Showing posts with label ஒரு கவிதை. Show all posts
Showing posts with label ஒரு கவிதை. Show all posts

Friday, January 27, 2012

பார்க்கலாம்

எங்கிருந்து துவங்கி
எங்கே முடியுமென
யார்தான் சொல்லமுடியும்
இங்கே துவங்கி
அங்கே முடியலாம்
அங்கே துவங்கியது
இங்கேயும்  முடியலாம்
அல்லது தொடரலாம்

Thursday, June 16, 2011

அதீத மயக்கம்

நெடுநேரம் போராடி
நடுநிசியில் துய்த்த அவளுக்கு
அவனும்
நீராடியும் வடிந்திராத அவனுடற் சூடும்
கலைந்த சிகையும்
மதுவுண்டு சிவந்த விழிகளும்
அதை மறைக்காத இமைகளும்
காதோரம் இறைக்கும் நாசியும்
கிளர்த்தும் மீசையும்
சூழ்ந்த புகைக்கிடையில்,
சற்றே நடுங்கும் உதடுகளும்
அது கொடுத்த புகை முத்தமும்
அதன் சுகந்தமும்
இதழ் கடித்த பற்களும்
அதை தடவும் நாவும்
தன்னை சுமந்த மார்பும், அங்கே குருமுடிகளும்
விரல் துளைக்கும் விரல்களும்
கால் பின்னும் கால்களும்
துவங்கும் மிதமும்
வெடிக்கும் வேகமும்
முனகும் மோகமும்
கொடுத்த விழிப்பை
ஊளையிட்டு சபித்தன
உறக்கம் பிடிக்கா நாய்கள்

Friday, May 13, 2011

ஒற்றைச் செம்பருத்தி

மையிட்டு, மலர் சூடி
உறங்குவதற்கு முன்
உறக்கத்தின் இடையில்
உறங்கி எழுந்ததும்

என எத்தனை கனவுகள்
அப்போதெல்லாம்

தொலையுமெனில்,
கலையுமெனில்,
எல்லாமே எல்லாமே
எல்லாமே எதற்கு?

வாசச் செடியில்
ஒற்றைச் செம்பருத்தி
அதனாலென்ன
இருந்துவிட்டு போகட்டும்

அடுக்களை ஜன்னலைத்தான்
திறப்பதேயில்லை
அந்தப்புரம் ஜோடிப் புறாக்கள்

Friday, March 4, 2011

திரையோவியம்

திரைச்சீலையின் முடிவில்
கிடந்த சிலையின் மேல்
சிறகு விரித்த பறவையொன்று
இளைப்பாற இறங்க
கோச்சை சேவலின்
வீரியம் கொண்டெழுந்தது சிலை
திடீர் உயிர்தலில் திடுக்கிட்டுப் பறக்கும்
பறவையின் கால்களைப்பற்றி
தன்மேல் கிடத்திய சிலை
அலகுமுட்டி, இறகுவருடி சொல்கிறது
இதுவரையும் கேட்டிறாத கதைகளை பறவைக்கு
சொல்லியும் கேட்டும் களித்த வேளையில்
நடு சாமக் கனவின் சாபம் தொற்ற
சிலைக்கு முளைத்தன இருபெரும் சிறகுகள்
பறவைக்கு வாய்த்தது பேரழகுச் சிலையுரு
உருமாறிய அதிர்வில் குழைந்த சீலையில்
கலங்கிப் போயின பின்னான காட்சிகள்

Wednesday, March 2, 2011

ஆயாசம்

கண் குறுக்கி
தளிருதடு பிரித்து
இப்புறம் அப்புறம் துழாவியின்னும்
காம்பு பற்ற விளங்காது
வயிறொட்டக் கதறுகிறது
இன்றைக்கு பிறந்த சிசு

நெடு நேரமாய்
போராடி ஈன்ற களைப்பிலும்
ஊட்ட முயன்று
தோற்றோய்ந்த தாய்க்கும்
இது முதல் குழந்தை

அழுதழுதே தொய்ந்த குழந்தை
தீராப் பசியோடே சோர்ந்துறங்க
சுறுசுறுவென
தனம் வீங்கி ஊறிய நேசம் கட்டி
மீண்டுமொரு கூர் வலியில்
உழல்கிறாள் தாய்

இப்படி
விரல் எட்டா இடுக்குகளில்
விழுந்துவிட்ட தருணங்களை, பிரியங்களை
எதைக் கொண்டு மீட்க?
இனியும்
எந்த நம்பிக்கையோடு வாழ?

