Sunday, March 2, 2014

5. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம், ஜெயம் கொண்டான்நான் கோவில் வளாகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் என்றதற்கு ஸ்ரீ உடனே ஆமோதித்தாள். சுமா நிச்சயமாக வேண்டாம் என்றாள். ஒரு வேளை கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் இரண்டையும் பார்க்க முடியாவிட்டால் கும்பகோணத்தில் தங்கலாம் என்று பயணத்திற்க்கு முன்பு நான் சொன்னதற்கு ஸ்ரீ கும்பகோணம் மக்கள் கூட்டம் அதிகமாக மிக நெருக்கடியாக இருக்கும் அங்கே தங்க நன்றாக இராது என்றிருந்தாள். சரி அப்படியானால் எவ்வளவு நேரமானாலும் இரண்டையும் பார்த்துவிட்டு கடைசி பேருந்தை பிடித்து இரவை பயணத்தில் கழிக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இருட்டில் ஒன்றையும் பார்க்க முடியாது என்பதையும் கோவில்கள் பூட்டப்படும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள மறந்து விட்டிருந்தோம். இப்போது எங்கே தங்குவது என்று யோசனையாக இருந்தது. இங்கேயே தங்கலாமா என்று பலமாக யோசித்தோம். சரி இந்த ஊரிலேயே தங்க முடிந்தால் காலையில் சீக்கிரம் எழுந்து இந்தக் கோவிலை பார்த்துவிட்டு கும்பகோணம் செல்லலாம், கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் மிக அருகில் இருக்கிறது திரும்பவும் இங்கே வருவதானால் பயணத்தில் நேரம் கழியும் எனவே, இந்த ஊரிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தோம். நாம் கோவில் உள் நுழையும்போது கோவில் பூஜை நேரங்கள் குறித்து ஒரு பலகையில் குறிப்பிட்டிருந்தார்கள். நான் போய் பார்த்து வருகிறேன் என்றேன். அங்கே யாரேனும் இருந்தால் எங்காவது தங்க இடம் கிடைக்குமான்னு கேட்டுப் பார், நமக்கொன்றும் ஹைஃபை இடம் தேவை இல்லை, ஸிம்ப்பிலா இங்கேயே  யாருடைய வீடானாலும் கூட சரிதான் என்றாள் ஸ்ரீ.

 
உள்ளே சென்றதும் வாயிலுக்கு அருகில் இருந்த பலகையில் கோவில் திறக்கும் நேரம் குறித்து படித்தேன். அதை தொட்டாற்போல இடது புறம் இரு பெண்கள் அமர்ந்து இருந்தனர். அவர்களின் சகஜ பாவத்தை வைத்து இவர்கள் இந்த ஊரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் வைத்திருந்த பொருட்களைப் பார்த்து தினமும் இங்கே பூ, பூஜை சாமான் விற்பவர்கள் என யூகித்தேன். ஏங்க இங்கே தங்க எதாச்சும் இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பார்த்ததும் என்ன தோன்றிற்றோ நீங்க தங்கற மாதிரி இங்கே எதுவும் இல்லை. ஜெயம் கொண்டான் போகனும் இல்லையானால் கும்பகோணத்தில் தான் நல்ல அறை கிடைக்கும் என்றார்கள். கும்பகோணம் போக எவ்வளவு நேரம் ஆகும் என்றதற்கு இடையில் ஏதோ பாலம் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் அதனால் பேருந்துகள் சுற்றி போவதாகவும் காரானால் நேராகவே செல்ல முடியும் என்றும் சொன்னார்கள். பஸ்ஸில் ஒன்றரை மணி நேரம் ஆகும், காரில் தானே வந்திருக்கிறீர்கள் அப்படியானால் ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம் என்றார். நான் கார் இல்லை பஸ் தான் என்றேன் அப்போ ஒன்றரை மணி நேரம் ஆகும் என்றார்கள். கொஞ்சம் போல தயங்கி குடும்பம் எல்லாம் கூட இருக்கு தானே என்று அவர்கள் வினவ ஆமாம் வெளியில் இருக்காங்க என்று விடைபெற்றேன்.

