அவளுக்கு காலையில் எழுந்ததுமே கடு கடுவென இருந்தது. கிளம்பி அலுவலகத்திற்கு செல்ல பாதி வழி வந்தாயிற்று. ஆனால் இப்போது அலுவலகம் செல்ல சுத்தமாய் விருப்பமில்லை அதற்கான மனமுமில்லை. இந்த நிலையில் சென்றால் ஒரு வேலையும் ஓடாது என்று நிச்சயமாய் தெரியும். எதாவது தான் மட்டுமே செய்யும் வேலையாக இருந்தாலாவது காதில் இயர் போனை மாட்டிகொண்டு, ஏதாவது பாட்டைக் கேட்டுக் கொண்டு,எதையும் சட்டை செய்யாமல் தன் போக்குக்கு எதையாவது செய்து கொண்டிருக்கலாம். இன்றைக்கு இருக்கும் மீட்டிங்குகள் அதற்கு இடம் கொடாது. மீட்டிங்கில் மனிதர்களை எப்படி தவிர்க்க முடியும்? மீட்டிங்கே மீட்டிங்குக்கு தானே. பேசாமல் விடுமுறை எடுக்கலாம் என்றாலும் போதுமான லீவ் பாலன்ஸ் வேறு இல்லை. அதையும் மீறி விடுப்பு எடுத்தாலும் தான் புழங்கும் இடத்தில தேவையான தனிமையும் கிடைக்காது. எந்த வகையில் யோசித்தாலும் ஏன் இப்படி முட்டிகொள்கிறது. இருந்தாலும் என்னவென்று தெரியவில்லை ரொம்ப தீர்மானமாக இன்று யாரையுமே பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அலுவலகத்திற்கு போனால் ஏன் இப்படி இருக்கிறாய் என்ற அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல மட்டுமல்ல, அந்த கேள்வியே எரிச்சலாய் இருக்கும். எப்போதும் ஒரே மாதிரி இருந்து விட்டால்/ இருக்க முடிந்தால் பிரச்சனை இல்லை. சந்தோஷம் வந்தால் கட்டுக்கு அடங்காமல் குதிப்பதும், துக்கமென்றால் செத்தவன் கையில் வெத்தல பாக்கை கொடுத்ததை போல இருப்பதையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எத்தனை முறை முயன்றாலும் முடிவதில்லை. அதுவும் தினமும் பார்க்கும் முகங்கள், தன் முகத்தைப் பார்த்ததும் உஷாரில்லை என்பதை அப்படியே கண்டு பிடித்து விடுகிறதுகள். கண்டுபிடிப்பதோடு விடாமல் கேட்கவும் செய்யும்போது ஏன் எல்லோரும் நாகரீகம் அற்று இருக்கிறார்கள் என்று தோன்றியது. அப்படி யாரும் கேட்காமல் விட்டால் தன்னை யாருமே கண்டு கொள்ள வில்லை, தனக்கு யாருமே இல்லை என்று சுய இரக்கத்தில் மருகுவது. இப்படிதான் நிறைய வேளைகளில் குளிருமற்ற வெப்பமுமற்ற ஒரு தன்மை தனக்கு. இத்தனையும் இருக்க,திடீரென்று தன்னை யாரும் பார்க்க கூடாமல் உலகமே இருண்டு விட்டால் நன்றாய் இருக்கும் என தோன்றியது. இன்றைக்கு தனக்கு யாருமே தேவை இல்லை என்று தோன்றத் துவங்கியது. இப்படி வாழ்க்கையே சூனியம் ஆகுமளவுக்கு என்ன நடந்து விட்டது என்றால் அப்படி ஒன்றுமே நடக்க வில்லை. காரணமற்ற மனப் பிராந்து தான் பிரச்சினையே.
