Thursday, October 16, 2014

பெனி எனும் சிறுவன் - Kico Blushi - தமிழில் யூமா வாசுகி

 பெனி எனும் சிறுவன் என்ற அல்பேனிய நாவலை இன்றைக்கு படித்து முடித்தேன். இதை எழுதியவர் கிகோ புளூஷி, தமிழில் யூமா வாசுகி மொழி பெயர்த்திருக்கிறார். இதை ஒரு மாதமாக  தூக்கிக் கொண்டு சுற்றினேன் என்றாலும் படித்து முடிக்க தோதாய் ஒரு பொழுது அமையவில்லை.  நேற்று உடல்நலக்கேடால் நள்ளிரவு உறக்கம் தொலைந்தது நல்ல சமயமாகப் போய்விட்டது. இரவு துவங்கி காலையில் படித்து முடித்தேன். இந்த நாவல் பெனி என்ற சிறுவனின் பார்வையிலிருந்து எழுதப் பட்டிருக்கிறது. சமீப காலமாக எனக்கு குழந்தை உளவியல் மீது பெரும் ஆர்வம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் ஆசிரியை ஆகவேண்டும் என்பது தான் என் கனவாக இருந்தது. ஒருவேளை பிரியப்பட்டு உடுத்திக் கொண்ட காட்டன் புடவைகளால் வந்த கனவாக இருக்கலாம்.எனவே படித்து முடித்து ஒரு வருடம் வேலை இல்லாமல்  இருந்தபோது தீவிரமாக ஆசிரியப் பணிக்கு முயன்று கொண்டிருந்தேன். அப்போது ஹிந்து நாளிதழில், வணிகவியல் ஆசிரியை தேவை என்று ஊட்டி குட் ஷெப்பெர்ட் பள்ளியில் இருந்து கேட்டிருந்திருந்தார்கள். அதற்கு எழுதிப் போட்டதில் அவர்கள் என்னை நேர்முகத் தேர்விற்கு அழைத்திருந்தார்கள். அதற்காக என் சித்தப்பாவும், மாமாவும் என்னை ஊட்டிக்கு அழைத்துப் போனார்கள். அப்பொழுது தான் நான் முதல் முறை ஊட்டிக்கு சென்றேன். மலையின் ஊடான பயணம் என்னை திளைக்கச் செய்தது. திக்கு முக்காடிப் போனேன். அடடா இங்கேயே வேலை கிடைத்தால் இதை விட வேறென்ன வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் பள்ளிக்குள் நுழைந்ததும் மாணவர்களைப் பார்த்து திகிலடைந்தேன். நல்ல ஆரோக்கியமாக, வாட்ட சாட்டமாக வெளிநாட்டு மாணவர்கள். இதென்ன பதினொன்றாம் வகுப்பு தானே இவர்கள் நம்மைக் காட்டிலும் பெரிதாக இருக்கிறார்களே? இறைவா! நான் இவர்களுக்கு எப்படி பாடம் எடுக்க முடியும் என்று என் உள்ளங்கை வியர்க்கத் துவங்கியது. நேர்முகத் தேர்வும் நடந்தது. ஐந்து வருடம் கான்ட்ராக்ட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். நான் என் பெற்றோரிடம் கேட்டு சொல்கிறேன் என்று வெளியே வந்தேன். சித்தப்பா ஒப்பவில்லை பிறகு திரும்பும் வழியில் நல்ல வேளை உனக்கு இங்கே வேலை கிடைக்கவில்லை வரும்போது வழியெல்லாம் வேலை கிடைக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே வந்தேன் என்றார்.உன்னை இந்த மலை மேல் விட்டு விட்டு எப்படி நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றார். நானும் அந்த மாணவர்கள் மத்தியில் இருக்கத் தேவை இல்லை என்று நிம்மதி அடைந்தேன்.அதன் பிறகு திருப்பூர் கல்லூரி ஒன்றில் முயற்சித்தும் கிடைக்காமல் பிறகு ஆசிரியை ஆகும் முயற்சியை கைவிட்டேன். பெங்களூர் வந்தடைந்தேன்.

