் பாராத விதமாக அங்கு வந்த அவன் மாமா அதைப் பார்த்துவிடுகிறார். அவன் மாமாவை அவனுக்கு நிரம்பவும் பிடிக்கும். அவனுக்கு அவரின் குதிரையின் மீது அலாதி பிரியம் இருந்தது. மாமா அம்மாவைப் போலில்லாமல் தன்னை பெரிய மனிதனாக நடத்துவார்.அவன் தன் குறைகளையெல்லாம் மாமாவிடம் மனம் திறந்து கொட்டுகிறான். ஜன்னல் வழி எட்டிப் பார்க்கும் அம்மா மாமாவைப் பார்த்து மேலே வீட்டிற்கு அழைக்கிறார். பெனி மாமாவிடம், தான்  சற்று வெளியே இருக்கவேண்டும் என்றும் அவர் அம்மாவிடம் உரையாடும்வரை அவரின் குதிரையை தான் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும் வாக்களிக்கிறான். மாமா, அம்மாவிடம் பெனியை தன் கிராமத்திற்கு அழைத்துப் போவதாக அனுமதி வாங்குகிறார். மலை மேல் இருக்கும் அந்த கிராமத்தை காண பெனியும் ஆர்வமாக கிளம்புகிறான். ஆனால் அங்கே சென்றதும் தன் அம்மா உடன் இல்லை என்று அச்சம் கொள்கிறான். அழுகிறான். அத்தை அவனைத் தழுவி தேற்றுகிறாள். பெனி சென்ற அந்த நாள் அவன் மாமன் மகன்  நண்பர்களோடு காட்டில் இரவு தங்கப் போகிறேன் என்று கிளம்புகிறான். பெனிக்கு அது மிகுந்த வியப்பை தருகிறது. அவன் தமாஷ் செய்கிறான் என்று நினைக்கிறான். ஆனால் அவன் உண்மையாகவே கிளம்பிச் செல்லவும் அவனின் தைரியத்தை வியக்கிறான். கிராமத்திற்கு சென்று, நகருக்கும் கிராமத்திற்குமான வேறுப்பாட்டை உணரும்போது அவனுக்கு நிறைய கேள்விகள் வருகின்றன.அவன் தொடர்ச்சியாக மாமனின் மகனிடம் கேள்விகள் கேட்கிறான். விலங்குகளிடமும், தனியாக செல்லவும் மிகுந்த பயம் கொள்கிறான். இது பொறுக்காமல் மாமன் மகன் இவனைக் கோழை என்றும், முட்டாள் என்றும் வைகிறான். மாமன் அதைக் கண்டிக்கிறார். நீயும் நகருக்கு சென்றால் மோட்டார் வாகனங்களையும் கட்டிடங்களையும் இப்படித்தான் பார்ப்பாய். அவனுக்கு இது எல்லாம் பழக்கமில்லை சொல்லிக் கொடு என்கிறார்.

ஒவ்வொரு முறையும் தானும் ஒரு நாள் தைரியசாலி ஆவேன் என்று உறுதி கொள்கிறான். மாமா அவனை மேலும் மேலும் ஊக்குவிக்கிறார். இங்கே பெரியவர்கள் சிறுவர்களை நெருக்குவதில்லை அவர்களுக்கும் எல்லா வேலையும் கொடுக்கப் படுகிறது. மாமாவின் குதிரை அவர் சொந்தக் குதிரை அன்று. அது கூட்டுப் பண்ணையை சார்ந்தது என்று அறியும்போது ஏமாற்றம் அடைகிறான். பிறகு கூட்டுப் பண்ணையைப் பற்றி அறிந்து கொள்கிறான். தானும் அந்த வேளைகளில் பங்கு கொள்ள முனைகிறான். கதிர் அறுக்கிறான்.மாமா அவனுக்கு வேலையில் கதிர் சுமைகளை எடுத்து செல்ல ஒரு கழுதையை கொடுக்கிறார். மாமனின் நண்பர்கள் அவனுக்கும் நண்பர்களாகி விடுகின்றனர். அவர்களோடு அவன் நீந்த கற்கிறான். அவன் அங்கே தங்கி இருந்த நாட்களில் மெது மெதுவாக ஒவ்வொரு பயத்தையும் வெல்கிறான்.கடைசியில் அவனும் நண்பர்களோடு காட்டில் ராத்தங்க கிளம்புகிறான். காட்டில் இருக்கும்போது அவனுள் எதிரொலிக்கும் உணர்வுகளை நாமும் உணர முடியும். சில சிறுவர்கள் உருளைக்கிழங்குகளை எடுத்து வந்து சுட்டார்கள். வேறு சிலர்  விலங்குகளைப் பிடிக்க பொறி வைத்தார்கள். இவன் அங்கே துணை வந்திருந்த வேறொரு மாமாவோடு அமர்ந்திருக்கிறான். மாமா அவனை களைப்படைந்து விட்டாயா என்று வினவுகிறார். அவன் இல்லை என்றும் என்ன வேலை செய்ய வேண்டும் என்றும் மாமாவைக் கேட்கிறான். அவர் வைத்த பொறியில் ஏதேனும் விலங்கு அகப்பட்டிருகிறதா என்று பார்த்து வர சொல்கிறார். தன் பயத்தையும் மீறி காட்டில் இருளுக்குள் சென்று பொறியில் ஏதேனும் விலங்கு மாட்டி இருக்கிறதா என்று பார்த்து வருகிறான். மாமா போர் வீரனைப் பற்றி பாடுகிறார். சிறுவர்கள் நெருப்பை சுற்றி அமர்ந்து  கொண்டு அவரோடு சேர்ந்து பாடுகிறார்கள். பிறகு சுட்ட உருளைக் கிழங்குகளை உண்டுவிட்டு நட்சத்திரங்களை எண்ணியபடியே உறங்கிப் போகிறான். அவன் விடுமுறை நாட்கள் முடிகின்றன. ஜெர்மானியர்கள் ஊடுருவியதைப் பற்றி எல்லாம் அவனுக்கு அங்கு தான் தெரிய வருகிறது. இந்தப் பயணத்தில் நிறைய விசயங்களை அறிந்து கொள்கிறான். நகருக்கு திரும்புகிறான். அவன் சொன்ன கதைகளை அங்கே யாரும் நம்பவில்லை. பிறகு பள்ளிக்கு அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது. கிராமத்திலிருந்து அவன் நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள். அவன் நண்பர்கள் எல்லோரும் சுற்றி இருந்து அதை வாசிக்கிறார்கள் என்று முடிகிறது. ப்ளாஷ் பாக் செல்ல விரும்புகிற எல்லோரும் படிக்க வேண்டிய நாவல். மேலும் சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று  உணர்வதில்லை.ஒரு முழுமையான மனிதனாக/மனுஷியாக தான் உணர்கிறார்கள். அவர்களை அப்படி நடத்தவே விரும்புகிறார்கள்.அவர்களின் ஆளுமை மிகவும் உறுதியானது. இதை எல்லாம் பெனியின் மூலம் ரொம்ப அழகாக சொல்லி செல்கிறது நாவல். 

Thursday, September 11, 2014

A time of My Own

A time of My Own – Part I

பல வருடங்களுக்கு முன் 'Eternal sunshine of the spotless mind' பார்த்த போது திரைப்படங்களில் எனக்கான தெரிவு புலர்ந்தது. 'Revolutionary Road' பார்த்தபோது அந்த பாத்திரத்தில் என்னையே ஊற்றி வைத்திருந்தார்கள் என்றே தோன்றியது. அதைத் தொடர்ந்து Reader பார்த்தபிறகு ஆஹ் Kate! என் ஆதர்ஷம் என்றேன். அந்த Kate யை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. Yes, I adored that personality! என்னவோ தெரியவில்லை 'Revolutionary Road' படத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் சுச்சி என் நினைவில் தவறாமல் வந்து கொண்டே இருப்பாள். சுச்சியின் நடையோ, பேச்சோ எதுவோ ஒன்று எனக்கு அந்த Kate யை நினைவுபடுத்தும். சுச்சியின் முழுப் பெயர் சுசித்ரா. அவளை சுச்சி என்று அழைக்கப் பிடித்திருந்தது. சுச்சி என்னோடு இரண்டு வருடங்கள் பணி புரிந்தாள். பணியில் இருந்தபோது நான் அவளோடு நிறைய பேசியதெல்லாம் இல்லை. கொஞ்சமே பேசி இருந்தாலும் எதுவோ என்னை அவள் பக்கம் இழுத்துக் கொண்டே இருந்தது. அவள் ஒரு சராசரி வகை அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருந்தேன்.
இரண்டு வருடங்களுக்குப்பிறகு 'Montessori' பயிற்சிக்காக வேலையை விட்டு சென்றாள். யோசிக்கையில் அவள் வேலையை விட்டு சென்று கிட்ட தட்ட ஐந்து வருடங்கள் ஆகி விட்டது என்று நம்ப முடியாததாக இருக்கிறது. அவள் வேலையை விட்ட பிறகு தோழி சுமா அவளோடு தொடர்பில் இருந்ததில் சுமா சுச்சியைப் பார்க்க செல்லும்போதெல்லாம் நானும் உடன் செல்வேன். இப்படியான சந்திப்புகளும் அடிக்கடி நிகழவில்லை, விரல் விட்டு எண்ணிவிடலாம். பல மாதங்களுக்கு ஒரு முறை எப்போதாவது ஒரு நல்ல coffee Shop ல் ஒரு மணி நேரம் பேசி இருந்து விட்டு விடைபெறுவோம்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியாகியிருந்த நிலையில் என் நினைவில் அடிக்கடி சுச்சி வந்தவண்ணம் இருந்தாள். ஒரு வாரம் வரை அந்த எண்ணத்தை விட்டுப் பிடித்தேன். பார்க்க விளைகிற ஆவலை மட்டுபடுத்த முடியாமல் ஒரு புள்ளியில் 'நீங்கள் என் நினைவில் வந்த வண்ணம் இருக்கிறீர்கள். உங்களைப் பார்க்க வேண்டும்' என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அப்போது அவள் ஒரு Montessori பள்ளியில் டீச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தாள். பள்ளி முடிந்ததும் நான்கு மணிக்கு அலுவலகத்தின் அருகே இருக்கும் coffee shop ற்கு வருகிறேன் என்று பதிலனுப்பினாள். அன்றைக்கு தான் முதல் முறையாக நான் மட்டும் தனியாக சுச்சியை சந்திக்கப் போகிறேன். என்னுடைய அந்த செயல் எனக்கே வியப்பாக இருந்தது. அவ்வளவாக பேசி, பழகி இராதபோதும் இந்த ஒட்டுதல் எப்படி வந்தது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். சந்திப்பில் பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நான் ஏதோ ஒரு பயண அனுபவத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.பொதுவாக சுச்சி யாரையும் இடைவெட்டிப் பேசி பார்த்ததில்லை. அவள் ஒரு நல்ல நேயர் (listener).

