என்னை இன்று பழைய நினைவுகள சூழ்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் என்னை ஏதாவதொரு முகமோ, இடமோ, பொருளோ பின்னோக்கி நகர்த்தி செல்கிறது. அப்படியான சமயங்களில் யாரோ ஒருவரின் நினைவுகளில் மனம் ஆழ்ந்து விடுகிறது. இன்று வசந்தாக்காவின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தது மனது.
நான் தனிமையின் முழு கட்டுப்பாட்டுக்குள் சென்றிருந்த காலகட்டம் அது. என் வீட்டுக்கு பக்கமிருந்த வீடுகளில் ஒன்றில் அவள் இருந்தாள். அவள் வாழ்க்கையே ஒரு கதை போல தான் தோன்றியது. வசந்தாக்காவின் கணவரைத்தான் எனக்கு முதலில் தெரியும். அவருக்கு காது கேக்காது வாய் பேசவும் முடியாது. ஆனால் கொஞ்சம் வார்த்தைகள் மட்டும் குழறி குழறி உச்சரிப்பார். அவர் முதலில் லாரி ஓட்டிகொண்டிருந்தார். பின் அவருக்கு காது கேளாததால் அவரால் மற்ற வாகனங்களின் ஹாரன் ஒலியை உணர முடியாமல் அந்த வேலை நிலைக்கவில்லை என்று யாரோ சொன்னார்கள். அவர் மூட்டை தூக்கும் கூலியாக வேலை செய்கிறார் என்ற தகவலும் தெரியும். அவருக்கு திருமணம் முடிந்ததாகவும் மாமா மகளையே திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி வந்தது. எனக்கு அந்த பெண்ணின் மீது மரியாதை வந்தது. பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது அவர்கள் என் வீட்டு பக்கத்தில் இல்லை. ஒரு நாள் எங்கள் தோட்டத்துக்கு வேலைக்கு வந்திருந்தார். அவ்வளவு அழகாய் இருந்தார். சிவந்த நிறம் பெரிய அழகிய கண்கள். மஞ்சள் பூசி குளித்திருந்தாள். புது தங்கத்தின் தாலியோடு அவளும் மின்னினாள். இவ்வளவு அழகான பெண் இப்படி ஒரு ஆணை எற்றுகொண்டிருப்பது அவள் மேல் எனக்கு இருந்த மரியாதையை இன்னும் கூட்டியது.
எப்போது என் வீட்டுக்கு அருகில் குடி வந்தார்கள் நினைவில்லை. எனக்கு புதியதாய் யாரோடாவது பேசி பழக நிறைய நாளாகும். மெது மெதுவாய் பேச ஆரம்பித்தேன். அவள் கற்பமாய் இருந்ததால் வேலைக்கு செல்ல வில்லை. எனக்கு பொழுது போகாத சமயங்களில் நானும் வசந்தாக்காவும் தாயம் விளையாட ஆரம்பித்தோம். அப்படியே எனக்கு அவளை பற்றி சொல்ல துவங்கினாள். அவள் அப்பாவுக்கு அவள் அம்மா இரண்டாவது மனைவி. அவளுக்கு ஒரு தம்பியும் உண்டு. முதல் மனைவி எங்கள் ஊர் தான். அவளுக்கு மன நிலை சரி இல்லை என அவளை பிரிந்து சென்று இவள் அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறான் அவள் அப்பா. வசந்தாக்காவின் அம்மாவும் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்து கொண்டாள். எனக்கு இதை கேட்டவுடன் என்னவோ அவள் அப்பாவின் மீது தான் சந்தேகம் வந்தது. இவளுக்கு இப்படி ஒரு திருமணம் செய்து வைத்து விட்டு பின் மூன்றாவதாகவும் ஒரு திருமணம் செய்து கொண்டான்.
வசந்தாக்கா அவனிடம் சண்டை போட்டதாக கூறினாள். அவளுக்கு இப்படி ஒரு திருமணம் செய்து வைத்தால், தான் திருமணம் செய்து கொள்ளும் போது மருமகன் தன்னை எந்த கேள்வியும் கேக்க மாட்டான் என்று தான் அவள் எவ்வளவு சொல்லியும் கேக்காமல் தனக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தனக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றும் கூறினாள். அப்போதுதான் எனக்கு தெரிந்தது அவள் சம்மதம் இல்லாமலேயே அவளுக்கு அவன் திருமணம் செய்து வைத்திருக்கிறான் என்பது. அவன் வசந்தாக்காவை பார்க்க வந்தால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. இந்த மாதிரியான ஒருவனை எப்படி வசந்தாக்காவால் அப்பாவாய் ஏற்றுக்கொள்ள முடிகிறதென்று எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வசந்தாக்காவுக்கு ஒரு அழகு பெண் குழந்தை பிறந்தது. அதே மாதிரி பெரிய கண்கள், தென்னங் கீற்றை போன்ற இமைகள் அத்தனை அழகு. நான் பார்த்து கொண்டே இருப்பேன். அவள் குழந்தைக்கு நந்தினி என்று பெயர் வைத்தாள். அவள் கணவர் உச்சரிக்க முடியுமா என்று பார்த்து பார்த்து தேர்வு செய்திருந்தாள் பெயரை. அவர் நந்தினி என்பதை நாக்கை முன் கொணர்ந்து ..த்தினி என்பார். அவளுக்கு அவள் பெண்ணால் பேச முடியுமா என்ற பயம் இருந்தது. அவள் அழகாய் பேசினாள். முதல் முதலாய் அவள் பேசி நான் கேட்டது 'எங்கே குடு நான் பாக்கறேன்' என்று என் கையில் இருந்த பொருளை வாங்கினாள். எனக்கு அந்த மழலை மொழி மிக இனியமையாய் இருந்தது. பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மனோஜ் என்று பெயரிட்டாள். தன்னை ஏதோ கிராமிய முன்னேற்ற குழுக்களில் இணைத்து கொண்டாள். எனக்கு அது பிடித்திருந்தது. உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள் என்று சொல்லி கொண்டே இருப்பேன்.
