Sunday, May 4, 2014

பார்த்ததும் கேட்டதும்

முன்னிரவு கிளம்பிய நானும் தோழியும் ஜென் தியான மையத்தை சென்று சேர்ந்தபோது மதிய உணவு வேளை ஆகி இருந்தது. அத்தனை அழகான இடத்தை அதற்கு முன்பு நான் எங்கும் பார்த்ததில்லை. அங்கே செல்வது இது இரண்டாவது முறை என்றாலும் கூட அந்த அழகை ஏற்கனவே பார்த்ததுதான் என்று ஒருபோதும் ஒதுக்க முடியாது. அது இருப்பது இயற்கை பூரணிக்கும் மலைப் பிரதேசத்தில் எனவே மனம் பிசிறாத அமைதியை வேண்டும்போதெல்லாம் அந்த தியான மையத்திற்கு செல்லலாம். மேலும் அந்த மையம் தன் எளிமையான அமைப்பாலும், தன்னை சூழ்ந்துள்ள இயற்கையாலும், தான் தழுவிக் கொண்ட மோனத்தாலும், ஒருவரை எளிதில் தன் வசப்படுத்தி கொள்ளும் தன்மை உடையது. மையத்தை சுற்றி இருக்கும் தோட்டத்தில் பன்னீர் ரோஜாக்களும், வெள்ளைக் கொடி ரோஜாக்களும், இன்னும் இதர வண்ணப் பூக்களும் கொத்து கொத்தாக மலர்ந்தலங்கரிக்க அங்கே செல்லும்போதெல்லாம் மனம் பொங்கிக் கசியும். இரண்டடுக்கு கட்டிடம் கொண்ட அந்த மையத்தின் அமைப்பு செவ்வக வடிவில் வெகு எளிமையாக இருக்கும். நுழைவாயிலில் தியானிக்கும் புத்தரின் சிலை நம்மை வரவேற்கும். பிறகு உள்ளே அடி எடுத்து வைத்ததும் நான்கு பக்கங்களும் நீண்டோடும் வெராண்டா. மையத்தின் அமைப்பை தொட்டிக்கட்டு வீட்டின் அமைப்போடு ஒப்பிடலாம். ஏனெனில் சுற்றிலும் அறைகள் இருக்க மத்தியில் மிக அழகாக பராமரிக்கப் படும் புல்வெளியும், திறந்திருக்கும் வான்வெளியும் உண்டு. வாய்க்கால் போன்று தோட்டத்தின் ஊடே இருக்கும் நீர் வழியில் தங்க மீன்கள் நீந்தும்.

உட்புற கட்டிடத்தை தழுவி போகன்வில்லாக்கள் மலர்ந்திருக்கும். ஒவ்வொரு அறைக்கு முன்னும் ஒரு மூங்கில் இருக்கை இருக்கும். அதில் அமர்ந்தபடி ஓரிருவர் ஏதாவது புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பர். பெரும்பாலும் மாதக் கணக்கில் வந்து தங்கி தியானிக்கும் வெளிநாட்டவரே அங்கு அதிகம். அதிலும் முக்கியமாக ஐரோப்பர்கள். அங்கே வருபவர்கள் அனைவருக்கும் தனித்தனி அறைகள் கொடுக்கப்படும். எனவே எந்த இடையூறுகளும் அற்ற பூரண தனிமை கிடைக்கும். பெரும்பாலும் தனியாக இருக்கும் எல்லோரும் ஒன்று கூடுவது இரண்டிடங்களில். ஒன்று கீழ் தளத்தில் இருக்கும் உணவுக் கூடம். இரண்டு மாடியில் இருக்கும் தியானக் கூடம். அது தவிர கீழ் தளத்தில் ஒரு நூலகமும் உண்டு. அங்கே எல்லோரும் வருவதில்லை. முதல் தளத்தைத் தாண்டி மொட்டை மாடிக்கு சென்றால் மேகப் பொதிகள் மலை முகட்டில் உரசிப் போவதைப் பார்க்கலாம்.