ஒன்றரை வருடம் முன்பு பூனேவில் வேலை கிடைத்து பெங்களூரை விட்டு சென்று விட்டாள். அவளை கடைசியாக பார்த்தபோது நானும் சுமாவும் ஒரு முறை பூனா வருகிறோம் என்றேன். நான் தனியாகத்தான் வீடு எடுத்திருக்கிறேன் நிச்சயமாக வரலாம் என்றாள். அதன் பிறகு எப்போதாவது மெயில் அனுப்பிக் கொள்வோம். இந்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை என்றதும் நானும் சுமாவும் பூனா போகலாம் என்று பேசிக்கொண்டு சுச்சியிடம் கேட்க, அவளும் மூன்று நாட்கள் விடுமுறை ஓய்வாக இருப்பதாக தெரிவித்ததால் எங்கள் பூனாப் பயணம் துவங்கியது.

வெள்ளி காலை ஐந்து ஐம்பதுக்கு விமானம், நான் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன். கிளம்பி சுமாவை வழியில் அழைத்துக் கொண்டு செக் இன் எல்லாம் முடித்து போக போர்டிங் துவங்கியது. விமானத்தில் ஏறியதும் மூன்று பேர் அமரக் கூடிய வரிசையில் ஜன்னலோர இருக்கையில் அமரப் போன ஒருவன், எனக்கு வேண்டுமானால் நான் அங்கே அமர்ந்து கொள்ளலாம் என்றதும் சரி என்று ஆசையாக அமர்ந்து கொண்டேன். மத்தியில் சுமா அமர அவன் aisle இருக்கைக்கு மாறினான். எனக்கு Wing View நன்றாக கிடைத்தது. விமானம் எழத்துவங்கியதும் விமானப் பயணம் எனக்கு உகந்தது அல்ல என்று அறிந்தேன். மேலே இருந்து தலை குப்புற விழப் போவதான எண்ணம் வரத் துவங்கியது. அந்த எண்ணம் வந்ததும் பதற்றம் தொற்றியது. நான் விழுந்தால் எங்கே விழுவேன் எப்படி சிதறுவேன் என்று என் உள்ளே ஒரு விவரணை துவங்கியதும் நடுக்கம் வந்தது. புனேவைப் பார்ப்போமா என்று ஐயம் கொண்டேன். நான் இந்த அச்சத்தை கவனிக்கத் துவங்கினேன். ஒரு பக்கம் இந்த மன ஓட்டம் என்னுள் புன்னகையை வரவழைத்தது. இன்னொரு பக்கம் இது அப்படி ஒன்று நடக்க முடியாதது அல்லவே எந்நேரமும் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் தானே இருக்கின்றன என்று இந்த எண்ணத்தை நியாயப் படுத்தவும் முயன்றேன். சாவை பற்றிய சிந்தனைகள் வரத் துவங்கின. உறக்கத்திலேயே மடிந்து போபவர்களை யோசித்து என்ன ஒரு கொடுப்பினை என்று எண்ணிக் கொண்டேன். எனக்கு எப்படி பட்ட மரணம் நிகழும் என்றும் ஒரு பக்கம் சிந்தனை ஓடியது. இப்படி எல்லாவற்றுக்கும் மத்தியில் விமானம் தரை இறங்கத் துவங்கியது. அந்தக் காட்சியையும் தவற விடவில்லை. மேலே இருந்து பார்க்கும்போது முதல் வித்யாசமாக புனாவின் மண்ணின் நிறம் கருத்தைக் கவர்ந்தது. Pune has Black Soil whereas Bangalore has Red Soil, Rich red.

சரியாக ஏழு மணிக்கு பூனா சென்றடைந்தோம். நான் இயல்பு நிலைக்கு வந்தேன். பள்ளியில் சுதந்திர தின நிகழ்வு இருப்பதால் ஏர்போர்ட் வர முடியாதென்றும் ஏர்போர்டில் இருந்து ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வரவும் சுச்சி கூறி இருந்தாள். அவள் சொன்ன படியே பள்ளிக்கு சென்றதும் வாசலில் காத்திருந்த அவள், இந்த சாமானோடு பள்ளியில் இருப்பது உங்களுக்கு சிரமம். நீங்கள் வீட்டுக்கு போய் இருங்கள் நான் ஒன்பது மணிக்கு வருகிறேன் என்றாள். நீங்கள் ஓய்வெடுப்பதானால் ஓய்வெடுங்கள், என்ன தோன்றுகிறதோ செய்யுங்கள் Just feel at home என்றுவிட்டு ஆட்டோ ஓட்டுனரிடம் வழி தெரிவித்தாள். நாங்கள் அடுக்ககத்தை கண்டுபிடித்து அவள் பகுதிக்கு வந்து வீட்டை திறந்தோம். வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்ததில் எனக்கு அவள் பால்கனி ரொம்பப் பிடித்தது. பால்கனியில் இருந்து தெரிந்த காட்சி மிகப் பிடித்தது. நிறைய மரங்களும், புல்புல் பறவைகளும் இருந்தன. பால்கனியில் இருந்து என்னை பிய்த்துக் கொண்டு வந்து சிறிது நேரம் உறங்கலாம் என்று படுத்தேன். முன்னிரவு சுத்தமாக உறக்கமில்லை. உறக்கத்தில் விழும் தருணத்தில் அழைப்பு மணி அடித்தது. எங்களுக்கு காலை உணவு வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுச்சி. சாப்பிட்டு முடித்ததும் மூன்று நாட்கள் என்ன என்ன செய்யலாம் என்று கேட்டாள். எது செய்கிறோமோ இல்லையோ எனக்கு நிச்சயமாக food trail வேண்டும். இங்கத்திய சிறப்பு உணவு வகைகளை எல்லாம் முயற்சித்து பார்க்கணும் என்றேன்.
 
A time of My Own – Part II

நான் உணவு வகைகளை ருசிக்கணும் என்றதும் நிச்சயமாக செய்யலாம் என்றாள் சுச்சி. பிறகு நாங்கள் மற்ற கதைகளைப் பேசத் துவங்கினோம்.தென்னிந்தியர்களுக்கும் இங்கத்தையவர்களுக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன என்றாள். இங்கே பெண்களுக்கு தங்கள் அம்மாக்கள் ஒரு ஆணை/கணவனைக் கவனித்துக் கொள்ளும் முறை குறித்து வெளிப்படையாக நிறைய விசயங்களை சொல்லித் தருகிறார்கள் என்றாள். எனக்கு 'the best way to reach a man's heart is through his stomach' இந்த வரி நினைவுக்கு வந்தது. ஆனால் உணவு மட்டும் அல்ல என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் அம்மாவும் மகளுமாய் எல்லா விசயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசிக் கொள்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருந்தது. இப்படியாக கதைகளைப் பேசிக் கொண்டே மதியம் சாப்பிட்டு நாலு மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம்.

சுச்சி khadki cantonment ல் குடி இருந்தாள். அங்கே இருந்து ஆட்டோ பிடித்து Baji road வந்தோம். ஒரு பழமையான கட்டிடம் அங்கே இருந்ததைக் கண்டேன். அது Vishrambaug Wada வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்றாள். அப்படியா ஆனால் ஏன் இப்படி பராமரிப்பார் அற்றுக் கிடக்கிறது என்றேன். அப்படித்தான் என்று உதடு பிதுக்கினாள். வாடாவைத்தாண்டி கடை வீதிக்குள் நுழைகையில் அங்கே ஒருவர் மீது இன்னொருவர் இடித்து தள்ளிக் கொண்டு தான் நடக்க வேண்டி இருந்தது. அது எனக்கு பெங்களூரின் சிவாஜி நகரை நினைவு படுத்தியது. அத்தனை நெருக்கடியிலும் மக்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் தெரியுமா என்று வினவினாள் சுச்சி. ம்ஹூம் என்றேன். வடாபாவ் crazy people என்றாள். நான் முறுவலித்தேன். வடாபாவ் புனாவின் முக்கியத் தீனியாக இருக்கிறது. நேரம் காலம் பார்க்காமல் தெரு முனைகளில் எந்நேரமும் விற்பனையாகிறது. வானிலை எங்கள் உலாவுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது.

தற்போது நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு எதிர்புறம் இருந்த சுவர் மிகவும் வித்யாசமாக இருந்தது. பூசாத செங்கற்கள், விட்டு விட்டு போடப்பட்ட கோடுகளைப் போல சுவரில் நேராக அழகாக அடுக்கப்பட்டு இருந்தன. ஊன்றிப் பார்த்ததில் வடிவியல் உருவங்களும் இருந்ததாகப் பட்டது. அங்கேயும் இங்கேயுமாய் சுற்றி விட்டு நடைபாதைக்கு மிக அருகே இருந்த ஒரு சின்ன டீக்கடைக்குள் நுழைந்தோம். மூன்று மேஜைகளும் அதைச் சுற்றி மேஜைக்கு இரண்டென நீளமான இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. அந்தச் சின்னக் கடையிலும் ஓரளவு கூட்டம் இருந்தது. ஒரு மேஜையை சுற்றிப் போடப்பட்டிருந்த இருக்கையில் மத்திம வயதைச் சார்ந்த இரு ஆண்கள் மட்டும் அமர்ந்திருக்க அதற்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் நாங்கள் சென்று அமர்ந்தோம். அமர்ந்தது தான் தாமதம் அவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டார்கள். அவர்கள் அப்படி செய்தது எனக்கு ஆச்சர்யத்தை தந்தது. அவர்களுக்கு எங்களின் அருகாமை அசௌகர்யத்தைக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