மனசு முழுக்க இப்படி சூறாவளி அடிக்கும் நிலையில் உள்ளே போக விருப்பமில்லை சுபத்ராவிற்கு. அலுவலகத்திற்கு கொஞ்சம் முன்னாடியே ஆட்டோவை நிறுத்தச் சொல்லி இறங்கினாள். செல்போனையும் சுவிட்ச் ஆப் பண்ண நினைத்து அதற்கு முன் இன்றைக்கு அலுவலகம் வர தாமதமாகும் என்ற ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு கால் போன போக்கில் நடந்தாள். ஒரு கட்டத்தில் ரோடு முடிந்தது அந்த முக்கிலிருந்து நான்கு ரோடுகள் விரிந்தது. எப்படி செல்லலாம் என்று யோசிக்கையில் அங்கே ஒரு பால் பூத் இருந்தது தெரிந்தது. அங்கே சென்று ஒரு சாக்கோபார் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டாள். ஏன் அவளுக்கு அதை வாங்க தோன்றியது தெரியாது. ஒரு வேளை தினமும் செய்வதிலிருந்து மாறுபாடாக ஏதாவது செய்தால் அவளுக்கு மன மாற்றம் கிடைக்கலாம். அதை சாப்பிட்டுக்கொண்டே ஒரு தெருவை தெரிவு செய்து நடக்கையில் ஒரு வீட்டின் குட்டை கேட்டின் வழி அங்கே இருந்த தோட்டத்தை அவளால் பார்க்க முடிந்தது. அப்போதுதான் நீர் விட்டு இருக்கவேண்டும், ஈர மண், இலை இடுக்குகளின் வழியே நுழைந்து ஈரம் உறிஞ்சும் சூரியன். அவளை சுற்றிலும் யாரும் இல்லை. அப்போது அவளுக்கு உள்ளே நுழைய அத்தனை ஆவலாயிருந்தது. உள்ளே நுழைந்து செருப்பை கழற்றி ஒரு மதில் சுவரின் ஓரத்தில் விட்டு விட்டு வந்து, அந்த ஈரமண்ணில் தன் பாதத்தை பதிய வைத்துக் கொண்டு, செடிகளை ஒட்டி இருந்த சற்றே உயர்ந்த அந்த காரைத் திண்டின் மேல் உட்காரத் தோன்றியது. பார்த்துக் கொண்டே இருக்கையில் இலைகளுக்கு இடையே ஊடுருவும் வெளிச்சத்தின் பிரதிநிதியானாள் முதலில், பிறகு தானே வெளிச்சமானாள், பிறகு செடிகளின் கால்களைச் சுற்றிய ஈரமானாள். ஈரம் வட்டமாக சுருண்டு செடிக் கால்களுக்குள் ஊடுருவி வேருக்குள் மறைந்தது. அப்போது வண்டியை தள்ளிக் கொண்டு பழம் விக்க வந்தவர்களை, அவர்களின் பார்வைகளை தவிர்க்க வேண்டி மேலும் அங்கே நில்லாது திரும்பவும் நடக்கத் துவங்கினாள். தான் கைபேசியை சுவிட்ச் ஆப் செய்யாதது நினைவு வந்து அணைக்க எடுக்கையில் மிக சரியாக அழைப்பு வந்தது.
இவள் சுரத்தே இல்லாமல் பேச அவன் மறு முனையில் என்னாச்சு என வினவினான்.
எப்படியோ இருக்குது டா என்றாள் இவள்.
எப்படியோன்னா எப்படி இருக்குது?
அது தெரியாமதான எப்படியோன்னு சொல்றேன். அப்றோம் இதென்ன கேள்வி.
அதெப்படி எப்படியோ இருக்கும். என்ன மனநிலைல நீ இருக்கேன்னு கூட தெரியலையா உனக்கு.
ஆமா அப்டிதான் வெச்சுக்கோயேன்.
நீ என்ன லூசா?
ஆமா நான் லூசு தான். நான் பைத்தியம் தான் அதுக்கென்ன இப்போ.
நீ பயங்கரமா சண்டை போடற மூட்ல இருக்கே. எதுக்கும் நான் நாளைக்கு கூப்டறேன்.
பயந்துட்டியா? அதெல்லாம் சண்டை போட மாட்டேன் இன்னிக்கு.
அப்டியா?
ஆமா.