Saturday, January 8, 2011

நிலை

குழந்தைகளற்றது என் தெரு
பஞ்சு மிட்டாய், பலூன் என
எவன் தொல்லையுமில்லை

அன்று கவிதை விற்க வந்தவனை
வாசலோடு அனுப்பிவிட்டேன்

பூக்காரியிடம் எனக்கென்ன பேச்சு

உனக்கும் தான்
அனுமதியின்றி அறைக்குள் நுழைவது
இன்றே கடைசியாய் இருக்கட்டும்
கதவை இறுக அடைத்துவிட்டு
சொல்லாமலே போய்விடு

இந்த அறை
மூலையில் ஒற்றை நாற்காலி
வெறிக்க ஒரு ஜன்னல்
வாசக் காரையை பெயர்க்கும் வெயில்
வசீகரம்தான் வாழ்க்கை

Sunday, December 19, 2010

விளைந்தவைகள்

ஒரு அழகிய மலரிலிருந்து
சிதறிய கருத்த விதைகளை
பொறுக்கி எடுக்கிறேன்
கணிசமாக சேர்ந்து
கனத்த மடியினை
பூவரச மர நிழலில்
அவிழ்த்துக் கொட்டி
இரு பங்காய்ப் பிரித்தபிறகு
ஒரு பங்கை
உறவுகளுக்கு நேர்ந்துகொண்டு
செழிக்கவென விதைத்தும்
மற்றொன்றை
பிரிவுகளுக்கென்றழைத்து
வீசியெறிந்தும் சென்றேன்
அன்றிரவு பெய்த மழை
அடித்துக்கொண்டு போனது
விதைத்தவைகளை
வீசி எறிந்தவைகளோ
விளைந்துகிடக்கிறது மனதடைத்து

Thursday, November 18, 2010

காரணங்கள்

ஒன்று
இரண்டு
மூன்று என
ஆயிரம் காரணங்கள் வரை இருக்கலாம் என்னிடம்
பறவைகள் கூடடைவதை
இரைச்சல்கள் என சபிக்கவும்
ஒற்றைப் பனித்துளி ஏந்திய
ரோஜாவை அலட்சியித்தொதுக்கவும்
சம்பங்கி பூவினை சுற்றியாடும்
தேன்சிட்டை வெறுக்கவும்
கண்டதும் காலை நக்கும்
நாய்க்குட்டியை அருவெருக்கவும்
கலகலப்புகள் நிறைந்திருக்கும் கூடத்தில்
தனிமைப்படுத்திக்கொள்ளவும்
வாழ்தலின் சுவாரசியங்களை
என்றைக்குமாய் மறுதலிக்கவும்
இவைகளற்ற இன்றோ
நீ இருந்தாய்
நீ மட்டுமே இருந்தாய்

Sunday, November 14, 2010

தாகம்

உன் முதல் தொடுகை
முதல் முத்தம்
முதல் அணைப்பு
எப்படி இருக்கும்
என்பதாய் துவங்குகிறது எண்ணங்கள்
இம்மாலையில்
தருணங்களுகேற்ப அமையுமா
அல்லாது மனநிலைகேற்ப?
இல்லையெனில்
சூழல் நிர்ணயிக்குமோ
இறுக்கத்தையும் நெருக்கத்தையும்

தருணங்களே எனில்
அடைமழை இரவில்
முழுக்க நனைந்து
உடல் சிலிர்த்து
உன்னை ஒரு உயர்
பார்வை பார்க்கையில்
நிகழட்டும் அது

மனநிலை எனில்
நான், நீ, நம் காதல்
தவிர்த்து மற்றவை மறைந்து போன
உன்னத நிலையில் அமையட்டும் அது

சூழல் எனில்
நடு வனத்தில்
பிணைந்தாடும் பாம்புகளின்
மோகன நடனத்தின்
அதிர்விலும் லயத்திலும்
இருக்க வேண்டும் அது

Saturday, October 9, 2010

ரோஜா

கல்லறைத் தோட்டத்தினை
கடக்கும்
ஒவ்வொரு முறையும்
அத்தனை நேரம்
உடன் வந்த எண்ணங்கள்
உறைந்துவிடுகிறது

தின்றுகொண்டிருந்த பொழுதின்
சூனியத்தை கழிக்கவென
ஓர் நாள்
உள்செல்ல விழைந்தேன்
ஒரு ரோஜாவோடு?

