Sunday, July 26, 2009

அதே ஞயாபகங்கள்

இனிய மாலையில் தூரலை முகத்தில் தாங்கி குளிர்ந்து போயிருந்தது பூமி. அலுவலகம் விட்டு வெளியில் வந்தவுடன் குளிர்ச்சியை உணர்ந்து குதூகலித்தது மனது. மரங்களின் இலைகளெல்லாம் குளித்து என்னை புத்துணர்ச்சியாய் வரவேற்றது. ஏனோ வீட்டுக்கு உடனே செல்ல விருப்பமில்லை. மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள எனக்கு பிடித்த கடையில் நுழைந்து கேக் பட்ஜ் ஐஸ் கிரீம் சாப்பிட்டேன். தனியாய் அமர்ந்து சாப்பிடுவது கூட பிடித்திருந்தது.

கடைக்கு வெளியில் வருகையில் இன்னும் லேசாய் தூறியது. அதற்கு
பிறகு
என்ன செய்வது எதுவும் தோன்றவில்லை சட்டென வெறுமையாய் இருந்தது. ஒரு நிமிடம் நூலகம் செல்லலாமா என யோசித்தேன். ஏற்கனவே எடுத்திருந்த புத்தகத்தை இன்னும் திரும்ப கொடுக்கவில்லை. மற்றொரு நாள் போகலாம் என்று அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

இப்போது யாராவது
ஒருவரை புதியதாய் சந்திக்கவேண்டும் என்று ஒரு வினோத ஆசை எழுந்தது. அவர்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான ஏதோ ஒன்றை கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கவேண்டும் என்றும் தோன்றியது. என் சுபாவத்திற்கு அது முடியாதென்பதால் என் சரணாலயமான என் தோழியை அழைத்து என் ஆசையை சொன்னேன்.

அவள் இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தை சொன்னாள். நீ நடக்கும் வழியில் உனக்கு எதிர்ப்படும் மனிதர்களை பார் அதில் எத்தனை பேர் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதையும் பார். புன்னகை ததும்பிய முகம் ஒன்று குழந்தையுடையதாய் இருக்கும் இல்லாவிடில் காதலர்களாய் இருப்பர் என்று சொன்னாள். எனக்கும் அப்படியே செய்யலாம் என்று தோன்றியது.


நடந்தபடியே எதிர்ப்படும் காட்சிகளை பார்த்தேன். வீட்டுக்கு முன் ஒரு குழந்தையுடன் அதன் தாயும் இன்னொரு பெரியவரும் என்னவோ சம்பாஷித்தபடியே நிற்கிறார்கள். குழந்தை அதன் போக்கில் என்னவோ செய்துகொண்டிருக்கிறது. குழந்தைகள் தான் இயல்பாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. குழந்தையாகவே இருந்திருக்கலாமோ என நினைத்தேன்.

எனக்கு இப்போதைய எல்லா கமிட்மெண்டயும் விட்டு ஒரு இரண்டு நாலாவது இதுவரை நான் சென்றிராத ஏதோ ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் போல் தோன்றியது. பின் தொடர்ச்சியாய் ஏதேதோ எண்ணங்கள். மனதில் ஒரு கவிதை ஓடியது. அதை திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டே பேருந்தை பிடித்து வீடு வந்தேன்.




இன்றும் கடக்கையில்
அதே செண்பக மரத்தடி
அதே நறுமணம்
இதயம் பாய்ந்து
இழுத்து வரும்
அதே ஞாபகங்கள்



2 comments:

யாத்ரா said...

\\குழந்தை அதன் போக்கில் என்னவோ செய்துகொண்டிருக்கிறது. குழந்தைகள் தான் இயல்பாய் இருக்கிறார்கள்\\

அருமை, ஒரு தனிமையான மாலையை எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறீர்கள். முழுவதும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

Sugirtha said...

நன்றி யாத்ரா!!

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...