ஏன்?
ஏன்னா?
ஏன் சண்டை போடற மூட்ல இல்லேன்னு கேட்டேன்.
என்னதிது இப்போ இத்தனை கேள்வி. உனக்கே தெரியும் எனக்கு கேள்வி கேட்டா பிடிக்காது. அதிலயும் இத்தனை கேள்வி கேட்டே அவ்ளோ தான், இப்போ நான் பேசற மூட் ல இல்லே. நான் அப்றோம் பேசறேன்.
என்னாச்சு பா என்றான் அவன்.
போடா எனக்கு பேசப் பிடிக்கல.
என்கூட கூடவா பேச பிடிக்கல.
......
கேக்கறேன் இல்ல பதில் சொல்லு.
......
என்னாச்சு. பேசு எல்லாம் சரியாயிரும்.
என்ன சொல்வது. இது என்ன மனநிலை, காற்றின் போக்குக்கு உருண்டு கொண்டிருக்கும் காகித குப்பைகளைப் போல பிடிப்பற்று அலைகிற மனது. தொடர்ந்து ஒரே இடத்திலேயே சுற்றிகொண்டே எங்கேயும் நகராமல் முரண்டு பிடிக்கிறது. உலகத்தின் எல்லாக் குப்பைகளும், மணலும், துகளும் தன்மேல் ஒட்டிக் கொண்டிருப்பது போல ஒரு பிரமை வேறு பிடித்துக் கொண்டது அவளை. மனசெல்லாம் என்னென்னவோ எண்ணங்கள் வந்து சுழித்து சுழித்து அடிக்கிறது. இதை எதோடு ஒப்பிட்டு, எப்படி என புரிந்து கொள்ளவது. என்ன சொல்லி விளக்குவது. என்னென்னவோ கேள்விகள், குற்ற உணர்வுகள் என இன்னதென இனம் பிரித்துப் பார்க்க முடியாத சாத்தான்கள் உள்ளே புகுந்து கொண்டு ஆட்டம் போடுகிறது. இப்படி ஓராயிரம் உணர்வுகள் அலைகழிக்கையில் சொற்கள் தொலைந்து போதல் எத்தனை அநியாயம். என்னை எது என்ன செய்கிறது. இப்படியான நிலையில் தனக்கு தன்னை விட்டு விட்டு கண்ணுக்கு தெரிகிற பச்சயையோ,வானத்தையோ, முகிலையோ பார்த்துக் கொண்டிருப்பது தான் தோது படும். இந்த மாதிரியான சமயங்களில் எனக்கு நானே அன்னியமாகிப் போவேன். எனக்குள் நானே போக அஞ்சுவேன். இத்தனை வருடங்களாக அப்படிதான் இருந்திருக்கிறேன்.
இப்படியான நிலையில் அவளுக்கு என்ன நிகழ்கிறது என அறிந்து கொள்ள விளைகிற எண்ணத்தோடு அவன் எழுப்பும் கேள்விகளை சுபத்ரா சந்திக்க தயாராக இல்லை. இதே ரீதியில் யோசனைகளை தூண்டுகிற அவன் கேள்விகளை சந்திப்பது அவளுக்கு மிகுந்த கடினமாய் இருக்கிறது. மூளையின் மேல் ஏறி அமர்ந்து கொண்ட அந்த பாறாங்கல்லை என்ன முயன்றும் அவளால் தள்ள முடியவில்லை. மாறாக மூச்சுத் திணறல் வந்தது. அவனில்லாத முந்தைய பொழுதுகளில் எண்ண அலைகள் புரட்டும் நாட்களை ஏதாவது பாடல்கள் கேட்டுக் கொண்டோ, இலக்கில்லாமல் நடந்து கொண்டோ, நினைவுகளைக் கிளறிக் கொண்டோ, எதையாவது கிறுக்கிக் கொண்டோ கடந்து வந்திருக்கிறாள் அவள். எதையுமே யோசித்ததில்லை. சொல்லிக்கொள்ளாமல் வருவது போல அந்த மனநிலை சொல்லிக் கொள்ளாமல் போய்விடும். பிறகு அவளுக்கு தெரிந்த அவள் அவளிடமே திரும்பி வந்துவிடுவாள்.
