Thursday, January 26, 2012

பெட்ஸ்


வகுப்புகள் முடிந்து விடுதிக்கு வந்து உடை மாற்றி, முகம் கழுவி வனிதாவின் அறைக்கு வந்தேன். வனி இன்னும் வந்திருக்கவில்லை. வகுப்பு முடிந்து வந்து ஸ்போர்ட்ஸ் ப்ராக்டீஸ்க்கு போயிருக்க வேண்டும். கட்டிலுக்கு அடியில் அவள் ஸ்போர்ட்ஸ் சூவை தேடினேன். அது அங்கே இல்லை என்றதும் கண்டிப்பாக கிரௌண்டில் இருப்பாள் என நினைத்தேன். அந்த பங்கர் கட்டில்களில் வனிதாவுடையது கீழ்கட்டில். செருப்பை கட்டிலுக்கு அடியில் கழற்றி விட்டு அவள் மெத்தையில் அமர்ந்தேன். அவள் வரும் வரை அங்கே இருக்கலாமென தலையணைக்கு அருகில் இருந்த ஏதோ புத்தகத்தை எடுத்து புரட்டினேன்.

அவள் அறையிலிருந்த மற்றவர்களை எனக்கு அவ்வளவாய் தெரியாது. எனவே அவர்கள் என்னை உன்னித்து பார்பதை நான் விரும்பவில்லை. ஏற்றிக் கட்டபட்டிருந்த அடர் வண்ண கொசு வலையை அவிழ்த்து கட்டிலை சுற்றிலும் கீழே இழுத்துவிட்டேன். இப்போது நான் உள்ளே இருப்பது வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் எனக்கு வெளியே நடப்பது ஒரு நிழல் போல தெரியும். இருபது பேர் புழங்கும் அந்த அறையில் இந்த ஹைடவுட் ரொம்ப நன்றாய் இருந்து. சுவரோடு சேர்ந்து அமர்ந்து வலையை துளைத்து ஊடுருவும் மென் ஒளியை பார்த்து கொண்டிருந்தேன்.



பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது எங்கள் மகளிர் பள்ளி. வனி இந்த வருடம் தான் எங்கள் பள்ளியில் சேர்ந்திருக்கிறாள். எனக்கு இது இரண்டாவது வருடம். சென்ற வருடம் சேர்ந்த புதிதில் மிரட்சியாய் இருந்தது. மெது மெதுவாக அறை தோழிகளிடம் பேசத் துவங்கினேன். விடுதியில் எல்லோரும் சிறு சிறு குழுக்களாக இருந்தார்கள். பேசி பார்த்தவரை யாரும் மனதுக்கு நெருங்கவில்லை. ஒத்து வராத பட்சத்தில் குழுவில் இருந்து கழன்று கொள்வேன். இப்படி தாவிக் கொண்டே இருந்ததால் என்னையும் யாருக்கும் பிடிக்கவில்லை. வனியை எனக்கு அறிமுகமானது ஒரு விடுமுறை தினத்தில். எல்லோரும் நொண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது அவள் கபடி விளையாடலாம் என்றாள். ஒரு சிலர் மட்டுமே இதற்கு உடன்பட்டு அவள் பின்னே சென்றோம். நான் நன்றாக விளையாடினேன் என்று அவள் கூறியபோது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அதற்கு பிறகு அவளிடம் பேசத் துவங்கினேன். அவள் வேறு குழுவில் இருந்தாலும் எனக்கு ஏனோ தனியாய் தெரிந்தாள். காலையில் அவள் கிரௌண்டில் ப்ராக்டீஸ்க்கு போவாள் என தெரிந்து கொண்டு நானும் கூட சென்றேன். என்னால் தொடர்ந்து காலையில் சீக்கிரம் எழ முடியாததால் அதுவும் சில நாட்களிலேயே நின்றது. இருந்தாலும் மாலை நேரங்களில் அவளோடு பேசிக் கொண்டிருப்பேன்.



