Monday, January 27, 2014

4. காஞ்சி முதல் காரைக்குடி வரை : கங்கைகொண்ட சோழபுரம்





விழுப்புரம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் கூட்டு ரோடுக்கு பஸ் பிடிக்க காத்திருந்தோம். அதற்குள் ஸ்ரீ பைகளை எங்களருகில் வைத்து விட்டு அம்மா குடி நீரைத் தேடி வாங்கச் சென்றாள். அவள் எங்கு சென்றாலும் அம்மா குடி நீரைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தாள். பத்து ரூபாய்க்கு நல்ல குடிநீர் கிடைக்கும்போது நாம் எதற்கு அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்பது அவளின் ஞயாயம். என்னவோ அம்மா ஃபான், மிக்ஸியின் தரத்தை பார்த்துவிட்டு முதலில் ஒரு தயக்கத்தோடு தான் இருந்தேன் என்றாலும் அம்மா குடிநீர் எனக்கு எந்த தொந்தவரையும் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அதை மட்டும் வைத்துக் கொண்டு நீரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது. பொதுவாக குடிநீரினால் எனக்கு தொந்தரவுகள் அதிகம் வராது என்பதால் வெளியூர்களுக்கு செல்லும்போது நான் எந்த நீரையும் குடிப்பேன். இதை சொன்னபோது ஸ்ரீ அப்படி எல்லா நீரையும் குடிக்க கூடாது இடத்திற்கு தகுந்தாற் போல நீரின் pH வால்யூ மாறும், அது நிச்சயம் தொந்தரவு செய்யும் என்றாள். அப்படியா எனக்கு இந்த pH அறிவெல்லாம் கிடையாது இதை எல்லாம் நீ எங்கே இருந்து பிடிக்கிறாய் என்றேன். கட்டிடம் கட்டுவதற்கு முன் அதை நாங்கள் அளவிடுவோம் என்றும் நீரின் அஸிடிக் தன்மையை காட்டும் என்றும் இன்னும் பிற விளக்கங்களையும் சொன்னாள். அவள் ஒரு கட்டடப் பொறியாளர். ஓ அப்படியா என்றேன். எனக்கும் ஏற்கனவே பிடித்திருந்த ஜலதோஷம் தொண்டைக்குள் கிச் கிச் மூட்டியதால் அவள் சொன்னபடியே கேட்டுவந்தேன்.
 
அவள் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பவில்லை எனவும் மனதுள் ஒரு வித அமைதியின்மை பரவியது. என்னோடுதான் இருக்கிறாள் என்று நன்றாகத் தெரிந்தும் ஏன் இவ்வளவு நேரம் இவளைக் காணவில்லை என்று சுமாவை வினவிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளாக நாங்கள் செல்ல வேண்டிய பேருந்து ஒன்றும் எங்களைப் பார்க்க வைத்து எங்கள் முன்னேயே சென்றது. சுமாவிற்கு தமிழ் படிக்கத் தெரியாது என்பதால் அவள் அதை பெரிதுபடுத்தவில்லை. எனக்குதான் அடடா இவ்வளவு நேரம் காத்திருந்து இதை விடுகிறோமே என்றிருந்தது. எங்கே போனாள் என்று கொஞ்சம் எரிச்சல் எட்டிப் பார்க்கும் நேரம் அவள் நீர் வாங்கி வரவும் இவ்வளவு நேரம் எங்கே போனாய் இப்போதான் ஒரு பஸ் போச்சு என்றேன். இங்க இவனுங்க பன்னிரண்டு ரூபா சொன்னானுங்க எதுக்கு ஜாஸ்தி கொடுக்கணும் அதான் கொஞ்சம் தள்ளிப் போய் வாங்கிட்டு வந்தேன் என்றாள். சரி வா அதுல ஏறி உக்காரலாம் என்று நின்று கொண்டிருந்த இன்னொரு பேருந்தைக் காட்டினேன். இதுக்கு காத்திருப்பதை விட, நிலையத்தின் பேருந்துகள் வெளியேறும் தளத்தை காட்டி, அது வெளியே போவதற்குள் அதையே சென்று பிடிக்கலாம் வா என்றாள். அவளுடையது ட்ரெ க்கிங்க் கால்கள் விறு விறுவென நடப்பாள். நானும் சுமாவும் கொஞ்சம் நிதானமாகத்தான் நடப்போம். எங்களினது bird watching நடை. இதனால் ஓரிரு முறை பேருந்து நிலையத்தின் ஜனத் திரளில் ஸ்ரீயை தொலைத்து மீண்டும் பிடித்தோம்.
 
