Sunday, June 7, 2009

என்னுள்ளே என்னுள்ளே

நீ இந்த வார இறுதியில்
காலி பண்ணவிருப்பதை
அப்பா அம்மாவிடம் சொன்னார்கள்
சிறு தவிப்பு மனதில்
அதை மறைத்து
புத்தகம் படிப்பதாய்
பாவனை செய்தேன்
தனித்திருந்த எனக்கு
உன் வருகை வசந்தமாய்
இந்த ஒரு வருடம்
எனக்குள் எத்தனை எத்தனை மாற்றம்
உன் மௌனமே என்னை
உன்னிடத்தில் பற்றி இழுத்தது
உன் குரல் எப்படி இருக்கும்
கேட்க ஆசை இருந்தது
பழகிய நாய்க்குட்டியாய்
உன் வண்டியின் ஓசையை
பழகிக்கொண்டது என் காதுகள்
எதிரெதிர் பார்க்கும் தருணங்களில்
ஒரு முறை நிமிர்வாய்
உன் கண்களை பார்க்கவே
நான் காத்துக்கிடப்பேன்
உன்னை பார்க்க முடிகிற
அந்த நிமிடங்களே
என் வாழ்கையை சுவாரஸ்யமாக்கியது
சொல்லவா வேண்டாமா
மருகித் தவித்திருந்து
பொழுதுகள் கழிந்தது
இன்று நான் எழுந்ததும்
நீ சென்றுவிட்ட செய்தி
செவி எட்டியது
உன் அறையை சுத்தம் செய்ய
அம்மா என்னை மாடிக்கு அனுப்பினாள்
திறந்ததும் எனக்குள் வெறுமை
அறையெங்கும் உன் வாசனை
நீ விட்டு சென்றிருந்த
பல் முறிந்து கிடந்த
ஒரு பாக்கெட் சீப்பு
எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன்
ஜன்னலோரம் கிடந்த
ஒற்றை காலுறை
உனக்கு வந்திருந்த
ஏதோ வங்கி கடிதத்தின் மேலுறை
கீழே கிடந்த
ஒரு பழைய பேனா எடுத்து
உன் பெயருக்கு முன்
என் பெயரை எழுதினேன்
பின் அவசரமாய் கிழித்து
குப்பைக்குள் பதுக்கிவிட்டேன்
ஒரு ஓரத்தில்
காகிதங்கள் குவிந்து கிடந்தது
ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கையில்
உள்ளேயிருந்து புன்னகைத்தது
காணாமல் போயிருந்த என் புகைப்படம்

6 comments:

யாத்ரா said...

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம், எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்,,,,,,,

இந்தப் பாட்டை மனதில் ஓடவிட்டுக் கொண்டே தான் இந்தக் கவிதையை படித்தேன்,

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க, அந்த தொலைந்து போன புகைப்படம் கிடைக்கிற அப்போ இருக்கும் உணர்வு இந்தக் கவிதையை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது, நல்ல கவிதை.

Sugirtha said...

நன்றிங்க யாத்ரா :-)

Maddy said...

காணாமல் போயிருந்த என் புகைப்படம்!!

கிடைத்தது
புகைப்படம் மட்டுமல்ல,
முடியாது தொடரபோகும்
முடிந்து வைத்த
முன்ஜென்ம பந்தமும் தான்!!

Sugirtha said...

Maddy - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ayyanar Viswanath said...

/காணாமல் போயிருந்த என் புகைப்படம்/
இந்த கவிதைய என்னால ரொம்ப எதிர்மறையாகத்தான் அணுக முடியுது...உதாசீனபடுத்தபட்டதா தோணுது :)

சென்ஷி said...

நல்லா இருக்குங்க!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...