சற்று நேரத்தில் கடைக்காரர் ஏலக்காய் வாசனையோடு டீ கொண்டு வந்து வைத்தார். அதைக் குடித்து முடிக்கையில் இங்கே நல்ல பூனா காட்டன் புடவை கிடைக்கும் சுகி எதாவது கைத்தறிகடைக்கு செல்லலாம் வாருங்கள் என்றாள் சுச்சி. காட்டன் புடவைகள் என்றதும் சட்டென ஆமோதித்தேன். சுமார் தூரம் கைத்தறிக் கடையை தேடி அலைந்து அப்படி தென்பட்ட ஏதோ ஒரு கடைக்குள் புகுந்தோம். ஆனால் மனதுக்கு பிடித்த வகையில் அங்கே எதுவும் இல்லை எனவே வேறு இடம் செல்லலாம் எனத் திரும்பி நடந்தோம். ஒரு பூக்கடை அருகே நின்று எந்த வழியில் செல்லலாம் என்று சுச்சி யோசித்துக் கொண்டிருக்கையில் சுமா பூக்கடையைக் காட்டி இதோ இந்த மாலைகளைப் படம் எடுத்துக் கொள் என்றாள். அதன் பிறகு தான் மாலைகளைக் கவனித்தேன். சிவப்பு செவ்வந்தியும், சம்பங்கியும் சேர்த்து கட்டப்பட்ட அழகழகான மாலைகள் தொங்கவே அதை படம் பிடித்தேன். அதுவரை சம்பங்கியோடு கோழிக்கொண்டை பூக்களை இணைத்துக் கட்டித்தான் பார்த்திருக்கிறேன். செண்பகம், சம்பங்கி, சாமந்தி என்ற பல பூக்கள் இணைந்த வாசனை.
எந்த ஊருக்கு/இடத்திற்கு சென்றாலும் அந்த ஊரின் வாசனையை முதலில் நுகர வேண்டும் எனக்கு. எப்போதும் வாசனை என் நினைவுகளில் பிரதான இடத்தைப் பிடிக்கும். திரும்பவும் அதே போல வாசனையை வேறெங்கேனும் நுகர நேர்ந்தால் அது நினைவின் பக்கங்களைக் கிளறி முன்னினைவுகளை துல்லியமாகக் கொண்டு வரும்.

கடைசியாக ஒரு புடவை கடைக்குள் நுழைந்து சில புடவைகளை வாங்கிக் கொண்டோம். திரும்பும் வழியில் ஒரு கடையில் மிகப் பெரிய இரும்பு வாணலியில் பிஸ்தா, பாதாம், கேசர் எல்லாம் போட்டு மசாலா பால் காய்ச்சி கொண்டிருந்தார்கள். அதை வாங்கி நடந்து கொண்டே குடித்து வந்ததில் பின்னே ஒரு நாய் தொடர்ந்தது. அது எங்களோடு வெகு தூரம் வந்தது. அப்போது மணி இரவு ஒன்பதைத் தாண்டி இருந்தது. அந்த நேரத்தில் சுடச்சுட பால் அத்தனை இதமாய் உள்ளிறங்கியது. அது சுவைக்கு ரசமலாயின் ரசத்தைப் போல் இருந்தது. ஒரே ஒரு மாறுதல் ரசமலாய் சில்லிட்டு உண்போம் இது சூடாக. மூவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். நான் யோசித்துக் கொண்டு வந்தேன். முன் தினம் சுமாவும் நானும் அலுவலகத்தில் இருந்து கிளம்பவே இரவு எட்டு மணி ஆகியது. அதன் பிறகு வந்து பயணப் பையை தயார் செய்ததில் முன்னிரவும் சரியாக உறங்கவில்லை. பயணம் செய்து இங்கே வந்து இத்தனை நேரம் நடந்திருக்கிறோம் அதுவும் நெருக்கடியான கடை வீதிகளுக்குள் ஆனாலும் நான் சோர்வடையவில்லை. சுமாவைப் பார்த்தால் அவளும் குறையாத உற்சாகத்தோடு தான் இருந்தாள். பொதுவாக எனக்கு கடைவீதிகள் மிகுந்த அயற்சியைத் தரும். ஷாப்பிங் எப்போதும் என் விசயங்களில் ஒன்றல்ல. பெங்களூரில் இருந்தால் வெளியே எங்கும் செல்லாமல் விடுமுறையை உறங்கிக் கழிப்பேன். வீட்டை விட்டு செல்ல மனமிருக்காது. இங்கே எப்படி நான் எல்லாவற்றையும் ரசிக்கிறேன். புது இடம் தந்த உற்சாகமா? உடன் வரும் உகந்த துணையா?

சுச்சி இரவு உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள். ரோட்டி சாப்பிடலாம் என்றேன். சரி ஒரு நல்ல பார்சி உணவகத்திற்கு அழைத்துப் போகிறேன் என்றாள். ஓ! இங்கே பார்சிக்கள் இருக்கிறார்களா நான் முன்னே ஒரு முறை பார்சி இனத்தவர் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன் என்றேன். தொடர்ந்து அவர்களின் வித்யாசமான ஈமச் சடங்கைக் குறித்து நண்பர்கள் வட்டத்தில் பேசிக் கொண்டிருந்ததில் தான் அப்படி ஒரு இனமும் அவர்கள் இறந்தவர்களைப் புதைப்பதில்லை வல்லூறுகளுக்கு புசிக்கத் தருவார்கள் என்றும் அறிந்தேன் என்றேன். இறந்தவர் செல்வந்தரோ எவரோ எல்லாருக்கும் இதே முறைதான். இதைக் குறித்து பேசினோம். சுச்சி நிறைய விசய ஞானம் உடையவள். அவளிடம் எதைப் பற்றியும் பேசலாம். அவள் பார்சி இனத்தவர் ஈரானில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்றும் மேலும் சில தகவல்களும் கூறினாள். நாங்கள் கடையை அடைந்தோம். பத்து மணிக்கும் அந்தக் கடை கூட்டமாக இருக்கவே பெயர் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். அங்கே இருந்த காசாளரைப் பார்த்தேன் அவருக்கு இரானிய சாயல் இருந்ததைப் போல் பட்டது.வெளியே நின்றபோது, சுச்சியிடம் ஒரு விசயத்தில் நான் பூனாவில் ஏமாற்றம் அடைந்தேன் என்றேன். என்ன என்றாள். இங்கே ஆண்கள் வசீகரமாக இல்லை என்றேன். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான் என்றாள். ஆனால் காசாளர் அவர்களில் இருந்து தோற்றத்தில் வேறுபடுகிறார் என்றேன். உணவு முடித்து வந்து வீடடைந்தோம். நான் நாளை இரண்டு பார்சி bakery க்கு கூட்டிப் போகிறேன். நீங்கள் நிச்சயம் அங்கே இருக்கும் கேக்கை சுவைக்க வேண்டும் என்றாள். சரி என்றேன். அன்றைய நாள் முடிவுக்கு வந்தது. கொஞ்சம் சுற்றியதில் ஒரு விஷயம் உணர்ந்தேன் நகரமாகவே இருந்தாலும் பூனா இன்னும் பழைய வாசனையோடு இருந்தது. வளர்ச்சி இன்னும் முழுமையாக பூனாவை களவாடவில்லை. ஆனால் இன்னும் சில வருடங்கள் போனால் இது மிச்சம் இருக்காது என்று உணர்ந்தேன்.
 
A time of my own - Part III

காலை எழுந்து பல் துலக்கியதும் சுச்சி ஒரு பெரிய கப்பில் டீ கொடுத்தாள். அதை குடித்துவிட்டு கிளம்பி வெளியே சென்றோம். நாங்கள் முதலில் சென்ற இடம் East Street ல் இருந்த Kayani Bakery. அங்கே நெரிசலைப் பார்த்து நான் திணறிப் போனேன். நீ எந்த நேரம் வேண்டுமானாலும் இங்கே வந்து பார் இந்த கூட்டம் குறையவே குறையாது என்றாள். உனக்கு என்ன வேண்டும் என்று வினவினாள். தகவல் பலகையைப் பார்த்து நான் யோசித்த சிறிய இடைவெளியில் உள்ளே புகுந்தனர் பலர். இங்க எல்லாம் வந்தால் யோசிக்கவே கூடாது என்று Shrewsbury இங்கே பிரசித்தம் என்றும் இரண்டு கேக் வகைகளையும் சிபாரிசு செய்தாள். அவள் சொன்னது போல Shrewsbury cookies மற்றும் சில கேக் வகைகளையும் வாங்கிக் கொண்டேன். யாரேனும் எப்பொழுதேனும் Pune சென்றால் நிச்சயமாக செல்ல வேண்டிய இடம் இது. வீட்டிற்கு வந்து உண்டு பார்த்ததில் அத்தனை சுவை.

பிறகு அங்கிருந்து மகாத்மா காந்தி ரோடில் இருந்த ராயல் பேக்கரிக்கு சென்று அங்கேயும் சில cookies வாங்கிக் கொண்டு காலை உணவுக்கு அருகில் நல்ல உணவகத்தை தேடினோம். கோஹினூர் என்றொரு கடை இருந்தது அங்கே சாப்பிட்டதில்லை இருந்தாலும் முயற்சி செய்யலாம் வாருங்கள் என்று எங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள். நீ bun சாப்பிடுவாயா என்றாள். நான் ஒரு bread/butter/bun person என்றேன். ஆம்லெட் என்றாள். கண்டிப்பாக என்றேன். அப்படியானால் நீ bun omlette உண்டு பார் என்றாள். சரி என்றேன். அவள் தனக்கு வெறும் bun னும், சுமாவுக்கு butter bun னும் வாங்கிக் கொண்டாள். பிறகு ஆளுக்கு ஒரு டீ. எனக்கு சுமாவைப் பார்க்கத்தான் பரிதாபமாக இருந்தது. சுமாவிற்கு bread/butter/bun எதுவும் சுத்தமாக பிடிக்காது. அவள் டீயில் தொட்டு தொட்டு சிரமத்துடன் உண்டு முடித்தாள். நான் சுச்சியிடம் சொன்னேன் Eat Pray Love ல் ஜூலியா இத்தாலியில் இருக்கும்போது நல்ல நல்ல உணவுகளை மகிழ்ந்துண்பாள். ஒருமுறை pizza வை ரசித்துண்ணும்போது அவள் தோழியிடம் ஹ்ம்ம் I am having a relationship with my Pizza என்பாள். அப்படிதான் நான் இப்போது இதை உண்கிறேன். இதென்ன இத்தனை சுவை, I can starve for days to indulge in this என்றேன். அவள் அடக்க முடியாமல் சிரித்தாள். மெது bun உள்ளே மூன்றாய் மடித்து வைக்கப்பட்ட மெல்லிய ஆம்லெட். combination அத்தனை பொருத்தமாக இருந்தது. இதற்கு முன் நான் அதை சுவைத்ததே இல்லை. அதற்காகவே பூனாவின் மேல் மையல் கொண்டேன்.

