Friday, February 20, 2009

இம்முறை பாசாங்கின்றி

முதன் முதலில் உன்னை பார்த்தேன்
நீ கை கொடுத்து விடை பெரும் வரை
பார்த்துக்கொண்டே இருந்தேன்
பேச எண்ணி வந்ததெல்லாம்
சடாரென மறந்ததெப்படி

கனவுகள் அப்படியே பலிக்குமா என்ன
நீ நிஜமாகியதை
நம்பவே முடியவில்லை என்னால்
மனதுக்குள் மிக இனிமையான ராகம் வழிந்தோடியது
யாரிடமாவது இதை சொல்ல துடித்தேன்
யாரிடம் சொல்வது
தோழியை அழைத்தேன்
பின் என்னென்னவோ பேசினேன் உன்னைத்தவிர

நீ என் வாழ்வில் வந்தாய்
நிறைய பேசினாய்
நீ பேசுவதை கேட்பது எப்பொழுதுமே
பிடித்தமான தருணம் எனக்கு
அதற்காகவே உன்னிடம் நான் ஊமையாகிவிடுகிறேன்

நீ என்னோடு நடந்தாய்
நாம் சேர்ந்து நடப்பதை
தள்ளி நின்று மனது ரசித்தது
என்னருகே வந்து அமர்ந்தாய்
நானோ உன்னை ஆழமாய் சுவாசித்தேன்

உன் பதவிசு பிடித்தது எனக்கு
எனக்கான உன் கோபங்கள் பிடித்தது
நாம் கோபத்தில் பேசாதிருந்த பொழுதுகள்
கொடுத்த வலிகள் பிடித்தது

அன்றொரு நாள்
என்னை ஊஞ்சலில் அமர்த்தினாய்
பின் உன் அன்பையெல்லாம் திரட்டி
மெதுவாய் ஆட்டினாய்
மகிழ்ச்சி தொட்ட உயரம் அறியேன்

நாம் சந்தித்துக்கொண்ட பூங்காவில்
அமர்ந்திருந்த மரத்தடியில்
நாம் தெரிகிறோமா
இன்றும் பார்கிறேன்

வார்த்தைகளில்லை என் அபிமானங்கள் முழுதும் சொல்ல
உனக்கும் எனக்கும் என்ன ஒரே இதயமா
நீ நினைப்பதை நானும்
நான் பேசவிருப்பதை நீயும்
எப்போதும் ஒன்றையே பேசுகிறோம்

நினைவுகளின் சுமையில் இங்கு நான்
மறுபடியும் துவங்கலாம் வா நீ

2 comments:

ராஜா சந்திரசேகர் said...

சுகி...
எளிமையான அன்பை உண்மையான மொழியில் இனிமையாக சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

Sugirtha said...

வாழ்த்துக்கு நன்றி ராஜா!! எளிமையான அன்பு, உண்மை, இனிமை இதை விட ஒரு அருமையான பாராட்டு இருக்க முடியுமா இந்த கவிதைக்கு...