Saturday, March 7, 2015

சுபா

சுபாஷினி என்று அவளுக்கு பெயரிட்டபோது அந்தப் பெண் ஊமைப் பெண்ணாவாள் என்று யாரால் யூகித்திருக்க முடியும்.  அவளுக்கு சுகேஷினி, சுஹாஷினி என்ற இரண்டு மூத்த சகோதரிகள். எனவே அவர்கள் தந்தை ஒத்திசைவுக்காக தன் இளைய மகளுக்கு சுபாஷினி என பெயரிட்டிருந்தார். அவள் சுருக்கமாக சுபா என்று அழைக்கப் பட்டாள்.

மூத்தவர்கள்  இருவரும் திருமணத்திற்கே உரித்தான செலவுகளோடும், கவலைகளோடும்  மணமுடிந்து சென்ற பிறகு தற்போது இளைய மகள் பெற்றோரின் இதயத்தில் ஊமை வலியாக மீந்து கிடந்தாள். அவள் எதையுமே பேசுவதில்லை ஆகையால் அவள் எதையும் உணர்வதும் இல்லை என்றெண்ணிக் கொண்ட உலகம் அவள் முன்பாகவே அவளுடைய எதிர்காலம் குறித்தும் அதன் கவலைகளைக் குறித்தும் வெகு சுதந்திரமாக பேசித் திரிந்தது. தன் குழந்தைப் பருவத்திலிருந்தே, தன்னைக் கடவுள் ஒரு சாபமாக தன் பெற்றோரின் இல்லத்திற்கு அனுப்பியிருக்கிறார் என்று அவள் புரிந்து கொண்டாள். அவள் சாதாரண மக்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு தனியான வாழ்க்கை வாழ முயன்றாள். அவளுக்கு எல்லோரும் அவளைக் குறித்து மறந்துவிட்டால் கூட தன்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று தோன்றியது. ஆனால் வலியை எவரால் மறக்க முடியும்? அவள் பெற்றோர் இரவு பகலாக இவளை எண்ணியே உழன்று கொண்டிருந்தனர். குறிப்பாக அவளின் தாய் அவளைத் தன் ஊனமாகவே  கருதினாள். ஒரு தாய்க்கு மகள், மகனைக் காட்டிலும், தனக்கு நெருக்கமான தன்னின் ஒரு பகுதி போன்று. எனவே அவள் தாய் அவளின் குறையை தனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமாகக் கருதினாள் . ஆனால் சுபாவின் தந்தை பநிகந்தா மற்ற மகள்களைக் காட்டிலும் இவளை அதிகமாக விரும்பினார். அவள் தாயோ அவளை தன் உடலில் படிந்துவிட்ட கறை போல் எண்ணி வெறுத்து ஒதுக்கினாள் .

சுபா, மொழியை இழந்தாலே யொழிய, நீண்ட மென்னிமை ரோமங்கள் நிழலிட்ட அகண்ட கரு விழிகளை இழந்தாலில்லை. அவள் மனத்தில்  உதிக்கும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக அவள் உதடுகள் இலை அதிவுருவதைப் போல மெல்ல நடுங்கும்.

நம் எண்ணங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்த எத்தனிக்கையில் ஊடகம் எளிதில் கைவசப்படுவதில்லை. எனவே ஒருவகையான மொழிபெயர்ப்பு முறை தேவைப்படுகிறது, பெரும்பாலும் அது நுட்பம் குன்றியிருப்பதன் காரணமாக பிழையுற்று முடிகிறது. ஆனால் கார் விழிகளுக்கு எந்த மொழிபெயர்ப்பும் அவசியமில்லை. மனத்தின் நிழல் அப்படியே விழிகளில் சமையும். அதில் ஒரு எண்ணம் விரியும் அல்லது மறையும், சுடர் வீசும் அல்லது காரிருளில் மாயமாய் மறையும், அஸ்தமிக்கும் சந்திரனைப் போல அசைவின்றி தேங்கி நிற்கும் அல்லது வானத்தின் எல்லா அறைகளுக்கும் ஒளியூட்டும் துரிதமான மின்னலைப் போல மின்னி மறையும். பிறப்பிலிருந்து, உதடுகளின்  மென்னடுக்கத்தைத் தவிர வேறு மொழியை அறிந்திராதவர்கள் விழிகளின் மொழியைக் கற்கிறார்கள். அது சமுத்திரத்தின் ஆழத்தைப் போன்று, சுவர்க்கத்தின் தெளிவைப் போன்று, விடியலும், அஸ்தமமும், ஒளியும், நிழலும் நர்த்தனமாட முடிவற்ற சங்கதிகள் பேசும். இயற்கைக்கென்றிருக்கும் தனித்துவமான தனிமையைப் போன்று ஊமைகளுக்கென்றும் ஒருவித தனிமை வாய்க்கிறது. அதன்படி பிற குழந்தைகள் சுபாவைக் கண்டு அஞ்சி அவளோடு விளையாட மறுத்தனர்.  எனவே அவள் உச்சி நேரத்து அலை போல துணையற்று மௌனமாய் இருந்தாள்.

