Monday, November 11, 2013

எ திங் ஆஃப் ப்யூட்டீ

ஜன்னலருகே நாற்காலியை இழுத்துப் போட்டு வெளியே பார்த்தான். வெட்டப்பட்ட கிளையில் அமர்ந்திருந்த காகம் விடாமல் கரைந்தது. வெளிக்காட்சிகளில் ஒன்றும் மனம் நிலைக்கவில்லை. நள்ளிரவில் துவங்கி மிச்ச இரவை விழுங்கிய அந்தக் கனவை, எவ்வளவு முயன்றும் தன் நினைவிலிருந்து துரத்த முடியவில்லை. அந்தக் கனவு மேலும் மேலும் சிறு வயதிலிருந்து தான் துரத்த விரும்பிய பிற எல்லாக் கனவுகளையும் எழுப்பிக் கொண்டு வந்து இந்த நாளை ஒரு துர் நாளாக்கியது. தான் செல்ல அஞ்சும் பாதையைப் பற்றி விரைந்தது எண்ணம். அதன் வேகமும், உறுதியும் இவனை குலைக்க அவன் வேறொரு ஆளாக மாறிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். கைகள் நடுங்க இப்போது இந்தத் தனிமை ஆபத்தானதென உணர்ந்தான். ஏதோ உணர்வு தூண்ட எழுந்து வேக வேகமாக உடைகளை அகற்றி மூலையில் எறிந்தான்.

அறையின் அடுத்த மூலையிலிருந்த கண்ணாடியில் தெரிந்த தன் நிர்வாணத்தை பார்த்தான். பின் தன்னையே குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டான். இரண்டும் வேறு வேறு உருவைக் காட்டியது. இரண்டும் ஒன்றுதான் என்றாலும் கூட பார்வையின் கோணம் வேறுபாடு காட்டிற்று. மீண்டும் மீண்டும் குனிவதும் நிமிர்வதுமாய் தன்னை மாறி மாறி பார்த்துக் கொண்டே இருந்தான். அச்செயல் அவன் நினைத்ததைப் போல அவனை அவன் மனப் பிடியிலிருந்து தளர்த்தவில்லை. மாறாக அவ்விரண்டு காட்சியும் மேலும் எண்ணத்தை தூண்டி சிக்கலை இறுக்கியது. யாருமற்ற அறையில் தன்னை உணர்ந்த துணை வேண்டி கண்ணாடியை தெரிவு செய்தது எத்தனை பெரிய முட்டாள் தனம் என்று தன்னையே நொந்துகொண்டான். சிக்கல்கள், சிக்கல்கள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அங்கிருந்து விலக திரும்புகையில் கால் சுண்டு விரல் மேஜையின் விளிம்பில் இடித்துக் கொண்டது. ஸ்ஸ்ஸ் என்று ஒரு முறை கண்களை இறுக மூடி பல்லைக் கடித்தான். ஃபக் யூ என்று முணுமுணுக்கத் துவங்கி பட் ஐ கான்ட் என்று தேய்ந்தான்.
 
தான் இவ்வுலகின் வேண்டப்படாத உயிரினமாக, மிகவும் பலகீனமானவனாக உணர்ந்தான். இல்லை இல்லை இதிலிருந்து என்னை நான்தான் தப்புவிக்க வேண்டும், ஒரு பக்கம் உணர்வு மனம் சொல்ல அறையை சுற்றி நடக்கத் துவங்கினான். மொசைக் தரையின் பெட்டிகளுக்குள் கரங்களுக்கு முட்டாமல் எட்டு வைத்து நடை பழகினான். சில விநாடிகளுக்குப் பிறகு இழுபட்டவனாக மீண்டும் கண்ணாடியின் முன் வந்து நின்றான். தன் பிம்பத்தையே உற்றுப் பார்த்தான். கண்ணாடியின் காட்சிக்குள் தற்போது எதிர் சுவற்றிலிருந்த இரண்டு பல்லிகளின் பிம்பமும் விழுந்தது. ஒன்று வாலை வளைத்துக் கொண்டு மற்றொன்றை துரத்தியது. துரத்தியபடியே இரண்டும் காட்சியிலிருந்து அகன்றது. அவனும் அகன்று கழிவறைக்குள் நுழைந்தான். வெளியே வந்த அவன் மீண்டும் உடையை எடுத்து அணிந்து கொண்டான். அறையை பூட்டிக் கொண்டு வெளியேறினான்.
 
அவள் என்ன செய்வதெனத் தெரியாமல் சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அந்த ஒற்றையடிப் பாதை அதோடு முடிந்து பெரும் வெளி முன் விரிந்தது. அது நீர் வற்றிய ஏரி என்பதை அவள் சற்று தாமதமாக உணர்ந்தாள். தூரத்தில் எருமைக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. நடுவில் ஒரு பாறை மல்லாந்து வெயில் காய்ந்து கொண்டிருந்தது. சரியாக சொல்லப் போனால் அது ஒரு பாறை அல்ல, ஒரு பாறைக் குடும்பம் அல்லது கூட்டம். தான் தனியாக வண்டியை எடுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கக் கூடாதோ என்று ஒரு கணம் நினைத்தாள். மறு கணம் டு ஹெல் வித் ஸேஃப்டீ, திஸ் இஸ் ஜஸ்ட் பர்ஃபெக்ட் என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள். தான் கிடாரை பயிற்சி செய்ய இதைவிட சரியான இடம் இருக்க முடியாது என்று நம்பினாள். வண்டியை நிறுத்திப் பூட்டிக் கொண்டு அந்தப் பாறையை நோக்கி நடந்தாள். அருகே செல்ல பாறையில் முளைத்திருந்த செடிகள் மறைத்திருந்த அவன் தெரிந்தான். அதுவரை இருந்த அவள் உற்சாகம் வருந்தியது.
 