ஏய் என்னாச்சு? ஏன் பேச மாட்டேன்ற?
அவளுக்கு பதில் சொல்ல உதடுகள் பிரியவில்லை. மாறாக கண்களில் நீர் துளிர்த்தது. அவளுக்கு தெரியும் இப்படியான நிலையில் அவள் தான் பேசி எத்தனை உறவுகளை இழந்திருக்கிறாள் என்று. தனக்கு அவள் எப்படி அன்னியமாகிப் போகிறாளோ அதே போல தன்னோடு எவ்வளவு நெருங்கி வந்த ஒருவரையும் தனக்கு யாரென்றே தெரியாததைப் போல அவளால் தள்ளி நிறுத்தி பேச முடியும். அவளிடம் அத்தனை உருகலும் பாசமும் நேசமும் இருந்த சுவடே தெரியாது அந்த நேரத்தில். தான் ஏன் இப்படி இருக்கிறோம் என்று தெளிவாய் இருக்கும் சில வேளைகளில் அவள் யோசிப்பதுண்டு. அவளுக்கு மனிதர்களை தான் அப்போது அறவே ஒதுக்க முயல்வது ஏன் என்பது பற்றி புரியவே இல்லை. தன்னை யாரும் தீண்ட முடியாத இடத்துக்கு ஏன் தன்னை நகர்த்துகிறாள் பிறகு அதற்காக ஏன் வருந்துகிறாள் என அவளுக்கு புரியவே இல்லை. எப்படி அவளால் ஒரே வாய் கொண்டு உருகி உருகி பாசத்தை பொழிய முடிகிறது, அதே வாய் கொண்டு எப்படி அவர்களை தூக்கி எறிய முடிகிறது என்று எவ்வளவு முயன்றும் கண்டு கொள்ள முடியவில்லை. எதுவுமே தன் கட்டுபாட்டில் இல்லாதது போல தோன்றியது அவளுக்கு. இனி மேல் யாரோடு பழகினாலும் ஒரு போர்டு மாட்டிக் கொள்ள வேண்டும், நாய்கள் ஜாக்கிரதை மாதிரி, நான் ஜாக்கிரதை போர்டு. பழகிய நாய் எந்த நேரத்தில் கடிக்கும் என்று யாருக்கும் தெரியாது அது போல தான், தான் என்று அவளுக்கு தோன்றியது. தெரு நாயை விட பழகிய நாய் கடிப்பது தான் வலி.
இந்த மௌனத்தை அவனால் கடக்கவே முடியவில்லை. இன்று ஏன் இப்படி இருக்கிறாள் இவள் என அவன் குழம்பினான்.
என்னாச்சும்மா என்றான்
தனக்கு இப்போது இருப்பது அவன் ஒரே ஒரு ஜீவன். அவனையும் விரட்டி விட்டால் தனக்கு யாருமே இல்லை என்ற உணர்வும் அவளுக்கு வந்தது. எப்படியும் தான் கடிக்கப் போவது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும் தவிர்க்க வேண்டி அவனிடம் அப்பறோம் பேசுகிறேன் என்றாள்.
அவனுக்கு பெரும் குழப்பமாய் இருந்தது. என்னவென புரிந்து கொள்ளும் வேகமும் ஆர்வமும் அவனுள் கேள்விகளாய் முளைத்தது.
இப்போ பேசப் போறியா இல்லியா என்றான்
எனக்கு இப்போ இந்த போனை போட்டு உடைக்க தோணுது.
என்னாச்சு, நீ இப்டி எல்லாம் பேசி நான் கேட்டதே இல்லை. எது உன்னக் கஷ்டபடுத்துது?
எனக்கிப்போ பேச பிடிக்கல. தயவு செஞ்சு போனை வெச்சுரு. இல்லேன்னா நான் உன்ன காயப் படுத்துவேன்.
