எனக்கு எப்போதுமே கிராமத்து மத்தியானம் பிடிக்கும். திண்ணையில் உட்காந்து கொண்டு ஆளில்லாத தெருவின் மத்தியானத்தை வெறிக்க பிடிக்கும். அப்படி தான் அன்றும் திண்ணையை ஒட்டியிருந்த மேல் வாசப்படியில் அமர்ந்து திண்ணையின் மேல் புத்தகத்தை வைத்து ஏதோ படிப்பதும் யோசிப்பதுமாய் இருந்தேன். மத்தியானத்தில் தகிக்கும் வெயிலானாலும் ஏதாவது படிக்கும்போது எனக்கு காப்பி வேண்டும். மெது மெதுவாய் பருகிக் கொண்டு அமர்ந்திருந்தேன். யாரும் இல்லாத தனிமை எனக்கு சமயங்களில் பிடிக்கிறது. அப்போது என்னோடு நான் நிறைய பேச முடிகிறது.
அந்த ஒரு வருடம் என்ன செய்யபோகிறோம் என்று தெரியாமல் இலக்கில்லாமல் கழிந்த ஒரு வருடம். படிப்பு முடிந்து வேலைக்கு செல்வதா வேறு என்ன செய்வது என்று குழம்பி கொண்டிருந்த ஒரு வருடம். அந்த மத்தியானமும் அப்படி தான் வெறுமை சூழ தனியாய் அமர்ந்திருந்தேன். தபால்காரர் வந்தார். இன்று என் தோழியிடமிருந்து கடிதம் எதாவது வந்திருக்குமா வந்தவரையே விழி அகலாமல் ஆவலாய் பார்த்தேன். வந்தவர் அந்த மாத பேப்பர் காசை வாங்கிக்கொண்டு எனக்கு ஏமாற்றத்தை டெலிவரி செய்து விட்டுப் போனார்.
சிறிது நேரத்தில் சின்ன சின்ன மணி ஓசை கேட்டது. ஆட்டு கூட்டம் ஒன்று ரோட்டோரப் புற்களை மேய்ந்து கொண்டே வந்தது. தலையை ஆட்டி ஆட்டி மேய்ந்துகொண்டே செல்ல தும்மலும், மணி ஓசையும் மாறி மாறி வந்தது. சில கணங்கள் அந்த காட்சியை கண்கள் மேய்ந்து கொண்டிருந்தது. பிறகு அந்த தெருவில் வேறு யாரும் இல்லை. மறுபடியும் நான் வெருமையெனும் தீவிற்குள் தனித்து விடப்பட்டேன்.
அப்பா அம்மா உடன் இருந்தும், அழகு கிராமத்தில் இருந்தும் எனக்கு ஏதோ ஒரு தீவில் தனியாக்கி விட்டது போல் இருந்தது. யாருமே என் மனம் ஒட்டி வரவில்லை. தொலைக்காட்சிக்கும் எனக்கும் எப்போதுமே அவ்வளவு நெருக்கம் இல்லை. உறவினர்களிடம் பேசவோ என்னிடம் ஒன்றுமே இல்லை. தோழியிடம் பேச இப்போது போல கைபேசியும் வைத்துக்கொள்ள வசதி இல்லை. ஊர் பெண்களிடம் பேசுவதற்கு எனக்கு யார் யாரை வைத்திருக்கிறார் என்ற விஷய ஞானம் போதாது. என்னவோ அதில் எனக்கு விருப்பமும் இல்லை. சராசரியின் நிகழ்வுகளில் தன்னைத் தொலைக்காத சில மனிதர்களை தேடுவதிலேயே நான் தொலைந்து போயிருந்தேன். அப்போது எனக்கு இருந்த ஆறுதல்கள். இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருந்த ஒரு சின்ன நூலகத்தின் சில புத்தகங்கள், அவ்வப்போது வரும் தோழியின் கடிதம், எப்போதாவது தோழியிடம் பேசக் கிடைக்கும் மிக சில பொழுதுகள். வாழ்கையின் மேல் பெரிதாக ஈடுபாடில்லாமல் வெறுத்திருந்த நேரம்.