எனவே எங்களின் நடைக்கு நிச்சயம் பேருந்து வெளியேறுவதற்குள் நிலையத்தின் அந்த முனையை அடைய முடியாது என்று எனக்கு தெரிந்து ஓரிருமுறை சந்தேகமாக வெளிப்படுத்தினேன். அவள் அப்படியே அது போனாலும் எல்லாப் பேருந்தும் அப்படிதான் வெளியே சென்றாக வேண்டும் எனவே நாம் அங்கேயே நின்று கொண்டு இதோ இந்தப் பேருந்து அங்கே வந்தாலும் ஏறி விடலாம் என்றாள். உனக்கு நிச்சயமாக எல்லாப் பேருந்தும் அவ்வழியாகத்தான் போகும் என்று தெரியுமா என்றேன். அவள் தெரியும் என உறுதியாக நின்றதால் நானும் சுமாவும் அவளைப் பின் தொடர்ந்தோம். அங்க மட்டும் போயிட்டு திருப்பி இங்க கூட்டிட்டு வந்தே உன்னக் கொலை பண்ணுவேன் என்றபடியே நடந்தேன். இப்படியாக நாங்கள் அந்த மூலைக்கு செல்வதற்குள் அந்த பஸ் போய்விட்டிருந்தது. சரி இங்கேயே நிற்கலாம் என்றாள். நாங்கள் நின்று கொண்டிருந்த போது அங்கே வந்து நின்ற இன்னொரு பேருந்தின் ஓட்டுனரிடம் சென்று இவள் ஏதோ கேட்டாள். நாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து அவர்கள் சம்பாஷனையை கேட்க முடியவில்லை என்றாலும் இவர்களின் உரையாடலை ஓரளவு எளிதாக ஊகிக்க முடிந்தது. என் யூகப் படி இப்படிதான் இருந்திருக்க வேண்டும்.
 
ஏங்க இந்த பஸ் கும்பகோணம் கூட்டு ரோடு போகுமா?
 
இல்லை என்று அவர் பெரிதாக மண்டையை ஆட்டுகிறார். 
 
அப்போ அந்த பஸ் எங்கே வரும்? 
 
இவர் தன் கையை நாங்கள் எங்கே இருந்து வந்தோமோ அங்கே காட்டினார்.
 
இப்பொழுது அவளுக்கு என்னிடம் மாட்டிக் கொண்டதாக எண்ணம் தோன்றி இருக்க வேண்டும் குரலை கொஞ்சம் குறைத்து எப்படியும் இந்த வழியாதான வெளியே போகும் என்று கேட்க அவர் இன்னொரு தளத்தை காட்டி அப்படி போகும் என்று சொல்ல...
 