அவனுக்கு சற்று பயம் வந்தது. தான் முந்தைய நாள பேசிய ஏதோ ஒன்று தான் அவளை காயப் படுத்தி இப்படி எல்லாம் பேச வைக்கிறது என்று நினைத்தான். நினைத்தான் என்பதை விட நம்பினான். இதற்கு முன்னும் இப்படி நடந்திருக்கிறது. இவளிடம் பிரச்சினையே எதையும் மனசை திறந்து பேசாததுதான். ஒரு ஆயிரம் கேள்வி கேட்டு குடைந்து தான் அவளை பேச வைக்க வேண்டும். எப்படியும் இன்று இதை வளர விடக் கூடாது. என்னவானாலும் இதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தான்.
பரவால்ல பேசு. எது உன்ன ரொம்ப பாதிச்சது. நான் எதாச்சு தப்பா பேசிட்டேனா என்றான்.
இல்ல. நீ ஒண்ணுமே சொல்லல. நான் கொஞ்ச நேரத்துல சரியாயிருவேன். எனக்கு அப்போப்போ இப்டி இருக்கும். நான் கூப்டறேன் இன்னும் கொஞ்ச நேரத்துல.
இல்லே நீ சொல்லு என்னாச்சு உனக்கு. ஏன் இப்டி பேசறே? என்கிட்டே சொல்ல மாட்டியா. நான் சொன்னது ஏதோ தான் உன்ன பாதிச்சிருக்கு. ஏன் என்கிட்டே மறைக்கற?
அவள் எதையோ வேண்டுமென்றே மறைப்பதாகவும், வெளிப்படையாய் இல்லாதது போலவும் அவளை நம்பாமல் அவன் கேட்டது அவளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்தது. அவள் எத்தனையோ முறை அவனிடம் சொல்லி இருக்கிறாள், தன்னை யாரும் இவ்வளவு நெருங்கி வந்ததில்லை என்றும், அவனிடம் மட்டும் தான் அவள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள் என்றும். அப்படி இருக்க ஒரு நிமிடத்தில் அவன் அத்தனையும் பொய்யென புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் அப்படி அவளை கேட்டது அவளுக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது.
நீ போன வைடா என கத்தினாள்.
ஒரு நிமிடம் அவனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. இவள் எப்போதும் தன்னிடம் குரலை உயர்த்திக் கூட பேசியதில்லை. இன்று எல்லாமே வேறாக, புதிதாக இருந்தது.
அவளுக்கும் தான் கத்தியது புரிந்தது. ஆனால் ஒரு நிலையில் அவள் இல்லை. கொஞ்ச நேரம் அங்கே மௌனம் நிலவியது.
மௌனத்தை உடைத்து அவன் மிகுந்த பதட்டத்துடன் கேட்கிறான். என்னாச்சு நீ ஏன் இப்டி பேசற. உனக்கென்ன பண்ணுது?
எனக்கு தெரியலையே எனக்கு என்ன நடக்குதுன்னு புரியாத இந்த நிலை என்னை எங்கேயோ இழுத்துப் போகிறது. எனக்கு பெருங்குரலெடுத்து கத்த வேண்டும் போல் இருக்கிறது. வியர்க்கிறது. என்னால் எதுவும் பேச முடியவில்லை. இப்படியாய் ஓடிய எண்ணங்களை தாண்டி அவளால் எதுவும் பேச முடியவில்லை. அவன் தன்னை தன் நிலையை தான் எதுவுமே சொல்லாமல் புரிந்து கொள்ள மாட்டானா என்று இருந்தது. இதற்கு மேல் எதுவும் கேளாமல் இப்படியே விட்டு விட மாட்டானா என்று இருந்தது.
சற்று ஆசுவாசமாக நான் உன்கூட இருக்கேன் சுபா, உனக்கு ஒண்ணுமில்லே என்கிறான்.
இப்போது அவளுக்கு அவன் தான் எல்லாம் என்று அவன் மேல் அத்தனை அன்பு பொங்குகிறது. அவன் தன்னோடிருக்கிறான் எந்த நிலையிலும் தன்னோடு இருப்பான் என்று நிம்மதி அடைகிறாள்.