பிறகு இன்னொரு பகுதியில் நுழைந்தோம். அங்கே தள்ளு வண்டியில் cold coffee நன்றாக இருக்குமென்று சொல்லி வாங்கிக் கொடுத்தாள். உண்மைதான் மிக ருசியாக இருந்தது. இதை ஒவ்வொரு முறை உறிஞ்சும்போதும் நாவின் எல்லாப் பகுதியிலும் படுமாறு உழுமி விழுங்க வேண்டும் என்றேன். அருகில் இன்னொரு தள்ளு வண்டியில் சாபுதானா (ஜவ்வரிசி) வடை கிடைத்தது. அவள் அதை மோசமாக இருக்கிறது என்றாள். சற்று அவ்வழியே நடக்கையில் அங்கே ஒரு jewish கோவில் இருக்கிறது காட்டுகிறேன் என்றாள். ஆனால் எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. சுற்றியும் மணல் மூட்டை அடுக்கி உள்ளே நின்று கொண்டு ஒரு காவலர் காவல் காத்தார். அதை யாரேனும் தாக்க முற்படலாம் என்பதால் அப்படி என்றாள். அந்த கோவில் சுற்றுப்புறம் மிக அழகாக இருந்தது. நான் காவலரிடம் ஜாடையில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்றேன். அவர் புன்னகைத்து இல்லை என மறுத்தார். சற்று தள்ளி சிறிதே சிறிது தெரிந்த கோபுரத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இந்த இடம் இப்போதே இவ்வளவு அழகாக இருக்கிறதே இரவில் எப்படி இருக்கும் என்று உரக்க யோசித்தேன்.

திரும்பும் வழியில் அந்த ஊரின் கொத்தமல்லி வாசம் என்னைக் கட்டிப் போட்டது. அங்கே காய்கறிக் கடை வழி செல்லும்போதும் சரி, உணவிலும் சரி கொத்தமல்லி மணந்தது.அதற்காகவே மதியம் வீட்டிற்கு திரும்பும்போது கொத்தமல்லி வாங்கி சென்று ரசம் செய்தேன். உண்டதும் அவர்களும் நான் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள். மாலை நாலு மணிக்கு எழுந்து பக்கத்தில் ஒரு சிறிய மலை இருப்பதாகவும் அதில் ஏறி வரலாம் என்றும் கூறினாள். நான்கு மணியானதும் நாம் வீட்டிலேயே இருக்கலாமே இதே பிடித்திருக்கிறது என்றேன். இருவரும் ஆமோதிக்கவும் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு பால்கனியில் அமர்ந்து கொண்டேன். நெடிதுயர்ந்து அடர்த்தியாக கிளை பரப்பியிருந்த பெருங்கொன்றை மரத்தில் புறாக்கள் மௌனித்து அமர்ந்திருந்தன. பல வினாடிகள் அவை அசையாமல் இருந்த இடத்திலேயே இருந்தன. நானும் அப்படியே அமர்ந்திருந்தேன்.

எனக்கு அந்த வீடு மிகப் பிடித்தது. நான் சுச்சியிடம் திரும்பி நமக்கு பிடித்த வகையில் வசிக்கும் இடத்தை அமைத்துக் கொள்வது, பிடித்த பொருட்களை வாங்கிக் கொள்வது என நம் உள் பரப்பில் யாருமே ஊடுருவ முடியாத இடத்தை நமக்கே நமக்கென அமைத்துக் கொள்வது எத்தனை நன்றாக இருக்கும் இல்லையா என்றேன். அவள் பதில் பேசாமல் முறுவலித்தாள். திடீரென யோசனை ஓட do you ever get lonely என்றேன். yes many times என்றாள். அவள் எதையும் வெளிப்படையாக சொல்வதில்லை. நானும் மேலே கிளறவில்லை. She is very subtle, impenetrable. இந்த வகையில் என்னை அவளோடு வெகுவாக தொடர்புபடுத்திக் கொண்டேன். பிறகு பேச்சு திசை மாறி நேரம் கழிந்தது. இங்கேயே உணவை வரவழைக்கலாம என்றாள். இல்லை கொஞ்சம் நடக்கலாம், எனக்கு chinese சாப்பிட வேண்டும். குறிப்பாக momos என்றேன். நல்லது அருகில் ஒரு நல்ல உணவகம் இருக்கிறது போகலாம் என்றாள். நாங்கள் கிளம்பி நடந்த வழியில் pune university அமைந்திருந்தது. அங்கே தான் சமயங்களில் அவள் நடை பயிற்சிக்கு வருவதாகக் கூறினாள். அந்தப் பசுமை என்னைக் கவர்ந்திழுத்தது. உள்ளே சற்று தூரம் நடந்தோம். அலுவலகத்தைக் குறித்து பேச்சு வருகையில், ரொம்ப துக்கமான காரியம் என்ன தெரியுமா என்றேன். என்ன என்றாள். பணத்திற்காக வேலை செய்வது என்றேன். அது சரி தான் நீயாவது பணத்திற்காக என்கிறாய் எனக்கு எதற்காக என்றே தெரியவில்லை என்றாள். நான் இருந்தாலும் நீ இஷ்டப்பட்டதை எந்த தயக்கமும் இன்றி மேற்கொள்கிறாயே அதுவே என்னை பொறுத்தவரையில் பெரிய சுதந்திரம் என்றேன். அவள் எதுவும் பேசவில்லை. சற்று அமைதிக்கு பிறகு நாம் திரும்பலாம் அந்த உணவகம் மூடிவிடும் என்றாள். நான் காலையில் திரும்ப இங்கே வருவோமா எனக்கு இந்த இடம் மிகப் பிடித்திருக்கிறது என்றேன். நிச்சயம் வரலாம் என்றாள்.

நாங்கள் சாலையைக் கடக்கையில் நடுவில் இருந்த தடுப்பு சுவர் கொஞ்சம் உடைந்திருந்தது. அதன் வழியாக அந்தப்புறம் செல்ல முயல்கையில் நீட்டிக் கொண்டிருந்த கம்பி என் தொடையில் குத்தியது. துருப் பிடித்திருந்ததாலும், இருளத் துவங்கி இருந்ததாலும் அந்தக் கம்பியை நான் கவனிக்கவில்லை. நல்ல வலி. வெளிச்சத்தில் பார்கையில் காயம் எதுவும் ஆனாற்போலில்லை. உணவகம் சென்று உடைக்கு மேலாக தொட்டுப் பார்கையில் லேசாகத் தடித்திருந்தது. லேசாக ரத்தம் கசிந்திருப்பதும் தெரிந்தது. சுச்சியிடம் I think I will get a TT done என்றேன். சரி பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது சாப்பிட்டு போகலாம் என்றாள். அந்த உணவகம் எனக்கு பிடித்துப் போக மேஜையில் இருந்த ஒற்றை மெழுகுவர்த்தி ஒன்றே போதுமானதாய் இருந்தது. சாப்பிட்டு மருத்துவமனைக்கு செல்ல emergency doctor பத்தரைக்கும் பிஸியாக இருந்தார். மருத்துவமனையின் சூழலும் எனக்கு அச்சத்தை தந்தது. சற்று பொறுத்து வேறொரு மருத்துவமனைக்கு போகலாம் என்று வெளியே வந்தோம். காயம் ஆழமா என்று தெரியவில்லை, ரத்தம் ஒன்றும் பெரிதாக வந்தாற்போல் இல்லை. கண்டிப்பாக ஊசி போட வேண்டுமா என்று கேட்டேன். போட்டால் நிம்மதியாக உணர்வாய் இல்லையா என்றாள். ஆமாம் என்றேன். அப்போ யோசிக்க வேண்டாம் வா என்று அழைத்துப் போனாள். சிறிது நேரம் நடந்த பிறகு காணக்கிடைத்த அந்த மருத்தவமனை கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மருத்துவரும் இருந்தார். அப்போதுதான் காயத்தைப் பார்த்தேன் சற்று நீளமாக ப்ளேட் கொண்டு வெட்டியதைப் போல் இருந்தது. கொஞ்சம் சாய்வாய் நேர்த்தியாக இழுத்த கோடு போல இருந்த காயம் விந்தையாக எனக்கு மிக அழகாகப் பட்டது.

ஊசியைப் போட்டுக் கொண்டு பதினொரு மணிக்கு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தோம். நாளெல்லாம் கவனித்தேன் சாலையில் நடக்கையில், இரவில், ஆட்டோ ஓட்டுனர் என எந்த ஆண்களாலும் எங்களுக்கு எந்தத் தொந்திரவும் இருக்கவில்லை. Experienced absolutely no non-sense. வீட்டிற்கு வந்து ஏதாவது படம் பார்க்கலாம் என லஞ்ச் பாக்ஸ்சை தேர்வு செய்தோம். சற்று நேரம் பார்த்ததிலேயே படம் மனதோடு ஒட்டிக் கொண்டது. உறக்கம் தள்ளவே ஒரு புள்ளியில் உறங்கிப் போனோம்.
 
A time of My Own - Climax

பூனாவில் கழிந்த மூன்றாவது நாளையும் நினைவிலிருந்து கரையும் முன்பே எழுதி முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன். மூன்றாவது நாள் அன்று காலை பூனா பல்கலைக்கழகம் உள்ளே சென்றோம். அது மிகப் பெரிய இடம் எனவே ஒரு சின்ன பகுதியை மட்டுமே பார்க்க முடிந்தது. நிறைய மரங்கள் மேலும் மழைக்காலம் ஆதலால் பச்சைக்கு பஞ்சமில்லை. கிடைத்த இடத்திலெல்லாம் செடிகள் முட்டி முளைத்திருந்தது. பூனா பல்கலைக்கழகம் எனக்கு என் பாரதியார் நாட்களை நினைவு படுத்தியது. அது மட்டுமல்ல அன்றைய நாள் கூட வெகுவாக என் கல்லூரி நினைவுகளை மேலெடுத்து வந்தது.