அவள் வாழ்ந்த சிற்றூரின் பெயர் சந்திப்பூர். வங்காள  நதியைக்காட்டிலும்  சிறியதான  அவ்வூரின் நதி,  மத்தியவர்க்க மகளிரைப் போல குறுகிய வரம்புகளுக்குள்ளேயே ஓடியது. ஓய்வின்றி  ஓடிய அந்நதி எப்போதும் அதன் கரைகளில் பொங்கிப் பிரவகித்தில்லை. மாறாக அதை ஒட்டி இருந்த குடும்பங்களின் சொந்த உறுப்பினர் போல தன்னைப் பாவித்து தன் கடமையை திருந்தச் செய்து கடந்தது. ஆற்றின் இரு கரைகளும் அதையொட்டிய வீடுகளும் மர நிழலிடை அமைந்திருந்தன. நதி தேவி தன் அரியாசனையில் இருந்திறங்கி, ஒவ்வொரு வீட்டுக்கும்  கொல்லை தெய்வமாகி, தன்னை மறந்த நிலையில் முடிவற்ற ஆசிகளை விரைவாகவும் குதூகலமாகவும் வழங்கிச் சென்றாள். 

பநிகந்தாவின் வீடு ஓடையை நோக்கி அமைந்திருந்தது.  அவ்விடம் அமைந்திருந்த ஒவ்வொரு குடிசையையும்  ஆற்றைக் கடக்கும் படகோட்டிகள் காண முடிகிற அளவில் இருந்தது. இந்தச் சிறுமி தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ஆற்றோரம் நடந்து அங்கே அமர்ந்து கொள்வதை இலௌகீக வாழ்க்கையில் தொலைந்து போன எவரும் கவனித்திருப்பார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் இங்கே இவளது மொழிக்கான தேவையை அந்த இயற்கை பூர்த்தி செய்ததோடு அவளுக்காக பேசவும் செய்தது. ஓடையின் முணுமுணுப்பு , கிராமத்தாரின்  குரல், ஓடக்காரர்களின் கானங்கள், பட்சிகளின் கூவிளி, மரங்களின் சலசலப்பு எல்லாம் சேர்ந்து அவளது இதயத்தின் அதிர்வில் ஒன்றெனக் கலந்தது. பின்னர் அது மிகப்பெரிய ஒலி அலையாகி அவளது ஓய்வற்ற ஆன்மாவின் மீது முரசறைந்தது. இயற்கையின் அசைவும், இந்த முணுமுணுப்பும், ஊமைப் பெண்ணின் மொழியானது. மென்னிமை ரோமங்கள் நிழலிட்ட கருவிழிகளின் மொழி, இவ்வுலகுக்கான அவளது மொழியானது. மரத்திலிருந்த சில்வண்டின் ரீங்காரத்திலிருந்து அமைதி  காத்த நட்சத்திரங்கள் வரை சைகைகளும், சமிஞைகளும் தேம்பிக்கொண்டும் பெருமூச்சிட்டுக் கொண்டும் இருந்ததைத் தவிர அங்கே  வேறொன்றுமில்லை. மீனவர்களும், படகோட்டிகளும் உணவருந்த, கிராமத்தினர் உறங்க, பட்சிகள் உறைய, தோணிகள் ஓய்ந்திருக்க மும்முரமான உலகம் தங்கள் கடின உழைப்பிலிருந்து சற்றே ஓய்ந்து தனிமையான மிகவும் பயங்கரமான அரக்கனாக உருக்கொள்ள, பரந்து விரிந்த கவர்சிகரமான விண்ணுலகுக்கு அடியில் ஊமைப் பிரபஞ்சமும் ஊமைப் பெண்ணும் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தனர் - ஒன்று விஸ்தரித்து பரவிய சூரிய ஒளிக்கு கீழே, மற்றொன்றோ சிறு மரம் பரப்பிய நிழலிலே.