மறுபடியும் கேட்கிறான் நீ பேசினா சரியாகும் சொல்லு.
ஐயோ இவன் மீண்டும் தன்னை பேச சொல்கிறான். அவளுள் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுகிறது.
எனக்கு எதுவுமே பிடிக்கல. யாரையும் பிடிக்கல. யாரோடையும் பேசவும் பிடிக்கல.
என்கூட கூடவா?
இந்த நேரத்திலா அவன் இந்த கேள்வியை கேக்கணும்? அவள் இல்லையென சொல்ல நினைக்கையிலேயே 'ஆமாம்' வெளியேறிவிட்டன வார்த்தைகள். இந்த சொல் அவனை நிச்சயம் காயப்படுத்தும் என தெரிந்தும் அது உண்மை இல்லை என புரிந்தும் அவள் அதை சொன்னாள். அவளுக்கு தன்னை மிக நெருங்கிய அவனை அப்போது காயப் படுத்த தோன்றியது ஏன் என தெரியவில்லை.
அவன் அந்த பதிலில் மிகுந்த அதிர்ச்சி அடைந்தான். அவனால் மீள முடியாது அங்கே ஒரு நீண்ட மௌனம் நீள்கிறது, பிறகும் அவன் நம்ப முடியாமல் மறுபடியும் உறுதிபடுத்திக்கொள்ள கேட்கிறான், என்னோடு கூடவா?
அவள் மறுபடியும் அதே பதிலை மிக தெளிவாக, உறுதியாக சொல்கிறாள். சொன்னதும் மனது உள்ளே கதறுகிறது ஐயோ என்னை இப்டி விட்டுட்டு போயிடாதேயேன் டா, இப்போது பேசுவது நானல்ல, என்னை பிடித்திருக்கும் எதுவோ ஒன்று, என்னை அதோடு விட்டுவிட்டு போயிடாதே. அவள் மனதின் குரல் அவனுக்கு கேட்கவில்லை.
அவன் நொறுங்கிப் போனான். தன்னோடு எப்படி எல்லா அளவளாவிய அவள், தான் தான் எல்லாம் என்றவளால் எப்படி இப்படி பேச முடிகிறது. தன்னை எப்படி ஒரே அடியாக தள்ளி விட முடிகிறது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அழுகையாக வந்தது.
அத்தனைக்கும் பிறகு அவன் சொன்னான் .சரி பாத்துக்கோ நாம அப்றோம் பேசலாம்.
அவளுக்கு எதுவுமே பேசாமல் அப்படியே அவன் தன்னோடு இருக்க மாட்டானா என்று இருந்தது.
இருந்தும் எதுவும் சொல்லாமல் ம்ம் என்றாள்.
மறுபடியும் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு வைத்தான்.
ஓடிப் போய் அவன் கைகளை போக வேண்டாம் என்று பற்றிக் கொள்ள துழாவினாள், காற்றே மிஞ்சியது. பேச என உதடுகளை பிரிப்பது அவளுக்கு மிகுந்த சிரமமாயிருக்கிறது இப்போது. இந்நிலையை மௌனத்தாலேயே பகிரணும். அதற்கு அவன் இவள் அருகில் நேரில் வேணும். அது இல்லாத வெறுமை அவளை பைத்தியம் கொள்ள வைக்கிறது. அவளுக்கும் இயலாமையில் கண்கள் நீர் கோர்க்கிறது. இது வேறு ஒரு எரிச்சல், சட் சட்டென்று முட்டிக்கொண்டு வருகிற இந்த கண்ணீர் இனி அவ்வளவு தான். ஒன்றிரண்டாய் உதிரும் சொற்களும் அடைத்துக் கொள்ளும் தொண்டையிலேயே.