பாரதியாரில் முதுகலை பயின்றபோதுதான் நான் முதன் முதலாக சுதந்திரத்தின் தீஞ்சுவையை ருசித்தேன். கிடைத்த சுதந்திரத்தை முதலில் மிரள மிரள பார்த்தேன். கொஞ்சம் முன்னேறி மெது மெதுவாக தொட்டுப் பார்த்தேன். பிறகு முதல் தாவணியை அணிவதுபோல ஆசையாய் அணிந்து கொண்டேன். சுதந்திரம் தவிர அங்கே தான் என் தாயுமான தோழியை சந்தித்தேன். இரண்டுமே எனக்கு அங்கே கிடைத்ததால் அவ்விடம் எனக்கு மிக மிக விசேஷம்.

பெண்கள் விடுதிக்கு இரவு ஏழரை தான் கடைசி. அதற்குள் எல்லோரும் விடுதிக்குள் இருக்க வேண்டும். அதுவே எனக்கு தாராளமாய் இருந்தது. சோப்பு முதல்கொண்டு எது வாங்க வேண்டும் என்றாலும் நாங்கள் விடுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த கல்வீராம்பாளையம் செல்லவேண்டும். அங்கே 'Arun Novelties' என்று ஒரு சிறு கடை இருந்தது. அதுதான் எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. நானும் தோழியும் வெவ்வேறு துறை என்பதால் அன்றைக்கு நடந்த எல்லாக் கதைகளையும் பேசிக் கொண்டு தினமும் ஒரு நடை போய் வருவது வழக்கமாய் இருந்தது.

அந்த பாதை நிறைய ஆலமரங்களுடன் மிக நன்றாக இருக்கும்(இப்போது சாலையை விஸ்தரிக்க மருதமலை வழியில் இருந்த மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள் என்று கேள்வி) என்றாலும் இரவில் நடக்கையில் சற்று இடையூறுகளை சந்திக்க நேரிடும். சர்ரென்று வாகனத்தில் கடக்கும் ஆண்கள் வர்றியா என்று அழைத்து விட்டு போவார்கள். இதற்கு பயந்தே மற்ற தோழிகள் வெளியே வருவதை தவிர்த்திருந்தனர். ஆனால் எனக்கு இரவு நடை மிகுந்த விருப்பம். தோழிக்கும் ஆட்சேபனை இல்லாது போகவே நாங்கள் இருவர் மட்டும் செல்வோம். அப்போது ஆண்களின்/இளைஞர்களின் சுதந்திர உலகின் மீது அதீத ஆர்வமும் இருந்தது. ரோட்டோர தேநீர்க் கடைகளில் அப்படி என்னதான் இருக்கிறது இவர்கள் ஏன் இந்தக் கடையை இப்படி மொய்க்கிறார்கள் என்று எண்ணியதுண்டு. அவர்களின் இரவு வாழ்வு ஒரு சிலிர்ப்பைக் கொடுத்தது. ஊரடங்கிய இரவுகளில் அவர்கள் மட்டும் கட்டை சுவரின் மீது ஏறி அமர்ந்துகொண்டு ரகசியக் கதைகளைப் பேசிக் கொண்டும், சோடியம் விளக்கில் நனையும் விளையாட்டு மைதானங்களின் படிக்கட்டுகளில் அமர்ந்துகொண்டு உரக்க நகைத்துக் கொண்டும், தெரு முனைகளில் குழுமியும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்று அறிய ஆர்வம் ஏற்படும். அவர்களின் அந்த தனி உலகு எனக்கு ஒருவித ஏக்கத்தையும் கொடுக்கும். இவனுங்க மட்டும் எப்படி உலகின் ஒட்டுமொத்த சுதந்திரத்தையும் சுருட்டலாம் என்று ஒரு நாள் எனக்கு அந்த விபரீத ஆசை வந்தது. மருதமலை பக்கமாக நடந்து, சாலையோர தேநீர் கடையில் தேநீர் பருகவேண்டுமே என்றேன். அங்கே சென்றதும் முழுக்க முழுக்க ஆண்கள் கூட்டம். எங்களை ஒரு விதமாகப் பார்க்க தோழி வெகு இயல்பாக இருந்தாள். எனக்குத்தான் பரபரப்பாய் இருந்தது. தேநீர் கேட்டு குடித்துவிட்டு வரும் வழியில் என் வகுப்புத் தோழன் எதிர்பட்டான். இந்த நேரத்துல எங்கம்மா போயிட்டு வரீங்க என்றான். வரவழைத்துக் கொண்ட மிடுக்குடன் 'ஏன் ஆயா கடைல சாயாக் குடிச்சுட்டு வரோம் என்றேன்.

அன்றைக்கு நடுநிசியில் தெறிக்கும் தலைவலி துவங்கி உறக்கம் தொலைந்தது. யாருக்கும் தெரியாமல் இரண்டு முறை வாந்தி எடுத்தேன். பத்து பன்னிரண்டு முறை என்று எடுக்கவும் அறைத் தோழி எழுந்து கொண்டாள். நீர் கொடுக்க கொடுக்க நான் அடுத்த நொடி வெளியே எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் பயந்து இன்னொரு அறையில் இருந்த என் தோழியை எழுப்பி வந்தாள். எச்சிலை விழுங்கினாலும் வெளியே வரவே பயந்து போய் மருத்துவமனைக்கு அழைத்துப் போக தயாரானார்கள். ஆனால் எப்படி, யார் என்னை அழைத்து போவது? அந்த நேரத்தில் ஆண்கள் விடுதிக்கு அழைத்து என் நண்பனிடம் விஷயம் தெரிவிக்கவும் அவன் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு வந்து என்னை மருத்துவமனையில் அனுமதித்தான். அன்றிலிருந்து ஆண்களை எதிரியாய்ப் பார்பதை நிறுத்திக் கொண்டேன்.

சரி நாம் இனி பூனாவுக்கு வருவோம். சுச்சியின் ஆதர்ச கடைகளில் ஒன்று ஆண்களின் கூடமாய் திகழ்ந்தது. அங்கே தான் தனியாக போக முடியாதென்றும் நாங்கள் வந்தால் போய்க் கொள்ளாலாம் என்று ஆசையாக காத்திருந்ததாக சொன்னாள். நாங்கள் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளிப்பட்டு ஆட்டோ பிடித்து அந்தக் கடைக்கு சென்றோம். முழுக்க முழுக்க ஆண்கள் மேலும் ஒரே புகை மண்டலம். ஒரே ஒரு பெண் நான்கு ஆண்களோடு வந்திருந்தாள். நாங்கள் மூவர் மட்டும் தான் பெண்கள். ஆனால் எவரும் எங்களை சட்டை செய்யவில்லை. புகைப்பதற்காக மட்டுமே வந்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன். சுச்சி மோன நிலைக்கு சென்றாள். நான் என் அருகில் இருந்தவரை புகைப் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். மிக பழைய கடை. என்னவோ எனக்கும் அந்த இடம் மிகப் பிடித்திருந்தது. அங்கே உணவருந்திவிட்டு வீடு வந்தோம்.

நான் lunch box படம் மீதத்தை பார்க்க வேண்டும் என்றேன். சுச்சி உள்ளறையில் மடிக் கணினியில் எனக்கு படத்தை போட்டு விட்டு சென்றாள். பார்த்துவிட்டு சற்று நேரம் அதிலேயே ஆழ்ந்திருந்தேன். உள்ளே வந்த சுச்சி பிடித்திருந்ததா என்றாள். ரொம்ப என்றேன். தொடர்ந்து இதில் best part என்ன தெரியுமா நான் தனியாகப் பார்த்ததுதான் என்றேன். எனக்குத் தெரியும் என்றாள்.

என் விமானத்திற்கு நேரம் ஆகவே கிளம்பி விமான நிலையம் வந்தோம்.சுமா பள்ளியில் உதவ அங்கே ஒரு வாரம் இருப்பதாக ஏற்பாடு எனவே நான் தனியாக திரும்பினேன். நான் கேட்காமலேயே திரும்பவும் ஜன்னலோரே இருக்கை. அதே பயங்கர நினைவுகள். இருந்தாலும் இறங்கும் தருவாயில் இரவு விளக்கின் அழகை ரசித்தேன். பெங்களூர் சேர்ந்தேன். இந்தப் பயணம் முடிவுக்கு வந்தது.

---------------------------------------------------------------------------------------------------------


பயணங்கள் என்னை இயக்குகின்றன. உறவுகளைப் போலவே அவை எனக்கு என்னை கண்டுபிடித்து தருகின்றன.

Sunday, May 4, 2014

பார்த்ததும் கேட்டதும்

முன்னிரவு கிளம்பிய நானும் தோழியும் ஜென் தியான மையத்தை சென்று சேர்ந்தபோது மதிய உணவு வேளை ஆகி இருந்தது. அத்தனை அழகான இடத்தை அதற்கு முன்பு நான் எங்கும் பார்த்ததில்லை. அங்கே செல்வது இது இரண்டாவது முறை என்றாலும் கூட அந்த அழகை ஏற்கனவே பார்த்ததுதான் என்று ஒருபோதும் ஒதுக்க முடியாது. அது இருப்பது இயற்கை பூரணிக்கும் மலைப் பிரதேசத்தில் எனவே மனம் பிசிறாத அமைதியை வேண்டும்போதெல்லாம் அந்த தியான மையத்திற்கு செல்லலாம். மேலும் அந்த மையம் தன் எளிமையான அமைப்பாலும், தன்னை சூழ்ந்துள்ள இயற்கையாலும், தான் தழுவிக் கொண்ட மோனத்தாலும், ஒருவரை எளிதில் தன் வசப்படுத்தி கொள்ளும் தன்மை உடையது. மையத்தை சுற்றி இருக்கும் தோட்டத்தில் பன்னீர் ரோஜாக்களும், வெள்ளைக் கொடி ரோஜாக்களும், இன்னும் இதர வண்ணப் பூக்களும் கொத்து கொத்தாக மலர்ந்தலங்கரிக்க அங்கே செல்லும்போதெல்லாம் மனம் பொங்கிக் கசியும். இரண்டடுக்கு கட்டிடம் கொண்ட அந்த மையத்தின் அமைப்பு செவ்வக வடிவில் வெகு எளிமையாக இருக்கும். நுழைவாயிலில் தியானிக்கும் புத்தரின் சிலை நம்மை வரவேற்கும். பிறகு உள்ளே அடி எடுத்து வைத்ததும் நான்கு பக்கங்களும் நீண்டோடும் வெராண்டா. மையத்தின் அமைப்பை தொட்டிக்கட்டு வீட்டின் அமைப்போடு ஒப்பிடலாம். ஏனெனில் சுற்றிலும் அறைகள் இருக்க மத்தியில் மிக அழகாக பராமரிக்கப் படும் புல்வெளியும், திறந்திருக்கும் வான்வெளியும் உண்டு. வாய்க்கால் போன்று தோட்டத்தின் ஊடே இருக்கும் நீர் வழியில் தங்க மீன்கள் நீந்தும்.