கல்லறை படுக்கைகளின்
உள்ளே
உடல்கள் உறங்குவதாயும்
வெளியே
உயிர்கள் அலைவதாயும்
பார்க்கும் நிலைகேற்ப
காட்சிகள்
மாறி மாறி புலப்பட

ஒரு நேரம் நிலவும்
உறக்கத்தின் அமைதியில்
புழுங்கியது
பாழ் நினைவுகள்

உயிர்கள் எழுப்பும்
விதிர்க்கும் ஓலத்திலோ
எழும்பிடும் துர் எண்ணங்கள்

இறுகப் பற்றிக்கொண்ட
அவைகளுக்கு
என்னிரு கரங்களை
துண்டித்து ஈய

மறுத்த இரண்டுக்கும்
தேவைப் பட்டதென்னவோ
இதுவரை
நான் பற்றி இருந்த
ஒற்றை ரோஜா

Monday, September 27, 2010

பிரியமோ சுமையோ நானறியேன்

தேன் கனிகள் சுமக்குமென
நட்டு வைத்திருக்கிறார்கள்
விதைத்தபோதோ முளைத்தபோதோ
நான் அருகிருந்து அறிந்ததில்லை

வருடங்களை உண்டு
வளர்ந்த அது
பூத்ததுமில்லை காய்ததுமில்லை
என அங்கலாய்த்த அவர்களிடம்
எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை

எதன் நிமித்தமுமில்லாமல்
விட்டு விலகி வந்து
வெகு நாட்கள் ஆனநிலையில்
போன வருடம்
மறுபடி பார்க்க நேர்ந்தது
அது இருந்திருந்த இடத்தில்
இருந்தது
பூமிக்கு மேல்
ஓர் இரண்டடி கட்டை

அருகே சென்று பார்கிறேன்
வலிகளோ காயங்களோ
இருந்த சுவடில்லை
ஒரு வேளை காய்ந்திருக்கலாம்
வெட்டுபட்டிருந்த போது
என்ன நினைத்திருக்கும்
இப்போதென் மனதை
பற்றிகொண்டது அவ்விருட்சம்

மாதங்களே இடைவெளியென
கவனித்தபடியே இருந்தேன் அதை

ஆறு மாதம் முன் பார்க்கையில்
ஒரு புறம்
கரையான்கள் பற்றி இருக்க
நின்றது நின்றபடியே இருந்தது
சில கணங்கள் பார்த்திருந்து திரும்பினேன்

இரண்டு மாதங்கள்
முன் பெய்த மழையில் தான்
அது மீண்டும் துளிர்த்திருந்தது
முதன் முறையென
என் மனமும் கூட

இன்றடித்த வெயிலுக்கோ
இலைகள் வாட்டமுற்றிருக்கின்றன
செய்வதற்கொன்றுமில்லை
இனி நான் பார்க்க போவதுமில்லை

Sunday, September 19, 2010

இப்பொழுது விடியுமா

இல்லாத ஒன்றை
இருக்கிறதாய் எண்ணி கொள்வதும்
இருக்கிற ஒன்றை
இல்லை எனக் கொள்வதும்
இதோர் வேடிக்கையான மனது

எனக்கு பிடித்த நானாய்
மற்றும் எல்லோருக்கும்
பிடித்த நானாய்
இருந்தே
அலுத்துப் போகிறது எனக்கு

தேகங்களை உரித்து போட்டு
அலையும் காற்றுக்குள்
அரவமற்று
உயிரை புகுத்தி கொள்ளும்
உத்தி கற்பிக்கப்படுமெனில்
ஆங்கே முதல் மாணவியாய் நான்

அளந்து அளந்து பேசியது போதும்
வெட்கத்தை அவிழ்த்து விட்டே கேட்கிறேன்
வானை கிழித்து வரும்
மின்னலென வந்து தான்
எடுத்து போய்விடேன்
உன்னோடு என்னை

இந்நோய் முற்றிவிட்டது போல
பார்
ஏதேதோ பிதற்றியபடியே இருக்கிறேன்
உன்னை சேரும்
ஓர் வழி புலப்படுமா என