இடையூறாக இப்போது கொசுவலைக்கு வெளியே நிழலாடியது. தொடர்ந்து கொசுவலையை தூக்கி கொண்டு லக்ஷ்மி உள்ளே வந்தாள். உன்னை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்றாள். எதற்கு நான் இங்கே இருப்பது எப்படி தெரியும் என்றேன். நீ இங்கே தான் இருப்பாய் என்று எனக்கு தெரியாதா? மற்றும் உன் செருப்பு கீழே தான் இருக்கிறது என்றாள். சரி உள்ளே வா என்றேன். உள்ளே வந்து அமர்ந்து கொண்டே இன்னும் வனி வரவில்லையா என்றாள். இல்லை என்றேன். லக்ஷ்மி என் குழுவில் இருக்கிறாள். லக்ஷ்மி நான் மற்றும் சுதா இப்போது ஒரு குழுவாய் இருக்கிறோம். குழு எதற்கு என்றால் அவர்களோடு தான் சாப்பிட மற்றும் பள்ளிக்கு செல்ல வேண்டும். விடுதிக்கும் சாப்பாட்டு அறைக்கும் சற்று தூரம். அதே போல விடுதிக்கும் பள்ளிக்கும் இன்னும் கொஞ்ச தூரம். எல்லாம் ஒரே காம்பௌண்டில் தான் என்றாலும் கட்டிடங்கள் நல்ல இடைவெளியில் அமைந்திருக்கிறது. காம்பௌண்ட் சுவர் ஒரு கோட்டையின் சுவரை போல கருங்கற்களால் ஆன நல்ல வளர்த்திச் சுவர். வெளியே என்ன நடக்கிறதென்றே ஒன்றும் தெரியாது. உள்ளே ஆண்களுக்கு வேலையே இல்லை. வார்டன் மட்டும் உள்ளேயே வசித்தால் அவர்கள் மகன் மட்டும் விதிவிலக்கு. அவனுக்கு எங்கள் வயதுதான் என்றாலும் அவன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்ததே இல்லை.



லக்ஷ்மி இங்கே விடுதிக்கு வந்ததற்கு காரணம் அவள் யாரையோ விரும்பியது என மற்ற பெண்கள் கூறி நான் கேட்டிருக்கிறேன். நான் அவளிடம் எதையும் நேரிடையாக கேட்டது கிடையாது. ஒரு ஞாயிற்றுக் கிழமை அப்பா வருகிறாரா என முன் படிக்கட்டில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தபோது அவளும் வந்து அமர்ந்தாள். காலையில் இருந்து காத்திருந்து இப்போது மணி ஐந்து ஆயிற்று இன்னும் அப்பா வரவில்லை. இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்தால் வரலாம், இல்லாவிட்டால் அடுத்த வாரம் தான். அப்பா வரும்போது விளையாடிக் கொண்டிருந்தால் திட்டுவார் எனவே படிப்பது போல பாவலா செய்ய புத்தகத்தை கையில் வைத்திருந்தேன். அடுத்த நாள் பரீட்சைக்கு படித்தாகிவிட்டதா என்று கேட்டாள். இல்லை அப்பா வந்ததும் பார்த்துவிட்டு படிக்கனும் என்றேன். இன்று வருவாரா என்றாள். தெரியாது வரலாம் என்றேன். அப்பா வார வாரம் பார்க்க வர மாட்டார். எப்போது வருவார் எனவும் தெரியாது. அப்பா வராவிட்டாலும் லக் இருந்தால் சித்தப்பா, தாத்தா யாராவது வரலாம். இந்த வாரம் யாரும் வார மாட்டார்களோ என யோசிக்க யோசிக்க கண்களில் கோர்த்த நீர் வழிந்து புத்தகத்தில் தெரித்தது. எனக்கு அவள் முன்னால் அழுதது என்னவோ செய்தது. எப்பொழுதும் இப்படி காத்திருந்து வாராத சாயங்காலங்களில் கட்டிலில் போய் போர்வையை போர்த்திக் கொண்டு யாருக்கும் தெரியாமல் கேவல்களை அடக்கிக் கொண்டு அழுவது தான் வழக்கம். இன்று இப்படி இவள் முன்னால் அழ வேண்டியதாகி விட்டது அவமானமாய் இருந்தது. அவள் யாரிடமாவது சொல்லி விடுவாளோ என்று கொஞ்சம் பயமாய் இருந்தது. இப்படி அழுவதை தெரிந்து கொண்டால் எல்லோரும் தன்னை கேலி செய்வார்கள். அதுவும் ஹேமாவிற்கு தெரிந்தால் நாளை வகுப்பில் எல்லோரிடமும் சொல்லி விடுவாள் என்றிருந்தது.



