Saturday, March 23, 2013

அமுதனுக்கு


அமுதன்,

நலமா? சமீபமாக என்ன படம் பார்த்தீர்கள்? என்ன வாசிக்கிறீர்கள்? உங்கள் காதலி நலமா? இரண்டு வாரங்களுக்கும் மேலாயிற்று நாம் பேசி. இங்கே வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது அமுதன். பெங்களூர் ஒரு பக்கம் வேர்க்க வியர்க்க என அதன் குளுமையை இழந்திருந்தாலும் ஜாக்கரண்டா மற்றும் பிங்க் ட்ரம்பெட் மரங்கள் வசந்தத்தை மிக மிக அழகாக வரவேற்கின்றன. இன்று நான் போன சாலையின் இரண்டு பக்கத்திலும் நின்றிருந்த பிங்க் ட்ரம்பெட் பூக்கள் என்னை இன்னொரு உலகுக்கு கடத்தி சென்றது. கூடிய விரைவில் அந்த மாயப் பூக்களை உங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

அமுதன், கடிகாரத்தின் முள் வெகு இயல்பாக நேரத்தை சுட்டி நகர்வது போல மிக இயல்பாக இப்போது என்னைத் தொட்டு நகர்கிறது ஒரு பிரிவு. தான் துல்லியமாகக் காட்டிய ஏதோ ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்ட அத்தனை விபத்துகளின் குரூரத்தையும்  இதுவரை எந்த கடிகாரம் சரியாக உணர்ந்திருக்கிறது? எல்லாவற்றிக்கும் காலமே மௌன சாட்சி அதுவே சிறந்த மருந்தும் கூட, இல்லையா? எதிர்பாராத தருணத்தில் கன்னத்தில் பளார் என விழுந்தது போல இந்த பிரிவு  கொடுக்கும் எரிச்சலையும் வலியையும் எப்படி சொல்வது? இவ்வளவு நாட்கள் விளையாட்டாகவே வாழ்ந்து விட்டிருக்கிறேனோ அல்லது ஏதோ மன நோயுடன் வாழ்ந்திருக்கிறேனோ எனக்கே புரியவில்லை. திடீரென படரும் வெறுமைக்கும் தனிமைக்கும் என்னை ஒப்புக் கொடுக்காமல் இருக்க  உங்களுக்கு எழுதுகிறேன் அமுதன். உங்கள் பரந்த மார்பின் தேற்றுதல் என்னை இளைப்பாற அழைத்தாலும் சற்று தள்ளியே நின்று கொள்கிறேன். ஏனென்றால் மருந்துக்கு பழகிய உடல் தன்னியல்பான தாங்கும் சக்தியை இழந்துவிடுவது போல பிறகு நீங்களில்லாமல் என்னால் இயங்க முடியாது. நீங்கள் அற்புதமானவர் அமுதன் நெருக்குவதுமில்லை, விலகுவதுமில்லை.

எந்த ஒரு விசயத்திலும் நீங்கள் தர்கிக்கும்போது உங்கள் கருத்தை எவ்வளவு நிதானமாகவும், அழுத்தமாகவும் முன் வைக்கிறீர்கள். அது உங்கள் தெளிவான சிந்தனையை காட்டுகிறது. எனக்கு இப்போதெல்லாம் எந்த ஒரு விசயத்திலும் அத்தனை தீர்மானம் இருப்பதில்லை. எல்லோருக்கும் விட்டுக் கொடுப்பவளாகவே ஆகி விட்டேன். இதில் எனக்கு எந்த  வருத்தமும் இல்லை என்றாலும் இது சரியா தவறா என குழப்பமாக இருக்கிறது. நான் பிரிவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா இதுக்கு முழுப் பொறுப்பாளி நானே. எனக்கு ஜப் வி மெட் படம் மிகப் பிடிக்கும், குறிப்பாக அந்த சுதந்திரமான கரீனாவின் பாத்திரப் படைப்பு.  அதில் ஒரு இடத்தில் கரீனா சாஹித்திடம் நான் நினைக்கிற மாதிரி இந்த வாழ்கையை வாழ  விரும்புகிறேன், அப்பொழுது என்ன நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு வேறு யாருமல்ல என்று எனக்குத் தெரியும் எனவே சந்தோசமாகவே இருப்பேன் என்பாள். இப்போது மீண்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியை பார்த்தேன் உங்களுக்காக இங்கே அதை இணைக்கிறேன் நீங்களும் பாருங்கள். எத்தனை அற்புதமான வரிகள்.





உங்கள் புன்னகை தவழும் முகம் இப்போது எனக்கு நினைவில் ஓடுகிறது அமுதன். நீங்கள் எப்படி இத்தனை அமைதியானவராக இருக்கிறீர்கள்? உங்களுக்குள் இப்படி  ரகசியப் பக்கங்கள் எதுவும் கிடையாதா? நீங்கள் யாரையும் பாதிக்கவில்லையா? அல்லது உங்களை யாரும் பாதித்ததில்லையா? நான் உங்களிடம் எதை சொல்ல வருகிறேன் அல்லது எதை சொல்ல விரும்புகிறேன் என எனக்கே தெரியவில்லை. உங்களுக்கு எழுதத் தோன்றியது எனவே தோன்றுவதை எல்லாம் எழுதுகிறேன். ஒன்று புரிகிறது எனக்கு, நான் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன் அமுதன். எனக்கே புரிகிறது என்றாலும் என்னால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் அமுதன்? என்னையே புரிந்து கொள்ள முடியாதது எனக்கு பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது. எனக்கு என்னைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இதோ இதைப்  படிக்கும்போது நீங்கள் என் கையை எடுத்து  உங்கள் உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் அமுதன். அல்லது நீங்கள் அப்படி வைத்துக் கொள்வதாக நான் நினைத்துக் கொள்கிறேன். அது என் பாவங்களுக்கான  மன்னிப்பாக இருக்கட்டும். யாருக்கோ இழைத்த பாவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மன்னிப்பு சமாதானம் அளிக்குமா அமுதன்? எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கிறது என் கோரிக்கை. என் பாவம் என்னவெனில்... எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நிராகரிப்புகள் எத்தனை வலி நிறைந்தது என்று தெரிந்தாலும் கூட நான் ஏன் எப்போதும் மறுதலிப்பவளாக இருக்கிறேன்? இப்பொழுது  அன்பு என்னை நிராகரித்து விட்டது ஆனால் நான் அதை தேடி பின்தொடர்ந்து அலைகிறேன். இப்படி  ஏன் முரண்களால் ஆனவளாக  இருக்கிறேன் நான். வேண்டும்போது விலகியும், விலகும்போது வேண்டியும்,  என்னதான் வேண்டுமாம் எனக்கு? உங்களுக்காவது என்னைப் புரிகிறதா அமுதன்?