தொடர்ந்து செல்லலாமா வேண்டாமா என்று யோசித்து நின்றாள். அவன் மேய்ந்து கொண்டிருந்த எருமைகளையே பார்த்தபடி இருந்தான். ஒரு முடிவுக்கு வந்தவளாக பாறையை நோக்கி மீண்டும் நடந்தாள். அருகே சென்றதும் உங்களின் ஏகாந்தத்தை குலைக்கும் எந்த எண்ணத்தோடும் நான் இங்கு வரவில்லை என்றாள். அவன் பதிலேதும் சொல்லாமல் அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்து பின் திரும்பவும் எருமைகளை மேய்ந்தான். அவனின் மௌனம் அவளுக்கு ஒரு அசௌகரியத்தை கொடுக்கவே அவள் தூரத்தில் இருந்த மேட்டை நோக்கி நடந்தாள். மறைந்து கொண்டிருந்த சூரியனை நோக்கி நடக்க கண்கள் கூசியது. மேட்டின் மேலேறி மாட்டி இருந்த கிடாரைக் கழற்றிக் கீழே வைத்தாள். அங்கே இருந்து சரிவை நோக்கி வேகமாக கீழே ஓடி வந்தாள். பின் திரும்பவும் மேலேறினாள். திரும்பவும் சறுக்கினாள்.
 
இப்படியாக விளையாடிக் கொண்டிருந்தவளை அவன் பார்த்தபடி இருந்தான். அவளை பார்க்க பார்க்க மன இறுக்கம் சற்றே தளர்ந்தாற் போல் இருந்தது. இந்த குழந்தை மனநிலை தனக்கும் வாய்த்திருந்தால் வாழ்க்கை எத்தனை எளிதாய் இருந்திருக்கும் என நினைத்தான். அப்போது ரம்மியமான மணிச் சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தான். அப்போது தான், தான் இவ்வளவு நேரம் அருகே இருந்த அந்த சர்ச்சை கவனிக்காமல் இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தான். கூடவே அறையை பூட்டிக் கொண்டு கால் போன போக்கில் நடந்து வந்து இங்கே அமர்ந்திருக்கும் பிரக்ஞை வந்தது. மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த அந்த சர்ச் வெகு உயரமாக மிக கம்பீரமாக நின்றிருந்தது. அதை ஒட்டி அதே போல வடிவமைப்புடன் வேறு சில கட்டிடங்களும் இருந்தது. ஒரு வேளை ஏதாவது கிரிஸ்துவ கல்வி நிலையமாக இருக்கலாம் என்று நினைத்தான். வெள்ளையும், ராயல் ப்ளூவும் பூசப் பட்டிருந்த அந்த சர்ச்சும் பிற கட்டிடங்களும் அந்த இடத்திற்கு பூரணத்தை தருவித்தது. பிறகு அந்த மணி ஓசையோ அவன் இதுவரை கேட்டிறாத இனிமையில் ஒலித்தது. இது எல்லாம் சேர்ந்து தன்னை மீட்டெடுத்ததாய் உணர்ந்தான். எ திங் ஆஃப் ப்யூட்டீ என கீட்ஸை நினைத்துக் கொண்டான்.
 
அப்போது அவள் அவனை கடந்து போய்க் கொண்டிருந்தாள். தெரிந்தவளைப் போல அவளிடம் கிடார் வாசிக்க தெரியுமா என்றான். அவள் கற்றுக் கொண்டிருக்கிறேன் பயிற்சி செய்யவே இங்கு வந்தேன் என்றாள். பயிற்சி செய்யுங்கள் நான் கிளம்புகிறேன் என்றான். நீங்கள் இங்கே இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை என்று அருகே அமர்ந்தாள். எருமைகள் மேய்ந்தபடி கிட்டே நெருங்கி இருந்தன. அதைப் பார்த்த அவள், இந்த எருமைக் கூட்டத்தைப் பார்க்க அந்நியன் நினைவு வருகிறதா உங்களுக்கும் என்றாள். தொடர்ந்து அவளே பயந்து விடாதீர்கள் விலக்கப்பட்ட எல்லாத் தவறுகளையுமே நான் செய்திருக்கிறேன் அதனால் மிதித்துக் கொல்லப்படப் போவது நான் தான் என சிரித்தாள். நானும் ஒன்னும் குறைந்தவனல்ல என்றான். ஓ அப்போ நம்ம சேர்ந்து சாகப் போறோமா என்றாள். ஆறு மணிக்கு திரும்பவும் சர்ச்சின் மணி ஒலித்தது.

 இந்த ஓசை மனசை என்னவோ பண்ணுதில்ல என்றாள். ம்ம் என தலை அசைத்தான். சில விநாடிகள் இருவரும் ஒன்றுமே பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். உணர்வு வந்தவளாக அவள், மகனே உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று கடந்து போயிருந்த எருமைகளை சுட்டினாள். இருவரும் இணைந்து சிரித்தனர். அபூர்வமாக இப்படி ஒரு நாள் அமைந்து விடுகிறதில்லையா என்றாள்.  அவன் அண்ணாந்து வானத்தை பார்த்தான். வானத்தில் மைனாக் கூட்டம் சேர்ந்தும் கலைந்தும் ஜாலங்களை நிகழ்த்தியது. அவன் பார்வையை தொடர்ந்து மேலே பார்த்து,  வாவ் Murmuration என்றாள். எ திங் ஆஃப் ப்யூட்டீ என்று அவன் துவங்க, அவள் இஸ் எ ஜாய் ஃபாரெவர் என்று முடித்தாள்.

No comments:

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...