இவ்வளவு காயப் படுத்திய பிறகு தன் மேல் மிகுந்த எரிச்சல் அடைந்தாள். அவளுக்கு அவனிடம் கேட்கத் தோன்றியது. உனக்கு இப்படி இருந்ததே இல்லையா. காரணங்கள் இல்லாத சோகம், அழுகை. இதை புரிந்து கொள்ள முடியாமல் நீ கேள்விகளால் குடைகிறாய். ஆனால் நீ கேட்காமலும், நான் சொல்லாமலும் உனக்கெப்படி புரியும்.
அவன் வைத்து விட்டான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் உடைந்து போனான் என்பது இவளுக்கு புரிந்தது.
இப்போது காற்று அவள் முகத்தில் மோதுகிறது அவள் அப்படியே அமர்ந்திருக்கிறாள். ஒரு சில நிமிடங்களில் அவளுக்குள் பதபதைப்பு அவனை இப்படி காயப் படுத்தி விட்டோம் எப்படி சரி செய்வது. அவளுக்கு வேறெல்லாம் மறந்து விட்டது. அவன் மிகுந்த பாதிப்படைந்து விட்டான். தன்னை விட்டுப் போய்விடுவான் என்று ரொம்பவும் பயந்தாள். என்ன விட்டுட்டு போயிடாதடா, என் கூடவே இரு, எனக்கிப்போ தேவை எல்லாம் உனக்கு ஒண்ணுமில்ல மா நான் இருக்கேன் என்கிற உன் வார்த்தைகள் தான் அதை சொல்லேன் அதை மட்டும் சொல்லேன் என கெஞ்ச வேண்டும் போல் இருந்தது.
தன்னிச்சையாய் நடந்து அலுவலகம் வந்தாள். இந்த இடைவெளியில் அவன் இவளுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தான்.
சுபா நீ இப்டி இருக்கற என்னால பாக்க முடியல சுபா, இது உன்னோட இயல்பே இல்ல, அட்லீஸ்ட் நீ என் கிட்ட எல்லாத்தையும் மனச விட்டு பேசிடற விதமா தான் நாம பழகியிருந்திருக்கோம், நீ இப்டி இருக்கறது என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது, எனக்கு அழுகை தாங்க முடியாம வருது சுபா, நீ கஷ்டப்படறத பாக்க முடியல சுபா, நீ சந்தோஷமா இருக்கனும் சுபா எப்பவும் சிரிச்சிகிட்டே என் சுபாவா எப்பவும் சிரிச்சிகிட்டே இருக்கனும் சுபா, எதுவா இருந்தாலும் மனசவிட்டு பேசு சுபா சரியாயிடும், எனக்கு இப்போ உன்கூட பேசிட்டே இருக்கனும் போல தான் மனசு அடிச்சிக்குது, உன்னை பேசி சரிப்படுத்திட முடியும் அப்டின்னு நினக்கறன், ஆனா நீ என்னைக்குமில்லாம இன்னைக்கு இந்த தருணத்துல யார் கூடவும் என் கூடவே பேச விருப்பமில்லன்னு சொல்றே, இது எனக்கு கஷ்டமா இருக்கு சுபா, நீ என்னைக்குமே இப்டி இருந்ததில்ல என்கிட்ட, உனக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியல, நான் உன் பக்கத்துல இருக்ககனும் னு நினக்கறன் இந்த நாள், நான் எதுவும் பேசலன்னா கூட உனக்கு ஆறுதலா உன் பக்கத்துல அமைதியா இருக்கனும னு நினக்கறன் சுபா, ரொம்ப கஷ்டமாயிருக்கு சுபா உன்னை இப்டி பாக்கறது, என்னால தாங்க முடியல சுபா, நான் எதாச்சு உன்னை காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சிடு சுபா தயவு செஞ்சி, சுபா நான் எதயுமே உன்னை கஷ்டபடுதனும்ன்னு பேசவோ செய்யவோ மாட்டன் சுபா, சும்மா விளையாட்டுக்கு தான் பேசியிருக்கன், சுபா நீ பேசு சுபா என்ன பிராபளம் னு, என்னால சரி பண்ண முடியுமா ன்னு சுபா ப்ளீஸ்
படிக்க படிக்க அழுது கொண்டே படித்தாள். அவளுக்கு அவனை இறுக கட்டி பிடித்து அழணும் போல் இருக்கிறது. இத்தனை அன்பானவனை ஆறுதலாய் இருப்பவனை எப்படி காயப் படுத்திவிட்டேன் பார். ஐயோ நான் ஏண்டா இப்டி இருக்கேன். எனக்கொருவேளை பைத்தியம் பிடிச்சுருச்சோ. எனக்கு யாருமே இல்லடா உன்னைத் தவிர இப்போ. நீயும் என்ன விட்டுப் போயிடாதடா. அவளுள் ஆற்றாமை பொங்கி பொங்கி வருகிறது. அவனை அழைக்கிறாள்.