உங்கள் அருகில் இருக்கும் போது நான் நிறைய கிறுக்கு தனங்கள் செய்தபடி இருக்கிறேன். உங்கள் இடது கையில் இருக்கும் கடிகாரத்தை வலது கைக்கு மாற்றுகிறேன். திரும்பவும் அதை இடது கைக்கே மாற்றுகிறேன். உங்களின் பிரெஞ்சு தாடியை கொஞ்சம் இழுத்துப் பார்கிறேன். உங்கள் காதுக்குள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வந்து ஹூ என்று கத்துகிறேன். என்னை நீங்கள் ஒரு குழந்தையாகவே பார்கிறீர்கள் அமுதன். குழந்தைக்கு உரிய அத்தனை சலுகைகளும் எனக்குக் கிடைக்க, உங்களிடம் நானும் ஒரு குழந்தை ஆகத்தான் இருக்கிறேன். கள்ளத்தனங்கள் எதுவுமே அறியாத ஒரு பரிசுத்தமான குழந்தையைப் போல. என்னை உங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளுங்களேன் அமுதன், உங்கள் தோள்களில் புரளவேண்டும் எனக்கு...

ப்ரியமுடன்,
இனியா



Thursday, March 21, 2013

ஹாலந்த் - 3

என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்தபடி ட்ராம் உள்ளே டிரைவருக்கு அருகில் நின்றிருந்தேன். அவரிடம் ஆல்பர்ட் மார்க்கெட் என்று ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டேன். வரும் வழியில் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருந்தபோது நாங்கள் சிலரிடம் ரயில் குறித்த தகவல்கள் கேட்டோம். அவர்கள் ஆங்கிலம் பேச  நிறையவே  சிரமப்பட்டார்கள் என்றாலும் உதவி செய்ய முன் வருபவர்களாகவே இருந்ததனர். ட்ராமின் இயக்குனர் அவர்களைப் போல அல்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசினார். இடையிடையே ஒரு சில வார்த்தைகள் ஹிந்தி பேசினாற்  போல் கூட இருந்தது. எனக்கு இருந்த பதற்றத்தில் நான் அதை கவனிக்கவில்லை. கவனித்தால் மட்டும் என்ன புரிந்து விடவா போகிறது? அவர் என்னிடம் அந்த டிக்கெட்டை கதவை ஒட்டி இருந்த  ஆக்செஸ் போர்டில் உரைக்க சொன்னார். நானும் அப்படியே செய்தேன்.பின்பு இறங்கும் போதும் அப்படி செய்ய சொன்னார் நான் சரி என்றேன். தொடர்ந்து அவர் ஏதோ ஹிந்தியில் சொல்ல நான் விழித்தேன். என் முகத்தை பார்த்து புரிந்து கொண்டவராக டூ யு நோ ஹிந்தி என்றார். நான் தெரியாது என்றேன். ஆர் யு ப்ரம் இந்தியா என்றார். நான் ஆம் என்றேன்.  இந்தியா என்கிறாய் உனக்கு ஹிந்தி தெரியாதது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என்றார். நான் எந்த  பதிலும் சொல்லாமல் இந்த ட்ராமின் உள்ளிருந்து கடைசி வரை செல்ல வழி இருக்கிறதா என்று கேட்டேன்.  அவர் விடாமல் அப்படியானால்  நீ என்ன மொழி பேசுவாய் என்றார். ஐ யாம் ப்ரம் சௌத் இந்தியா ஐ ஸ்பீக் தமிழ்  என்றேன். இத்தனை பேச்சு  வெளியே நடந்து கொண்டிருக்க மனசு அவர்களை தேடிக் கொண்டிருந்தது. அவர்கள் ட்ராமில் தான் இருக்கிறர்களா இல்லை என்றால் என்ன செய்வது, எப்படி திரும்புவது என எண்ணங்கள் பல திக்கில் சென்று கொண்டிருந்தது. இப்படி பகுதி பகுதியாய் நான் பிரிந்து கொண்டிருந்தாலும் அவரின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. திடீரென தனித்து விடப்பட்டதால் திக்குண்டிருந்த மனதுக்கு இந்த சம்பாஷனை ஒரு வகையில் ஆறுதலாகவும் நிதானிக்க ஒரு சந்தர்பமாகவும் இருந்திருக்க வேண்டும். நான் சௌத் இந்தியா என்றதும் ஓ! ஐ நோ சித்ரா, ஐ நோ A R ரஹ்மான் என்றார். இதை எதிர்பார்க்காத நான் உற்சாகமாக எஸ் எஸ் எஸ் எஸ் நானும் அதே மாநிலம் தான் என்றேன். அவர் எனக்கு அவர்களை மிகப் பிடிக்கும் என்றார்.

இப்பொழுது பதட்டம் முட்டிக் கொண்டு மேலேற  நான் என் நண்பர்களை தொலைத்து விட்டேன் அவர்களைத் தேட இந்த ட்ராமின் கடைசி வரை செல்ல வழி இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சற்று மௌனித்து பின் இருக்கிறது என்று சொல்லி மேலும் ஏதோ சொல்ல  பேச வாயெடுக்க நான் நன்றி சொல்லி  ஐ வில் கோ லுக் பார் மை பிரெண்ட்ஸ் என்றேன். அவர் சரி எனவும் உள்ளே நுழைந்தேன். நடுவிலிருந்த வழி அருகே செல்லும்போது லீனாவை பார்த்து விட்டேன். என்னுள் அப்படி ஒரு திருப்தி பரவியது, எப்படி எனில் அதை  வார்த்தையில் சொல்ல முடியாது. என்னைப் பார்த்ததும் நான் கொடுக்க வேண்டிய எக்ஸ்ப்ரெஷெனை லீனா கொடுத்தாள். என்னுள் எழுந்த ஆசுவாசம் அவள் முகத்தில் தெரிந்தது. மை காட் வேர் ஹாவ் யூ பீன் மேன் என்றாள். அவள் வார்த்தைக்கு வார்த்தை எல்லோரையும்  மேன் என்று தான் விளிப்பாள். அவளே  தொடர்ந்து உன்னை காணவில்லை என்றதும் எனக்கு ஒரே நடுக்கமாக இருந்தது. இப்பொழுதான் உடன் நின்ற  சைத்ராவைக் காட்டி இவளிடம் சொன்னேன் இங்கே இறங்கி விடலாம் என்று. உன்னைப் பார்க்காதிருந்தால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி இருப்போம் என்றாள். எனக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்தேன். எங்களை நீ பார்காதிருந்தால் என்ன செய்திருப்பாய்  என்றாள். தெரியவில்லை வண்டி பிடித்து ஹோட்டலுக்கு போயிருப்பேன் என்றேன். உன்னிடம் முகவரி இருக்கிறதா என்றாள். இல்லை, ஒரு வேளை  ஆம்ஸ்டர்டாமில் இறங்கி இந்தியாவுக்கு அழைத்து  முகவரியை வாங்கி இருக்கலாம் என்றேன். பிறகு நீ டிக்கெட் வாங்கி விட்டாயா என்றாள். நான் ஆம் என்று எனக்கும் டிரைவருக்கும் நடந்த உரையாடலை அவளிடம் சொன்னேன். அவள் அதற்குள் இத்தனை பேசிவிட்டாயா என்றாள்.