திரும்பி வந்து சேகரித்த விசயங்களை இவர்களிடம் தெரிவிக்க, ஜெயம் கொண்டானில் அறை கிடைக்குமா என நாம் பைகளை வைத்துவிட்டு வந்த வெளிக்கடைக்காரரிடம் சென்று கேட்கலாம் என்றாள் ஸ்ரீ. அங்கே சென்று அவரிடம் கேட்க கூட்டு ரோட்டிலேயே நல்ல லாட்ஜ் ஒன்றிருப்பதாக சொன்னார். ஜெயம் கொண்டான் சென்றால் அங்கே நிறைய அறைகள் இருப்பதாகவும், ஆனாலும் கூட்டு ரோட்டில் இருக்கும் அளவுக்கு அத்தனை சுத்தமாக இருக்காது மேலும் ரேட்டும் அதிகமாக இருக்கும் என்றும் சொன்னார். இதானால் இப்போதான் கட்டி இருக்கிறார்கள் அறைகள் நன்றாக இருக்கும் என்று சேர்த்து சொன்னார். எங்களுக்கு ஜெயம் கொண்டானா கூட்டு ரோடா எங்கே செல்லலாம் என்று யோசனை எழுந்தது. ஒரு முடிவுக்கு வர முடியாது அங்கே டீ கிடைத்ததால் மூவரும் முதலில் டீ குடிக்கலாம் என்று முடிவு செய்தோம். கடையை ஒட்டினாற்போல் இருந்த கூரைக்கடியில் ஒரு மேசையும் சில ப்ளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டு இருந்தன. 3 டீ சொல்லி விட்டு அங்கே சென்று அமர்ந்தோம். 

அவரது கடையில் குழந்தைகளுக்கான சின்ன சின்ன பொம்மைகள், வித விதமான சாவிக் கொத்துகள், கழுத்தில் கட்டும் புனிதக் கயிறுகள், கங்கை கொண்ட சோழபுர சிறப்பை சொல்லும் புத்தகங்கள், இன்னும் நிறைய நிறைய நிறைய பொருட்கள் இருந்தன. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த படியே நான் யோசித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடையில் கடைக்காரர் போக இன்னும் சில ஆண்கள் குழுமியிருந்தார்கள். கடையில் இருந்த பொருட்களை நான் பார்த்தது போல அவர்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் எங்களைப் பற்றிய எத்தனை கற்பனைகள் ஓடி இருக்கும் என்று அனுமானிக்க முடியவில்லை. கடையில் வாங்கி இருந்த புத்தகத்தை ஸ்ரீ புரட்டிக் கொண்டிருந்தாள். சுமா கைபேசியில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். நான் கடைக்குள் திரும்பவும் சென்று அங்கே மாட்டி இருந்த கயிறுகளை ஆராய்ந்தேன். கருப்பு கயிறில் தெய்வப் படங்கள் கோர்க்கப் பட்டிருந்தன. அதில் ஒரு கயிறில் 'சே' வின் படமும் இருந்ததைப் பார்த்த போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுதுதான் 'motor cycle diaries' பார்த்திருந்தேன். தவிரவும்

‘சே’வை எனக்கு ஏனோ பிடிக்கும். அதுவும் ஒருபக்கமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரின் கருப்பு வெள்ளைப் படம் என்னவோ என்னை வெகுவாக ஈர்த்தது. உடனே அதை வாங்கி கழுத்தில் கட்டிக் கொண்டேன். அங்கே 'சே' படம் போட்ட கயிறுகள் நிறைய இருந்ததை அறிந்தும் நிச்சயம் ஸ்ரீயும் இதை வேண்டுவாள் என நினைத்தும் அவளிடம் சென்று ஏய் இங்கே பாரு டா என்று வேண்டுமென்றே அவளை உசுப்பினேன். எனக்கும் வேணும் எனக்கும் வேணும் என்றாள். அவளுக்கும் ஒன்றை வாங்கிக் கொடுக்க அவளும் அதை அணிந்து கொண்டாள். அணிந்ததும் இன்னதென தெரியாத ஒரு உணர்வு எழுந்தது. ஹ்ம்ம் அதை எப்படி விளக்குவது ஒரு வித உல்லாச மனநிலை, ஒரு விதத் திமிர், தான்தோன்றித்தனம். அந்த நேர சிறு மகிழ்ச்சியை எதுவும் குலைத்து விடமுடியாததைப் போன்ற ஒரு நிச்சயம் மிளிரத் தலை நிமிர்த்துத் திரிந்தோம். சுமா எங்களை ஒருமாதிரியாகப் பார்த்து யாரிந்த 'சே' என்றாள். He was a revolutionary, a good hearted human-being as far as I know என்றேன். நீ Motor Cycle Diaries பார்க்க வேண்டும் நான் உனக்கு பதிவு செய்து தருகிறேன் என்றேன்சரி நாம் திரும்பியதும் கொடு என்றாள் 