உட்புற கட்டிடத்தை தழுவி போகன்வில்லாக்கள் மலர்ந்திருக்கும். ஒவ்வொரு அறைக்கு முன்னும் ஒரு மூங்கில் இருக்கை இருக்கும். அதில் அமர்ந்தபடி ஓரிருவர் ஏதாவது புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பர். பெரும்பாலும் மாதக் கணக்கில் வந்து தங்கி தியானிக்கும் வெளிநாட்டவரே அங்கு அதிகம். அதிலும் முக்கியமாக ஐரோப்பர்கள். அங்கே வருபவர்கள் அனைவருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப்படும். எனவே எந்த இடையூறுகளும் அற்ற பூரண தனிமை கிடைக்கும். பெரும்பாலும் தனியாக இருக்கும் எல்லோரும் ஒன்று கூடுவது இரண்டிடங்களில். ஒன்று கீழ் தளத்தில் இருக்கும் உணவுக் கூடம். இரண்டு மாடியில் இருக்கும் தியானக் கூடம். அது தவிர கீழ் தளத்தில் ஒரு நூலகமும் உண்டு. அங்கே எல்லோரும் வருவதில்லை. முதல் தளத்தைத் தாண்டி மொட்டை மாடிக்கு சென்றால் மேகப் பொதிகள் மலை முகட்டில் உரசிப் போவதைப் பார்க்கலாம்.

தோழியும் நானும் உள்ளே சென்று எங்கள் அறைக்கான சாவியை வாங்கிக் கொண்டு உணவுக் கூடத்துக்கு முன்னே இருந்த அறிவிப்பு பலகையில் இருந்து தியான நேரம், உணவு நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டு தோழி அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கும் நான் எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு சென்றோம். பிறகு மதிய உணவு முடித்து கொண்டு மாலை தியானத்திற்கு நேரம் இருந்ததால் சற்று நேரம் இளைப்பாறலாம் என்று திரும்பவும் அவரவர் அறைக்கு வந்து உறங்கினோம். உறக்கத்தின் இடையில் யாரோ அறைக்கதவை தட்ட திறந்து பார்த்தால் முதல் முறை வந்தபோது நூலகத்தில் தற்காலிக நூலகராக இருந்த அவன் நின்றிருந்தான். ஹாய், ஆர் யூ கைஸ் ஸ்கிப்பிங்க் யுவர் டீ என்றான். உறக்கத்தின் இடையில் எழுந்ததாலும் நாம் தேநீரைப் பருகாதது குறித்து இவனுக்கு ஏன் அக்கறை என்று குழம்பியதாலும் ஸாரீ வாட் என்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். சரி விசயத்திற்கு வருகிறேன் என்பது போல ஓகே யூ ஆர் நாட் ஃபர்ஸ்ட் டைமர்ஸ் ரைட் என்று வினவினான். நோ என்றேன். சரி தியான கூடத்திற்கு வந்து உங்கள் இடத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள் என்றான். ஒரு ஐந்து நிமிடத்தில் வருகிறோம் என்று சொல்லி தியானக் கூடத்தின் பொறுப்பாளி இன்னொருவர் தானே இவன் எதற்கு நம்மை அழைக்கிறான் என்று யோசித்தபடி தோழியை தேடி சென்றேன். இருவரும் முகம் கழுவி தயாராகி மேலே சென்றபோது அவன் எங்கள் இடத்தை தேர்வுசெய்யக் கோரினான். அவன் சொன்ன படி செய்ததும் தியான நேரம் ஆகி இருந்தது. எல்லோரும் வரத் துவங்கினர். இந்த முறை தியான நேர அறிவிப்பு, தியான கூட ஒருங்கிணைப்பு எல்லாம் அவனே செய்தான். மாலை தியான நேரம் முடிந்து இரவு உணவும் முடிந்த பிறகு திரும்பவும் ஒரு அமர்வு இருந்தது. அது முடிந்து நாங்கள் அவரவர் அறைக்குத் திரும்பினோம்.

அடுத்த நாள் காலை நேர தியானம் முடித்து உணவருந்திய பிறகு ஒரு மணி நேர சேவை நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. சேவை நேரப் பங்களிப்பாக எனக்கும் தோழிக்கும் காய்கறி வெட்டும் வேலை கொடுக்கப் பட்டிருந்தது. எங்களோடு கார்‌மென் என்ற ஜர்மானியப் பெண்மணியும் இருந்தார். அவரோடு பேசியபோது நீண்ட வருடங்கள் அவர் பெர்லினில் டாக்ஸி ஓட்டுனராக இருந்ததாக அறிந்தேன். பிறகு தன் இளமைக் காலத்தில் பெரும்பாலும் தனியாகவும் சமயங்களில் தம் தங்கையோடும் அவர் சென்ற மோட்டார் ஸைக்கிள் பயணங்களைக் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். தாம் சென்ற இடங்களிலேயே இதுவரை தனக்குப் பிடித்த இடமாக க்ரீஸ் இருப்பதாக சொன்னார். எனக்கும் க்ரீஸ் செல்லவேண்டும் என்று நெடு நாள் ஆசை இருப்பதாக சொன்னேன். தொடர்ந்து நானும் தோழியும் கோவையிலிருந்து கொடநாடு வரை ஆக்டிவாவில் சென்றதை நினைவு கூர்ந்தவளாக நீங்கள் தனியாக மோட்டார் ஸைக்கிளில் செல்லும்போது அங்கே அதை எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டேன். அவருக்கு என் கேள்வி சரியாக புரியாததால் இங்கே நாங்கள் இருவரும் தனியாக சென்றபோது நிறுத்தி வழி கேட்டபோது அறிவுரைகளும், காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்தாற்போன்ற முக பாவங்களையும் எதிர்கொண்டோம் என்றேன். ஹா… என்று உடனே நறுக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு மேஜைக்கு இரண்டடி பின்னே சென்று விரிந்த கண்களோடும், உதடுகளோடும் சிலை போல் ஒரு கணம் நின்றார். புன்னகைத்துக் கொண்டே எல்லா இடத்திலும் அப்படிதான் போல என்றேன்.

அவருடன் பேச பேச எனக்கு மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டது. நீங்கள் சென்ற இடங்களில் சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்ததா என்றேன். அவர் தான் தென் ஆப்ரிக்காவின் ஒரு கிராமத்திற்கு சென்றபோது அங்கே நடக்க முடியாத ஒரு முதியவர் இருந்தார் என்றும் அவரின் மகன் தினமும் காலையில் அவரை ஏந்திக் கொண்டு வெளியில் இருந்த ஒரு மரத்தடியில் அவருக்கு படுக்கை அமைத்து அதில் அமர வைப்பார் என்றும் அந்த வகையில் அந்த முதியவர் நாளெல்லாம் காட்சிகளை பார்த்துக் கொண்டு கழிப்பார் என்றும் மாலையானதும் பள்ளி சென்ற பேரக் குழந்தைகள் திரும்ப வந்து அன்றைய கதைகளை எல்லாம் அவருக்கு சொல்வார் என்றும் சொன்னார். அந்த மக்களின் வயதானவர்களை பேணும் வழக்கம் என்னுள் மிகுந்த ஆச்சரியத்தை எழுப்பியது என்றார். எனக்கும் உண்மையிலேயே மிகுந்த ஆச்சர்யம் எழுந்தது. தற்கால தொழில்நுட்பத்துள் தொலைந்து போகாத குழந்தைகளும் நிறையப் பெறுகின்றன என்று ஒரு எண்ணம் உள்ளே ஓடியது. வயதானவர் என்ற பேச்சு வந்தபோது ஜர்மனியில் தனித்திருக்கும் வயதானவர்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் அரசே மூன்று வேளை உணவு வழங்குவதாக சொன்னார். வயதானவரின் வீடுகளுக்கு வந்து மூன்று வேளையும் உணவு விநியோகிக்கிறார்கள் என்றும் சொன்னார்.

சற்று நேர மௌனத்திற்கு பிறகு தன் வீட்டிற்கு பக்கத்தில் வயதான தம்பதியர் மிகவும் அன்னியோன்யமாக இருந்தார்கள் என்றும் மனைவி கணவனுக்கு என்று எல்லாக் காரியங்களையும் பார்த்துப் பார்த்து செய்தார் பிறகு திடீரென ஒரு நாள் இறந்து போனார் என்றும் சொன்னார். கணவருக்கு நேர நேரத்திற்கு உணவு வந்தாலும் அவர் எதையும் தொடவில்லை. நாளாக நாளாக அவர் உடைகள் உடலில் தொங்கத் துவங்கின. நிறையக் குடித்தார். நாங்கள் பார்க்க பார்க்க அவர் தேய்ந்துகொண்டே வந்தார். இவர் இப்படித் தேய்ந்தே ஒரு நாள் கரைந்து போவார் என்று நான் நினைத்தேன். அவர் இறந்து நாற்றம் வரத் துவங்கியதும் தான் அவர் இறந்ததை அறிந்தோம் என்றார். அவரை வேரு யாரும் வந்து பார்த்ததாக அறியவில்லை என்றார். வயதானவர்கள் நிராகரிக்கப் படுகின்றனர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அன்யோன்யம் என்பது கணவன் மனைவியை இந்த அளவு சார்ந்திருப்பதிலா இருக்கிறது என்றேன். மிகவும் நேசித்தவர்களை இழப்பது பெரும் துயரம் அதைக் கடப்பதும் பெரும்பாடு என்றாலும் அன்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று அன்றாட காரியங்களில் அடி முதல் முடி வரை தானின்றி இயங்காமல் செய்துவிடுவிடல் நேசிப்பவருக்கு இழைக்கும் அநியாயம் என்றும் வழங்கும் கடுமையான தண்டனை என்றும் கருதுகிறேன் என்றேன்.