எனக்கு ஒரு நாள் கோழி பிரியாணி சாப்பிட ஆசையாய் இருந்தது. எங்கள் வீட்டில் வருடத்தில் ஆறு மாதம் மாமிசம் சாப்பிட கூடாதென்று பல கரணங்கள் வைத்திருப்பார்கள். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. என் ஆசையை நான் அவளிடம் சொல்ல அவள் கணவரிடம் சொல்லி எனக்கு வாங்கி வரச்சொல்லி இருந்தாள். அவரும் அன்றைய நாளின் வருமானத்தின் கணிசமான தொகையில் எனக்கு வாங்கி வந்திருந்தார். என் கண்கள் அவள் அன்பில் நிறைந்தது. இந்த அன்புதான் என்னை அவளிடத்தில் இழுத்திருந்தது.
எங்கள் வீட்டுக்கும், அவள் குடி இருந்த வீட்டுக்கும் இடையில் இன்னொரு வீடிருக்கும். அவர் மனைவி பிரசவத்துக்கு அம்மா ஊருக்கு போயிருந்தார் . வசந்தாக்கா அவரை அண்ணா என்று அழைப்பாள். இவர் வசந்தாக்காவின் வீட்டுக்கு போவார்.அவர்கள் இருவரும் பேசி கொண்டிருப்பார்கள் எனக்கு தெரியும். ஒரு முறை என்னிடம் அவள் இந்த அண்ணன் என் கணவர் வீட்டில் இல்லாத போதும் இங்கு வருகிறார் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றாள். நான் மற்றவர்களை பற்றி எதற்கு கவலை படுகிறீர்கள் என்று சொன்னதாகவே நினைவு. பிறகு எங்கள் வீட்டிலேயே அவளை பற்றி தப்பாக பேச துவங்கினார்கள். எனக்கு கோபம் வரும் அவங்க ரெண்டு பெரும் அப்படிஇருந்ததை நீங்க பார்தீங்களா என்றேன். அப்படியெல்லாம் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள் உங்களுக்கும் பெண்கள் இருக்கிறார்கள் என்பேன். அப்போதும் எனக்கு வசந்தாக்காவை பிடிக்கும். பெண்கள் உண்மையிலேயே சுய கட்டுப்பாடும் ஒழுக்க நெறியும் கடைபிடிப்பவர்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதிலும் வசந்தாக்காவை என்னால் சந்தேகிக்கவே முடியாது.
பின் எப்போது என்று எனக்கு நினைவில்லை நான் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். அந்த அண்ணன் அவள் சமையலறையை ஒட்டி இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அவள் வீடு ஒரே அறைதான். அதையே தடுத்து ஒரு ஓரத்தில் சமையலறை. அவள் சமையலறையில் இருந்தாள். எனக்கு உள்ளே நுழைய ஏனோ தயக்கமாய் இருந்தது. என்னால் அப்போது அவளோடு நன்றாக பேச முடியவில்லை. திரும்பி வந்து விட்டேன்.
பிறகு நான் வெளி ஊர் வந்து விட்டேன். அவள் கணவரை பிரிந்து விட்டாள் என்றும் தனியாய் குழந்தைகளோடு இருப்பதாகவும் செய்தி கிடைத்தது. இப்போதும் எப்போதாவது ஊருக்கு போகும் சமயத்தில் நந்தினி என்னை பார்க்கும் போது நல்லா இருக்கீங்களாக்கா என்பாள். நானும் அம்மா எப்படி இருக்காங்க என்று விசாரித்துக் கொள்வேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gat...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
2 comments:
\\இப்போதும் எப்போதாவது ஊருக்கு போகும் சமயத்தில் நந்தினி என்னை பார்க்கும் போது நல்லா இருக்கீங்களாக்கா என்பாள். நானும் அம்மா எப்படி இருக்காங்க என்று விசாரித்துக் கொள்வேன்.\\
உங்கள் மனதை மிகத் துல்லியமாக படம் பிடித்தது போல் எழுதியிருக்கிறீர்கள், எல்லாருடைய வாழ்க்கைக்கும் அவரவர்கான நியாயங்கள் இருக்கின்றன, பொதுத்தளத்தின் ஒழுக்க மதிப்பீடுகளை வைத்து அவ்வளவு எளிதாக ஒருவரை வரையறுத்து விட இயலாது, அவரவர் வாழ்க்கை அவரவர் நியாயங்கள். இதை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
//அதிலும் வசந்தாக்காவை என்னால் சந்தேகிக்கவே முடியாது.//
//எனக்கு உள்ளே நுழைய ஏனோ தயக்கமாய் இருந்தது. என்னால் அப்போது அவளோடு நன்றாக பேச முடியவில்லை.//
நீங்களும் அவசரப்பட்டு உங்கள் நம்பிக்கையை விட்டு கொடுத்துவிட்டீர்களோ?
Post a Comment