நலமா? சமீபமாக என்ன படம் பார்த்தீர்கள்? என்ன வாசிக்கிறீர்கள்? உங்கள் காதலி நலமா? இரண்டு வாரங்களுக்கும் மேலாயிற்று நாம் பேசி. இங்கே வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது அமுதன். பெங்களூர் ஒரு பக்கம் வேர்க்க வியர்க்க என அதன் குளுமையை இழந்திருந்தாலும் ஜாக்கரண்டா மற்றும் பிங்க் ட்ரம்பெட் மரங்கள் வசந்தத்தை மிக மிக அழகாக வரவேற்கின்றன. இன்று நான் போன சாலையின் இரண்டு பக்கத்திலும் நின்றிருந்த பிங்க் ட்ரம்பெட் பூக்கள் என்னை இன்னொரு உலகுக்கு கடத்தி சென்றது. கூடிய விரைவில் அந்த மாயப் பூக்களை உங்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.
அமுதன், கடிகாரத்தின் முள் வெகு இயல்பாக நேரத்தை சுட்டி நகர்வது போல மிக இயல்பாக இப்போது என்னைத் தொட்டு நகர்கிறது ஒரு பிரிவு. தான் துல்லியமாகக் காட்டிய ஏதோ ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்ட அத்தனை விபத்துகளின் குரூரத்தையும் இதுவரை எந்த கடிகாரம் சரியாக உணர்ந்திருக்கிறது? எல்லாவற்றிக்கும் காலமே மௌன சாட்சி அதுவே சிறந்த மருந்தும் கூட, இல்லையா? எதிர்பாராத தருணத்தில் கன்னத்தில் பளார் என விழுந்தது போல இந்த பிரிவு கொடுக்கும் எரிச்சலையும் வலியையும் எப்படி சொல்வது? இவ்வளவு நாட்கள் விளையாட்டாகவே வாழ்ந்து விட்டிருக்கிறேனோ அல்லது ஏதோ மன நோயுடன் வாழ்ந்திருக்கிறேனோ எனக்கே புரியவில்லை. திடீரென படரும் வெறுமைக்கும் தனிமைக்கும் என்னை ஒப்புக் கொடுக்காமல் இருக்க உங்களுக்கு எழுதுகிறேன் அமுதன். உங்கள் பரந்த மார்பின் தேற்றுதல் என்னை இளைப்பாற அழைத்தாலும் சற்று தள்ளியே நின்று கொள்கிறேன். ஏனென்றால் மருந்துக்கு பழகிய உடல் தன்னியல்பான தாங்கும் சக்தியை இழந்துவிடுவது போல பிறகு நீங்களில்லாமல் என்னால் இயங்க முடியாது. நீங்கள் அற்புதமானவர் அமுதன் நெருக்குவதுமில்லை, விலகுவதுமில்லை.
எந்த ஒரு விசயத்திலும் நீங்கள் தர்கிக்கும்போது உங்கள் கருத்தை எவ்வளவு நிதானமாகவும், அழுத்தமாகவும் முன் வைக்கிறீர்கள். அது உங்கள் தெளிவான சிந்தனையை காட்டுகிறது. எனக்கு இப்போதெல்லாம் எந்த ஒரு விசயத்திலும் அத்தனை தீர்மானம் இருப்பதில்லை. எல்லோருக்கும் விட்டுக் கொடுப்பவளாகவே ஆகி விட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றாலும் இது சரியா தவறா என குழப்பமாக இருக்கிறது. நான் பிரிவை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா இதுக்கு முழுப் பொறுப்பாளி நானே. எனக்கு ஜப் வி மெட் படம் மிகப் பிடிக்கும், குறிப்பாக அந்த சுதந்திரமான கரீனாவின் பாத்திரப் படைப்பு. அதில் ஒரு இடத்தில் கரீனா சாஹித்திடம் நான் நினைக்கிற மாதிரி இந்த வாழ்கையை வாழ விரும்புகிறேன், அப்பொழுது என்ன நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு வேறு யாருமல்ல என்று எனக்குத் தெரியும் எனவே சந்தோசமாகவே இருப்பேன் என்பாள். இப்போது மீண்டும் அந்தக் குறிப்பிட்ட பகுதியை பார்த்தேன் உங்களுக்காக இங்கே அதை இணைக்கிறேன் நீங்களும் பாருங்கள். எத்தனை அற்புதமான வரிகள்.
