ஒவ்வொரு நாளும் நான் அலுவலகம் செல்ல நண்பனுக்காக அந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் காத்திருப்பேன். எப்போது அவளை பார்க்க ஆரம்பித்தேன் தெரியவில்லை. மிக சில கணங்களில் அவள் என்னை கடந்து சென்றுவிடுவாள். போன வாரத்தில் தான் அவளை நன்கு கவனிக்க ஆரம்பித்தேன். என்னவோ பிடிக்கிறது எனக்கு அவளில். சொல்ல முடியா உணர்வு பீடிக்கிறது என்னை. எப்போதும் புன்னகை சிந்துவது போன்ற முகம், கண்களின் தீட்சண்யம், நடையின் மிடுக்கு, அவள் உடைகளின் மென்வண்ணங்கள் இதில் எது என்னை கவர்ந்தது தெரியவில்லை. அவளைப்பார்க்க முடிவதால் எனக்கு காத்திருப்பு பிடிக்கிறது.
இந்த திங்கள் முதன் முதலாய் என்னை பார்த்தாள் அவள். நான் அவளையே நேராக பார்த்தேன். என் முகத்தில் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்றே நினைத்தேன். ஆனால் என் பார்வையில் தெரிந்திருக்குமோ நான் அவளுக்காகவும் காத்திருப்பது? அடுத்த நாள் என்னை கடக்கையில் அவள் விழிகளில் மெல்லிய அசைவு. என்னையா பார்க்கிறாள்? துடிக்க ஆரம்பித்த மனதை மெல்ல அடக்கி வைத்தேன்.
மூன்றாம் நாள் எப்போதும் நிற்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி நின்றேன். அவள் என்னை கடந்தாள். நான் நிற்கும் இடத்தில் என்னை தேடினாள். நிச்சயமாக அவள் முகத்தில் தெரிந்தது ஏமாற்றம் தான். அவள் நான் சற்று தள்ளி நின்றதை கவனிக்கவில்லை. எனக்கு அவளின் ஏமாற்றம் பிடித்தது. யாரென தெரியாவிட்டாலும் என்னை அவள் அங்கீகரித்தது போலவே தோன்றியது.
நேற்று கிளம்புவதற்கு நேரம் ஆகி விட்டது. அவளை பார்க்க முடியவில்லை. மனது அன்று முழுதும் வெறுமையாகி கிடந்தது. வேலைக்கிடையில் இருந்து மனம் நழுவி நழுவி சென்றது.
இன்று சற்று சீக்கிரமே வந்து திரும்ப பழைய இடத்திலேயே நின்று கொண்டேன். தொலைவில் அவள் வருவது தெரிந்தது. நான் நிற்கும் இடம் வந்தவுடன் சற்றே திரும்பினாள். என் விழிகளோடு அவள் விழிகள் கோர்த்தது. பிறகு சிக்கிக்கொண்ட விழிகளோடு திகைத்து திரும்பினாள். அவளுக்கு முகம்கொள்ளா வெட்கம். எனக்கும் என்னவோ செய்தது. ப்பா...எத்தனை நாட்களாயிற்று பெண்களின் வெட்கம் பார்த்து. என் மனம் நெகிழ்ந்தது. நான் அவள் போவதை பார்த்து புன்னகைத்துக்கொண்டே நின்றிருந்தேன். பிறகு என் நண்பன் வந்தான்.
டேய் எங்கடா பாக்கற?
என்ன கேட்டே என்றேன்?
எதுக்கு தனியா சிரிச்சுட்டு நிக்கற?
நான் மறுபடியும் என்ன கேட்டே என்றேன் தொலைவில் போகும் அவளையே பார்த்தபடி.
கிளம்பிட்டான்ப்பா என்றான்.
நான் அதையும் கவனிக்கவில்லை.எப்படியோ என்னை அவன் வண்டியில் ஏற்றிக்கொண்டு அலுவலகம் விரைந்தான்.
எனக்கு அந்த நேர மனநிலை பிடித்திருந்தது. இந்த கலப்பு கலாச்சாரத்தில் மோகம் கொண்டு தன் சுயத்தை தொலைக்காத பெண்கள் தற்போது மிக குறைவானதுபோல் தோன்றுகிறது. அதுவும் ஒரு மாநகரத்தில், பெண்களின் மெல்லிய புன்னகைகள், அவர்களின் அழகு சொட்டும் பூரண வெட்கம், கண்களின் சாந்தம், இப்படி நிறைய இனிமைகள் எளிதில் காணக் கிடைப்பதில்லை. இன்று அவளின் அழகிய வெட்கம் பார்த்தேன். அவள் சின்ன புன்னகை என் மேல் சிந்தவும் கண்டேன். கண்களின் பரிவையும் கவனித்தேன். இந்த இயந்திர வாழ்கையில் இப்படித்தான் சார்ஜ் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
அவளை பற்றி என் நண்பனிடம் சொல்கையில் இப்படித்தான் ஊரில் சில பைத்தியங்கள் சுற்றுவதாக சொல்கிறான். என்ன சொன்னாலும் எனக்கு பிடித்திருக்கிற இந்த கிறுக்கு பிடித்திருக்கிறது.
3 comments:
அருமை.
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கு நன்றி சூர்யா!
ரொம்ப நல்லா இருக்குங்க இந்த கதை,
//என்ன சொன்னாலும் எனக்கு பிடித்திருக்கிற இந்த கிறுக்கு பிடித்திருக்கிறது//
அருமை, வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
Post a Comment