டீ வந்ததும் குடித்துக் கொண்டே மீண்டும் எங்கே தங்குவது என்ற சம்பாஷனை வந்தது. பேசாமல் கூட்டு ரோட்டில் தங்கிக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தோம். ஆனாலும் ஸ்ரீ இப்போது மணி ஏழு தான் இப்போதே சென்று நான்கு சுவருக்குள் அடைய முடியாது சும்மாவேனும் ஜெயம் கொண்டான் வரைக்கும் சென்று வரலாம் என்றாள். எனக்கும் இரவு நேரத்து ஜெயம் கொண்டானை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. சுமா வேறு வழியின்றி சரி என்றாள். உடனே ஸ்ரீ எஏய்ய் நாம் ஏன் ஒரு படத்துக்கு செல்லக் கூடாது என்று கேட்டாள். உடனே கடைக்காரரிடம் இங்கே நல்ல தியேட்டர் இருக்கா என்று கேட்டாள். இருக்கு ஆனா காலிப் பயலுக தான் இந்நேரம் படத்துக்கு போவாங்க நீங்க போறாதான கும்பகோணம் போங்க என்றார். கும்பகோணத்திற்க்கு போக தன் நண்பர் ஒருவரிடம் taxi இருப்பதாகவும் எண்ணூறு ரூபாய் கொடுத்தால் போய் பார்த்துவிட்டு திரும்பி வரலாம் என்றார். எண்ணூறா என்று பின் வாங்கினோம். சரி கூட்டு ரோடு சென்று முகம் கழுவி தயாராகி ஜெயம் கொண்டான் சென்று உணவருந்தி வரலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்தோம். திரும்பவும் ஸ்ரீ ஏய் படத்துக்கு போலாமா என்றாள். நான் தயக்கத்துடன் சுமாவை பார்த்தேன். எதிர்பார்த்ததைப் போலவே அவள் நீங்கள் இருவரும் தனியாக செல்லும்போது இதை எல்லாம் செய்யுங்கள் இப்போது வேண்டாம் என்றாள். நான் ஒன்றும் பேசாமல் மௌனம் ஆனேன்

கூட்டு ரோடு வந்து அந்த லாட்ஜை எளிதாக கண்டு பிடித்து அங்கே விசாரிக்க சென்றால் எங்கே இருந்து வரீங்க என்ற படியே எங்கள் பின்னால் ஒருவர் வந்தார். இவர் தான் பராமரிப்பவர் போல என்று நினைத்து கோயமுத்தூர் என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் என்மேல் தடுமாறி விழ வந்தார். சுதாரித்து உள்ளே தள்ளி நின்றேன். எங்களைப் பார்த்து லாட்ஜ் ஒட்டி இருந்த மருந்துக் கடையில் இருந்து வந்தவர் தாத்தா இப்போதான் வெளியே போயிருக்கார் இருங்க வந்துடுவார் இல்லேன்னா அந்த நம்பர்க்கு கூப்டு பாருங்க என்று லாட்ஜ் போர்ட்டில் இருந்த நம்பரைக் காட்டினார். ஸ்ரீ அந்த நம்பரை அழைத்து அறை வேண்டும் எனவும் லாட்ஜ் வாசலில் காத்திருப்பதாகவும் தகவல் சொன்னாள். உரிமையாளர் லாட்ஜில் தங்கி பராமரிப்பவரிடம் தகவலை சொல்லி அனுப்பி வைப்பதாக கூறி வைத்தார். அந்த தாத்தாவும் இரு நிமிடங்களுக்குள் வந்தார்.

