மழையும் வெயிலும் நிமிடத்திற்கொரு முறை மாறி
மாறி வந்து கொண்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் எப்போதும் போல்
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அத்தனை சந்தடியிலும் அமைதியாய் படுத்திருந்த ஒரு நாயை
கவனிக்கத் துவங்கினேன். அது எதிர்த்த பிளாட்பார மேடையில்
படுத்திருந்தது.அந்த நாயை ஈக்கள் மொய்த்தபடி இருந்தன. ஈக்களைத் தவிர அங்கே
படுத்திருக்கும் நாயை வேறு யாரும் கவனித்ததாய் தெரியவில்லை. அது முன்
கால்களை சற்றே முன்னால் நீட்டி தளர்ந்து படுத்திருந்தது. அந்த நாய் இன்ன நிறம் என
சொல்ல முடியாத ஒரு நிறத்தில் நன்றாக அழுக்கேறி இருந்தது. ஒருவேளை அது
வெண்ணிறத்தில் இருந்திருக்கலாம். சில ஈக்கள் கூட்டமாக நாயின் தொடைப்
பகுதியை மொய்த்துக் கொண்டிருந்தது. ஒன்று நாயின் முதுகுக்கு ஊர்ந்து
கொண்டிருந்தது. நாய் அதை சுற்றிலும் நடந்த எது ஒன்றையுமோ அல்லது தன்னை
மொய்த்திருந்த ஈக்களையோ கண்டுகொண்டதாக தெரியவில்லை. அது வெறுமனே படுத்திருந்தது.
நாய் படுத்திருந்த பிளாட்பார மேடைக்கு கீழே, அப்போதுதான் யாரோ சாப்பிட்டு முடித்து கழுவி விட்டிருந்த சோற்றுப்
பருக்கைகளும் நீரும் இறைந்து கிடந்தது. ஈரத் தரையில் ஏற்கனவே சில ஈக்கள்
பருக்கைகளை மேய்ந்து கொண்டிருந்தது. ஒரு ஈ நாயின் மேலிருந்து
எழுந்து ஈரத் தரைக்கு சென்றது. இன்னொன்று அதை தொடர்ந்தது. ஒரு ஈ மேலெழுந்தால் இன்னொன்றும் அதையே செய்தது. அது ஒரு ஈ விளையாட்டு. அப்படி ஈக்கள் நாயின் புண் மேலிருந்து ஈரத் தரைக்கு
மாறி அமரும்போது, நாயின் தொடைப் பகுதியில் இருந்த காயங்கள் சிவப்பாக தெரிந்தது. நினைவுகள் வலிகளை கிளருவதைப்
போல ஈக்கள் காயத்தை கிளறி விட்டிருந்தன. ஈக்கள் எப்போதும் எதற்கோ
பறந்தபடியே இருக்கின்றன. ஈக்கள் மிகுந்த தொந்தரவு
கொடுப்பவை. ஈக்கள் மேலமர்ந்து விட்டு சென்றபிறகும் அந்த குறுகுறுப்பு சில
நிமிடங்கள் அது ஊர்ந்த இடங்களெல்லாம் ஊறிக் கொண்டிருக்கிறது.
இறைந்து கிடந்த பருக்கைகளை இன்னொரு கருப்பு நாய் வந்து நக்கிக் கொண்டிருந்தது. கருப்பு நாயின் இடையூறால் தரையிலிருந்த
சில ஈக்கள் மீண்டும் வெள்ளை நாயின் மேல் போய் அமர்ந்தன. வேறு சில அங்கிருந்து
பறந்து சென்று பஸ் ஸ்டாண்ட் பழக் கடையில் அழுகிய திராட்சை பழங்கள் மேல் அமர்ந்தது. பச்சை ஸ்கார்ப் கட்டிய ஒரு பெண் நாயைக் கடந்து பழக் கடைக்கு சென்று
சிறிது நேர பேரத்திற்கு பிறகு பழங்களை வாங்கினாள். அந்தம்மாள் கை பிடித்திருந்த
சிறுமி பாதி கடித்து கையில் வைத்திருந்த பிஸ்கட்டை நாய் ஒருபக்கம் தலையை உயர்த்தி
பார்த்தது. அதன் காதுகள் கூர்மை
அடைந்தன. ஒரு பக்கம் தலையை சாய்த்து அந்த சின்ன பெண்ணை பார்த்தது. அந்த சிறுமியும் நாயையே பார்த்துக் கொண்டிருந்தது. நாய் மெல்ல வாலாட்டத் துவங்கியது. திராட்சையை மொய்த்த ஈக்கள் ஒன்றிரண்டு அந்த சின்ன விரல்களையும் பிஸ்கட்டையும் சுற்றி மொய்த்தது. நாய் எழுந்து சென்று
அந்த சிறுமியின் கைகளுக்கு மிக அருகில் நின்றது. பழங்களை வாங்கித் திரும்பிய பெண், குழந்தையின் பக்கத்தில்
நின்றிருந்த நாயை விரட்டினாள். நாய் பழைய இடத்திலேயே வந்து படுத்தது.
