வேடந்தாங்கல் |
பஸ்சை விட்டு இறங்கிய இடத்தில் ஒரே இருட்டு. கொஞ்ச தூரத்தில் தெரிந்த வெளிச்சத்தில் ஒரு கட்டிடம் இருந்தது புலப்பட்டது. விடுதி அதுவாகத்தான் இருக்கும் என அதை நோக்கி நாங்கள் கொஞ்சம் நடக்கத் துவங்கியதும் இரண்டு நாய்கள் எங்களை நோக்கி ஓடி வந்தன. அதைத்தவிர வேரு யாரும் தென்படவில்லை. உள்ளே கொஞ்சம் உதறத் துவங்கியது. அவற்றிடத்தில் எந்த நேய பாவமும் இருக்கவில்லை என்றாலும் அவை குரைக்காது எங்கள் மூவரையும் சுற்றி வந்தது. எங்களை என்ன செய்யலாம் என்று அவை குழம்பி ஒரு முடிவுக்கு வருவதற்குள் நாங்கள் கட்டிடத்தின் படிக்கட்டை எட்டிவிட்டோம்.
உள்ளே சென்ற போது இருவர் உணவு மேஜையில் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு முன் பதிவு செய்திருந்த விசயத்தை சொன்னதும் அதில் ஒருவர் எங்களை மேலே அழைத்துக் கொண்டு suite II வை திறந்தார். அறை மிக சுத்தமாக இருந்தது. அறைக்குள் வந்து பைகளை வைத்தபோது மூவரும் நாள் முழுக்க சுற்றிய களைப்பில் இருந்ததால் ஹப்பா என்ற சிறு ஆசுவாச உணர்வுக்கு ஆட்பட்டோம்.
ஸ்ரீ நாங்கள் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்த வனத்துறை அதிகாரியை கைபேசியில் அழைத்து காலையில் எத்தனை மணிக்கு சரணாலயம் திறக்கும், பறவைகளைப் பார்க்க எது சரியான நேரம் என்ற தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தாள். அறையை காட்டியவர் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்தபடி இருந்தார். வனத்துறை விடுதிகளில் எல்லா நேரங்களிலும் உணவு கிடைக்காதென்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததால் வாங்கிப் போயிருந்த ரொட்டியையும், பழத்தையும் சாப்பிட்டுக் கொண்டு அடுத்த நாள் காலை ஐந்தரை மணிக்கே சரணாலயத்திற்கு கிளம்பி விட வேண்டும் என்றும், நேரத்தில் போனால் தான் பறவைகள் உணவு எடுக்க போவதற்கு முன் பார்க்க முடியும் என்றும் பேசிக் கொண்டிருந்தோம்.
பேச்சின் ஊடே சுமா வைக்கவே இடமில்லை இதை ஏந்தான் வாங்கினேனோ என்று கூறிக் கொண்டே காஞ்சிபுரத்தில் எடுத்திருந்த பட்டுப் புடவைகளை தன் தோள்ப் பையில் திணித்துக் கொண்டிருந்தாள். பயணத்திற்கு முன் தினம் என்னவோ நான் சுமாவை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தாலும் காஞ்சிபுரத்தில் இறங்கியதிலிருந்து ஹச் ஹச் என்று தும்மிக் கொண்டிருந்தேன். வருடத்திற்கு ஒரு முறை பிடிக்கும் சளி என்னை இப்போது இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தது. மாத்திரைகளை முடிந்தவரை தவிர்ப்பேன் என்றாலும் இது இன்னும் ஒரு வாரத்திற்கு தொந்திரவு செய்யும் மேலும் இன்னும் நான்கு நாட்கள் பயணம் ஒன்றும் எளிதானதல்ல என்பதால் வேறு வழி இல்லாமல் மாத்திரையை போட்டுக் கொண்டேன். கண்களின் மேல் தூக்கம் நிழலாடியது.
ஸ்ரீ நாங்கள் அன்றைக்கு சென்ற இடங்களை எல்லாம் தன் புத்தகத்தில் குறித்துக் கொண்டும், நாங்கள் செலவு செய்திருந்த கணக்குகளை எல்லாம் கையோடு வைத்திருந்த சின்ன நோட்டில் எழுதிக் கொண்டும் இருந்தாள். இந்தப் பயணம் துவங்கும் போதே எல்லா இடத்திலும் நான் செலவு செய்யவும் அவள் கணக்கு எழுதவும் யோசனை சொல்லி இருந்ததோடு மிக நேர்த்தியாக அதை செய்துக் கொண்டும் இருந்தாள். இப்படி எளிமையான இடத்தில் தங்கிக்கொண்டும், டவுன் பஸ்களில் பயணித்துக்கொண்டும் மேற்கொள்ளப்படும் பயணத்தின் மொத்த செலவு என்னவாக இருக்கும் என்று அறிகிற ஆவல் எங்கள் மூவருக்கும் இருந்தது.