இதற்கு மேல் நான் அவர்களின் உரையாடலை பார்க்கவில்லை. எனக்குள் முசு முசு என்று வந்தது. அவள் மெதுவாக என்னிடம் வந்து நம்ம கொஞ்சம் அப்டி தள்ளிப் போய் நின்னுக்கலாமா என்றாள். ஏன் இங்கையே நிக்கலாமே என்றேன். அவள் தயங்கவும் ஏன் இங்க பஸ் வராதா என்றேன். வராது என்றாள். இப்போ அங்க நின்னுட்டு இருந்த பஸ் கூடப் போய்ருக்கும் என்றேன். நாங்கள் திரும்பி வேகமாக நடந்து அங்கே சென்றபோது அதுவும் எங்களுக்கு எட்டாத தூரத்தில் போய்க் கொண்டிருந்தது. ஸ்ரீ அதைப் பிடிக்கலாம் என்றாள். நான் வேண்டாம் இங்கேயே நிற்கலாம் என்றேன். இதற்கிடையில் சுமா நாம் ஏன் இங்கேயும் அங்கேயும் போய்க் கொண்டிருக்கிறோம் என்றாள். நான் எந்த பதிலும் சொல்லாமல் நின்றேன். மூவரும் நின்றிருக்க அப்போது ஒரு பஸ் வந்தது. அவரிடம் கும்பகோணம் கூட்டு ரோடு போகுமா என கேட்க அவர் போகும் என்றார். ஏறி அமர்ந்ததும் ஸ்ரீ, நடத்துனரிடம் நாங்க கங்கைகொண்ட சோழபுரம் போகனும் எப்டி போகனும் என்று கேட்டாள். கூட்டு ரோட்டுல இருந்த கும்பகோணம் பஸ் புடுச்சு ஜெயங்கொண்டான் கூட்டு ரோட்டுல இறங்கி போய்டுங்க என்றார். அவளுக்கு எங்கே செல்வதானாலும் குறைந்தது மூன்று பேரிடமாவது விசாரித்து சரி பார்த்து விட வேண்டும். எவ்ளோ நேரம் ஆகும் என்று கேட்டாள். எப்படியும் நீங்க போக ஆறு மணி ஆயிடும் என்று சொல்ல நான் கோயிலிருக்குமா என்று கேட்டேன். கோயில் இருக்கும் திறந்திருக்குமான்னு போய் பாருங்க என்றார். பார்ரா என்று ஒரு பார்வையோடு நான் ஸ்ரீயை நோக்க தன் புத்திசாலி தனமான பதிலை ஓட்டுனரிடம் இன்னொரு முறை விளக்கினார் என்று நினைவு. ஆனால் தேவையற்ற அலைச்சல்களால் உப்பிசம் ஏறி இருந்த மனதை ஆற்றுப்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
 
 
கூட்டு ரோடு வந்து இறங்கியதும் நாம் விழுப்புரம் சென்றதே வியர்த்தம் இந்த இடத்தை கடந்து தான் விழுப்புரம் சென்றிருக்கிறோம் என்று ஸ்ரீ சொன்னாள். எப்படியும் சாப்பிட இங்கே ஒன்றும் கிடைத்திருக்காது போனது நல்லது தான் என்று சுமா நினைவு படுத்தினாள். முற்றிய வெயில் மண்டையைக் குடைந்தது. சுமாவை மரத்தடி நிழலுக்கு போக சொல்லி விட்டு நாங்கள் இருவரும் அங்கேயே நின்று கொண்டோம். தங்கள் பாத்திர பண்டங்களுடன் இரு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பம் தரையில் அமர்ந்திருந்தது. சற்று தள்ளி நின்றிருந்த ஒரு அம்மா தெலுங்கில் இந்த ஆணை ஏதோ திட்டிக் கொண்டிருந்தது. திட்டினார் என்பது மட்டும் தெரிந்தது ஆனால் எனக்கொன்றும் புரியவில்லை. அதற்கு அந்த ஆண் ஏதோ பதில் சொல்ல, கூட அமர்ந்திருந்த பெண்மணி இவரிடம் ஏதோ சொன்னார். இவர் சும்மா இருந்த பிறகும் நின்றிருந்த அம்மா விடாது வம்புக்கு இழுத்தபடி இருந்தது. என்ன இரண்டு மனைவி பிரச்சனையா என்றேன். அவங்க பேசறது தெரியணுமா உனக்கு என்றாள். உனக்கு தெலுங்கு தெரியுமா என்றேன். ம்ம் என்று இந்த அம்மா அவர்கிட்ட சும்மா இருன்னு சொல்லுது அதுக்கு அந்த அம்மா அவ சொல்றபடி கேளு அவ சரியாத்தான் சொல்றான்னு சொல்லுது என்றாள். அப்படியும் ஆதி பிரச்னை என்னவென்று தெரிவதற்குள்ளாகவே கும்பகோணம் பஸ் வந்தது.
 