பழக்கடையை ஒட்டி இருந்த டீக்கடையில் வடை வாங்கிக் கொண்டு தள்ளாடி வந்த ஒருவன் எதிர்பாராமல் நாயின் வால் மேல் விழுந்தான். நாய் துள்ளி எழுந்தது. வடை அவன் கையில் இருந்து கீழே தள்ளி விழுந்தது. அதே நேரத்தில் நகரும் பேருந்தை அவசரமாக பிடிக்க ஒருவன் ஓடினான். மிதிபட்ட நாய் ஓடியவனே தன்னை மிதித்தவன் என நினைத்தோ என்னவோ அவனை துரத்தியது. துரத்தி ஓடும்போது நாயின் காதுகள் மேலும் கீழுமாய் ஆடின. நாயின் திடீர் ஓட்டத்தால் குழப்பமடைந்த ஈக்கள் நாயின் உடலுக்கு சற்று மேலே நாயின் உடனே பறந்தது. ஓடியவன் பேருந்தை பிடிக்கவே ஏமாந்த நாய் திரும்பி வந்தது. ஈக்கள் மீண்டும் அதை மொய்த்தன. அப்பொழுதுதான் பிரக்ஞை வந்தது போல் நாய் பட பட பட வென ஈக்களை உதறியது. உதறி விட்டு நாய் மிதிபட்டு உதிர்ந்து கிடந்த வடை துணுக்குகளை நக்கித் தின்றது. கடைசியில் மீதமிருந்த ஒற்றைத் துண்டை கவ்வி எடுத்து லபக்கென விழுங்கியது .வடை மேலும் பசியை கிளப்பிவிட அது சற்று தள்ளி ஓடி வந்து டீக்கடைக்கு முன் வைத்திருந்த அட்டைபெட்டியை சுற்றி முகர்ந்து, அட்டைபெட்டியில் மீதம் இருந்த பழையவைகளை தின்னத் துவங்கியது. குடித்து முடித்த டீ கோப்பையைப் போட வந்த யுவதி நாயைப் பார்த்து தயங்க டீக்கடைக்காரன் நாயை விரட்டினான்.

நகர்ந்து வந்து நின்று கொண்டிருந்த பேருந்து நிழலில் நின்று, நாய் முன் கால்களை நன்றாக நீட்டி உடலை நெட்டி முறித்து கண்களை மூடி ராகமாக முகத்தை முன்
நீட்டி ஊளை விட்டது. பேருந்துக்கு அந்த பக்கம் இருந்த சற்று முன் பருக்கைகளை தின்ற கருப்பு நாய் சத்தத்திற்கு
நிமிர்ந்து பார்த்தது. கருப்பு நாயுடன் நின்றிருந்த செவலை நாய் இதை எதையும் கவனிக்கவில்லை. கருப்பு நாய் மீண்டும் செவலை
நாயின் அருகில் போய் நின்றது. இரண்டும் ஒன்றை ஒன்று முகர்ந்து பார்த்துக் கொண்டும், மௌனமாய் ஒன்றின் பின்புறத்தை இன்னொன்று சுற்றிக் கொண்டும் இருந்தது. சற்று நேரத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின்
பின் டயரில் கருப்பு நாய் ஒரு காலை உயர்த்தி சிறுநீர் கழித்தது. உடன் நின்ற நாய் மெல்ல முகர்ந்து அதன் மேலேயே அதுவும் போனது. இதை பார்த்துக் கொண்டிருந்த
இந்த வெள்ளை நாய் பேருந்துக்கு அடியில் புகுந்து வந்து அந்த டயரை முகர்ந்தது. ஈக்கள் வெள்ளை நாயின் முதுகில் ஒதுங்கி என்ன நடக்கும் என ஆர்வமாக பார்க்கத் துவங்கின. இதைப் பார்த்த கருப்பு நாய் உறுமத் துவங்கியது. உடன் நின்ற நாய் ஒன்றும் பேசாமல் முன்னே முன்னே நடந்து சென்றது.
கருப்பு நாய் திரும்பி திரும்பி குழைத்தபடியே அந்த நாயை பின் தொடர்ந்தது. சிறிது
நேரத்தில் அவை இரண்டும் மறைந்து போயிற்று.
இது நின்ற இடத்திலேயே நின்று உறுமி
விட்டு திரும்பி வந்து படுத்தது. ஈக்கள் நாயின் முகத்துக்கு எதிராக
வந்து கண்களை மூடி பறந்தது. நாய் முன்கால்களை மடக்கி ஈயை ஒதுக்கியது. ஈக்கள் பின் சென்று புண்ணை மொய்த்தது. நாய் ஆக்ரோசமாக பின் திரும்பி மேலுதட்டை மேலிழுத்து ஈக்களைப் பார்த்து கடித்து விடுவேனென தன் பற்களை எல்லா காட்டியது. ஈக்கள் அதிர்ந்து நகர்வது போல் பாவித்துப் பறந்து திரும்பவும் நாயின் மேலேயே
அமர்ந்தது. பொறுக்க முடியாத நாய் எழுந்து ஈக்களை இப்படியும் அப்படியும்
திரும்பிப் பார்த்து குழைத்து தன்னையே சுற்றி சுற்றி வந்தது. ஒரு கட்டத்தில் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதை
உணர்ந்த நாய் ஈக்களை ஒன்றும் செய்ய கூடாமல் ம்ம் ம்ம்ம் என்று அழுவது போல் ஊளை விட்டது. ச்சை
இதென்ன இங்க நின்னு நாய் ஊளையிடுது என்று பஸ்ஸுக்கு காத்திருந்த ஒரு தாத்தா தோளில் கிடந்த துண்டை
எடுத்து அதை விரட்டினார். நாய் பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது.
No comments:
Post a Comment