சரி இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால் திரும்பவும் ஆசிரியை ஆகும் கனவு தொற்றிக் கொண்டு விட்டது. இம்முறை காட்டன் புடைவைக்காக அல்ல. நாம் தான் இவ்வுலகை வாழவே தகுதியற்ற ஒரு இடமாக மாற்றிவிட்டோம். நாளை நம் குழந்தைகளாவது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே குழந்தைகள் எந்தப் பயமும் அற்று சுதந்திரமாக  இயங்கவும், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும், தங்கள் காரியங்களுக்கு தாங்கள் பொறுப்பேற்கவும், எவரையும் சாராது முடிந்தவரையில் தன் தேவைகளை தானே நிவர்த்தி செய்துகொள்ளும்  திடமுடையவர்களாகவும் ஊக்கமுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். அப்படியான ஒரு வெளியை அகமும், பள்ளியும் அமைத்துக் கொடுத்தால் எத்தனை நலமாய் இருக்கும்.அப்படி ஒரு இடத்தில் அப்படியான வேலை செய்ய  வேண்டும் என்றே இந்தக் கனவு என்னைத் தொடர்கிறது.தோழி ஒருத்தி under privileged குழந்தைகளுக்காக பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியதில் இது ஒன்றும் சினிமாவில் காட்டுவது போல காட்டன் புடவை கலையாமல் சென்று வருகிற காரியமில்லை. கடுமையான பணி என்று புரிகிறது. எனவே சிறுவர்களை அவர்களின் உலகை  முதலில் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.இதில் ஆர்வம் ஏற்பட்டதிலிருந்து நான் சந்திப்பவர்கள், பார்ப்பவை படிப்பவை எல்லாம் இதற்கு ஏற்ப அமைகிறது. அந்த வகையில் இந்த நாவல் எனக்குப் பிடித்துப் போனது. இந்த நாவல் பெனியின் மன வெளியை காட்டிக் கொடுக்கிறது. படிக்க படிக்க நமக்கு மிகப் பரீட்சியமான உணர்வுகளாக தெரிகிறது. அட நமக்குள்ளும் சிறுவன் இன்னும் மிச்சமிருக்கிறானே. அவ்வப்போது எட்டிப் பார்க்கிறானே.தேன் மிட்டாயிலிருந்து வரும் ரசத்தை இன்றைக்கு நினைத்தாலும் எச்சில் ஊறுவது அந்த சின்ன நாவிலிருந்து தானே.