அப்பொழுது என்னருகே ஒரு வயதான தாத்தா நின்றிருந்தார். அவர் நல்ல போதையில் இருந்தாரா அல்லது தூக்கத்திலா என்று தெரியவில்லை. ஏதேதோ பாட்டு போல ராகமிழுத்து பாடினார், தள்ளாடிக் கொண்டே டச் மொழியில்  பேசிக் கொண்டே வந்தார். நான் அவரை திரும்பிப் பார்த்து புன்னகைத்தேன். அவர் அதை வரவேற்கவில்லை என்று அவர் முகத்தில் தெரிந்தது. அவர் ஏதோ பக்கத்தில் இருந்த இளைஞரிடம் சொல்லவும்  அதற்கு அவர் ஏதோ பதில் சொன்னார். பிறகு அவர்  ஆம்ஸ்டர்டாம் டூரிஸ்ட் நிறைந்த நகரமாகி விட்டது. இங்கே வந்து யாராவது மாசு படுத்தினால் நான் அவர்களின் விரல்களை வெட்டுவேன் என ஆங்கிலத்தில் ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகவும் நிதானமாகவும் உச்சரித்தார். அப்பொழுது  ட்ராமின் இயக்குனர்  ட்ராம் கூட்டமாக இருப்பதால் எல்லோரும் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுமாறு அனௌன்ஸ் செய்தார். எனக்கு கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ள  நான் அவரிடமிருந்து சற்று முன்னே தள்ளி நின்று கொண்டேன். இயக்குனர் ஒவ்வொரு நிறுத்ததிலும் அது என்ன இடம் என அனௌன்ஸ் செய்தபடி வந்தார். ரயிலிலும் அடுத்த ஸ்டேஷன் குறித்த தகவல்கள் சீட்டுக்கு மேலே மாட்டப்பட்டிருந்த திரையில் வந்து கொண்டே இருந்தது. இது நாங்கள் சரியான இடத்தில  இறங்க உதவியாக இருந்தது.

நாங்கள் ஆல்பர்ட் மார்க்கெட் தான் என்று நினைக்கிறேன் அங்கே இறங்கினோம். எங்கள் முன் நீண்டிருந்த தெரு முழுக்க கடைகள் நிறைந்திருந்தது.  லீனா சைத்ராவிடம் இவளை நாம் இருவரும் பிடித்துக் கொண்டே நடக்கலாம் இல்லாவிட்டால் தொலைந்து விடுவாள் என்று ஒரு புறம் என் கைக்குள் நுழைத்து லீனா பிடித்துக் கொள்ள மறு புறம் சைத்ரா என் கைகளைக் கோர்த்து பிடித்துக் கொண்டு நடந்தார்கள். எனக்கு நான் தொலைந்தேனா அல்லது அவர்களா என்று குழப்பமாகவும் இப்படி அவர்கள் என்னை பிடித்துக் கொண்டு நடப்பது வேடிக்கையாகவும் இருந்தது. எவ்வளவு நேரம் தான் அப்படியே நடக்க முடியும் அதுவும் ஷாப்பிங் செய்யும் இடத்தில. அந்த தெருவுக்குள் நுழைந்ததும்  எனக்கு இடது புறம் இருந்த கடை பிடித்தது லீனாவுக்கு  வலது புறம். நான் இடது புறம் கடைக்கு செல்கிறேன் என சொல்லி விட்டு சென்றேன். மூவரும் ஒருவரை ஒருவர் பார்வையிலேயே வைத்துக் கொண்டோம். சைத்ரா அவள் நண்பர்கள் எல்லோரும் வாங்கும் ஏர்போர்ட் சாக்லேட் வாங்க வேண்டாம் எனவும் தங்களுக்கு ஹோம் மேட்  சாக்லேட் வேண்டும் எனத் தெரிவித்ததாக சொல்லி சாக்லேட் கடையில் நின்றாள். அப்படியே அந்தத் தெருவை சுற்றினோம். அங்கே அந்தக் கடைகள் நடத்துபவர்கள் மிகவும் உயிர்ப்போடு இருந்தார்கள். எதாவது பாட்டை பாடிக் கொண்டே விற்பனை செய்தார்கள். எதிர்த்த கடையிலிருந்து எதிர்பாட்டு வந்தது. இதையெல்லாம் பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் குளிர் அதிகரிக்கத் தொடங்கியது கடைகள் மூடத் துவங்கின. நாங்கள் நடந்து வெளியே வந்தோம்.

பிறகு எங்கே செல்வது என புரியவில்லை. லீனாவும் நானும் இப்படியே கொஞ்சம் நடக்கலாம் என்றோம். எனக்கு இது பிடித்திருக்கிறது ஐ ஜஸ்ட் வான்டட் டு கெட் தி பீல் ஆப் திஸ் சிட்டி என்றாள்.நாங்கள் மெல்ல நடந்தோம். நகரம் என்று சொல்ல முடியாதபடி மிகவும் மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் சாலைகளை மிக எளிதாக கடந்தோம். அங்கே ட்ராம்கள் நிறைய இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு ரோடு கொஞ்சம் பிஸியாக இருக்கவே  எங்கள்  அருகே சாலையை கடக்க இருந்த டச் பெண் டிராபிக் சிக்னல் கம்பத்தின் கீழிருந்த ஏதோ பொத்தானை அழுத்த அது வாகனங்களை நிறுத்தி எங்களை போக சொல்லியது. குளிர் அதிகமாக நாங்கள் டீ குடிக்கலாம் என்று  ஒரு டீ கடைக்குள் நுழைந்தோம். ஆர்டர் செய்து சர்க்கரையை கொட்டியும் குடிக்க முடியாமல் உள்ளே இருந்த ஹீட்டருக்கு வேண்டி சற்று நேரம் அமர்ந்தோம். பின் எழுந்து வெளியே வந்து திரும்பவும் நடந்தோம். சைத்ரா இன்னும் சில இடங்களை பார்க்க வேண்டும் என்றாள். நான் என்னால் இந்தக் குளிரை சமாளிக்க முடியவில்லை என்றேன். நாம் ட்ராம் பிடித்து டாம் ஸ்கொயர் செல்லலாம் அங்கே க்ரூஸ் பார்க்க வேண்டும் என்றாள். சரியான ட்ராம் எது எனக் கண்டு பிடிக்க எங்களுக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. மூன்று ட்ராம்களில் மாறி மாறி ஏறினோம். ஆனால் முதலில் வந்த ட்ராம் போல அல்லாமல் இங்கே யாரும் டிக்கெட் கொடுக்கவில்லை. பயணிகள் ஏற்கனவே வைத்திருந்தார்கள். நான் இயக்குனரிடம் சென்று டிக்கெட் என கேட்க அவர் என்ன பதில் சொன்னார் என புரியவில்லை  ஆனால் டிக்கெட் எதுவும் கொடுக்கவில்லை. பயணிகளிடம் கேட்க அவர்களுக்கும் சரியான பதில் தெரியவில்லை. நாங்கள் டிக்கெட் எடுக்காமலேயே ட்ராமில் இருந்து இறங்கினோம்.

டாம் ஸ்கொயர் ராயல் பேலஸ் முன் நின்று புகைப் படம் எடுத்தோம். அப்போது எங்களுக்கு அது இன்ன இடம் என்று தெரியவில்லை. நிறைய பேர் அங்கே நின்று புகைப் படம் எடுத்தார்கள். அப்பொழுது சைத்ரா சொன்னாள் இது ஏதோ வரலாற்று சிறப்பு மிக்க இடம் என நினைக்கிறேன் என்றாள். அங்கே இருந்து வந்த பிறகு தான்  அது ராயல் பேலஸ் என்று தெரிந்தது. அங்கே இருந்து கொஞ்சம் முன்னே நடந்து ஒரு தெருவுக்குள் நுழைந்தோம். தெருவின் துவக்கத்திலேயே இருந்த ஒரு கடையில் மூவரும் நுழைந்தோம். அந்தக் கடை முழுக்க உடைகளே நிறைந்திருந்தது. நானும் சைத்ராவும் சின்ன சின்ன நினைவுப் பரிசுகள்  வாங்கலாம் எனக் கிளம்பினோம். லீனா அந்தக் கடைக்குள்ளேயே இருப்பதாக கூறினாள். எங்கள் ஷாப்பிங் முடிந்து திரும்பி வந்து லீனாவை அடைந்தோம். அங்கே இருந்து ட்ராம் பிடித்து மீண்டும்  டிக்கெட் எடுக்காமல் ரயில்வே ஸ்டேஷன் வந்து ரயில் பிடித்து நாங்கள் டாக்சியில் வந்து இறங்கி இடத்தை அடைந்தோம். அங்கே இருந்து ஹோட்டல் செல்ல பஸ்க்காக காத்திருக்கும்போது காற்று இத்தனை வினாடிக்கொரு முறை என்று  குறித்து வைத்ததுபோல தொடர்ந்து வீசியபடி இருந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்த சைன் போர்டு   நாங்கள் செல்ல வேண்டிய பஸ் இன்னும் எத்தனை நிமிடத்தில் வரும் என்று துள்ளியமாக காட்டியது. ரயில் நிலையத்திற்கு நேர் எதிர் தான் இந்த பஸ் நிறுத்தம் என்றதாலும், எங்கள் பஸ் வர இன்னும் நேரம் இருந்ததாலும் நாங்கள் திரும்பவும் ரயில் நிலையத்துக்குள் நுழைந்து நுழைவாயிலிலேயே நின்று கொண்டு கண்ணாடிக் கதவு வழியாக வருகிற பஸ்களை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது என்ன செய்வதென தெரியாமல் எனக்கு நேரே தனியாக அமர்ந்திருந்த  இந்தக் கிளியை படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.



பஸ் வந்ததும் ஓடி வந்து ஏறினோம். பஸ் டிரைவரிடம் டிக்கெட் வாங்கும்போது அவர் இனிமேல் வெளியே செல்லும்போது ரவுண்டு ட்ரிப் டிக்கெட் பெற்றுக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு சீப் ஆக இருக்கும் என்றார். நெதர்லாந்த் மக்கள் நெகிழ்ந்த தோழமையுடன் பழகினார்கள். இப்படியாக  அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு வந்து உறங்கினோம்.
அடுத்த நாள் மதியம் தான் எங்கள் ப்ரோக்ராம் துவக்கம் என்பதால் எங்களுக்கு காலையிலேயும் கொஞ்ச நேரம் கிடைத்தது. நாங்கள் இருந்த ஹோட்டல் அருகேயே நடந்து வரலாம் என முடிவு செய்து நடந்தோம். ஹோட்டல் ரிசெப்சனிஸ்ட் பக்கத்தில் ஒரு சர்ச் இருக்கிறதெனவும் அங்கே செல்லலாம் எனவும் சொன்னார்.

வெளியே வந்ததும் நெதர்லாந்த் சைக்கிள்களுக்கு உகந்த நகரமாய்/நாடாய் இருப்பதை பார்க்க முடிந்தது. சைக்கிள்களுக்கென தனியான ட்ராக் இருந்தது எனவே சைக்கிள்கள் நிறைய புழக்கத்தில்  இருந்தன. ஈக்கோ பிரெண்ட்லியாக, தூய்மையாக, பிளாஸ்டிக் அற்ற மனதை சிறை பிடித்துக் கொள்கிற ஊர் இது.
சைக்கிள் பாதையில்  நாங்கள் மெதுவாக நடந்தோம். அத்தனை அற்புதமான வீடுகள் இதுவரை நான் நேரில் பார்த்திராதது. அந்த வீடுகள் மேல் நான் காதல் கொண்டேன். இதோ சில வீடுகளை இதில் இணைக்கிறேன்.



நெதர்லாந்தில் வுட்டன்  ஷூக்கள் தங்களுக்கென பிரத்யேகமான இடத்தைப் பெற்றுள்ளன. ஏன் எங்கு  பார்த்தாலும் ஷூக்கள்  இருக்கின்றன என்று கேட்டதற்கு இங்கே விவசாயிகள் நிறைய உபயோகித்தார்கள் அதனால் அது பிரசித்தம் என்றார்கள். இதோ இந்த வீட்டிற்கு முன்னால் பாருங்கள் வுட்டன் ஷூவை எவ்வளவு அழகாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.


அதற்கு மேல் க்யூட்டாக இருக்கும் அந்தக் குட்டி குருவியையும் பாருங்கள்.
இதோ இந்தக் கதவும் எனக்குப் பிடித்தது.




இந்த கிரீன் ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுந்திருந்த பழங்கள் எடுப்பார் அற்றுக் கிடந்தது.
இப்படியே படம் பிடித்துக் கொண்டு நடந்து சர்ச் வந்தடைந்தோம். சர்ச்சை சுற்றி எடுத்த சில படங்கள்.




