Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, November 14, 2010

தாகம்

உன் முதல் தொடுகை
முதல் முத்தம்
முதல் அணைப்பு
எப்படி இருக்கும்
என்பதாய் துவங்குகிறது எண்ணங்கள்
இம்மாலையில்
தருணங்களுகேற்ப அமையுமா
அல்லாது மனநிலைகேற்ப?
இல்லையெனில்
சூழல் நிர்ணயிக்குமோ
இறுக்கத்தையும் நெருக்கத்தையும்

தருணங்களே எனில்
அடைமழை இரவில்
முழுக்க நனைந்து
உடல் சிலிர்த்து
உன்னை ஒரு உயர்
பார்வை பார்க்கையில்
நிகழட்டும் அது

மனநிலை எனில்
நான், நீ, நம் காதல்
தவிர்த்து மற்றவை மறைந்து போன
உன்னத நிலையில் அமையட்டும் அது

சூழல் எனில்
நடு வனத்தில்
பிணைந்தாடும் பாம்புகளின்
மோகன நடனத்தின்
அதிர்விலும் லயத்திலும்
இருக்க வேண்டும் அது

Sunday, April 25, 2010

நீயில்லாத நானில்லை

அந்த மழை நாளின்
ஓர் இரவில்
நீர்சொட்டும் மரத்தடியில்
ஒருவரை ஒருவர்
மௌனித்து பார்த்திருந்தோம்
தாழ் கிளையின்
ஒரு இலை விளிம்பை பற்றி
மெதுவாய் வழுக்கி விழுந்தது
நம் காதல்

முத்தமிட ஓரிடம் தேடி
எல்லைகள் கடந்து
ஓடிக் களைத்து
ஓரிடம் நிற்கிறோம்
திரும்பிப் பார்க்கையில்
யாரும் துரத்தவில்லை
நம்மை தவிர

மறந்து விடலாம் என்று
தீர்மானித்த பிறகும்
எத்தனை முறை
அணைத்தாலும்
மறுபடி பற்றிக்கொள்ளும்
அந்த மாஜிக் மெழுகுவர்த்தியாய்
உன் நினைவுகள்

இம்முறை எறிகிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி
ஒரு நீழ்குகையின்
ஆழக் குளத்துள்
விழுந்ததும் உணர்கிறேன்
கரையில் பாதி நீ
நீரில் பாதி நான்

Friday, March 5, 2010

வெட்க நிலாக்கள்

கீழ் மூக்கில்
எதையோ
இழுத்து இழுத்து
ரசித்து சுவைக்கும்
ஒரு கிளியின்
ஆர்வத்தோடு
உனைச் சுவைக்க
நான் நெருங்க

கூச்சலிடும்
கிளிக் குஞ்சுகளாய்
என்னை உன்னிடம்
நெருங்க விடாது
பின் இழுத்துக் கொள்கிறது
இந்த வெட்கம்

எத்தனை முயன்றும்
வெட்கம் தொலைத்து
வெளிவர முடியாத தவிப்பில்
உன்னை பார்க்கையில்
கண்களில் வழியும்
குறுஞ்சிரிப்போடு
நீயும் ஏதேதோ
செய்கிறாய்

கடைசி முயற்சியாய்
பல வண்ணக் குப்பிகளில்
என் வெட்கத்தை நிரப்பி
இறுக மூடி
கிளைக்கொன்றாய்
அதில் தோரணம் அமைக்கிறாய்

தொந்தரவுகளற்று
நிசப்தத்தின் இசைக்கு
இசைந்தபடி
நம்மை மறந்து
ஆழ்ந்து நேசிக்கையில்
உயிர்பெற்று பிரகாசிக்கும்
வெட்க நிலாக்கள்
பூரண வெளிச்சத்தில்
கொஞ்சும் கிளிகள்

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...