சரி நாம் நாவலுக்கு வருவோம். பொதுவாக எல்லாப் பெரியவர்களும் தவறாமல் செய்கிற காரியம் குழந்தைகளின் மீது பயத்தை ஏற்றுவது மேலும் அவர்களின் மீது நம் எதிர்பார்புகளை திணிப்பது. அப்படிதான் பெனியின் அம்மாவும் எந்த மாற்றமும் இல்லாமல் பெனியின் மீது பயத்தையும் மேலும் நீ நல்லவனாக வர வேண்டும். அம்மா பேச்சை கேட்க வேண்டும். எதிர்த்துப் பேசக் கூடாது அது நல்ல குழந்தைகளுக்கு அழகல்ல என்று சொல்லி சொல்லி வளர்கிறார். அவனை எங்கேயும் வெளியே அனுப்பாமல் வீட்டுகுள்ளேயே வைத்திருப்பதால் அவன் நண்பர்கள் அவனை “அம்மா பிள்ளை” என்று கேலி செய்கிறார்கள். இது அவன் மனதை பெரிதும் பாதிக்கிறது. அவன் மிகவும் சுருங்கிப் போகிறான். அவ்வப்போது அடம் பிடிக்கத் துவங்குகிறான். விடுமுறை நாட்களில் அம்மாவின் கெடுபிடி அதிகரிக்கவே ஒரு கட்டத்தில் அவன் மிகுந்த வெறுப்புற்று அதை நேரிடையாகக் காட்டினால் அம்மா அழுவாளே என்று மறைமுகமாக அம்மாவை பழி வாங்க எண்ணுகிறான்.கடைக்கு சென்று வாங்கி வந்த நாவல் பழங்களை மறைந்து நின்று கொண்டு வீட்டின் ஜன்னல் மீது ஒவ்வொன்றாக எரியத் துவங்குகிறான். அம்மா ஜன்னல் வெளியே எட்டிப் பார்க்கும்போது மறைந்து கொள்கிறான். அதற்கு முன்னால் அவன் நண்பன் அப்படி செய்ததை பார்த்திருந்த அம்மா அவன் தான் திரும்பவும் இதை செய்கிறான் என்று அவனை வைகிறார்.  அவனுக்கு இது வேடிக்கையாகிறது. ஆனால் எதிர் பாராத விதமாக அங்கு வந்த அவன் மாமா அதைப் பார்த்துவிடுகிறார். அவன் மாமாவை அவனுக்கு நிரம்பவும் பிடிக்கும். அவனுக்கு அவரின் குதிரையின் மீது அலாதி பிரியம் இருந்தது. மாமா அம்மாவைப் போலில்லாமல் தன்னை பெரிய மனிதனாக நடத்துவார்.அவன் தன் குறைகளையெல்லாம் மாமாவிடம் மனம் திறந்து கொட்டுகிறான். ஜன்னல் வழி எட்டிப் பார்க்கும் அம்மா மாமாவைப் பார்த்து மேலே வீட்டிற்கு அழைக்கிறார். பெனி மாமாவிடம், தான்  சற்று வெளியே இருக்கவேண்டும் என்றும் அவர் அம்மாவிடம் உரையாடும்வரை அவரின் குதிரையை தான் நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும் வாக்களிக்கிறான். மாமா, அம்மாவிடம் பெனியை தன் கிராமத்திற்கு அழைத்துப் போவதாக அனுமதி வாங்குகிறார். மலை மேல் இருக்கும் அந்த கிராமத்தை காண பெனியும் ஆர்வமாக கிளம்புகிறான். ஆனால் அங்கே சென்றதும் தன் அம்மா உடன் இல்லை என்று அச்சம் கொள்கிறான். அழுகிறான். அத்தை அவனைத் தழுவி தேற்றுகிறாள். பெனி சென்ற அந்த நாள் அவன் மாமன் மகன்  நண்பர்களோடு காட்டில் இரவு தங்கப் போகிறேன் என்று கிளம்புகிறான். பெனிக்கு அது மிகுந்த வியப்பை தருகிறது. அவன் தமாஷ் செய்கிறான் என்று நினைக்கிறான். ஆனால் அவன் உண்மையாகவே கிளம்பிச் செல்லவும் அவனின் தைரியத்தை வியக்கிறான். கிராமத்திற்கு சென்று, நகருக்கும் கிராமத்திற்குமான வேறுப்பாட்டை உணரும்போது அவனுக்கு நிறைய கேள்விகள் வருகின்றன.அவன் தொடர்ச்சியாக மாமனின் மகனிடம் கேள்விகள் கேட்கிறான். விலங்குகளிடமும், தனியாக செல்லவும் மிகுந்த பயம் கொள்கிறான். இது பொறுக்காமல் மாமன் மகன் இவனைக் கோழை என்றும், முட்டாள் என்றும் வைகிறான். மாமன் அதைக் கண்டிக்கிறார். நீயும் நகருக்கு சென்றால் மோட்டார் வாகனங்களையும் கட்டிடங்களையும் இப்படித்தான் பார்ப்பாய். அவனுக்கு இது எல்லாம் பழக்கமில்லை சொல்லிக் கொடு என்கிறார்.