வந்தவர் நேராக மருந்துக் கடைக்காரரிடம் செல்ல இருவரும் ஏதோ பேசியபடி குரலை சற்று உயர்த்தி நீங்க யாரு எதுக்கு உங்களுக்கு அறை வேண்டும், நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க படிக்கிறீங்களா என்றார். நான் ஆமாம் போலீஸ் ட்ரைனிங் எடுத்துட்டிருக்கோம் என்று துவங்க, கோவில் சுத்திப் பார்க்க வந்தோம் நேரம் ஆயிட்டதால இங்கயே தங்கிட்டு காலைல கோவிலைப் பார்த்துட்டு போகலாம் என்று தான் அறை கேட்கிறோம் என்று ஸ்ரீ முடித்தாள். சுமா மௌனமாக சிரித்தபடி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள். உடனே அவர் இறுக்கம் இளக அப்டியா சரி சரி வாங்க என்று எங்களை மேலே அழைத்து சென்றார். 

வாடகை பற்றி கேட்க அவர் கொஞ்சம் அதிகமாக சொல்லவும் காலையில் சீக்கிரம் கிளம்பிவிடுவோம் அப்படியும் இவ்வளவு வாடகையா என்று ஸ்ரீ கேட்டாள். அவர் உரிமையாளரிடம் பேச சொல்லவும் லாட்ஜ் உரிமையாளரிடம் ஸ்ரீ போலீஸ் என்றே சொல்ல அவரும் எங்களுக்கு கம்மி வாடகையில் அறைகளைத் தருவதாக சொன்னார். பிறகு தாத்தா உற்சாகம் தொற்ற எங்களுக்கு அறைகளைக் காட்டினார். இங்க வந்தாச்சில்ல இனிமே உங்க பாதுகாப்புக்கு நான் பொறுப்பு என்றார். கலக்கறீங்க தாத்தா என்றேன்.
பக்கத்தில் ஏதோ ஒரு ஊர்ப் பேரை சொல்லி அந்த ஊர் DSP எனக்கு சொந்தம் என்றார். அப்படியா சந்தோசம் என்றேன்.
எங்களுக்கு காட்டிய அறையில் சுடு நீர் வசதி இல்லாததால் காலையில் சுடு நீர் கிடைக்குமா என்றேன். உங்களுக்கு வேற அறை காட்டறேன் வாங்க என்று எங்களை அழைத்துக் கொண்டு வேறு அறைக்கு வந்தார். அந்த லாட்ஜ் அறைகள் எல்லாம் காலியாகவே இருந்ததாக நினைத்தேன். இதோ இது ஐய்யர்களுக்கு மட்டும் கொடுக்கறது உங்களுக்கு கொடுக்கறேன் என்றார். ஸ்ரீ சுமாவைக் காட்டி இது ஐய்யர் பொண்ணுதான் என்றாள். அடப் பாவி என்று அவள் காதுக்குள் கிசுகிசுத்தேன். பிறகு அவரிடம் ஸ்ரீ நாங்க கொஞ்சம் வெளில போகனும் போய்ட்டு வந்துடறோம் என்றாள். சரி பதினோரு மணிக்குள்ள வந்துடுங்க என்றார். அவர் நல்ல மனிதராகத் தெரிந்தார். ஒரு சில நிமிடங்களில் தயாராகி ஜெயம் கொண்டான் சென்றோம். காட்டு யானைகள் வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டதைப் போல சிலர் மிரட்சியாக பார்த்தனர். ஆண்கள் மிக நெருக்கமாக வருவதைப் போல் உணர்ந்தேன். எதற்கு வம்பு என்று கைகளைக் குறுக்காக கட்டிக் கொண்டே நடந்தேன்சுமா மிகவும் அசௌகரியாமாக இருந்ததைப் போல உணர்ந்தேன்
ஊரை ஒரு சுற்று வரலாமா என்று ஸ்ரீ கேட்க சுமா வேண்டாம் பிறகு ஏதாவது நடந்து விட்டால் அதற்கு பிறகு உட்கார்ந்து பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று மறுத்தாள். நான் இவர்களின் சம்பாசனையை சும்மா கேட்டுக் கொண்டு மட்டும் நடந்தேன். தென்பட்ட ஒரு சிறிய மெஸ்ஸில் சென்று கொத்து பரோட்டா கிடைக்குமா என்று நான் கேட்டேன். கல்லாக்காரர் கொத்து பரோட்டா போடலாமா என்று உள்ளே பார்த்துக் கேட்க உள்ளே இருந்தவர் சற்று யோசித்து சரி என்றார். அப்போதேனும் நான் கொஞ்சம் யோசித்திருக்கலாம் இருந்தும் ஒரு ஆர்வக் கோளாறில் காத்திருந்தேன். நன்றாக காய்ந்து போன பரோட்டாவை கொத்திக் கொத்திக் கொண்டு வந்து கொடுத்தார். எப்படியோ விக்கி தக்கி உண்டு முடித்தேன் என்றாலும் 50 ரூபாய் பில்லைப் பார்த்ததும் நிஜமாகவே விக்கியது. பரோட்டா போட்டு பழகவே இத்தனை விலைன்னா நல்லாப் போடக் கத்துக்கிட்டா எங்கயோ போய்டுவாங்க என்று நினைத்து கொண்டேன்.