இப்படியாக அன்றைய பயணம் இனிதே முடிந்தது...
...மேலும் ...

Wednesday, March 13, 2013

ஹாலந்த் - 2

பஸ் புறப்பட்டதும் பரந்த நிலபரப்புகளை ஆசையாய் பார்த்துக் கொண்டு வந்தேன். வாகனங்கள் வெகு அரிதாக கடந்து சென்றபடி இருந்தது.  சாலை ஓரங்களில் வாய்கால் நிறைய தண்ணீர் நிற்கிறதா ஓடிக்கொண்டிருக்கிறதா தெரியவில்லை.



சாலையிலிருந்து பார்வையை விலக்கி மீண்டும் சுற்றிலும் நீண்டிருந்த லாண்ட்ஸ்கேப்பை  பார்த்தபோது தூரத்தில் செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. மனம் அந்த கணம்  தன் முன் நீண்டிருந்த காட்சிகளுக்கு   மிகவும் விசுவாசமாய் இருந்தது. இருந்த சோர்வும் தூக்கமின்மையும் எங்கேயோ மிக தொலைவிற்கு சென்றிருந்தது. தங்க வேண்டிய ஹோட்டல் வந்ததும் பஸ் நின்றது.

இறங்கியதும் மீண்டும் குளிரத் துவங்கியது. உள்ளே நுழைந்து ரிசெப்சன்னில் எங்கள் பெயரைக் கூறி பதிவாகி இருந்த அறையின் கீயை வாங்கிக் கொண்டு மேலே இரண்டாவது மாடிக்கு வந்தோம். மேலே வரும்போதே அப்போதே கிளம்பி ஆம்ஸ்டர்டாம் செல்ல நானும் லீனாவும் சைத்ராவும் முடிவு செய்தோம். பிரமிளா வரவில்லை தூங்க வேண்டும் என்றாள். பாரதி வரலாமா வேண்டாமா என்று அப்போது முடிவு செய்ய முடியாமல் எதற்கும் நீங்கள் கிளம்பும்போது என்னிடம் சொல்லுங்கள் நான் வர முயற்சிக்கிறேன் என்றாள். ஒரு நீண்ட ஹால் வேயைக் கடந்தபின் முதலில் இடது புறம் பாரதியின் அறை பின் ஒரு அறை விட்டி பிரமிளாவின் அறை  பின் வலது புறம் லீனாவின் அறை அவளுக்கு ஒரு அறை விட்டு சைத்ராவின் அறை, அதற்கு பிறகு அமீத்தின் அறை பின் என்னுடையது கடைசி அறையாய் இருந்தது.

அறையை திறந்துகொண்டு உள்ளே வந்தேன். எனக்கே எனக்கு மட்டுமான அந்த அறை  மிகப் பிடித்திருந்தது. அது ஒரு எல்லையற்ற சுதந்திர உணர்வைக் கொடுத்தது. சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓடவிட்டு பின் கண்ணாடியில் தெரிந்த என்னை புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இப்படியான அசட்டு தனங்களை செய்து பார்க்க ப்ரைவசி எவ்வளவு தேவைப் படுகிறது. அறையின் ஒருபுறம் சுவரற்று கண்ணாடி மட்டும் கொண்டு  மூடி இருந்தது. அதன் வெள்ளை  திரை சீலையை விலக்கி இலைகளை உதிர்த்து ஹோட்டலின் நடுவில் நின்றிருந்த மாப்பில் மரத்தை ஒரு படம் எடுத்தேன்.

கூடவே லேசாக பெய்திருந்த மழையின் ஈரமும் பதிவாகி இருந்தது. இப்படி அறையின் உள்ளிருந்த கட்டிலை, டேபிளை எல்லாம் சில நிமிடங்களில் எடுத்து விட்டு குளிக்க சென்றேன். வசந்தகாலத்தை வரவேற்க இலைகளை எல்லாம் உதிர்த்து புதிய இலைகள் கட்டி  மினுக்கும்  சாலையோர மரங்களைப் போல என்னிடம் களைப்பு உதிர்ந்து உற்சாகம் மின்னியது.

அறையைப் பூட்டி வந்து சைத்ரா தயாரா என தெரிந்து கொள்ள அவளின் அறைக் கதவை தட்டினேன். சைத்ராவிற்குப் பதில் பக்கத்துக்கு அறை திறந்தது. அமீத் எஸ் என்றான். நான் என் தோழிக்கு காத்திருக்கிறேன் என்றேன். அவன் ஓகே என்று விட்டு பின் என்ன சொல்வது எனத் தெரியாமல் யு குட் வெயிட் இன்சைட் என கதவுகளை விரியத் திறந்து வைத்தான். நான் இட்ஸ் ஓகே ஷி வில் பீ அவுட் இன் எ மினிட் என்றேன். அவன் ஓகே என்று விட்டு கதவை மூடிக் கொண்டான். எங்கே மீண்டும் அவனை தொந்தரவு செய்து விடுவேனோ என்று திரும்பவும் கதவை தட்ட தயக்கமாக இருந்தது. கதவுக்கு மிக அருகில் சென்று சைத்ரா என்றேன். இதோ வருகிறேன் என்று பதில் வந்தது.

அதற்குள் பாரதி வருகிறாளா எனத் தெரிந்து கொள்ள அவள் அறையை தட்டினேன். இணையத் தொடர்புடன் யாருடனோ கால் செய்து பேசிக் கொண்டிருந்த பாரதி அறையை திறந்து கொண்டு வெளியில் வந்தாள். லௌட் ஸ்பீக்கர் போட்டிருப்பாள் போல கதவை திறந்ததும் சரியாக யாரோ 'எங்கே அந்தப் பொண்ணு சுகிர்தாவை காட்டு' என்று கேட்டார்கள். பாரதி என்ற பெயரைக் கேட்டதும் முன் ஒரு முறை அவள் தமிழாக இருக்கலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் அப்பொழுதான் அவள் தமிழ் என உறுதியானது.  எனக்கு கேட்டதைக் காட்டிக்  கொள்ளாமல் ஆர் யு கமிங் வித் அஸ் என்று கேட்டேன். நோ யா யாம் வெரி டயர்ட் என்றாள். ஆனால் எனக்குப் பசிக்கிறது நீங்கள் சாப்பிட்டு கிளம்புவதானால் உங்களுடன் சாப்பிட கீழே வருகிறேன் என்றாள். நாங்கள் கீழே வந்து ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு டேபிள் முழுக்க கலர் திரவங்களை ஆடர் செய்து உற்சாகமாக இருந்தார்கள் அலுவலக நண்பர்கள். நாங்கள் சாப்பிடுவதற்குள் லீனா ரிசெப்சன் பெண்ணிடம் ஆம்ஸ்டர்டாம் எப்படி செல்வது என்றும் ரூட் மாப்பும் வாங்கி இருந்தாள். எங்களிடம் குறிப்பிட்ட தூரம் வரை ஹோட்டலிலிருந்து டாக்ஸியில் செல்லலாம் என்றும் பின் அங்கே இருந்து ட்ரைன் பிடித்து இன்னொரு இடம் பின் அங்கிருந்து ட்ராமில் ஆம்ஸ்டர்டாம் என்றாள். ரிசெப்சன் பெண்ணிடம் சொல்லி டாக்ஸி ஏற்பாடானது. டாக்ஸி வந்ததும் நாங்கள் மூவரும் கிளம்பினோம்.

டாக்ஸி எங்களை ஸ்டேசனில் விட்டு சென்றது. உள்ளே நுழைந்து முன் டிக்கெட் எடுத்து ட்ரைனுக்காக காத்திருந்தோம். காற்று சில வினாடிகளுக்கு ஒரு முறை வீசியபடி இருந்தது.  காற்று மேலே படும்போது குளிர் ஊசியாக துளைத்தது. நானும் லீனாவும் குளிர் குளிர் என்றபடி இருந்தோம். சைத்ரா எனக்கு இந்தக் குளிரெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பது போல்  எங்களை பார்த்து புன்னகைத்தபடி இருந்தாள். ட்ரைன் வந்ததும் ஏறி டாம் ஸ்கொயர் வந்தோம். அங்கே இருந்து ட்ராமிற்காக காத்திருந்தோம். சில நிமிடங்கள் கடந்த பிறகும் அந்த பிளாட்போர்மில் நாங்கள் செல்ல வேண்டிய ட்ராம் வரவில்லை. பக்கத்தில் இருந்த சைன் போர்டில் குறிப்பிட்ட ட்ராம் வரும் சரியான பிளாட்போர்ம் நம்பரை பார்க்க அது நாங்கள் நின்றிருந்த பிளாட்போர்ம்க்கு நேர் எதிர்புறம் சற்று தொலைவில் இருந்தது. அங்கே நாங்கள் செல்ல வேண்டிய ட்ராம் நின்றிருந்தது.

நான் குளிரிலிருந்து தப்பிக்க எனவும் ட்ராமை பிடிக்கவும் சேர்த்து சற்று வேகமாக நடந்தேன். நான் முன்னால் சென்றால் அவர்கள் இருவரும் வரும் வரை சற்று ஹோல்ட் பண்ணி வைக்கலாம் என்று நினைத்தேன். பிளாட்போர்மில் நிறையப் பேர் நின்றிருந்தார்கள். வேறு ஏதோ ட்ராமிற்காக காத்திருக்கிறார்கள் என நினைத்தேன். அவர்களை எல்லாம் கடந்து சென்று ட்ராமின் டிரைவரிடம் ஆம்ஸ்டர்டாம் செல்லுமா என்றேன். அவர் ஆம் என தலை அசைத்து சற்று பொறு என சொன்னார். அவர் ட்ராமை இயக்கி என்னை கடந்து சென்று நிறுத்தினார். மூன்று வழிகள் இருந்த ட்ராமின் கடைசி வழிக்கருகே நான் நின்றேன். அங்கே நின்றிருந்த எல்லோரும் ட்ராமில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

நான் லீனாவையும் சைத்ராவையும் பிடிக்க வேக வேகமாக முன் வழிக்கருகே சென்றேன். அவர்கள் இருவரையும் காணோம். ஒரு கணம் என்ன செய்வதென திகைத்து பின் ட்ராமில் ஏறி தேடினேன். கண்ணுக்கு தெரிந்தவரை தேடியும் அவர்களைக் காணோம். திரும்ப இறங்கி பிளாட்போர்மில் தேடினேன் அங்கும் இல்லை. பிளாட்போர்ம் வெறிச்சோடிக் கிடந்தது. எப்படியும் அவர்கள் ட்ராமில் இருக்கலாம் என ஒரு குருட்டு நம்பிக்கையுடன்  திரும்பவும் ட்ராமில் ஏறிக் கொண்டேன். ட்ராம் கிளம்பியது. சற்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ம்ம்ஹூம்  நான் அவர்கள் இருவரையும் தொலைத்து விட்டிருந்தேன். அப்பொழுதான் என்னிடம் ஹோட்டல் அட்ரெஸ், மொபைல், ரூட் மாப் என எதுவும் இல்லை லீனாவை நம்பி மட்டுமே வந்திருக்கிறேன் என உரைத்தது. மெதுவாக பயம் என்னுள் இறங்கத் துவங்கியது.
 மேலும்...

Friday, March 1, 2013

ஹாலந்த் - 1

என் முதல் பயணம் கொடுத்த உற்சாக அனுபவத்தை தொகுத்து சேமிக்கவெனவும், மாதங்களாகியும் இன்னும் மறக்க முடியாத எதிர்பாரா அதிர்வை கடக்கவெனவும் இதை எழுத துவங்குகிறேன்.

நெதர்லாந்த் பயணம் குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி  பயணத்திற்கு தேவையானவைகளை வாங்கிக் கொண்டிருந்தேன். நெதர்லாந்தில் ஒரு வார கால நெட்வொர்கிங் பயிற்சியை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பயணத்திற்கு  இன்னும் ஒரே வாரம் தான் இருந்தது அதற்குள் எல்லாம் வாங்கியாக வேண்டும் என்ற பரபரப்பு உள்ளூர ஓடியபடியே இருந்தது. முதல் முறை அயல் தேசப் பயணம் என்பதால் கொஞ்சம் தயக்கம், பயம் மற்றும் பயணத்தை ஒட்டிய இதர உணர்வுகள் எழுந்தெழுந்து அமிழ்ந்தது. அலுவலகத்தில் இன்னும் பலர் உடன் பயணிக்கிறார்கள் என்றாலும் என் டீமிலிருந்து நான் மட்டுமே பயணிக்கிறேன் என்பதால் அங்கே சென்று  தனியாக இருக்க ஓரளவு என்னையே நான் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். ஒருவகையில் அறிந்தவர்கள் எல்லோரையும் விட்டு தள்ளி இருக்கப் போவது கொஞ்சம் குதூகலமாகக் கூட இருந்தது. வழக்கமான அலுவலகம், வீடு என்றில்லாமல் ஒரு வாரம்  எல்லாமே புத்தம் புதுசாய் இருக்கப் போகிறது என்ற எண்ணம் எனக்கு உற்சாகம் ஊட்டிக் கொண்டிருந்தது.