 கூட்டம் நிரம்பி வழிந்தது. பின் வழியில் நாங்கள் ஏறினோம். ஸ்ரீ ஏறி கொஞ்சம் உள்ளே தள்ளி நின்றாள். நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிய போது அவர் எங்களுக்கு பக்கத்தில் இருந்த ஸீட்டைக் காட்டி இவங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்குவாங்க நீங்க உட்காந்துக்குங்க என்றார். சரி என்று அவர் உள்ளே போனதும் சுமாவிடம் படிக்கட்டுகளை காட்டி இங்கே உட்காரலாமா என்றேன். அவர் திட்டப் போகிறார் என்றாள். திட்டினால் எழுந்து கொள்ளலாம் கம் ஆன் வாட் டூ யூ ஸே என்றேன். அவள் சரி என்றதும் இருவரும் மேல் படியில் அமர்ந்து கீழ் படியில் காலை வைத்துக் கொண்டோம். பிறகு புதிதாக தைத்து போட்டுக் கொண்ட பாவாடையை காட்டும் சிறுமியின் ஆவலோடு ஸ்ரீயை அழைத்துக் காட்டினேன். அவள் ஏய் நானு நானு என்றாள். வா என்றேன். அவள் வந்து எங்கள் இருவருக்கும் மத்தியில் அமர்ந்தாள். மூவரும் குதூகலித்தோம். வழியெல்லாம் நெல் பச்சை. நெல்லின் பால் மணம் நாசியை துழைத்தது. கண்களை மூடி உள்ளே இழுத்தேன். மனம் கவர் வாசனை என்னுள் பிரத்யேகமான இடத்தை தொடும். அது நானே என்னை அறியாத இடம். உடலின்ப உச்சத்திற்கு நிகரான ஒரு சுகானுபவத்தை இந்த வாசனை எனக்கு அளிக்கும். அது என்னை உருமாற்றி பூவுலகில் சாத்தியமே இல்லாத ஒரு இடத்திக்கு கொண்டு போகும். அப்படித்தான் இந்த விளைச்சல் மணத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன் 
 
 
கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று சிறப்பென்ன என்று கேட்டது தான் தாமதம் ஸ்ரீ கங்கை கொண்டானின் பெருமையை எனக்கு அழுத்தி அழுத்தி வகுப்பெடுக்கத் துவங்கினாள். அசுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் எனக்கும் சொல்லு என்று சுமா கோர, ராஜேந்திர சோழனுக்கு பதில் ராஜ ராஜ சோழனை போட்டு நான் மொழி பெயர்க்க ஸ்ரீ நிறுத்து நிறுத்து என்றாள். அது சரி மகுடேஷ்வரி மிஸ், கிருபா மாம், செர்ரி மாம் எல்லாம் பல வருடங்களாக முயன்று தோற்றதை எல்லாம் இவள் ஒரே நாளில் எப்படி என்னுள் புகுத்த முடியும்? ஸ்ரீ இப்போது சுமா புறமாக திரும்பி ஆக்சுவலீ என்று ஆரம்பித்தாள். கேட்கும் சுவாரஸ்யத்தில் இருந்த சுமா பரவாயில்லை தமிழிலேயே சொல்லு புரியாத இடத்தில் மட்டும் கேட்கிறேன் என்றாள். சொல்லத் துவங்கிய அவள் நாம் சிற்பக் கலையில் சிறந்து விளங்கியது சோழர்கள் காலத்தில் தான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அடைந்த புகழிலெல்லாம் சாந்தியடையாது சோழர்களின் ஆன்மா சுற்றிக் கொண்டிருந்திருந்தால் அன்றைக்கே மோட்சம் அடைந்திருக்கும். ஏனெனில் இடை இடையில் மை காட் லவ் சோழாஸ் என்று வேறு கூறிக் கொண்டாள். அவளுக்கு சாண்டில்யன் ஆதர்ஷம் என்பதையும் நான் இங்கே கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன். சொல்ல சொல்ல திடீரென ஆவி இறங்கியது போல ஏய் நான் ஏற்கனவே இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதை சோலீஸ்வரம் என்றும் கூறுவார்கள். நான் சொல்வது உண்மையானால் அந்தக் கோயில் முன் பெரிய புற்பரப்பு இருக்கும் என்றாள்.
 