தோழியும் நானும் உள்ளே சென்று எங்கள் அறைக்கான சாவியை வாங்கிக் கொண்டு உணவுக் கூடத்துக்கு முன்னே இருந்த அறிவிப்பு பலகையில் இருந்து தியான நேரம், உணவு நேரம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டு தோழி அவளுக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கும் நான் எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு சென்றோம். பிறகு மதிய உணவு முடித்து கொண்டு மாலை தியானத்திற்கு நேரம் இருந்ததால் சற்று நேரம் இளைப்பாறலாம் என்று திரும்பவும் அவரவர் அறைக்கு வந்து உறங்கினோம். உறக்கத்தின் இடையில் யாரோ அறைக்கதவை தட்ட திறந்து பார்த்தால் முதல் முறை வந்தபோது நூலகத்தில் தற்காலிக நூலகராக இருந்த அவன் நின்றிருந்தான். ஹாய், ஆர் யூ கைஸ் ஸ்கிப்பிங்க் யுவர் டீ என்றான். உறக்கத்தின் இடையில் எழுந்ததாலும் நாம் தேநீரைப் பருகாதது குறித்து இவனுக்கு ஏன் அக்கறை என்று குழம்பியதாலும் ஸாரீ வாட் என்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். சரி விசயத்திற்கு வருகிறேன் என்பது போல ஓகே யூ ஆர் நாட் ஃபர்ஸ்ட் டைமர்ஸ் ரைட் என்று வினவினான். நோ என்றேன். சரி தியான கூடத்திற்கு வந்து உங்கள் இடத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள் என்றான். ஒரு ஐந்து நிமிடத்தில் வருகிறோம் என்று சொல்லி தியானக் கூடத்தின் பொறுப்பாளி இன்னொருவர் தானே இவன் எதற்கு நம்மை அழைக்கிறான் என்று யோசித்தபடி தோழியை தேடி சென்றேன். இருவரும் முகம் கழுவி தயாராகி மேலே சென்றபோது அவன் எங்கள் இடத்தை தேர்வுசெய்யக் கோரினான். அவன் சொன்ன படி செய்ததும் தியான நேரம் ஆகி இருந்தது. எல்லோரும் வரத் துவங்கினர். இந்த முறை தியான நேர அறிவிப்பு, தியான கூட ஒருங்கிணைப்பு எல்லாம் அவனே செய்தான். மாலை தியான நேரம் முடிந்து இரவு உணவும் முடிந்த பிறகு திரும்பவும் ஒரு அமர்வு இருந்தது. அது முடிந்து நாங்கள் அவரவர் அறைக்குத் திரும்பினோம்.

அடுத்த நாள் காலை நேர தியானம் முடித்து உணவருந்திய பிறகு ஒரு மணி நேர சேவை நேரம் ஒதுக்கப் பட்டிருந்தது. சேவை நேரப் பங்களிப்பாக எனக்கும் தோழிக்கும் காய்கறி வெட்டும் வேலை கொடுக்கப் பட்டிருந்தது. எங்களோடு கார்‌மென் என்ற ஜர்மானியப் பெண்மணியும் இருந்தார். அவரோடு பேசியபோது நீண்ட வருடங்கள் அவர் பெர்லினில் டாக்ஸி ஓட்டுனராக இருந்ததாக அறிந்தேன். பிறகு தன் இளமைக் காலத்தில் பெரும்பாலும் தனியாகவும் சமயங்களில் தம் தங்கையோடும் அவர் சென்ற மோட்டார் ஸைக்கிள் பயணங்களைக் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். தாம் சென்ற இடங்களிலேயே இதுவரை தனக்குப் பிடித்த இடமாக க்ரீஸ் இருப்பதாக சொன்னார். எனக்கும் க்ரீஸ் செல்லவேண்டும் என்று நெடு நாள் ஆசை இருப்பதாக சொன்னேன். தொடர்ந்து நானும் தோழியும் கோவையிலிருந்து கொடநாடு வரை ஆக்டிவாவில் சென்றதை நினைவு கூர்ந்தவளாக நீங்கள் தனியாக மோட்டார் ஸைக்கிளில் செல்லும்போது அங்கே அதை எப்படி பார்க்கிறார்கள் என்று கேட்டேன். அவருக்கு என் கேள்வி சரியாக புரியாததால் இங்கே நாங்கள் இருவரும் தனியாக சென்றபோது நிறுத்தி வழி கேட்டபோது அறிவுரைகளும், காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்தாற்போன்ற முக பாவங்களையும் எதிர்கொண்டோம் என்றேன். ஹா… என்று உடனே நறுக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு மேஜைக்கு இரண்டடி பின்னே சென்று விரிந்த கண்களோடும், உதடுகளோடும் சிலை போல் ஒரு கணம் நின்றார். புன்னகைத்துக் கொண்டே எல்லா இடத்திலும் அப்படிதான் போல என்றேன்.