மேலும் ஐரோப்பா செல்வது என்னுடைய நெடுங்கால கனவு என்பதால்  எனக்கு இந்தப் பயணம் உள்ளே  மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. நெதர்லாந்த் பயணம் முடிவான உடன் யார் யார் உடன் பயணிக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். ஐம்பதுக்கும்  மேற்பட்டவர் பயணிக்கும் பயண பட்டியலில் ஜோதி, பாரதி, சைத்ரா மற்றும் பிரமிளா இவர்கள்  பெயரைப் பார்த்தும் கொஞ்சம் இவர்களோடு அறிமுகம் இருக்கிறது என்று சற்று நிம்மதியாக இருந்தது. மற்றவர்களைக் காட்டிலும் ஜோதியோடு ஒரு சில முறை பேசி இருக்கிறேன். சமீபத்தில் கூட வேறு ஒரு பயிற்சி வகுப்பில் ஜோதி என்னோடு இருந்தாள். அதே வகுப்பில் விஷ்வா மற்றும் லீனா பழக்கமானார்கள். அவர்களும் எங்களோடு நெதர்லாந்த் பயணிப்பவர்கள் என்பதால் நாங்கள்  செல்ல இருக்கும் அந்தப் பயணம் குறித்து மதிய உணவு இடைவேளையில் பேசிக் கொண்டிருந்தோம். பயிற்சி ஞாயிறு துவங்குகிறது ஆனால் நாங்கள் சனிக் கிழமையே நெதெர்லாந்து சென்றடைவோம் என்பதால் அன்று ஆம்ஸ்டர்டாம் சென்று வரலாம் என்று பேசிக் கொண்டோம்.  ஆம்ஸ்டர்டாமில் பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் தங்கி இருக்கும் ஹோட்டலிலிருந்து அங்கே எவ்வாறு செல்லலாம் என்பது  குறித்த தகவல்களை  எல்லாம்  கூகிள் செய்து பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன் என்றாள் லீனா. நானும் ஜோதியும் சரி நாங்களும் உடன் வருகிறோம் என்றோம்.

பயணத்திற்கு இரு தினங்கள் முன்பு டிராவல் டீமிலிருந்து பயண வழி முறைகளை விளக்க அழைத்திருந்தனர். ஆம்ஸ்டர்டாம் ஏர்போர்டில் எங்களை வரவேற்க ஒரு டீம் இருக்கும் என கூறி பயணத்திற்கு தேவையான யூரோக்களையும் கொடுத்தனர். இந்த மீட்டிங்கில் நாங்கள் தங்கப் போகும் ஹோட்டல் ஆம்ஸ்டர்டாமிலிருந்து ஒரு முக்கால் மணி நேரப் பயணத்தில் லாங்கேலான்  என்ற இடத்தில் உள்ளது எனவும் அது நகர எல்லைக்கு சற்று வெளியே கன்ட்ரி சைட்டில் உள்ளது  அதாவது கிராமப்புறதில் உள்ளது என்றும் தெரிய வந்தது. நேரம் கிடைக்கும்போது அருகே உலாவ செல்லலாம் அங்கே விண்ட்மில்களைப் பார்க்கலாம் என்றும் கூடுதல் தகவல்களைக் கொடுத்தனர். இப்போது கிராமங்கள் வேகமாக தன்  அடையாளத்தை இழந்து கொண்டிருந்தாலும் நகரங்களைப் போல் அல்லாது கிராமங்களில் இன்னும் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் பழமையை பார்க்க முடியும். எனவே கிராமத்தைப் பார்க்கப் போகிறோம் என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.பின்னர் பெங்களூரில் இருந்து செல்பவர்கள் எல்லோரும் ஒரே விமானத்தில் அல்ல 2 மணி மற்றும் 3 மணி என இரு வேறு விமானங்களில் பயணிக்கிறோம்  என்று தெரிய வந்தது. 2 மணி விமானம் எனக்கு ஏற்பாடாகி இருந்தது. அதில் ஜோதி இல்லை. அவள் எனக்கு பின்னால்  3 மணிக்கு தான் கிளம்பி வருகிறாள் என்றதும் கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. என் டிக்கெட்டில் அமித் மற்றும் பாரதியின் டிக்கெட்டும் சேர்ந்திருந்தது. பாரதியை பார்த்திருக்கிறேன் இருந்தாலும் ஜோதி அளவுக்கு கூட பழக்கம் இல்லை. அமித்தை பார்த்தது கூட கிடையாது.

பயண தினத்திற்கு முன் தினம் நான் எல்லா டாக்குமென்ட்களையும் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டிருக்கும்போது சைத்ரா என்னை தொடர்பு கொண்டாள். சைத்ராவை ஒரு சில மாதங்கள் முன்பு ஒரு மீட்டிங்கில் சந்தித்திருந்தேன். அவளும் நான் செல்லும் அதே பிளைட் என்பதால் எதற்கும் என் செல் நம்பரை வாங்கிக் கொண்டாள். அதிகாலை இரண்டு மணிக்கு பிளைட். எனக்கு எப்போதும் பயணத்திற்கு முன் அதாவது பயணம் மேற்கொள்ளும் சில மணி நேரங்களுக்கு முன்  பயணம் குறித்த எல்லா சுவாரஸ்யங்களும் அமிழ்ந்து மிகுந்த பயம் எழும். பழகியவைகளுக்கு உள்ள  முக்கியத்துவம் அப்போதுதான் விளங்கும். பழகிய இடம், பழகிய அறை,  பழகிய படுக்கை உற்றார் உடன் இருக்கும் சௌகர்யம்  எல்லாம் கரைந்து தனியான உணர்வு பயத்தை உண்டு பண்ணியது. இதெல்லாம் ஒரு வாரத்திற்கு தான் என்ற கால அளவு/அறிவு மனதுக்கு புலப்படவில்லை.இப்போ இந்த பயணம் ரொம்ப அவசியமா என்று கேட்டது ஒரு பக்கம் மனம். பேசாம நான் இங்கேயே இருந்துடறேன் என்னை விட்டுடுங்களேன் என்று மானசீகமாக கெஞ்சியது. விமான விபத்துகளெல்லாம் அப்பொழுதுதான் நினைவில் வந்தது. திரும்பவும் இங்கே வருவோமா நேத்ராவை பார்ப்போமா என்று பயமாக இருந்தது. அப்பொழுது நேத்ரா வேறு ஊரிலிருந்ததால் ஒருவேளை நான் செல்லும் விமானம் விபத்துக்குள்ளானால் நான்  கடைசியாக ஒரே ஒரு முறை கூட நேத்ராவைப் பார்க்காமல் போய் விடுவேன் என்ற பயம் எழுந்தது. இப்படியான பயத்துடனும் கவலை உணர்வுடனும் ஏர்போர்ட் கிளம்பினேன்.

