Thursday, June 24, 2010

பாப்பா பாட்டு

அந்த புதிய கட்டிடம்
அழைத்துச் செல்லும் தெரு
வழியெல்லாம்
இறைந்து கிடக்கும் மணலில்
சின்னஞ்சிறு பாதங்கள்

சிவப்பு ரிப்பன் கட்டிய சிறுமி
அவள் மேலே
தாவி ஏறும் நாய்க்குட்டி
விளையாட்டு முடிவில்
நாய் வாலில் ஆடும் ரிப்பன்

என் கண்களில் வழியும் நீர்
அழண்டா சரியாயிரும் என
கண் துடைத்து தேற்றுகையில்
தாய் அவள் குழந்தை நான்

சிக்னலில் நிற்கும் வாகனங்கள்
என்னை எட்டிப் பார்க்கும் குழந்தை
மெல்ல கன்னம் கிள்ளையில்
அந்த ஜொள்ளில் வழியும் கவிதை

மாலை நேரப் பூங்கா
சாட் பூட் த்ரீ என
அந்த சந்தோசக் கூச்சலில்
மீள்கிறதென் பால்யம்

Wednesday, June 9, 2010

பாவண்ணன் சிறுகதை - அகநாழிகை ஜூன் இதழில்

பாவண்ணன் எழுதிய 'அடைக்கலம்' சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. அவர் ஒவ்வொரு காட்சிகளையும், அது மனதுக்கு உள்ளே ஏற்படுத்தும் அலைகளையும் மிக அருமையாக விவரித்திருக்கிறார். படிக்க துவங்கியபோது ஒரு பாழான கோட்டையின் வரலாற்றைப் பற்றி தான் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். எனக்கு வரலாறுகள் படிக்குமளவுக்கு பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் இந்த கோட்டை பற்றி அவர் சொல்லிய விதத்தில் என்னால் அந்த கோட்டையையும் நெல், கரும்பு, வாழை கிராமங்கள் எல்லாவற்றையும் அழகாய் கற்பனை செய்ய முடிந்தது. ஆவலில் தொடர்ந்து வாசித்தேன்.

கதையில் வரும் சொக்கலிங்கம் என்கிற மனிதர் அந்தக் கோட்டைக்கு உள்ளே நடக்க தொடங்கியதும் கதை திசை மாறுகிறது. அதற்கு பிறகு நான் கண்களில் நீரோடு தான் படித்தேன். சொக்கலிங்கம் ஒவ்வொரு அறைக்குள்ளும் போய் பார்க்கையில் முதலில் முகம் சுழித்து பிறகு சுரக்கும் அனுதாபத்தில் அசூயைகள் மறைந்து இரக்கம் மேலிடுவது எதார்த்தம். அவர் சந்திக்கும் அந்த சுவாரஷ்யமான இளைஞன் கதாபாத்திரம் அவனது பேச்சு வெகு எதார்த்தமாய் மிகுந்த தெளிவோடு இருக்கிறது. முடிவில் நிதர்சனம் வலித்தாலும் இந்த மாதிரி இளைஞர்கள் வாழ்கையை ஏதோ ஒரு மூலையில் அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்கிற ஒரு சின்ன ஆறுதலும் கிடைக்கிறது. இதை நிச்சயம் என்னால் ஒரு கதை என்று பார்க்க முடியவில்லை.

அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாய் யோசித்துப் பார்கிறேன். நிச்சயமாக சொக்கலிங்கம் மனது பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும். அவரோட குழந்தைகளுக்கு இது இன்னொரு பாடமாக இருந்திருக்கும்.

எழுதிய பாவண்ணனுக்கும், வெளியிட்ட அகநாழிகைக்கும் வாழ்த்துக்கள்.

Saturday, June 5, 2010

விழி(க்கு) எட்டா வானம்

நினைக்கவே கூடாதெனினும்
நம் காதலை எந்நாளும்
மறக்க முடிவதில்லை என்னால்
வெளிவராத நாள்பட்ட முள் ஒத்த
அந்த நினைவுகள் தடவுகையில்
வலிக்கிறது சுகமாய் உள்ளே

சர்க்கரை சீசாவினுள் நுழையும்
சிறு எறும்பின் ஆவலோடு
ரகசியப் பெட்டகம் திறந்து
உள்ளிறங்கி
எப்போதோ பதுக்கியிருந்த
புகைப்படம் எடுத்து
உன் நீலச் சட்டையின்
கட்டங்களுக்குள் புதைக்கிறேன்
யாருமறியாமல் என் முத்தங்களை

கலைந்து கிடக்கும்
நம் காதலின் மிச்சங்களை
கடந்து இன்னும் உள் செல்கையில்
தூசுபடிந்த வீணையிலிருந்து
நீயின்றி உயிரற்று
நீர்த்த கணங்கள் மீட்டிய
வார்த்தைகளற்ற இசை
வழிகிறது பெட்டகம் முழுக்க

என்றாவது வருவாய் என
காத்திருந்த நம்பிக்கைகள்
நசுங்கிக் கிடக்கிறது ஆங்காங்கே
அடி மனம் திறந்து கதறி
அவ்விடம் கடக்கையில்
கால்கள் தட்டி உருண்டோடுகிறது
நீ என்றோ பரிசளித்திருந்த
சுகந்தக் குப்பி
அதிலிருந்து கசிகிறது உன் மணம்

Wednesday, June 2, 2010

காற்றிலாடிய இலை

மொட்டை மாடியின் பக்கச் சுவர்களை
பற்றியபடி இருந்தது
அண்டை வீட்டு மரத்தின்
கீழிறங்கிய இரண்டு வாதுகள்
காற்றின் ஓருரசலில்
விழுந்தது அதனின்றொரு பழுத்த இலை
காற்றின் சிறு வருடலுக்கும்
சிணுங்கியபடி தள்ளித் தள்ளிப் போனதவ்விலை
சிணுங்களை ரசித்த காற்று துரத்த தொடங்கியது
தப்பிக்க அங்குமிங்கும் ஓடிக் களைத்த இலை
மாடிப்பரப்பின் சிற்சிறு குழிகளின் ஒன்றில்
தன் கூர்முனை குத்தி நின்றது இளைப்பாற
இலையையே சுற்றி சுற்றி வந்த காற்று
தன் தீராத காதலை சொல்ல
நின்றபடியே மெல்ல காற்றின் ஆளுமைக்கு
இசைந்து கொடுத்தது இலை உடல் அசைத்து
வெட்கத்தில் மேகங்கள் கருத்தது
மழை ஜோடனைக்கு கச்சிதமாய் காற்றசைந்தது
உடன் இலை பரந்தாடியது
இலையிட்காற்றும் காற்றிலிலையும்
மாறி மாறி ஆடியபடியே கடந்து போகையில்
ஒற்றை துளி விசிறி மீட்டெடுத்தது என்னை
உன் நினைவுகளிலிருந்து