மாலை பொழுதில் எனக்கு மொட்டை மாடிதான் சாசுவதம். தனியாக மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டு வானத்தோடு சிநேகம் கொள்ள ஆரம்பித்தேன். அதிலிருந்து இரு கண்கள் வந்தது. அது நேராக என் இதயத்துக்குள் பயணித்தது. யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைத்திருந்த என்னை நேராக பார்த்தது. அந்த கண்களுக்கு என்னை புரிந்தது. அந்த கண்களுக்கு மௌனமே போதுமாயிருந்தது. அது என்னை கேள்விகள் கேட்கவில்லை. என்னை அப்படியே ஏற்றுகொண்டது. பிறகு மெல்ல மெல்ல நிறைய கண்கள் வந்தது. பிறகு எல்லாம் இருட்டாகி போனது. நானும் அந்த கண்கள் மட்டும் என்னவோ பேசிக்கொண்டே இருந்தோம் வெகு நேரம் வரை. யாரும் இல்லாதபோது வானமும், இலைகளின் தலையாட்டலும், உடல் தொடும் காற்றும் தான் எனக்கு துணையிருப்பது போல் தோன்றியது.
அம்மா என்னை பார்த்து பயந்து போயிருந்தார்கள். கண்கள் முழுக்க வெறுமையை ஏற்றி இருந்தேன். அதைவிட கொடுமைகள் பெண் பார்க்க வரும் புரோக்கர்கள். அவர்களை பார்த்துவிட்டால் எங்காவது ஓடி ஒளிந்துகொள்ள முடியாதா என்று தோன்றும். அத்தனை எரிச்சல் மற்றும் வெறுப்பு வரும். அம்மாவிடம் சொன்னால் நான் என்ன செய்வது படித்து முடிச்சு பெண் வீட்டிலிருந்தால் வரத்தான் செய்வார்கள் என்பார். எனக்கு அவர்களின் தலை முதல் கால் வரை செல்லும் நோட்ட பார்வை அத்தனை வெறுப்பு. எங்காவது தொலை தூரம் சென்று சுதந்திர காற்றை சுவாசிக்க மாட்டோமா அத்தனை ஆசையாய் இருக்கும். பெண் என்பவள் சமூகம் போட்டு வைத்திருக்கும் கோட்டுக்குள் தான் வாழ வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடில்லை.
அந்த மத்தியானத்தை இன்னும் முடிக்கவில்லையே. தபால்காரர் சென்ற பிறகு தொலைபேசி அழைத்தது . கடவுளே கீதுவாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே சென்று எடுத்தேன். கீது என் ஒரே ஒரு உயிர் தோழி. அவள் என் நாட்குறிப்பு. எனக்கு அவள் ஒரு இனிய தேவதை. நான் என் உயர்கல்வியின் போது அவளை பார்த்தேன். நாங்கள் நிறைய பேசிக்கொண்டோம். அந்த இரண்டு வருடங்கள் தான் என் வாழ்வின் வசந்தங்கள் இன்றுவரை. மறுபடியும் வாழ சொன்னாலும் அந்த இரு வருடத்தை ஆசை ஆசையாய் வாழ்வேன்.
எத்தனை எத்தனை பேசி இருப்போம். எழுத்தாளர்கள் பற்றி, சமூகம் பற்றி, பெண்கள் பற்றி, ஆண் பெண் நட்பு பற்றி, இப்படி நிறைய நிறைய. என்னை நெருங்கி வந்தவள் அவள் மட்டும் தான் இதுவரை. எத்தனை மாதங்கள் பேசாவிட்டாலும் மறுபடியும் விட்ட இடத்திலே தொடர கூடிய நட்பு அது. இப்படி இது வரை என்னை ஒட்டி வந்தவர்கள் இருவர் மட்டுமே. இரண்டு வருடம் அவளோடு சுவாசித்த இனிய சுகமான வாழ்க்கையும், என் ஆசைகளையும், எண்ணங்களையும் எல்லாம் ஒரு சேர முடிந்து பரணில் போட்டுவிட்டது இந்த சமூகம். யாரிடம் சொல்வது எனக்கு இந்த சமூகம் உகந்ததல்ல என்று.