லக்ஷ்மி என் மன ஓட்டங்களை கண்டுகொள்ளாமல் என்னிடம் ஏதோ நெருக்கம் தோன்றி தன் கதையை சொல்ல துவங்கினாள். உன் அப்பாவிற்கு உன்னை பிடிக்குமா என்று கேட்டாள். அப்பாவை நினைக்கையில் எனக்கு எப்போதுமே பயம் தான். அவருக்கு என்னை பிடிக்குமா என்று இது வரை நான் யோசித்ததில்லை. ஆனால் பிடிக்கும் தானே யாருக்குதான் தன் குழந்தையை பிடிக்காது என்று நினைத்தேன். பதிலை எதிர்பாராது என் அப்பாவிற்கு என்னை பிடிக்காது என்றாள். ஏன் என்றேன். எனக்கும் யாரையும் பிடிக்காது என்றாள். எனக்கு அவள் ஒரு புதிராய் தோன்றினாள். எனக்கு யாரையாவது பிடித்தால் அவர்கள் நிலைக்க மாட்டார்கள் என்றாள். எப்படி என்றேன். எனக்கு என் சித்தியை ரொம்ப பிடிக்கும் அவர்கள் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்கள் என்றாள். எனக்கு இதை கேட்க ரொம்ப சங்கடமாக இருந்தது. எதுவும் பேசாது அமர்ந்திருந்தேன். எனக்கு ஒரு தோழி இருந்தாள் அவளையும் பிரிந்தேன் என்றாள். அவள் தோழிக்கு வந்த காதலையும் சொன்னாள். அவள் முதலில் அவனை தன் தோழியின் நண்பன் என்று நினைத்திருந்ததாகவும் பிறகு இருவரும் கொஞ்சம் குடித்திருந்த ஜூஸ் கிளாஸ் மாற்றிக் கொண்டபோது அது காதல் என இவள் கண்டு பிடித்ததாகவும் கூறினாள். ஒரு பக்கம் சீ சீ காதலா என்று யோசித்தாலும் இன்னொரு பக்கம் அவன் குடித்த ஜூஸ் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தேன். பிறகு இவள் அவன் ஒரு நாள் தன்னோடு அழைத்து வந்திருந்த நண்பனிடம் காதல் கொண்டதை சொன்னாள். அவனோடு இவள் சுற்றியதை சொன்னாள்.  ஒரு நாள் அவன் மருத்துவ மனைக்கு அழைத்து போனதாகவும் சொன்னாள். அதன் பிறகு அவன் இவளைப் பார்க்க வரவே இல்லை என்றாள். ஏன் என்னாயிற்று என்று கேட்டேன். காரணம் தெரியாது என்றாள். இதை அறிந்ததிலிருந்து அவள் அப்பாவிற்கு இவளை பிடிக்கவில்லை என்றாள். தோழியிடம் இருந்தும் பிரித்து இந்த வருடம் பள்ளியை மாற்றி விட்டார் என்றாள். எனக்கு அவளை பார்க்க பாவமாய் இருந்தது. அன்று அப்பா வரவில்லை. ஒரு பக்கம் ஏமாற்றமாய் இருந்தது. சாப்பாட்டு மணி அடித்தது. இருவரும் ஒன்றாக சாப்பிட போனோம். இப்படி தான் எங்கள் பழக்கம் துவங்கியது. சுதா எப்படி எங்களோடு இணைந்தால் என்று எனக்கு நன்றாக நினைவில் இல்லை.



