Sunday, January 23, 2011

ஏது ஆறுதல்

தென்னை மரத்திலிருந்து
தவறி விழுந்துவிட்ட அணில் குட்டியை
பன்னாடை பஞ்சு வைத்து
அவசரமாய் செய்த மெத்துப் பெட்டியில்
பத்திரமாய் வைத்தாள் தங்கை

இன்னமும் கண் விழித்திராத அதை
உண்ணும்போதும், உறங்கும்போதும்
அருகிலேயே வைத்து பாதுகாத்து
குட்டியின் ஒவ்வொரு அசைவையும்
உற்று நோக்கி குறிப்பெடுத்து
என்னிடம் ஓயாது உளறிக்கொண்டே இருந்தாள்

ஆச்சர்யம் ஒரு முறை
பெட்டியிலிருந்து எழுந்து
முகர்ந்து முகர்ந்து ஊர்ந்து
அவள் உள்ளங்கைகளுக்குள்
பதுங்கி கொண்டது அது

அவள் கேட்டாளென
கொய்யா மரமேறி
பழங்களை பறித்து
அவள் மேல் போடுவதாய் பாவித்து
விளையாட்டாய் கீழே வீச
பாத்துண்ணா பாத்துண்ணா
சொல்ல சொல்ல
பெட்டியின் மேல் விழுந்து
உருண்டது ஒரு பழம்

பதறி பெட்டியைக் காண
உறங்குவதாய்க் கிடந்த
அணில் குட்டியின் வாயில்
மெல்லியதொரு சிவப்புக் கொடு

சமாதானமாய்
கிளி பிடித்து தருகிறேன் என்றதையோ
அவளுக்கென பறித்து போட்ட பழங்களையோ
தொடவே இல்லை அவள்
நிற்காது வழியும் கண்களூடே
ஒரு வெற்றுப் பார்வை பார்த்து
கோணிய உதடுகளை உள் மடக்கி
வெடுக்கென நடக்கிறாள்
எனை தவிர்த்து

எனக்கு அவளையும் புரிகிறது
கொய்யாவையும் புரிகிறது
அணிலையும் புரிகிறது

Saturday, January 8, 2011

நிலை

குழந்தைகளற்றது என் தெரு
பஞ்சு மிட்டாய், பலூன் என
எவன் தொல்லையுமில்லை

அன்று கவிதை விற்க வந்தவனை
வாசலோடு அனுப்பிவிட்டேன்

பூக்காரியிடம் எனக்கென்ன பேச்சு

உனக்கும் தான்
அனுமதியின்றி அறைக்குள் நுழைவது
இன்றே கடைசியாய் இருக்கட்டும்
கதவை இறுக அடைத்துவிட்டு
சொல்லாமலே போய்விடு

இந்த அறை
மூலையில் ஒற்றை நாற்காலி
வெறிக்க ஒரு ஜன்னல்
வாசக் காரையை பெயர்க்கும் வெயில்
வசீகரம்தான் வாழ்க்கை

Sunday, January 2, 2011

கோரிக்கை

யாரேனும்
யுத்தத்திற்கு பழக்குவியுங்கள்
என் விரல்களையல்லாது
மனத்தை
சதா சளைக்காது போரிட்டு
சாய்த்திடும்
இந்த அன்பை தோற்கடிக்க

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...