தொலைபேசியை எடுத்தேன் அவளேதான். சற்று பொறுங்கள் கொஞ்சம் என் மகிழ்ச்சியை கொஞ்ச கொஞ்சமாய் சுவாசித்துகொள்கிறேன்.
இப்போ தான் நீயா இருக்கணும் ன்னு நினைச்சுகிட்டே வந்தேன்.
அப்படியா என்றாள்.
உடனே என் சோக கதையை எல்லாம் ஆரம்பித்தேன். எத்தனை ப்ரோக்கர்கள் வந்தார்கள் மற்றும் இதர சோகங்கள். அவள் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் இத்தனை அவஸ்தை படுகிறேன். நீ அங்கே நாம் ரசித்த எல்லாம் இன்னும் ரசிக்கிறாய். நாம் நடந்த பாதைகளில் மறுபடியும் நடக்கிறாய். ரசித்த அந்த கொத்து மஞ்சள் மலர்கள் போல் இன்றைக்கும் பார்ப்பாய். மலை உச்சியில் ஒருக்களித்து படுத்திருப்பது போல் இருக்கும் ஒரு பெண் உருவ பாறை இன்றும் தெரியும் உனக்கு. இப்படி நிறைய நிறைய நான் சொல்லிக்கொண்டே போக அவளிடமிருந்து ஒரு கட்டத்தில் எனக்கு எந்த பதிலும் இல்லாமல் போனது.
நான் சற்று நிறுத்தி என்னாச்சு என்றேன். அவள் எல்லாம் இங்கு அப்படியே இருக்கிறது ஆனால் நீயில்லாமல் எனக்கு எல்லாமே வெறுமையாய் தெரிகிறது என்றாள். எனக்கு என்னவோ போலிருந்தது. ரசித்த எல்லாமே அன்னியமாகிப்போவது எத்தனை கொடுமை. பிறகு நிறைய பேசினோம். எல்லாம் பழைய நினைவுகள்.
என்னவோ புதியதாய் பிறந்தது போல் இருந்தது அவளிடம் பேசிய பிறகு. அவளை தவிர எல்லோருக்கும் புரிந்துவிடாது என்னை.அவளிடம் பேசிவிட்டு மறுபடியும் வந்து படியில் அமர்ந்தேன். குழப்பங்கள் என்னை சுற்றி சுற்றி வந்தது. எனக்கு என்ன தேவை என்று சரியாக சொல்ல முடியவில்லை. வானத்தை வெறிக்க தொடங்கினேன். பிறகு மெல்ல மின் கம்பதிற்கு பார்வை ஓடியது. அங்கே மின் கம்பியில் ஒரு மைனா அமர்ந்திருந்தது. பிறகு சடாரென பறந்தது உயர உயர வானம் நோக்கி.
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gat...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
5 comments:
நல்ல எழுத்து நடை. வாழ்த்துக்கள்!
உணர்வுகளை இவ்வளவு தெளிவாக
வார்த்தைகளில் வெளிக்காட்ட
எல்லோராலும் முடிவதில்லை ..
உன்னால் முடிகிறது ... இது போல்
என்னால் முடியாதா என்று ஏக்கம்
தோன்றுகிறது ... எழுதுங்கள்..
காத்திருக்கிறோம்....
Li க்கும் மண்குதிரைக்கும் என் நன்றிகள்!!
ஐயோ மனதை அப்படியே துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள், நுட்பமான உணர்வுகள், ஆழ்மன எண்ணவோட்டங்கள் எல்லாவற்றையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
அற்புதம்.
Post a Comment