தொடர்ந்து ஜர்மனியில் மத உணர்வு எல்லாம் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டேன். எல்லாம் கலவையாக இருக்கிறது என்றவர் இளைஞர்கள் யாரும் ஆலயத்திற்கு வருவதில்லை என்றும் வயதானவர்களைக் கொண்டு இன்னும் ஆலயங்கள் இயங்குகின்றன என்றும் சொன்னார். மதம் கொள்கைகளைப் பொருத்தவரை நின்ற இடத்திலேயே இன்னும் தீவிரமாக நின்று கொண்டிருக்கின்றன என்றார். என் புரியாத பார்வையைப் புரிந்தவர் போல அதாவது எங்கள் போப் ஏழை நாடுகளுக்கு செல்கிறார், எய்ட்ஸ் கொடுமையையும் அறிவார் என்றாலும் இன்னும் ஆணுறையைத் தவிருங்கள் என்றுதான் உபதேசிக்கிறார் என்றார். ஆணுறையை தவிர்த்துவிட்டு நோயைத் தடுக்க மக்களே உறவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்றா சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்கள் என்றார். ஒருவேளை மறைமுகமாக அவர் அதைத்தான் வலியுறுத்துகிறாரோ என்று சிந்தித்தவளாக அஃப் கோர்ஸ் நோ என்றேன் அழுத்தமாக.

-தொடரும்


Sunday, March 2, 2014

5. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம், ஜெயம் கொண்டான்



நான் கோவில் வளாகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றதற்கு ஸ்ரீ உடனே ஆமோதித்தாள். சுமா நிச்சயமாக வேண்டாம் என்றாள். ஒரு வேளை கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் இரண்டையும் பார்க்க முடியாவிட்டால் கும்பகோணத்தில் தங்கலாம் என்று பயணத்திற்க்கு முன்பு நான் சொன்னதற்கு ஸ்ரீ கும்பகோணம் மக்கள் கூட்டம் அதிகமாக மிக நெருக்கடியாக இருக்கும் அங்கே தங்க நன்றாக இராது என்றிருந்தாள். சரி அப்படியானால் எவ்வளவு நேரமானாலும் இரண்டையும் பார்த்துவிட்டு கடைசி பேருந்தை பிடித்து இரவை பயணத்தில் கழிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இருட்டில் ஒன்றையும் பார்க்க முடியாது என்பதையும் கோவில்கள் பூட்டப்படும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள மறந்து விட்டிருந்தோம். இப்போது எங்கே தங்குவது என்று யோசனையாக இருந்தது. இங்கேயே தங்கலாமா என்று பலமாக யோசித்தோம். சரி இந்த ஊரிலேயே தங்க முடிந்தால் காலையில் சீக்கிரம் எழுந்து இந்தக் கோவிலை பார்த்துவிட்டு கும்பகோணம் செல்லலாம், கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் மிக அருகில் இருக்கிறது திரும்பவும் இங்கே வருவதானால் பயணத்தில் நேரம் கழியும் எனவே, இந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தோம். நாம் கோவில் உள் நுழையும்போது கோவில் பூஜை நேரங்கள் குறித்து ஒரு பலகையில் குறிப்பிட்டிருந்தார்கள். நான் போய் பார்த்து வருகிறேன் என்றேன். அங்கே யாரேனும் இருந்தால் எங்காவது தங்க இடம் கிடைக்குமான்னு கேட்டுப் பார், நமக்கொன்றும் ஹைஃபை இடம் தேவை இல்லை, ஸிம்ப்பிலா இங்கேயே  யாருடைய வீடானாலும் கூட சரிதான் என்றாள் ஸ்ரீ.

 
உள்ளே சென்றதும் வாயிலுக்கு அருகில் இருந்த பலகையில் கோவில் திறக்கும் நேரம் குறித்து படித்தேன். அதை தொட்டாற்போல இடது புறம் இரு பெண்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களின் சகஜ பாவத்தை வைத்து இவர்கள் இந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து தினமும் இங்கே பூ, பூஜை சாமான் விற்பவர்கள் என யூகித்தேன். ஏங்க இங்கே தங்க எதாச்சும் இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பார்த்ததும் என்ன தோன்றிற்றோ நீங்க தங்கற மாதிரி இங்கே எதுவும் இல்லை. ஜெயம் கொண்டான் போகனும் இல்லையானால் கும்பகோணத்தில் தான் நல்ல அறை கிடைக்கும் என்றார்கள். கும்பகோணம் போக எவ்வளவு நேரம் ஆகும் என்றதற்கு இடையில் ஏதோ பாலம் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் அதனால் பேருந்துகள் சுற்றி போவதாகவும் காரானால் நேராகவே செல்ல முடியும் என்றும் சொன்னார்கள். பஸ்ஸில் ஒன்றரை மணி நேரம் ஆகும், காரில் தானே வந்திருக்கிறீர்கள் அப்படியானால் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றார். நான் கார் இல்லை பஸ் தான் என்றேன் அப்போ ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார்கள். கொஞ்சம் போல தயங்கி குடும்பம் எல்லாம் கூட இருக்கு தானே என்று அவர்கள் வினவ ஆமாம் வெளியில் இருக்காங்க என்று விடைபெற்றேன்.

திரும்பி வந்து சேகரித்த விசயங்களை இவர்களிடம் தெரிவிக்க, ஜெயம் கொண்டானில் அறை கிடைக்குமா என நாம் பைகளை வைத்துவிட்டு வந்த வெளிக்கடைக்காரரிடம் சென்று கேட்கலாம் என்றாள் ஸ்ரீ. அங்கே சென்று அவரிடம் கேட்க கூட்டு ரோட்டிலேயே நல்ல லாட்ஜ் ஒன்றிருப்பதாக சொன்னார். ஜெயம் கொண்டான் சென்றால் அங்கே நிறைய அறைகள் இருப்பதாகவும், ஆனாலும் கூட்டு ரோட்டில் இருக்கும் அளவுக்கு அத்தனை சுத்தமாக இருக்காது மேலும் ரேட்டும் அதிகமாக இருக்கும் என்றும் சொன்னார். இதானால் இப்போதான் கட்டி இருக்கிறார்கள் அறைகள் நன்றாக இருக்கும் என்று சேர்த்து சொன்னார். எங்களுக்கு ஜெயம் கொண்டானா கூட்டு ரோடா எங்கே செல்லலாம் என்று யோசனை எழுந்தது. ஒரு முடிவுக்கு வர முடியாது அங்கே டீ கிடைத்ததால் மூவரும் முதலில் டீ குடிக்கலாம் என்று முடிவு செய்தோம். கடையை ஒட்டினாற்போல் இருந்த கூரைக்கடியில் ஒரு மேசையும் சில ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. 3 டீ சொல்லி விட்டு அங்கே சென்று அமர்ந்தோம். 

அவரது கடையில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன பொம்மைகள், வித விதமான சாவிக் கொத்துகள், கழுத்தில் கட்டும் புனிதக் கயிறுகள், கங்கை கொண்ட சோழபுர சிறப்பை சொல்லும் புத்தகங்கள், இன்னும் நிறைய நிறைய நிறைய பொருட்கள் இருந்தன. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த படியே நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடையில் கடைக்காரர் போக இன்னும் சில ஆண்கள் குழுமியிருந்தார்கள். கடையில் இருந்த பொருட்களை நான் பார்த்தது போல அவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் எங்களைப் பற்றிய எத்தனை கற்பனைகள் ஓடி இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை. கடையில் வாங்கி இருந்த புத்தகத்தை ஸ்ரீ புரட்டிக் கொண்டிருந்தாள். சுமா கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நான் கடைக்குள் திரும்பவும் சென்று அங்கே மாட்டி இருந்த கயிறுகளை ஆராய்ந்தேன். கருப்பு கயிறில் தெய்வப் படங்கள் கோர்க்கப் பட்டிருந்தன. அதில் ஒரு கயிறில் 'சே' வின் படமும் இருந்ததைப் பார்த்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுதுதான் 'motor cycle diaries' பார்த்திருந்தேன். தவிரவும்

‘சே’வை எனக்கு ஏனோ பிடிக்கும். அதுவும் ஒருபக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரின் கருப்பு வெள்ளைப் படம் என்னவோ என்னை வெகுவாக ஈர்த்தது. உடனே அதை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டேன். அங்கே 'சே' படம் போட்ட கயிறுகள் நிறைய இருந்ததை அறிந்தும் நிச்சயம் ஸ்ரீயும் இதை வேண்டுவாள் என நினைத்தும் அவளிடம் சென்று ஏய் இங்கே பாரு டா என்று வேண்டுமென்றே அவளை உசுப்பினேன். எனக்கும் வேணும் எனக்கும் வேணும் என்றாள். அவளுக்கும் ஒன்றை வாங்கிக் கொடுக்க அவளும் அதை அணிந்து கொண்டாள். அணிந்ததும் இன்னதென தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. ஹ்ம்ம் அதை எப்படி விளக்குவது ஒரு வித உல்லாச மனநிலை, ஒரு விதத் திமிர், தான்தோன்றித்தனம். அந்த நேர சிறு மகிழ்ச்சியை எதுவும் குலைத்து விடமுடியாததைப் போன்ற ஒரு நிச்சயம் மிளிரத் தலை நிமிர்த்துத் திரிந்தோம். சுமா எங்களை ஒருமாதிரியாகப் பார்த்து யாரிந்த 'சே' என்றாள். He was a revolutionary, a good hearted human-being as far as I know என்றேன். நீ Motor Cycle Diaries பார்க்க வேண்டும் நான் உனக்கு பதிவு செய்து தருகிறேன் என்றேன்சரி நாம் திரும்பியதும் கொடு என்றாள் 

