Tuesday, November 30, 2010

Thursday, November 18, 2010

காரணங்கள்

ஒன்று
இரண்டு
மூன்று என
ஆயிரம் காரணங்கள் வரை இருக்கலாம் என்னிடம்
பறவைகள் கூடடைவதை
இரைச்சல்கள் என சபிக்கவும்
ஒற்றைப் பனித்துளி ஏந்திய
ரோஜாவை அலட்சியித்தொதுக்கவும்
சம்பங்கி பூவினை சுற்றியாடும்
தேன்சிட்டை வெறுக்கவும்
கண்டதும் காலை நக்கும்
நாய்க்குட்டியை அருவெருக்கவும்
கலகலப்புகள் நிறைந்திருக்கும் கூடத்தில்
தனிமைப்படுத்திக்கொள்ளவும்
வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்
நீ மட்டுமே இருந்தாய்

Sunday, November 14, 2010

தாகம்

உன் முதல் தொடுகை
முதல் முத்தம்
முதல் அணைப்பு
எப்படி இருக்கும்
என்பதாய் துவங்குகிறது எண்ணங்கள்
இம்மாலையில்
தருணங்களுகேற்ப அமையுமா
அல்லாது மனநிலைகேற்ப?
இல்லையெனில்
சூழல் நிர்ணயிக்குமோ
இறுக்கத்தையும் நெருக்கத்தையும்

தருணங்களே எனில்
அடைமழை இரவில்
முழுக்க நனைந்து
உடல் சிலிர்த்து
உன்னை ஒரு உயர்
பார்வை பார்க்கையில்
நிகழட்டும் அது

மனநிலை எனில்
நான், நீ, நம் காதல்
தவிர்த்து மற்றவை மறைந்து போன
உன்னத நிலையில் அமையட்டும் அது

சூழல் எனில்
நடு வனத்தில்
பிணைந்தாடும் பாம்புகளின்
மோகன நடனத்தின்
அதிர்விலும் லயத்திலும்
இருக்க வேண்டும் அது