 
இதற்குள் அடுத்த நிறுத்தம் வந்து இறங்குபவர்கள் இறங்கியதும் அந்த சீட்டில் நாங்கள் மூவரும் சென்று அமர்ந்தோம். அங்கே ஏறியவர்களிடம் டிக்கெட் கொடுக்க நடத்துனர் ஸீட் ஸீட் என்று வரவும் சுமா இங்கே ஸீட் என்று தான் சொல்கிறார்கள் இல்லையா என்றாள். ஆம் அங்கே என்ன சொல்வார்கள் என்றேன். அங்கே டிக்கெட் என்று சொல்வார்கள் என்றாள். பிறகு அவள் மோனத்தில் ஆழ எனக்கு பாட்டு கேட்கத் தோன்றியது. நானும் ஸ்ரீயும் இயர் போனை ஆளுக்கொரு காதில் மாட்டிக் கொண்டோம். இந்தப் பாட்டு கேட்டிருக்கியா என்றுஒரு நதி, ஒரு பௌர்ணமி’ பாடலை அவளுக்கு கேட்பித்தேன். யேய் நல்லா இருக்கு என்றாள். எனக்கு அந்தப் பாட்டின் வரிகள் மிகப் பிடிக்கும். விஷுவல் செம மொக்கை, நித்யஸ்ரீ இன்னும் கொஞ்சம் நன்றாக பாடி இருக்கலாம் என்று தோன்றும். இது என் வரையில் என்னறிவு அவ்வளவே. 
 
ஒரு வழியாக கும்பகோணம் கூட்டு ரோடில் இறங்கி ஜெயம் கொண்டான் பஸ் பிடித்து கங்கைகொண்ட சோழபுரத்தில் இறங்க இரவும் எங்களோடேயே இறங்கத் துவங்கியது. சுற்றிலும் உயர்ந்த கட்டிடங்கள் எதுவும் இல்லாததால் இறங்கிய இடத்தில் இருந்தே அந்தக் கோயில் மிகப் பிரமாண்டமாக தெரிந்தது. உள்ளே நடந்து சென்று வாயிலுக்கு அருகில் இருந்த கடையில் பைகளை வைத்து, செருப்பை விட்டுவிட்டு உள்ளே நடந்தோம். புல் வெளியைப் பார்த்ததும் சொன்னேன் இல்லையா நான் இங்கே முன்னேயே வந்திருக்கிறேன் என்று என்றாள். கோவில் முன் வெள்ளைப் பூச்சில் நின்ற நந்தி ஓரளவுக்கு தெரிந்தது ஆனால் சிற்பங்கள் கண்களுக்கு புலப்படாத அளவுக்கு இருட்டி விட்டது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பின்மாலைப் பொழுதின் பின்னணியில், ஒரு கோட்டையின் வாயிலைப் போல் இருந்த வாயில், பழைய கட்டிடம், விஸ்தாரமான இடம், ஜன நெருக்கடி அற்ற அமைதி, கட்டிடத்திற்கு அருகே சென்றதும் சன்னமாக கசிந்துகொண்டிருந்த வெம்மை என அந்தக் கோவிலை எனக்கு நிரம்பப் பிடித்தது. ஆனால் நேரம் துணை இருக்கவில்லை. அப்படியே புல் வெளியில் அமர்ந்தோம். நான் படுத்துக் கொண்டு ஓரிரு நிமிடங்கள் நட்சத்திரத்தை பார்த்திருந்தேன். முன்னொரு கால நிகழ்வுக்கு சாட்சியாய் நின்றிருக்கும் அதனுள் இருந்த என் மனநிலை ஒருகணம் எனக்கு அந்நியமாய் தோன்றியது. இன்னொருவரின் வீழ்ச்சியில் தங்கள் வெற்றிகளைக் கொண்டாடி இப்படியான கோட்டைகளை நிறுவிக் கொண்ட அக்கால மனிதர்களோடு என்னால் தொடர்பு படுத்தி பார்க்க முடியாவிட்டாலும், வசதிகள் குறைவாக இருந்தபோதிலும் இப்படி ஒன்றை அமைத்த அவர்களின் ஆற்றல் வியக்க வைத்தது. 
 
 
இனி என்ன செய்யலாம் என்றேன். இவ்வளவு தூரம் வந்துவிட்டு சரியாக பார்க்காமல் போனால் எப்படி என்றாள் சுமா. அப்படியானால் சரி தங்க இடம் கிடைக்குமா பார்க்கலாம் என்றேன். திடீரென இதோ இந்த இடமே நன்றாக இருக்கிறது உள்ளே இருட்டு வேறு நாம் இருப்பது யாருக்கும் தெரியப் போவதில்லை இங்கேயே தங்கிக் கொண்டால் என்ன என்றேன். 
 
 
-தொடரும்-

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...