29:12:2013 - வேடந்தாங்கல்
ஸ்ரீயா, சுமாவா யார் முதலில் எழுந்தார்கள் என்று தெரியவில்லை, இருவரும் கிளம்பி விட்டு என்னை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். கதவு தட்டப்படவே திறந்தபோது முன்னிரவு உதவிகள் புரிந்த அந்த வனத்துறை ஊழியர் ஃப்லாஸ்க் நிறைய டீ யோடு நின்றிருந்தார். நானும் தயாராகி நாங்கள் கீழே இறங்கி வந்தபோது அதே அவர் தார் ரோட்டையே தொடருமாறும் அது முடியும் இடத்தில் வலப் பக்கம் திரும்பினால் சரணாலயம் என்றும் கூறி அனுப்பினார். வெளியே வந்தபோது பொழுது மெதுவாக விடிந்து கொண்டிருந்தது. நினைத்ததைப் போல குளிர் ஒன்றும் அவ்வளவாக தெரியவில்லை. அந்த இரண்டு நாய்கள் மீண்டும் எங்களை நோக்கி ஓடி வந்தது. எங்களை சுற்றி சுற்றி வந்தபடி எங்களை முன் நடத்தி சென்றது. சரணாலயம் விடுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.
வழியில் முதல் காட்சியாக விளைந்துகொண்டிருந்த நெல் வயலில் கொக்குகளை பார்த்தேன். அதன் பளீர் நிறம் நாளெல்லாம் மண் மேலேயே நின்றிருந்தாலும் இந்தக் கொக்குகளுக்கு மட்டும் எப்படி இத்தனை அப்பழுக்கில்லாத வெண்மை என்ற கேள்வியை எழுப்பியது. சரணாலாயத்திற்கு அருகில் சென்றபோது சுற்றுலா வருபவர்களின் வாகனங்கள் விரைந்து கடந்தது. உள்ளே சென்று அனுமதி சீட்டு வாங்கிக் கொண்டு நடந்தோம். அந்த காலை வேளையில் இரைச்சலை தவிர்க்க குழுவாக சுற்றுலா வந்திருப்பவர்களை வேகமாக கடந்து முன்னே நடந்து சென்றோம். நாய்கள் இன்னும் எங்களை தொடர்ந்தபடி இருந்தன. ஆனால் இப்போது என்ன பிரச்சனையோ அவை இரண்டும் ஒன்றைப் பார்த்து ஒன்று உறுமிக் கொண்டே வந்தன.
அங்கே வரும் பறவைகளின் எச்சம் விழுந்த அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைப்பதை அறிந்த உள்ளூர் வாசிகள் அதை பல வருடங்களாக பாதுகாத்து வருவதாய் ஒரு தகவலை அங்கே படித்தேன். மேலும் அங்கே வரும் பல பறவைகள் எங்கே இருந்து வருகின்றன, எக்காலத்தில் கூடு கட்டும், எத்தனை முட்டைகள் இடும், அவை என்ன நிறத்தில் இருக்கும் என்பன போன்ற தகவல்களும் மற்றும் அதன் தமிழ் பெயர்கள் எல்லாம் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.
Painted Stork மற்றும் Pelican கள் நிறைய இருந்தது. பறக்கும்போது மிகவும் பிரமாண்டமாக இருந்த Pelican, நீரில் இறங்கும்போது அத்தனை லாவகமாக சறுக்கிக்கொண்டு அமர்ந்ததை பார்த்தபோது சிலிர்த்து அடங்கியது. அத்தனை அற்புதமான ஜாலத்தை நடத்தியபிறகு அவை அசைபோடும் பசுவின் கண்களில் படரும் அமைதிக்கு ஒப்ப சலனமற்ற அமைதியோடு நீரின் மேலே மிதக்கத் துவங்கியது. மூவரும் ஒருவரோடு ஒருவர் எதையும் பேசிக் கொள்ளாமல் அப்படியே அரை மணிநேரம் அமர்ந்திருந்தோம். அன்று இரவுக்குள் கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் சென்று பார்த்து பிறகு இரவு வேதாரண்யத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மனதே இல்லாமல் அங்கே இருந்து கிளம்பினோம்.
-தொடரும்-
1 comment:
தொடர்கிறேன்...
Post a Comment