நாங்கள் மூன்று தோழிகள் சேர்ந்து வீடு எடுத்து தங்கியிருக்கிறோம். சோனா டெல்லியை சார்ந்தவள் சகானாவின் பூர்வீகம் கர்நாடக மாநிலத்தின் சிக்மங்களூர். இங்கு வந்த பிறகு தான் எனக்கு இவர்கள் பழக்கம். இருவருமே இனிய தோழிகள். சகானா முதலில் எழுந்து சென்றாள். அவளை தொடர்ந்து நானும். இருவரும் பல் துலக்கி விட்டு பக்கத்தில் இருந்த மெஸ்ஸுக்கு காபி குடிக்க வந்தோம். சோனாவுக்கு காபி பழக்கம் இல்லாததால் இன்னும் உறக்கத்தில் இருந்த அவளை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வந்தோம். நாங்கள் டோக்கன் வாங்க போவதற்கு முன்னேயே நாங்கள் நுழைவதை பார்த்ததும் கல்லாவில் இருந்தவர் இரண்டு காப்பிக்கான டோக்கன் கிழித்து வைத்திருந்தார். தினமும் செல்வதால் எங்களைப் பரீட்சயம் அவருக்கு. சகானா நமஸ்காரா ரீ என்றாள். நானும் அவளுடனேயே புன்னகைத்து வணக்கம் செலுத்துவது போல் தலையை மட்டும் ஆட்டினேன். அவரும் புன்னகைத்தபடியே பதில் வணக்கம் செலுத்தினார். எனக்கு சகானாவை இந்த விஷயத்தில் பிடிக்கும். எந்த கூச்சமுமில்லாமல் எல்லாரோடும் ஒரு சகஜமான உரையாடலில் அவளால் எளிதில் ஈடுபட முடிகிறது. எனக்கு புதிதாக பார்பவர்களிடம் மட்டுமல்ல எத்தனை முறை பார்த்தாலும் ஒரு சிலரிடம் பேச எப்போதுமொரு வித தயக்கம் இருக்கும். அவர்களாக முன் வந்து பேசினால் தான் என்னால் பேச முடியும். வயதானவர்களிடமும் குழந்தைகளிடமு
சகானா கூட அவளாக தான் என்னொடு வந்து பேசினாள். சகானா மூலமாகத்தான் எனக்கு சோனாவையும் தெரியும். நான் வேலைக்கு வந்த புதிதில் தங்கி இருந்த ஒரு விடுதியில் அறிமுகமாகி பின் மூவரும் வீடு பார்த்து வெளி வந்துவிட்டோம். எனக்கு கன்னடம் சொல்லி கொடுத்தவள் இவள் தான். இங்கு பெரும்பாலான பேருந்துகளில் எந்த இடம் செல்லும் என்கிற குறிப்பு கன்னடத்தில் எழுதி இருக்கும். நம்பர் பார்த்து போகலாம் என்றாலும் முதலில் சற்று சிரமமாக இருந்தது. உனக்கு சந்தேகம் இருந்தால் டிரைவரிடம் ஏறுவதற்கு முன் இடத்தின் பெயரை சொல்லி போகுமா என்பதற்கு ஹோகத்தா என்று கேளு என்று சொன்னாள். நானும் ஜெய்நகர் ஹோகித்தா என்று கேட்டேன். அவர் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே ஆம் என்று தலையாட்டினார். நான் சகானவிடம் அன்று இரவு சொல்கையில் அது ஹோகித்தா அல்ல ஹோகத்தா என்று சொல்லி சிரித்தாள். நானும் ஒப்பிடுவதற்காக போகுமாக்கு பதிலா போகிமான்னு சொன்னா எப்படி இருக்கும் என்று யோசித்து சிரித்துக் கொண்டேன்.
சகானாவோடு பழகத் துவங்கியிருந்த துவக்க நாட்களில் அவள் ஊருக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன். குளுமையான மழை சூழ்ந்த இடம் அது. அங்கு ஒரு சிற்றோடை கூட இருந்தது. சகானா தன்னைப் பற்றி அன்றைய தினம் என்னிடம் நிறைய சொன்னாள். ஒரு வேளை அவள் சிறு வயது நினைவுகள் அந்த இடங்களை பார்த்ததும் மேலெழும்பி இருக்கலாம் என்று நினைத்தேன். அவர்கள் முன்னோர்கள் விவசாய குடும்பம் என்றாள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பெங்களூர்க்கு வந்து விட்டார்கள். அவள் அம்மா இப்போது அண்ணனோடு ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டார். இப்போது சகானாவின் அஜ்ஜி (பாட்டி) மட்டும்தான் அங்கே. அவருக்கு துணையாக ரேணுகா அக்கா இருக்கிறார். தூரத்து சொந்தமாம் அக்காவின் கணவர் இறந்ததனால் அக்கா இங்கே விவசாய வேலை பார்த்து கொண்டு அஜ்ஜியோடே தங்கிக் கொண்டார் என்றாள் சகானா. தாய் மகளின் பிரியம் போன்றிருந்தது அவர்களுக்கிடையிலான பரிவு. என்னால் அவர்கள் பேசிய கன்னடம் புரிந்து கொள்ள முடியவில்லை. சகானா தான் இருவருக்கும் இடையில் பாலமாய் இருந்தாள். புதி புதிதாக நிறைய வகை உணவுகள் தயாரித்து கொடுத்தார். இன்னும் விறகு வைத்துதான் சமைக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாய் இருந்தது. அவர்களுக்கு காஸ் அடுப்பு சமையல் பிடிப்பது இல்லை என்றாள் சகானா. அஜ்ஜி இந்த வயதிலும் எவ்வளவு துடிப்பாய் இயங்குகிறார்கள். இயற்கையோடு ஒட்டி தன் வாழ்கையை அமைத்துக் கொண்டவர்கள் இறந்து போகும் நிமிடத்திற்கு முன்பு வரை தன்னால் முடிந்தமட்டிலும் உயிரோட்டத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கேது ஓய்வு. ஓய்வு வயது என்பதே நம்மை ஏய்த்துக் கொள்ளும் ஏற்பாடாய் தோன்றியது எனக்கு. ஒருவரை முடக்கிபோடுவதற்கு ஓய்வு பெற்றுவிட்டார் என்ற வார்த்தையே போதுமாய் இருக்கும். இயற்கையோடு தன்னை இணைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் அழகாக்கி வாழ்ந்து கொண்டிருந்த அஜ்ஜியும் அவர்களின் உற்சாகமும் மனதுக்கு சுகமாய் இருந்தது. எனக்கு அந்த இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.
சகானா அஜ்ஜி எப்படி இருக்காங்க என்றேன். என்ன திடீர்னு கேக்கறே என்றாள். நான் அந்த நாட்களுக்கு திரும்ப தனியே போய்வந்தது அவளுக்கெப்படி தெரியும். இல்ல சும்மாதான் நினைவு வந்தது என்றேன். ஷி இஸ் குட் என்றாள்.