அவருடன் பேச பேச எனக்கு மிகுந்த சுவாரசியம் ஏற்பட்டது. நீங்கள் சென்ற இடங்களில் சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்ததா என்றேன். அவர் தான் தென் ஆப்ரிக்காவின் ஒரு கிராமத்திற்கு சென்றபோது அங்கே நடக்க முடியாத ஒரு முதியவர் இருந்தார் என்றும் அவரின் மகன் தினமும் காலையில் அவரை ஏந்திக் கொண்டு வெளியில் இருந்த ஒரு மரத்தடியில் அவருக்கு படுக்கை அமைத்து அதில் அமர வைப்பார் என்றும் அந்த வகையில் அந்த முதியவர் நாளெல்லாம் காட்சிகளை பார்த்துக் கொண்டு கழிப்பார் என்றும் மாலையானதும் பள்ளி சென்ற பேரக் குழந்தைகள் திரும்ப வந்து அன்றைய கதைகளை எல்லாம் அவருக்கு சொல்வார் என்றும் சொன்னார். அந்த மக்களின் வயதானவர்களை பேணும் வழக்கம் என்னுள் மிகுந்த ஆச்சரியத்தை எழுப்பியது என்றார். எனக்கும் உண்மையிலேயே மிகுந்த ஆச்சர்யம் எழுந்தது. தற்கால தொழில்நுட்பத்துள் தொலைந்து போகாத குழந்தைகளும் நிறையப் பெறுகின்றன என்று ஒரு எண்ணம் உள்ளே ஓடியது. வயதானவர் என்ற பேச்சு வந்தபோது ஜர்மனியில் தனித்திருக்கும் வயதானவர்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் அரசே மூன்று வேளை உணவு வழங்குவதாக சொன்னார். வயதானவரின் வீடுகளுக்கு வந்து மூன்று வேளையும் உணவு விநியோகிக்கிறார்கள் என்றும் சொன்னார்.

சற்று நேர மௌனத்திற்கு பிறகு தன் வீட்டிற்கு பக்கத்தில் வயதான தம்பதியர் மிகவும் அன்னியோன்யமாக இருந்தார்கள் என்றும் மனைவி கணவனுக்கு என்று எல்லாக் காரியங்களையும் பார்த்துப் பார்த்து செய்தார் பிறகு திடீரென ஒரு நாள் இறந்து போனார் என்றும் சொன்னார். கணவருக்கு நேர நேரத்திற்கு உணவு வந்தாலும் அவர் எதையும் தொடவில்லை. நாளாக நாளாக அவர் உடைகள் உடலில் தொங்கத் துவங்கின. நிறையக் குடித்தார். நாங்கள் பார்க்க பார்க்க அவர் தேய்ந்துகொண்டே வந்தார். இவர் இப்படித் தேய்ந்தே ஒரு நாள் கரைந்து போவார் என்று நான் நினைத்தேன். அவர் இறந்து நாற்றம் வரத் துவங்கியதும் தான் அவர் இறந்ததை அறிந்தோம் என்றார். அவரை வேரு யாரும் வந்து பார்த்ததாக அறியவில்லை என்றார். வயதானவர்கள் நிராகரிக்கப் படுகின்றனர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அன்யோன்யம் என்பது கணவன் மனைவியை இந்த அளவு சார்ந்திருப்பதிலா இருக்கிறது என்றேன். மிகவும் நேசித்தவர்களை இழப்பது பெரும் துயரம் அதைக் கடப்பதும் பெரும்பாடு என்றாலும் அன்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று அன்றாட காரியங்களில் அடி முதல் முடி வரை தானின்றி இயங்காமல் செய்துவிடுவிடல் நேசிப்பவருக்கு இழைக்கும் அநியாயம் என்றும் வழங்கும் கடுமையான தண்டனை என்றும் கருதுகிறேன் என்றேன்.

தொடர்ந்து ஜர்மனியில் மத உணர்வு எல்லாம் எந்த அளவில் இருக்கிறது என்று கேட்டேன். எல்லாம் கலவையாக இருக்கிறது என்றவர் இளைஞர்கள் யாரும் ஆலயத்திற்கு வருவதில்லை என்றும் வயதானவர்களைக் கொண்டு இன்னும் ஆலயங்கள் இயங்குகின்றன என்றும் சொன்னார். மதம் கொள்கைகளைப் பொருத்தவரை நின்ற இடத்திலேயே இன்னும் தீவிரமாக நின்று கொண்டிருக்கின்றன என்றார். என் புரியாத பார்வையைப் புரிந்தவர் போல அதாவது எங்கள் போப் ஏழை நாடுகளுக்கு செல்கிறார், எய்ட்ஸ் கொடுமையையும் அறிவார் என்றாலும் இன்னும் ஆணுறையைத் தவிருங்கள் என்றுதான் உபதேசிக்கிறார் என்றார். ஆணுறையை தவிர்த்துவிட்டு நோயைத் தடுக்க மக்களே உறவு வைத்துக் கொள்ளாதீர்கள் என்றா சொல்ல முடியும் நீங்களே சொல்லுங்கள் என்றார். ஒருவேளை மறைமுகமாக அவர் அதைத்தான் வலியுறுத்துகிறாரோ என்று சிந்தித்தவளாக அஃப் கோர்ஸ் நோ என்றேன் அழுத்தமாக.

-தொடரும்


No comments: