Monday, June 22, 2009

தொலைத்து விடுங்கள் என்னை

என்னை விரல்பற்றி
உச்சி வானுக்கு அழைத்து சென்று
ஒற்றை மேகத்துக்குள்
தொலைத்து விடுங்கள்
முடியாதா
அத்துவானக் காட்டில்
அடர் மரங்களின் இடுக்கில்
இட்டாவது திரும்புங்கள்
என் உணர்வுகள் புரியா
இந்த உறவுகளையும்
மனதை பீடித்து படர்ந்திருக்கும்
நினைவுத் தேமலையும்
இந்த மனிதர்களையும்
இந்த உலகையும் துறந்து
தனியாய்
என்னை, என் பெயரை
இந்த பெண் கூட்டை
எனக்கு வேண்டாது
என்னோடு ஒட்டிகொண்டிருக்கும்
எல்லாம் ஒதுக்கி
கட்டுப்பாடுகள் அறுத்து
பறந்து அலைவேன்
எல்லைகளற்ற நித்திய வீதியில்

7 comments:

யாத்ரா said...

அருமையான கவிதை சுகிர்தா,

//என் உணர்வுகள் புரியா
இந்த உறவுகளையும்//

நம்மால் கூட நம்மையே முழுமையாக புரிந்து கொள்ள முடியாதல்லவா

//மனதை பீடித்து படர்ந்திருக்கும்
நினைவுத் தேமலையும்
இந்த மனிதர்களையும்
இந்த உலகையும் துறந்து
தனியாய்
என்னை, என் பெயரை//

நினைவுகளும் அடையாளங்களும், நம்மைப் பற்றிய நம் மற்றும் பிறரின் பிம்பங்களும் தான் பிரச்சனையே

//இந்த பெண் கூட்டை
எனக்கு வேண்டாது
என்னோடு ஒட்டிகொண்டிருக்கும்
எல்லாம் ஒதுக்கி
கட்டுப்பாடுகள் அறுத்து
பறந்து அலைவேன்
எல்லைகளற்ற நித்திய வீதியில்//

ரொம்ப அருமை.

நந்தாகுமாரன் said...

அருமை ... என்னுடைய ‘விரிந்த சிறகுகள்’ கவிதையை நினைவு படுத்தியதற்கு நன்றி

ரகசிய சிநேகிதி said...

அழகா சொல்லியிருக்கீங்க... வேண்டும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு சுதந்திரம்...கிடைக்குமா? கொடுப்பார்களா?

Maddy said...

கவிதை உணர்வுகளை நன்றாக பிரதிபலிக்கிறது!! மக்களோடு மக்களாய், தினமும் வாழ்வில் யாரும் எங்கேயும் அழைத்து செல்லாமலே எல்லைகளற்ற நித்திய வீதியில் பறந்து செல்வது போல தான் உள்ளது. ஒரே ஒரு மாற்றத்துடன்.....கட்டுப்பாடுகள் உடன்!!

Sugirtha said...

உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி யாத்ரா.

நன்றி நந்தா. உங்கள் விரிந்த சிறகுகள் இப்போது படித்தேன். ரசித்தேன்.

ரகசிய சிநேகிதி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நாமே எடுத்துக்கலாமே :)

Maddy - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Li. said...

இந்த கவிதை எழுதுகையில் உங்கள் மனதில் என்ன ஒடிக்கொண்டு இருந்திருக்கும் .....? என்பதுதான் கவிதை படிக்கையில் என் மனதில் ஒடிக்கொண்டு இருக்கிறது....

உயிரோடை said...

//என்னை, என் பெயரை
இந்த பெண் கூட்டை
எனக்கு வேண்டாது
என்னோடு ஒட்டிகொண்டிருக்கும்
எல்லாம் ஒதுக்கி//

தனக்கு தன் பெண்மை வேண்டாம் என்று புலம்பிய ஆண்டாளும் பெண்மை மறுத்து முதுமை பெற்ற அவ்வையையும் நினைவூட்டுகின்றீர்கள் வாழ்த்துகள்.

//பறந்து அலைவேன்
எல்லைகளற்ற நித்திய வீதியில்//

அதீத கற்பனை என்றாலும் அவ்வளவு சுந்திரம் கிடைத்தாலும் அதை ஏற்கும் மனம் நமக்கே இருக்குமா என்று தெரியவில்லை சுகிர்தா :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...