நண்பர்களுடன் டாக்சியில் ஏறி அமர்ந்ததும் கொஞ்சமாய்  மனம் பயணத்திற்கு தன்னை தயார் செய்தது. ஏர்போர்ட்டை நெருங்கத் துவங்கும்போது சைத்ரா என்னை அழைத்தாள். எங்கே இருக்கிறாய் என்றாள். நான் இன்னும் சற்று நேரத்தில் ஏர்போர்ட் சென்றடைவேன் என்றேன். அவள் தான் அப்போதுதான் வீட்டிலிருந்து கிளம்புவதாக சொன்னாள். நீ வந்து சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்றேன். அவள் இன்னும் முக்கால் மணி நேரம் ஆகும் என்றாள். பிறகு ஒரு வித வருத்ததுடன் என் நண்பர்கள் எல்லாம் 3 மணி ப்ளைட்டில் வருகிறார்கள் எனக்கு இந்த ப்ளைட்டில் யாரையும் தெரியாது என்றாள். கவலைப் படாதே நான்  உடன் இருக்கிறேன் என்று தைரியம் சொன்னேன். அது எனக்கே நான் சொல்லிக் கொள்வது போலவும் இருந்தது. அவள் தாங்க்யூ என்றுவிட்டு தொடர்ந்து நீ செக் இன் செய்து உள்ளே சென்று விடுவாயா என்றாள். இல்லை நீ வரும் வரை நான் வெளியிலேயே காத்திருக்கிறேன் என்றேன். அவள் மிக்க நன்றி என்றாள்.

என்ன இருந்தாலும் ஒரு கம்பெனியை மனம்  விரும்பத்தான் செய்கிறது. நான் ஏர்போர்ட் சென்று சைத்ரா விற்காக காத்திருந்தேன். பிரமிளா தன் கணவன் விஸ்வநாத் உடன்  நின்றிருந்தாள். விஸ்வநாத்தும் எங்கள் அலுவலகத்தில்  பணி புரிபவர் என்பதால் இருவரையும் பார்த்து புன்னகைத்து ஒரு ஹாய் சொன்னேன். சற்று நேரத்தில் சைத்ரா வந்தாள். செக்கின் முடித்து உள்ளே செல்லும்போது சைத்ரா பாத்ரூம் சென்று ரெப்ரெஷ் செய்யலாம் என்றாள். பாத்ரூம் சென்று விட்டு உன்னிடம் பேஸ் வாஷ் இருக்கிறதா என்றாள். நான் கொடுத்தேன் முகம் கழுவி கண்ணுக்கு கீழ் மை கசிந்துவிட்டது என்று சொல்லியபடி டிஸ்யுவை சற்றே ஈரப் படுத்தி கண்களுக்கு கீழே மை இடுவதைப் போல பாவனையுடன் அதை துடைத்தாள். நான் காய்ந்த உதடுகளில் லிப் கார்டை பூசிக் கொண்டிருந்தேன். இருவரும் வெளியே வந்தபோது அடுத்த விமானத்தை பிடிக்க அவள் நண்பர்கள் வந்துவிட்டிருந்தனர். விஷ்வாவை முதலில் பார்த்திருக்கிறேன் என்பதால் ஹாய் என்றேன். அவர்களின் உரையாடலைக் கலைக்க விரும்பாமல் சற்றே தள்ளி நின்றேன். கன்னடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். என் பெயர் அடிபடவே என்ன என்று கேட்டேன். ஹேய் உனக்கு கன்னடா தெரியுமா என்றாள். நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றேன். நேரம் ஆகவே அவனிடம் பை சொல்லி விடை பெற்று அங்கே அமர்ந்திருந்த பாரதி மற்றும் பிரமிளாவுடன் உள்ளே சென்றோம். தயக்கத்தோடேயே கொஞ்சம் கொஞ்சம் பேசி பரீட்சியமானோம்.

சைத்ரா நாங்கள் இருவரும் அருகருகே இருந்தால் நன்றாக இருக்கும் என்றாள். என் இருக்கைக்கும் மூன்று வரிசைகள் தள்ளி அவள் இடம் இருந்தது.அவள் எனக்குப் பின்னால் சென்றுவிட்டாள். பாரதி எனக்கு வலது புறமும் அமித் எனக்கு இடது புறமும் அமர்ந்தனர். அமித்திடம் மாறி அமரக் கேட்கலாம் என்று நினைத்து அமித் என்றேன். அவன் எஸ் என்றான். என்னவோ பிறகு அவனிடம் கேட்கத் தோன்றவில்லை. சைத்ராவை திரும்பிப் பார்க்க அவள் சௌகர்யமாகத் தான் இருப்பதாகப் பட்டது. நான் பிறகு பேசாமல் அமர்ந்து கொண்டேன். பாரதி என்னுடன் பேசியபடி வந்தாள்.பிறகு அவளருகில் நானும் சௌகர்யமாக உணர்ந்தேன். நாங்கள் பாரிஸ் சென்று வேறு பிளைட் மாறி ஆம்ஸ்டர்டாம் செல்ல வேண்டும். ப்ளைட்டில் சுத்தமாக தூக்கம் வரவில்லை. மிக சோர்வாக இருந்தது. ஒரு வழியாக பாரீஸ் வந்து விமான நிலையத்தில் கொஞ்சம் அலைந்த பிறகே செல்ல வேண்டிய விமானத்தை கண்டுபிடித்தோம். இந்த டச் விமானம் மிக சௌகர்யமாக இருந்தது. இதில் சைத்ரா என்னருகில் அமர்ந்தாள்.  எனக்கு எப்போது ஹோட்டலுக்கு போவோம் என்றிருந்தது போனதும் நன்றாக தூங்க வேண்டும் என்றிருந்தது. தலை பயங்கரமாய் வலித்தது. பணிப்பெண் வந்ததும் நீர் வாங்கி மாத்திரையைப் போட்டுக் கொண்டேன். சைத்ரா முன்பே விமானத்தில் நன்றாக தூங்கியதால் எந்தக் களைப்பும் இல்லாமல் புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். நான் கொஞ்சம் வேடிக்கை பார்த்தபடி வந்தேன். வெயில் விமான ரெக்கையில் படரத் துவங்கியது. அரைமணி நேரத்தில் ஆம்ஸ்டர்டாம் அடைந்தோம். ஆம்ஸ்டர்டாம்  விமான நிலையத்தில் எங்களுக்கு உதவ என அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தவர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் அங்கிருந்து நாங்கள் வேறே பஸ்ஸில் ஹோட்டலுக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். விமான நிலையம் விட்டு வெளியே வந்ததும் குளிர் தாக்கியது. பஸ்ஸில் அரை மணி நேரப் பயணம் என்றார்கள். நாங்கள் பஸ்சில் ஏறி அமர்ந்ததும் பஸ் கிளம்பியது.
                                                                                                                                              .....மேலும்