உங்கள் புன்னகை தவழும் முகம் இப்போது எனக்கு நினைவில் ஓடுகிறது அமுதன். நீங்கள் எப்படி இத்தனை அமைதியானவராக இருக்கிறீர்கள்? உங்களுக்குள் இப்படி ரகசியப் பக்கங்கள் எதுவும் கிடையாதா? நீங்கள் யாரையும் பாதிக்கவில்லையா? அல்லது உங்களை யாரும் பாதித்ததில்லையா? நான் உங்களிடம் எதை சொல்ல வருகிறேன் அல்லது எதை சொல்ல விரும்புகிறேன் என எனக்கே தெரியவில்லை. உங்களுக்கு எழுதத் தோன்றியது எனவே தோன்றுவதை எல்லாம் எழுதுகிறேன். ஒன்று புரிகிறது எனக்கு, நான் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன் அமுதன். எனக்கே புரிகிறது என்றாலும் என்னால் என்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் ஏன் இப்படி இருக்கிறேன் அமுதன்? என்னையே புரிந்து கொள்ள முடியாதது எனக்கு பெரும் அவஸ்தையைக் கொடுக்கிறது. எனக்கு என்னைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. இதோ இதைப் படிக்கும்போது நீங்கள் என் கையை எடுத்து உங்கள் உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் அமுதன். அல்லது நீங்கள் அப்படி வைத்துக் கொள்வதாக நான் நினைத்துக் கொள்கிறேன். அது என் பாவங்களுக்கான மன்னிப்பாக இருக்கட்டும். யாருக்கோ இழைத்த பாவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மன்னிப்பு சமாதானம் அளிக்குமா அமுதன்? எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்கிறது என் கோரிக்கை. என் பாவம் என்னவெனில்... எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நிராகரிப்புகள் எத்தனை வலி நிறைந்தது என்று தெரிந்தாலும் கூட நான் ஏன் எப்போதும் மறுதலிப்பவளாக இருக்கிறேன்? இப்பொழுது அன்பு என்னை நிராகரித்து விட்டது ஆனால் நான் அதை தேடி பின்தொடர்ந்து அலைகிறேன். இப்படி ஏன் முரண்களால் ஆனவளாக இருக்கிறேன் நான். வேண்டும்போது விலகியும், விலகும்போது வேண்டியும், என்னதான் வேண்டுமாம் எனக்கு? உங்களுக்காவது என்னைப் புரிகிறதா அமுதன்?
உங்கள் அருகில் இருக்கும் போது நான் நிறைய கிறுக்கு தனங்கள் செய்தபடி இருக்கிறேன். உங்கள் இடது கையில் இருக்கும் கடிகாரத்தை வலது கைக்கு மாற்றுகிறேன். திரும்பவும் அதை இடது கைக்கே மாற்றுகிறேன். உங்களின் பிரெஞ்சு தாடியை கொஞ்சம் இழுத்துப் பார்கிறேன். உங்கள் காதுக்குள் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வந்து ஹூ என்று கத்துகிறேன். என்னை நீங்கள் ஒரு குழந்தையாகவே பார்கிறீர்கள் அமுதன். குழந்தைக்கு உரிய அத்தனை சலுகைகளும் எனக்குக் கிடைக்க, உங்களிடம் நானும் ஒரு குழந்தை ஆகத்தான் இருக்கிறேன். கள்ளத்தனங்கள் எதுவுமே அறியாத ஒரு பரிசுத்தமான குழந்தையைப் போல. என்னை உங்கள் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளுங்களேன் அமுதன், உங்கள் தோள்களில் புரளவேண்டும் எனக்கு...
ப்ரியமுடன்,
இனியா
6 comments:
”கடிகாரத்தின் முள் வெகு இயல்பாக நேரத்தை சுட்டி நகர்வது போல மிக இயல்பாக இப்போது என்னைத் தொட்டு நகர்கிறது ஒரு பிரிவு. தான் துல்லியமாகக் காட்டிய ஏதோ ஒரு நொடியில் நிகழ்ந்துவிட்ட அத்தனை விபத்துகளின் குரூரத்தையும் இதுவரை எந்த கடிகாரம் சரியாக உணர்ந்திருக்கிறது? எல்லாவற்றிக்கும் காலமே மௌன சாட்சி அதுவே சிறந்த மருந்தும் கூட” oh MY GOD...செம டா..super..
நன்றி தோழி!
நல்ல புனைவு. எழுத்தின் மேன்மையும் உங்கள் அதை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி கண் கூடாகிறது. மேலும் எழுதுங்கள் தோழி.
நன்றி லாவண்யா!
//என் பாவம் என்னவெனில்... எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஆனால் நிராகரிப்புகள் எத்தனை வலி நிறைந்தது என்று தெரிந்தாலும் கூட நான் ஏன் எப்போதும் மறுதலிப்பவளாக இருக்கிறேன்? இப்பொழுது அன்பு என்னை நிராகரித்து விட்டது ஆனால் நான் அதை தேடி பின்தொடர்ந்து அலைகிறேன். இப்படி ஏன் முரண்களால் ஆனவளாக இருக்கிறேன் நான். வேண்டும்போது விலகியும், விலகும்போது வேண்டியும், என்னதான் வேண்டுமாம் எனக்கு? //
எது பொய், எது நிஜம் என்ற கேள்விகளை தனக்குத்தானே எழுப்பிக் கொள்கிற மனநிலையில் அர்த்தமற்றதாய்த் தோற்றமளிக்கும் அர்த்தங்கள். வாசிக்கையில் உள்ளிழுத்து வசீகரிக்கின்ற எழுத்து.
நன்றி வாசு...
Post a Comment