சொல்லு சுபா எப்படி இருக்கு இப்போ?
ம்ம் இப்போ கொஞ்சம் பரவால்ல.
ம்ம்.
...
நான் உனக்கு மெயில் பண்ணேன்.
ஆமாம் கண்ணா பார்த்து உன் அன்பில் செத்தே போனேன்னு சொல்ல நினைத்தாலும் வார்த்தைகள் 'ம்ம் பார்த்தேன்' என்றே வெளி வந்தது. உணர்வுகளை சரியாய் சுமக்காத, நேரத்திற்கு கைவராத வார்த்தைகளைக் காட்டிலும் மௌனம் பெரிதே என நினைக்கிறேன். ஆனால் மௌனம் இப்போது சரியல்ல அது கொன்றுவிடக் கூடும் என்றும் அஞ்சுகிறேன். எப்படி தான் செய்ததை சரி செய்வது என்பதை சுற்றியே அவளின் எண்ணங்கள் சுழன்றது. சரியான வார்த்தைகள் கிடைக்காது தவித்தாள்.
சொல்லு சுபா.
தேம்பி தேம்பி அழத் துவங்கினாள்.
Friday, June 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)
நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...
-
I have heard of Navadarshanam (Nd) through my friend Suma few years back. She mentioned to me that she had been to that place once for a gat...
-
மனு, நீ எப்படி இருக்கிறாய்? புது இடம் உனக்கு பிடித்திருக்கிறதா? புது இடம் என்று சென்றாலே வாழ்க்கையே புதுப்பிக்கப் பட்டது போல் தோன்றுகிறதில்...
-
மடிக் கணினியில் ஏதோ ஒரு படத்தை இருவரும் பார்த்து முடித்த பிறகு அனு என்னிடம் கேட்டாள், நாம் ஏன் இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறோம். திடீரென்று வந...
4 comments:
நல்ல சிறுகதை எழுத முயற்ச்சி செய்துள்ளீர்கள்.அ.முத்து லிங்கம் சிறுகதை தொகுப்பு படிக்கவும்.சிறுகதை உத்தியை மிகச்சிறப்பாக கையாள்பவர்.வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.
உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என ஒரு பதிவிட்டுள்ளேன்.வருகை தாருங்கள்.
@ உலக சினிமா ரசிகன்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் தளத்திற்கு வந்து நீங்கள் குறிப்பிட்ட பதிவை படிக்கிறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.
என் அன்பு சுகி,
இது ரொம்ப உண்மை தான், ஆழமாய் அழகாய் சொல்லிருகே நீ
”உணர்வுகளை சரியாய் சுமக்காத, நேரத்திற்கு கைவராத வார்த்தைகளைக் காட்டிலும் மௌனம் பெரிதே என நினைக்கிறேன். ஆனால் மௌனம் இப்போது சரியல்ல அது கொன்றுவிடக் கூடும் என்றும் அஞ்சுகிறேன். எப்படி தான் செய்ததை சரி செய்வது என்பதை சுற்றியே அவளின் எண்ணங்கள் சுழன்றது. சரியான வார்த்தைகள் கிடைக்காது தவித்தாள்”
அன்பை புரிந்துகொள்வதும்,அதை காட்டுவதும் வாய்க்க பெறுவதே வாழ்க்கையின் வரமாம்..
ம்ம் நன்றி ஸ்ரீ... :)
Post a Comment