Monday, August 2, 2010

முகம்

அந்தப் பேருந்தில்
நீண்ட இரவு பிரயாணத்
துவக்கத்திலேயே பார்த்தேன்
கடைசி சீட்டுக்கு
முந்தைய சீட்டில்
எங்கேயோ பார்த்த முகம்
எங்கு பார்த்திருப்பேன்
பள்ளியிலா கல்லூரியிலா
அல்லாது உறவினர்கள் வீடுகளில்
ஏதோ ஒன்றிலோ
யோசித்தபடியே அமர்ந்திருந்தேன்
ஞாபகம் வந்தபாடில்லை
களைப்பில் உறங்கியும் விட்டேன்
பாதி தூரம் கடந்த பேருந்து
இளைப்பாற நின்றிட
கண்களை கசக்கியபடி
நிமிர்ந்து அமர்ந்தேன்
என்னை கடந்து இறங்கிப் போனாள்
மறுபடியும் அதே முகம்
எப்படியும் பிடித்துவிட
நினைவுகளை கசக்கிப் பிழிந்தேன்
பயணிகளுக்கென முளைத்திருந்த
பிரத்யேக டீக்கடை முன்
தேநீர் அருந்தபடியே
ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்
சடாரெனத் திரும்பிப் பார்த்தாள் என்னை
கண்டு கொண்டதன் அடையாளமாய்
புன்னகைத்து அழைத்தாள்
புரிந்தது அவளை
நெருங்கியதும்
நலமா கேட்டாள்
மேலும் கீழுமாய் அசைத்தேன் தலையை

Tuesday, July 13, 2010

அது

வெகு நேரமாய்
பார்த்தபடி இருக்கிறேன்
அது அமைதியாய் நிற்கிறது
உள்ளே செல்வார்
வெளியே வருவார்
எவருமின்றி தனியாய் நிற்கிறது
என்னையே பார்த்தபடி
அதன் பழுப்பு நிறக் கண்களிலிருந்து
புறப்பட்ட அந்த நிசப்தம்
என்னை ஊடுருவித் துளைக்கிறது
உரையாடல்கள் எதுவுமின்றி
மொழிகளுக்கப்பாற்பட்ட
ஒரு புரிதல் நிகழ்கிறது ஆங்கே
யாருமற்ற மைதானத்தில்
சுழலும் புழுதியிலேறி
போகிறோம் மேலே மேலே
அதன் ஒற்றைக் கர ஸ்பரிசம் தூண்டி
என்னில் கனிந்தவைகளை சுவைத்து
உப்பி பெருக்கிறது அது
முதலில் நான்
பிறகு அது
உச்சங்கள் தொட்டு விலகையில்
உத்திரத்திலிருந்து வழிகிறது
ஒரே சீராய் மங்கு வெயில்

Monday, July 5, 2010

இயல்பு

மலர் வீழின்
இலகுவாய் சுமந்திருந்து
அமிழ்த்தும் பாரங்களை
மூழ்கடித்து வீழ்த்தி
அசூயைகள் ஒதுக்கி
பறவைகளின் எச்சங்கள் விழுங்கி
பழகியிராத வழிகளும்
பயங்களற்று பயணித்து
திசையறியா வனங்களிலும்
பாதைகள் அமைத்து
வளைந்து நெளிந்து
மேலேறி கீழிறங்கி
சலனமற்று பரவி
பரவசமாய் ஆர்பரித்து
என்னில் மகிழ்ந்திருந்தவனின்
தாகங்கள் தீர்த்து
முத்தமிட்டு கடந்து
விரைகிறேன் நெடுந்தூரம்
இலக்குகளற்று
பயணமே முதல் முடிவாய்

Saturday, June 5, 2010

விழி(க்கு) எட்டா வானம்

நினைக்கவே கூடாதெனினும்
நம் காதலை எந்நாளும்
மறக்க முடிவதில்லை என்னால்
வெளிவராத நாள்பட்ட முள் ஒத்த
அந்த நினைவுகள் தடவுகையில்
வலிக்கிறது சுகமாய் உள்ளே

சர்க்கரை சீசாவினுள் நுழையும்
சிறு எறும்பின் ஆவலோடு
ரகசியப் பெட்டகம் திறந்து
உள்ளிறங்கி
எப்போதோ பதுக்கியிருந்த
புகைப்படம் எடுத்து
உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை

கலைந்து கிடக்கும்
நம் காதலின் மிச்சங்களை
கடந்து இன்னும் உள் செல்கையில்
தூசுபடிந்த வீணையிலிருந்து
நீயின்றி உயிரற்று
நீர்த்த கணங்கள் மீட்டிய
வார்த்தைகளற்ற இசை
வழிகிறது பெட்டகம் முழுக்க