டீ வந்ததும் குடித்துக் கொண்டே மீண்டும் எங்கே தங்குவது என்ற சம்பாஷனை வந்தது. பேசாமல் கூட்டு ரோட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் ஸ்ரீ இப்போது மணி ஏழு தான் இப்போதே சென்று நான்கு சுவருக்குள் அடைய முடியாது சும்மாவேனும் ஜெயம் கொண்டான் வரைக்கும் சென்று வரலாம் என்றாள். எனக்கும் இரவு நேரத்து ஜெயம் கொண்டானை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சுமா வேறு வழியின்றி சரி என்றாள். உடனே ஸ்ரீ எஏய்ய் நாம் ஏன் ஒரு படத்துக்கு செல்லக் கூடாது என்று கேட்டாள். உடனே கடைக்காரரிடம் இங்கே நல்ல தியேட்டர் இருக்கா என்று கேட்டாள். இருக்கு ஆனா காலிப் பயலுக தான் இந்நேரம் படத்துக்கு போவாங்க நீங்க போறாதான கும்பகோணம் போங்க என்றார். கும்பகோணத்திற்க்கு போக தன் நண்பர் ஒருவரிடம் taxi இருப்பதாகவும் எண்ணூறு ரூபாய் கொடுத்தால் போய் பார்த்துவிட்டு திரும்பி வரலாம் என்றார். எண்ணூறா என்று பின் வாங்கினோம். சரி கூட்டு ரோடு சென்று முகம் கழுவி தயாராகி ஜெயம் கொண்டான் சென்று உணவருந்தி வரலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்தோம். திரும்பவும் ஸ்ரீ ஏய் படத்துக்கு போலாமா என்றாள். நான் தயக்கத்துடன் சுமாவை பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போலவே அவள் நீங்கள் இருவரும் தனியாக செல்லும்போது இதை எல்லாம் செய்யுங்கள் இப்போது வேண்டாம் என்றாள். நான் ஒன்றும் பேசாமல் மௌனம் ஆனேன்

கூட்டு ரோடு வந்து அந்த லாட்ஜை எளிதாக கண்டு பிடித்து அங்கே விசாரிக்க சென்றால் எங்கே இருந்து வரீங்க என்ற படியே எங்கள் பின்னால் ஒருவர் வந்தார். இவர் தான் பராமரிப்பவர் போல என்று நினைத்து கோயமுத்தூர் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் என்மேல் தடுமாறி விழ வந்தார். சுதாரித்து உள்ளே தள்ளி நின்றேன். எங்களைப் பார்த்து லாட்ஜ் ஒட்டி இருந்த மருந்துக் கடையில் இருந்து வந்தவர் தாத்தா இப்போதான் வெளியே போயிருக்கார் இருங்க வந்துடுவார் இல்லேன்னா அந்த நம்பர்க்கு கூப்டு பாருங்க என்று லாட்ஜ் போர்ட்டில் இருந்த நம்பரைக் காட்டினார். ஸ்ரீ அந்த நம்பரை அழைத்து அறை வேண்டும் எனவும் லாட்ஜ் வாசலில் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னாள். உரிமையாளர் லாட்ஜில் தங்கி பராமரிப்பவரிடம் தகவலை சொல்லி அனுப்பி வைப்பதாக கூறி வைத்தார். அந்த தாத்தாவும் இரு நிமிடங்களுக்குள் வந்தார்.

வந்தவர் நேராக மருந்துக் கடைக்காரரிடம் செல்ல இருவரும் ஏதோ பேசியபடி குரலை சற்று உயர்த்தி நீங்க யாரு எதுக்கு உங்களுக்கு அறை வேண்டும், நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க படிக்கிறீங்களா என்றார். நான் ஆமாம் போலீஸ் ட்ரைனிங் எடுத்துட்டிருக்கோம் என்று துவங்க, கோவில் சுத்திப் பார்க்க வந்தோம் நேரம் ஆயிட்டதால இங்கயே தங்கிட்டு காலைல கோவிலைப் பார்த்துட்டு போகலாம் என்று தான் அறை கேட்கிறோம் என்று ஸ்ரீ முடித்தாள். சுமா மௌனமாக சிரித்தபடி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். உடனே அவர் இறுக்கம் இளக அப்டியா சரி சரி வாங்க என்று எங்களை மேலே அழைத்து சென்றார். 

வாடகை பற்றி கேட்க அவர் கொஞ்சம் அதிகமாக சொல்லவும் காலையில் சீக்கிரம் கிளம்பிவிடுவோம் அப்படியும் இவ்வளவு வாடகையா என்று ஸ்ரீ கேட்டாள். அவர் உரிமையாளரிடம் பேச சொல்லவும் லாட்ஜ் உரிமையாளரிடம் ஸ்ரீ போலீஸ் என்றே சொல்ல அவரும் எங்களுக்கு கம்மி வாடகையில் அறைகளைத் தருவதாக சொன்னார். பிறகு தாத்தா உற்சாகம் தொற்ற எங்களுக்கு அறைகளைக் காட்டினார். இங்க வந்தாச்சில்ல இனிமே உங்க பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றார். கலக்கறீங்க தாத்தா என்றேன்.
பக்கத்தில் ஏதோ ஒரு ஊர்ப் பேரை சொல்லி அந்த ஊர் DSP எனக்கு சொந்தம் என்றார். அப்படியா சந்தோசம் என்றேன்.
எங்களுக்கு காட்டிய அறையில் சுடு நீர் வசதி இல்லாததால் காலையில் சுடு நீர் கிடைக்குமா என்றேன். உங்களுக்கு வேற அறை காட்டறேன் வாங்க என்று எங்களை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு வந்தார். அந்த லாட்ஜ் அறைகள் எல்லாம் காலியாகவே இருந்ததாக நினைத்தேன். இதோ இது ஐய்யர்களுக்கு மட்டும் கொடுக்கறது உங்களுக்கு கொடுக்கறேன் என்றார். ஸ்ரீ சுமாவைக் காட்டி இது ஐய்யர் பொண்ணுதான் என்றாள். அடப் பாவி என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். பிறகு அவரிடம் ஸ்ரீ நாங்க கொஞ்சம் வெளில போகனும் போய்ட்டு வந்துடறோம் என்றாள். சரி பதினோரு மணிக்குள்ள வந்துடுங்க என்றார். அவர் நல்ல மனிதராகத் தெரிந்தார். ஒரு சில நிமிடங்களில் தயாராகி ஜெயம் கொண்டான் சென்றோம். காட்டு யானைகள் வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டதைப் போல சிலர் மிரட்சியாக பார்த்தனர். ஆண்கள் மிக நெருக்கமாக வருவதைப் போல் உணர்ந்தேன். எதற்கு வம்பு என்று கைகளைக் குறுக்காக கட்டிக் கொண்டே நடந்தேன்சுமா மிகவும் அசௌகரியாமாக இருந்ததைப் போல உணர்ந்தேன்
ஊரை ஒரு சுற்று வரலாமா என்று ஸ்ரீ கேட்க சுமா வேண்டாம் பிறகு ஏதாவது நடந்து விட்டால் அதற்கு பிறகு உட்கார்ந்து பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று மறுத்தாள். நான் இவர்களின் சம்பாசனையை சும்மா கேட்டுக் கொண்டு மட்டும் நடந்தேன். தென்பட்ட ஒரு சிறிய மெஸ்ஸில் சென்று கொத்து பரோட்டா கிடைக்குமா என்று நான் கேட்டேன். கல்லாக்காரர் கொத்து பரோட்டா போடலாமா என்று உள்ளே பார்த்துக் கேட்க உள்ளே இருந்தவர் சற்று யோசித்து சரி என்றார். அப்போதேனும் நான் கொஞ்சம் யோசித்திருக்கலாம் இருந்தும் ஒரு ஆர்வக் கோளாறில் காத்திருந்தேன். நன்றாக காய்ந்து போன பரோட்டாவை கொத்திக் கொத்திக் கொண்டு வந்து கொடுத்தார். எப்படியோ விக்கி தக்கி உண்டு முடித்தேன் என்றாலும் 50 ரூபாய் பில்லைப் பார்த்ததும் நிஜமாகவே விக்கியது. பரோட்டா போட்டு பழகவே இத்தனை விலைன்னா நல்லாப் போடக் கத்துக்கிட்டா எங்கயோ போய்டுவாங்க என்று நினைத்து கொண்டேன்.

பில்லைக் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் சில மாத்திரைகள் வாங்க மருந்துக் கடைக்கு உள்ளே சென்றோம். கடைகாரர் உதவும் மனோபாவத்தில் இல்லை. ஏனோ தானோவென்று நாங்கள் கேட்டவைகளை எடுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அவரிடம் இங்கே தியேட்டர் எங்கே இருக்கு என்று கேட்டாள். இவள் ஏன் திரும்பவும் இதைக் கேட்கிறாள் என்று யோசித்தபடியே லேசாக மாறுபடும் அவரின் முக பாவங்களை    கவனித்துக் கொண்டிருந்தேன். கணத்திற்கு கணம் மாறுபட்டுக் கொண்டே இருந்த பாவத்துடன் கைகளை நேராக நீட்டி அங்கே இருக்கிறது என்றார். பிறகு எடுத்த மருந்துகளை கண்ணாடி மேஜையின் மீது வைத்திருந்த என் கைகளுக்கு சற்று தள்ளி வைத்தார். சில்லறைகளையும் அவ்வாறே வைத்தார்.அவரின் எண்ண ஓட்டம் புரிந்தபோலும் இருந்தது, புரியாதது போலும் இருந்தது. அப்படியே சற்று தூரம் நடந்து வந்து கூட்டு ரோடு பஸ் பிடித்து லாட்ஜ்க்கு வந்து படுக்க போகும் முன் ஸ்ரீ உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா என்றாள். நானும் சுமாவும் என்ன உதவி கேள் என்றோம். தயவு செய்து நாலு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்றாள். அஞ்சு மணிக்கு போனாலும் இருட்டா இருக்கும் ஒன்னும் பாக்க முடியாது டா என்றேன். அவள் முறைக்கவும் சரி அங்க போய் காத்திருந்து பார்ப்போம் என்று படுத்தேன். படுத்தபடியே அந்த மருந்துக் கடைக்காரனைக் குறித்த பேச்சு வந்தது. நான் கவனித்ததை சொன்னபோது அதையே அவளும் உணர்ந்திருக்கிறாள் என்று அறிந்தேன்.
 
காலையில் சுமா என்னை மட்டும் சீக்கிரம் எழுந்து போய் குளிக்க வைத்து விட்டு நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய், பாத்ரூம் பத்து நிமிடமாக காலியாக இருக்கிறது என்று எழுப்பினாள். இவர்கள் இருவருக்கும் எங்கு சென்றாலும் ஒரே நேரத்தில் பாத்ரூம் தேவைப்படம் எனவே நான் எப்போதுமே கடைசியாக கிளம்புவேன். உள்ளுக்குள் இவர்களின் சம்பாஷனையை ரசித்துக் கொண்டே படுத்திருந்தேன். அதற்குள் விடிந்து விட்டிருந்தது.
-தொடரும்-