பில்லைக் கொடுத்துவிட்டு திரும்பும் வழியில் சில மாத்திரைகள் வாங்க மருந்துக் கடைக்கு உள்ளே சென்றோம். கடைகாரர் உதவும் மனோபாவத்தில் இல்லை. ஏனோ தானோவென்று நாங்கள் கேட்டவைகளை எடுத்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அவரிடம் இங்கே தியேட்டர் எங்கே இருக்கு என்று கேட்டாள். இவள் ஏன் திரும்பவும் இதைக் கேட்கிறாள் என்று யோசித்தபடியே லேசாக மாறுபடும் அவரின் முக பாவங்களை    கவனித்துக் கொண்டிருந்தேன். கணத்திற்கு கணம் மாறுபட்டுக் கொண்டே இருந்த பாவத்துடன் கைகளை நேராக நீட்டி அங்கே இருக்கிறது என்றார். பிறகு எடுத்த மருந்துகளை கண்ணாடி மேஜையின் மீது வைத்திருந்த என் கைகளுக்கு சற்று தள்ளி வைத்தார். சில்லறைகளையும் அவ்வாறே வைத்தார்.அவரின் எண்ண ஓட்டம் புரிந்தபோலும் இருந்தது, புரியாதது போலும் இருந்தது. அப்படியே சற்று தூரம் நடந்து வந்து கூட்டு ரோடு பஸ் பிடித்து லாட்ஜ்க்கு வந்து படுக்க போகும் முன் ஸ்ரீ உங்களிடம் ஒரு உதவி கேட்கலாமா என்றாள். நானும் சுமாவும் என்ன உதவி கேள் என்றோம். தயவு செய்து நாலு மணிக்கு எழுந்து தயாராகி ஐந்து மணிக்கு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்றாள். அஞ்சு மணிக்கு போனாலும் இருட்டா இருக்கும் ஒன்னும் பாக்க முடியாது டா என்றேன். அவள் முறைக்கவும் சரி அங்க போய் காத்திருந்து பார்ப்போம் என்று படுத்தேன். படுத்தபடியே அந்த மருந்துக் கடைக்காரனைக் குறித்த பேச்சு வந்தது. நான் கவனித்ததை சொன்னபோது அதையே அவளும் உணர்ந்திருக்கிறாள் என்று அறிந்தேன்.
 
காலையில் சுமா என்னை மட்டும் சீக்கிரம் எழுந்து போய் குளிக்க வைத்து விட்டு நீ இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய், பாத்ரூம் பத்து நிமிடமாக காலியாக இருக்கிறது என்று எழுப்பினாள். இவர்கள் இருவருக்கும் எங்கு சென்றாலும் ஒரே நேரத்தில் பாத்ரூம் தேவைப்படம் எனவே நான் எப்போதுமே கடைசியாக கிளம்புவேன். உள்ளுக்குள் இவர்களின் சம்பாஷனையை ரசித்துக் கொண்டே படுத்திருந்தேன். அதற்குள் விடிந்து விட்டிருந்தது.
-தொடரும்-

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... தொடர்கிறேன்...

Sugirtha said...

நன்றி, தொடருங்கள்...

shri Prajna said...

Refreshing...:)

Sugirtha said...

thanks :)