தற்போது லக்ஷ்மி உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்றாள். என்ன என்றேன். திடீரென்று I love Vani என்றாள். ஆனால் வனி என்னுடைய தோழி அவளை எப்படி லக்ஷ்மி விரும்பலாம் என்று கோவம் வந்தது. ஒருவேளை வனிக்கு லக்ஷ்மியை பிடித்துவிட்டால் அவள் தன்னிடம் பேச மாட்டாள் என்றும் தோன்றியது. இருந்தாலும் கோபம் மறைத்து ஓ you like her அப்படிதானே என்றேன்? No no I love her , எனக்காக நீ இதை அவளிடம் சொல்லிவிடு என்றுவிட்டு சென்றாள். நான் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். யோசிக்க யோசிக்க எதுவோ புரியாமலும் இருந்தது. அதை எப்படி புரிந்து கொள்வதென விளங்கவில்லை. அதெப்படி லக்ஷ்மி வனியை விரும்ப முடியும் என்று யோசித்தேன். ஒருவேளை தோழியாக பிடிப்பதை தான் அவள் இப்படி சொல்கிறாள் என்று நினைத்தேன். இருந்தாலும் அவள் திரும்பவும் லவ் என்று தானே சொன்னாள் என்று யோசித்தேன். மே பீ அவள் காதலன் சாயல் எதாச்சும் வனியிடம் இருக்குமோ என நினைத்தேன். எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. ரொம்ப புதியதாய் வேறு இருந்தது.



நான் உள்ளே இருப்பது தெரியாமல் வனி வந்து கொசுவலையை சற்றே உள்ளே தள்ளி விட்டு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து சூவை கழற்றினாள். நான் வனி எனவும் உற்சாக குரலில் ஹே உள்ளே இருக்கிறாயா என்றாள். எனக்கு அவளின் இந்த உற்சாகம் எப்போதுமே பிடித்தமானது. இல்லை வந்து கொஞ்ச நேரம் ஆயிற்று என்றேன். நெடு நேரம் உள்ளேயே வைத்திருக்க முடியாமல் லக்ஷ்மி உன்னிடம் ஒன்று சொல்ல சொன்னாள் என்றேன். என்ன என்பதுபோல் என்னைப் பார்த்தாள், She loves you என்றேன். அவள் சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் விழித்து, பிறகு புரிந்து எதையோ மிதித்துக் கொண்டதைப்போல அருவெருபுற்று அப்படியே நின்றாள். முதல் முதலாக இந்த உணர்வை அவளிடம் பார்கிறேன். எனக்கு அவளுக்கு பிடிக்காததை பேசி விட்டது சங்கடமாய் இருந்தது. இதை பற்றி இனி மேல் என்னிடம் பேசாதே யாரிடமும் இதை சொல்லாதே என்றாள். என்ன செய்ய வேண்டும் என தெரியாது விழித்தேன். என் அறைக்கு சென்றதும் லக்ஷ்மி என்னிடம் என்ன ஆச்சு என்றாள். நான் அவளிடம் பேசுவதை தவிர்த்தேன். அதற்கு பிறகு பேசுவதையே நிறுத்திக் கொண்டேன். அந்த வார விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டேன். திரும்ப வந்ததும் என்னிடம் வனி பேசவில்லை. நான் தான் இதை யாரிடமும் சொல்லவும் இல்லை, லக்ஷ்மியோடு பேசுவதும் இல்லை பிறகு ஏன் இவள் என்னோடு பேச வில்லை என்று யோசித்தேன். அவள் என்னை தவிர்த்த கோவத்தில் நானும் அவளோடு பேசவில்லை. வனி பிறகு ரொம்ப அமைதியாகவே இருந்தாள். என்னோடு மட்டுமல்ல யாரோடும் அவ்வளவாக பேசவே இல்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்தாள். நான் மீண்டும் தனியானேன்.



