Thursday, April 29, 2010

பேசி(ய) பொழுது

எதிர்பாரா நேரத்தில்
எதிர்பாரா இடத்தில்
பேசியின் ஆளுமைக்குள்
இருந்த நீ
கவனியாத அப்பொழுதில்
பருகக் கொடுத்தாய் உன்னை
மறக்க முடியாத
ஆச்சர்யப் பரிசாய் எனக்கு

ஒரு நீண்ட புன்னகையில்
என்னை பார்க்க செய்யும்
முயற்சியில்
உன் முகம் பார்த்தே
கடந்தன அச்சில வினாடிகள்
என்னை பார்த்தும் உணராமல்
பேசியின் மறுமுனையில்
இயங்கியதோ உன் மனது

மனதில் அடையாளமிட்டுக் கொண்ட
உன் வெளிர்நிற ஆடை
உறுதிபடுத்துமா
நான் பார்த்ததை
நிஜமென
உனக்கும் எனக்கும்

Sunday, April 25, 2010

நீயில்லாத நானில்லை

அந்த மழை நாளின்
ஓர் இரவில்
நீர்சொட்டும் மரத்தடியில்
ஒருவரை ஒருவர்
மௌனித்து பார்த்திருந்தோம்
தாழ் கிளையின்
ஒரு இலை விளிம்பை பற்றி
மெதுவாய் வழுக்கி விழுந்தது
நம் காதல்

முத்தமிட ஓரிடம் தேடி
எல்லைகள் கடந்து
ஓடிக் களைத்து
ஓரிடம் நிற்கிறோம்
திரும்பிப் பார்க்கையில்
யாரும் துரத்தவில்லை
நம்மை தவிர

மறந்து விடலாம் என்று
தீர்மானித்த பிறகும்
எத்தனை முறை
அணைத்தாலும்
மறுபடி பற்றிக்கொள்ளும்
அந்த மாஜிக் மெழுகுவர்த்தியாய்
உன் நினைவுகள்

இம்முறை எறிகிறேன்
ஏழுகடல், ஏழுமலை தாண்டி
ஒரு நீழ்குகையின்
ஆழக் குளத்துள்
விழுந்ததும் உணர்கிறேன்
கரையில் பாதி நீ
நீரில் பாதி நான்