Sunday, January 23, 2011

ஏது ஆறுதல்

தென்னை மரத்திலிருந்து
தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை
பன்னாடை பஞ்சு வைத்து
அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில்
பத்திரமாய் வைத்தாள் தங்கை

இன்னமும் கண் விழித்திராத அதை
உண்ணும்போதும், உறங்கும்போதும்
அருகிலேயே வைத்து பாதுகாத்து
குட்டியின் ஒவ்வொரு அசைவையும்
உற்று நோக்கி குறிப்பெடுத்து
என்னிடம் ஓயாது உளறிக்கொண்டே இருந்தாள்

ஆச்சர்யம் ஒரு முறை
பெட்டியிலிருந்து எழுந்து
முகர்ந்து முகர்ந்து ஊர்ந்து
அவள் உள்ளங்கைகளுக்குள்
பதுங்கி கொண்டது அது

அவள் கேட்டாளென
கொய்யா மரமேறி
பழங்களை பறித்து
அவள் மேல் போடுவதாய் பாவித்து
விளையாட்டாய் கீழே வீச
பாத்துண்ணா பாத்துண்ணா
சொல்ல சொல்ல
பெட்டியின் மேல் விழுந்து
உருண்டது ஒரு பழம்

பதறி பெட்டியைக் காண
உறங்குவதாய்க் கிடந்த
அணில் குட்டியின் வாயில்
மெல்லியதொரு சிவப்புக் கொடு

சமாதானமாய்
கிளி பிடித்து தருகிறேன் என்றதையோ
அவளுக்கென பறித்து போட்ட பழங்களையோ
தொடவே இல்லை அவள்
நிற்காது வழியும் கண்களூடே
ஒரு வெற்றுப் பார்வை பார்த்து
கோணிய உதடுகளை உள் மடக்கி
வெடுக்கென நடக்கிறாள்
எனை தவிர்த்து

எனக்கு அவளையும் புரிகிறது
கொய்யாவையும் புரிகிறது
அணிலையும் புரிகிறது

18 comments:

Gowripriya said...

அருமை...
வலி மிக்கதாய் இருக்கிறது கவிதை..
:(((

Sugirtha said...

ம்ம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கௌரி!

ஹ ர ணி said...

நல்ல காட்சியமைப்போடு மென்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வு. தங்கையும் நீங்களும் அணில்குஞ்சும் இயங்கும் கவிதை பாந்தம். முதல்முறை வந்தேன். வாய்ப்பமைவில் அவ்வப்போது வருவேன். வாழ்த்துக்கள்.

Sugirtha said...

வாழ்த்துக்கு நன்றி ஹரணி. சமயம் கிடைக்கும்போது வாங்க :)

santhanakrishnan said...

அணில் குஞ்சு போன்ற
மெத்து மெத்து
கவிதை கடைசியில்
ரத்தம் வரக் கீறியது.
ஒரு குறும்படம்
பார்த்த அனுபவம்
தங்கள் கவிதை.

Sugirtha said...

நன்றிங்க சந்தானகிருஷ்ணன்...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல காட்சிப்படுத்தல். நல்லாருக்குங்க

Sugirtha said...

நன்றிங்க உழவன் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்...

உயிரோடை said...

சுகி எதோ குறையுது, இது கவிதையாக வரவில்லையோ என்று நினைக்கிறேன்.

rvelkannan said...

இந்த கவிதையும் புரிகிறது
உங்களின் மனதும் புரிகிறது
வலியும் உணர்கிறேன்.
( மூன்றாம் பிறையின் க்ளைமக்ஸ் யை என் மனதிற்குள் மாற்றி பார்த்து மகிழ்ந்து கொள்வேன். அதே போல் இந்த கவிதையின்
க்ளைமக்ஸ்யும் மாற்றி கொள்கிறேன் )

Sugirtha said...

நன்றி கண்ணன்,சில நிதர்சனங்களை அப்படி மாற்ற முடிந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்?!அது முடியாதென்பதால் தான் இப்படி மனதளவில் என்கிறீர்களா... புரிகிறது புரிகிறது :)

Sugirtha said...

உங்கள் கருத்துக்கு நன்றி லாவண்யா :)

ராஜா சந்திரசேகர் said...

அழகாக எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் சுகி.மொழி வசப்பட கவிதை இசைப்படும்.
தொடர்ச்சியான வாசிப்பும் பயணமுமே சிக்கலற்ற எழுத்துக்கு கொண்டு சேர்க்கும்.வாழ்த்துக்கள்.

Sugirtha said...

நன்றிங்க ராஜா. உங்கள் கமெண்ட் எனக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.

புபேஷ் said...

very good. congrats

Sugirtha said...

நன்றி புபேஷ்.

அன்பேசிவம் said...

எனக்கு அவளையும் புரிகிறது
அணிலையும் புரிகிறது
கூடவே எனக்குக் கவிதையும் புரிகிறது.

:-)

எங்கோ மனதில் பதிந்த விஷயத்தை சொற்களின் உதவியோடு அழகா சொல்லியிருக்கிங்க, வாழ்த்துக்கள் சுகிர்தா....

Sugirtha said...

நன்றி முரளி :)

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...