சில வாரங்களுக்கு பிறகு லக்ஷ்மி அந்த பக்கம் வருவதை கவனித்த நான் எங்கே என்னிடம் பேசிவிடுவாளோ என மும்முரமாக படிப்பதை போல காட்டிக் கொண்டேன். அவள் எங்களை கடக்க என் பக்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த எங்கள் அறைத் தோழி ப்ரியா என்னிடம் லக்ஷ்மி உன் தோழி தானே நீங்கள் பேசிக் கொள்வதில்லையா என்றாள். அதைப்பற்றி இவளுக்கென்ன என நினைத்துகொண்டு சும்மா இருந்தேன். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா, இவளும் வனியும் பெட்ஸ் என்று சொன்னாள். பெட்ஸ்ன்னா என்றேன். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும் அவர்கள் இருவரும்தான் எப்போதும் சேர்ந்திருப்பார்கள். இந்த லக்ஷ்மி நீ ஊருக்கு போயிருந்த வாரம், ஞாயிறு மதியம் நாங்கள் சாப்பிட்டு வந்ததும் மேல் கட்டிலில் ஏறி, கத்தியை தன் வயிற்றை நோக்கி வைத்துக் கொண்டு வனி நீ என்னிடம் பேசாவிட்டால் நான் குத்தி கொண்டு செத்துவிடுவேன் என்று மிரட்டினாள். நாங்கள் ஓடி சென்று வார்டனிடம் தெரிவித்து, வார்டன் வந்து நெடு நேரம் பேசி கடைசியில் அவள் அப்பாவிற்கு போன் பண்ணுவதாக சொன்னதும் தான் கீழிறங்கி வந்தாள் என்றாள். எனக்கு என்னை கடந்து தொலைவில் நடந்து போகும் அவளைப் பார்க்க, அவள் சொன்னது நினைவில் வந்தது 'எனக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவர்கள் என்னிடம் இருந்து விலகி விடுவார்கள்'.

7 comments:

shri Prajna said...

வழக்கம் போலவே நல்ல நடை..நல்ல எழுதிருக்கே..சுகி..

Sugirtha said...
This comment has been removed by the author.
Sugirtha said...

அப்படியா?! :-)

shri Prajna said...

பெற்றோரிடமிருந்து அன்பு முறையாய்
கிடைக்கப்பெறும்போது அக்குழந்தைகள் எவ்விதத்திலும் தடுமாறுவதில்லை.இல்லாவிட்டால் தான் இம்மாதிரியான பழக்கங்கள்.அன்பை எதிர்பார்ப்பதும் பகிர்வதும் தானே எல்லா உயிரும் வேண்டுவது.எந்த விஷயத்திற்கும் மூலகாரணம் என்று ஒன்றிருக்கும்.அவர்களின் பிரச்சனையை கண்டறிந்து தீர்க்கப் பார்க்கவேண்டுமே ஒழிய அப்படிப்பட்டவர்களை ஒதுக்குவதாலேயோ, வெறுப்பதாலேயோ எதுவும் தீர்ந்துவிடாது என்பதை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

Sugirtha said...

ஒரு சிலருக்கு இது ஒரு வகை மனச்சிக்கல், ஒரு சிலருக்கு இது தன் தேர்வு. எது எப்படியோ புரிந்து கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.
//அன்பை எதிர்பார்ப்பதும் பகிர்வதும் தானே எல்லா உயிரும் வேண்டுவது.// கண்டிப்பா :-)

அன்புடன் அருணா said...

good one!

Sugirtha said...

Thanks Aruna...

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...