என்றாவது வருவாய் என
காத்திருந்த நம்பிக்கைகள்
நசுங்கிக் கிடக்கிறது ஆங்காங்கே
அடி மனம் திறந்து கதறி
அவ்விடம் கடக்கையில்
கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்

Wednesday, June 2, 2010

காற்றிலாடிய இலை

மொட்டை மாடியின் பக்கச் சுவர்களை
பற்றியபடி இருந்தது
அண்டை வீட்டு மரத்தின்
கீழிறங்கிய இரண்டு வாதுகள்
காற்றின் ஓருரசலில்
விழுந்தது அதனின்றொரு பழுத்த இலை
காற்றின் சிறு வருடலுக்கும்
சிணுங்கியபடி தள்ளித் தள்ளிப் போனதவ்விலை
சிணுங்களை ரசித்த காற்று துரத்த தொடங்கியது
தப்பிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த இலை
மாடிப்பரப்பின் சிற்சிறு குழிகளின் ஒன்றில்
தன் கூர்முனை குத்தி நின்றது இளைப்பாற
இலையையே சுற்றி சுற்றி வந்த காற்று
தன் தீராத காதலை சொல்ல
நின்றபடியே மெல்ல காற்றின் ஆளுமைக்கு
இசைந்து கொடுத்தது இலை உடல் அசைத்து
வெட்கத்தில் மேகங்கள் கருத்தது
மழை ஜோடனைக்கு கச்சிதமாய் காற்றசைந்தது
உடன் இலை பரந்தாடியது
இலையிட்காற்றும் காற்றிலிலையும்
மாறி மாறி ஆடியபடியே கடந்து போகையில்
ஒற்றை துளி விசிறி மீட்டெடுத்தது என்னை
உன் நினைவுகளிலிருந்து

Sunday, February 28, 2010

என் ஆழ்மன காதலை

வருவதற்கு முன்னே
வந்து நிற்கிறேன்
வந்ததும்
கட்டி அணைக்கிறாய்

பார்காத பொழுதில்
பக்கத்தில் வருகிறேன்
பார்க்காதது போல்
பார்த்து விடுகிறாய்

தொடும் தூரம்
நெருங்கி நிற்கிறேன்
தொடாதும்
தொட்டு விடுகிறாய்

ரகசிய மொழியில்
பேசிக் கொள்கிறேன்
மௌனமாய் அதை
ஆமோதிக்கிறாய்

பார்க்கிறாய்
தொடுகிறாய்
அணைக்கிறாய்
ரசிக்கிறாய்

Monday, December 14, 2009

இணைந்த கைகள்

இருவரும் மாறி மாறி
காகிகத்தில்
இடது கை விரல்களை
விரித்து வைத்து
விரல் வடிவம்
வரைந்தபடி இருந்தோம்
ஒரு கட்டத்தில்
விளையாட்டு சலித்து
உன் காகித்தை
கசக்கி அறையின்
மூலையில்
எறிந்து விட்டுப்
போய்விட்டாய் நீ
பின்னே ஓடி வந்து
நீ படி இறங்கிப்
போனதை
உறுதி செய்து கொண்டு
கசங்கிய
உன் காகிதத்தின்
தாள் நீவி
உன் வெற்றுக் கையுள்
என் கை வைத்து
நிரப்பினேன்
காகிதக் கையில்
ரேகை வரிகள்
முளைக்கிறது
மெதுவாய்
முதலிரு கோடுகள்
இணைகிறது
மென்மையாய்
காகிதம் துடிக்கிறது

Thursday, December 10, 2009

இன்றைக்கும் என்றைக்கும்

தொடுகையில் சிலிர்க்கிற
தொடர்கையில் துடிக்கிற
விரலூர்கையில் தகிக்கிற
வெட்கம் பொங்கி வழிகிற
மின்னும் கண்களைத் தவிர்க்கிற
மார்பினில் தலை கவிழ்க்கிற
காதோரம் கிசுகிசுக்கிற
ஆளுமையில் தவிக்கிற
விடுவிக்க கெஞ்சுகிற
புணர்கையில் சுகிக்கிற
முத்தங்களில் கரைகிற
முடிக்கையில் துவள்கிற
நித்தியப் பெண்மை

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...