ஒவ்வொரு முறையும் தானும் ஒரு நாள் தைரியசாலி ஆவேன் என்று உறுதி கொள்கிறான். மாமா அவனை மேலும் மேலும் ஊக்குவிக்கிறார். இங்கே பெரியவர்கள் சிறுவர்களை நெருக்குவதில்லை அவர்களுக்கும் எல்லா வேலையும் கொடுக்கப் படுகிறது. மாமாவின் குதிரை அவர் சொந்தக் குதிரை அன்று. அது கூட்டுப் பண்ணையை சார்ந்தது என்று அறியும்போது ஏமாற்றம் அடைகிறான். பிறகு கூட்டுப் பண்ணையைப் பற்றி அறிந்து கொள்கிறான். தானும் அந்த வேளைகளில் பங்கு கொள்ள முனைகிறான். கதிர் அறுக்கிறான்.மாமா அவனுக்கு வேலையில் கதிர் சுமைகளை எடுத்து செல்ல ஒரு கழுதையை கொடுக்கிறார். மாமனின் நண்பர்கள் அவனுக்கும் நண்பர்களாகி விடுகின்றனர். அவர்களோடு அவன் நீந்த கற்கிறான். அவன் அங்கே தங்கி இருந்த நாட்களில் மெது மெதுவாக ஒவ்வொரு பயத்தையும் வெல்கிறான்.கடைசியில் அவனும் நண்பர்களோடு காட்டில் ராத்தங்க கிளம்புகிறான். காட்டில் இருக்கும்போது அவனுள் எதிரொலிக்கும் உணர்வுகளை நாமும் உணர முடியும். சில சிறுவர்கள் உருளைக்கிழங்குகளை எடுத்து வந்து சுட்டார்கள். வேறு சிலர்  விலங்குகளைப் பிடிக்க பொறி வைத்தார்கள். இவன் அங்கே துணை வந்திருந்த வேறொரு மாமாவோடு அமர்ந்திருக்கிறான். மாமா அவனை களைப்படைந்து விட்டாயா என்று வினவுகிறார். அவன் இல்லை என்றும் என்ன வேலை செய்ய வேண்டும் என்றும் மாமாவைக் கேட்கிறான். அவர் வைத்த பொறியில் ஏதேனும் விலங்கு அகப்பட்டிருகிறதா என்று பார்த்து வர சொல்கிறார். தன் பயத்தையும் மீறி காட்டில் இருளுக்குள் சென்று பொறியில் ஏதேனும் விலங்கு மாட்டி இருக்கிறதா என்று பார்த்து வருகிறான். மாமா போர் வீரனைப் பற்றி பாடுகிறார். சிறுவர்கள் நெருப்பை சுற்றி அமர்ந்து  கொண்டு அவரோடு சேர்ந்து பாடுகிறார்கள். பிறகு சுட்ட உருளைக் கிழங்குகளை உண்டுவிட்டு நட்சத்திரங்களை எண்ணியபடியே உறங்கிப் போகிறான். அவன் விடுமுறை நாட்கள் முடிகின்றன. ஜெர்மானியர்கள் ஊடுருவியதைப் பற்றி எல்லாம் அவனுக்கு அங்கு தான் தெரிய வருகிறது. இந்தப் பயணத்தில் நிறைய விசயங்களை அறிந்து கொள்கிறான். நகருக்கு திரும்புகிறான். அவன் சொன்ன கதைகளை அங்கே யாரும் நம்பவில்லை. பிறகு பள்ளிக்கு அவனுக்கு ஒரு கடிதம் வருகிறது. கிராமத்திலிருந்து அவன் நண்பர்கள் எழுதி இருக்கிறார்கள். அவன் நண்பர்கள் எல்லோரும் சுற்றி இருந்து அதை வாசிக்கிறார்கள் என்று முடிகிறது. ப்ளாஷ் பாக் செல்ல விரும்புகிற எல்லோரும் படிக்க வேண்டிய நாவல். மேலும் சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று  உணர்வதில்லை.ஒரு முழுமையான மனிதனாக/மனுஷியாக தான் உணர்கிறார்கள். அவர்களை அப்படி நடத்தவே விரும்புகிறார்கள்.அவர்களின் ஆளுமை மிகவும் உறுதியானது. இதை எல்லாம் பெனியின் மூலம் ரொம்ப அழகாக சொல்லி செல்கிறது நாவல். 

2 comments:

Li. said...

நீங்க ஒரு மாசம் தூக்கிச் சுமந்து ஒரு இரவு முழுதும் படித்த நாவல், எனக்கு 10 நிமிடம்தான் பிடித்தது.. ;-)

Sugirtha said...

அப்டியா சூப்பர் :)You're a very fast reader.