Monday, August 2, 2010

முகம்

அந்தப் பேருந்தில்
நீண்ட இரவு பிரயாணத்
துவக்கத்திலேயே பார்த்தேன்
கடைசி சீட்டுக்கு
முந்தைய சீட்டில்
எங்கேயோ பார்த்த முகம்
எங்கு பார்த்திருப்பேன்
பள்ளியிலா கல்லூரியிலா
அல்லாது உறவினர்கள் வீடுகளில்
ஏதோ ஒன்றிலோ
யோசித்தபடியே அமர்ந்திருந்தேன்
ஞாபகம் வந்தபாடில்லை
களைப்பில் உறங்கியும் விட்டேன்
பாதி தூரம் கடந்த பேருந்து
இளைப்பாற நின்றிட
கண்களை கசக்கியபடி
நிமிர்ந்து அமர்ந்தேன்
என்னை கடந்து இறங்கிப் போனாள்
மறுபடியும் அதே முகம்
எப்படியும் பிடித்துவிட
நினைவுகளை கசக்கிப் பிழிந்தேன்
பயணிகளுக்கென முளைத்திருந்த
பிரத்யேக டீக்கடை முன்
தேநீர் அருந்தபடியே
ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்
சடாரெனத் திரும்பிப் பார்த்தாள் என்னை
கண்டு கொண்டதன் அடையாளமாய்
புன்னகைத்து அழைத்தாள்
புரிந்தது அவளை
நெருங்கியதும்
நலமா கேட்டாள்
மேலும் கீழுமாய் அசைத்தேன் தலையை