ஆனால் சுபாவுக்கு ஒரே அடியாக நண்பர்கள் இல்லாமல் இல்லை. சர்பஷி பங்குளி என்ற இரண்டு பசுக்கள் கொட்டகையில் இருந்தது. அவை தங்கள் பெயர்களை இவளின் உதடிலிருந்து ஒருபோதும் கேட்டதில்லை என்றாலும் இவளின் காலடியை அவைகள் நன்றாக அறியும். அவளிடம் வார்த்தைகள் இல்லை என்றாலும் அவள் அன்பாக முணுமுணுப்பாள். பசுக்கள் வேறெந்த பாஷையைக் காட்டிலும் அவளின் மென்மையான முணுமுணுப்பை வெகுவாக புரிந்து கொண்டன. அவள் அவைகளைத் தடவிக் கொடுத்தாலோ, கடிந்துகொண்டாலோ, சீராட்டினாலோ அதை எல்லாம் மனிதர்களைக் காட்டிலும் இன்னும் அதிகமாக புரிந்து கொண்டன. சுபா கொட்டகைக்கு வந்து சர்பஷியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவளுடைய கன்னத்தை தன் தோழியின் கன்னத்தோடு வைத்து தேய்த்துக் கொள்வாள் பங்குளி தன் கருணையான கண்களை அவள் புறமாகத் திருப்பி அவளின் முகத்தை நக்கத் துவங்கும். அவள் முறையாக ஒரு நாளைக்கு மூன்று தடவை அவைகளை  சென்று பார்ப்பாள் அது தவிர எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதும் செல்வாள். எப்போதெல்லாம் அவள் தன்னைக் காயப் படுத்தும் வார்த்தைகளை கேட்கிறாளோ, அவளுக்கு இசைந்த வேளையில் இந்த ஊமை நண்பர்களிடம்  செல்வாள். அவளின் வாட்டமுற்ற அமைதியான முகத்தைக் கண்டே அவைகள் அவள் ஆன்மாவின் சோகத்தை ஊகித்ததாகத் தோன்றும். அவளுக்கு நெருக்கமாக வந்து அவளின் கரங்களை தன் கொம்புகளால் தேய்க்கும். தங்கள்  மௌனமான, புதிரான பாணியில் அவை அவளைத் தேற்ற முயற்சிக்கும். பசுக்களைத் தவிர, ஆடுகளும் ஒரு பூனைக் குட்டியும் கூட இருந்தன. அவைகளும் அவளிடம் பசுக்களைப் போலவே மிகப் பிரியமாக இருந்தன என்றாலும் சுபா ஏனோ பசுக்களிடம் காட்டும் தோழமை அளவுக்கு அவைகளிடம் காட்டுவதில்லை. இரவோ, பகலோ எப்போதெல்லாம் சமயம் வாய்க்கிறதோ அப்போதெல்லாம் பூனைக்குட்டி அவளின் மடியில் தாவும், சுபா தன் மிருதுவான விரல்களால் பூனைக்குட்டியின் கழுத்திலும் முதுகிலும் வருட அந்த அக்கறையை பாராட்டும் விதமாக அது அயர்ந்து உறங்கும்.

சுபாவிற்கு, உயர் விலங்கினத்தில் கூட நெருங்கிய நண்பன் உண்டு. ஆனால் அவனோடு அவளுக்கு இருந்த உறவை விளக்குவது சற்றே சிரமம். ஏனெனில் அவனால் பேச முடியும். அவனுக்கு வரமாக இருந்த பேச்சு அவர்களுக்கு இடையில் பொதுவான மொழியற்றுப் போக செய்தது. அவன் கோசைனிக்களின் இளைய மகன். அவனுடைய பெயர் பிரதாப். அவன் எதுவும் செய்யாமல் வெட்டியாக இருந்தான். நீண்ட முயற்சிக்கு பிறகு, அவன் எப்போதாவது பிழைக்க வழி தேடிக்கொள்வான் என்ற நம்பிக்கையை அவன் பெற்றோர் கைவிட்டிருந்தனர். பயனற்றவர்களுக்கு சாதகமாக அவர்கள் சொந்த மக்கள் அவர்களை நிராகரித்தாலும் மற்றவர்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாகிவிடுவர். அவர்களைக் கட்டிப்போட எந்தப் பணியும் இல்லாததைத் தொட்டு அவர்கள் பொதுவுடைமை ஆகி விடுவர். ஒவ்வொரு நகரத்திற்கும், எல்லோரும் சென்று ஆசுவாசப்பட ஒரு திறந்த வெளி அவசியமாகிறது. அது போல ஒரு கிராமத்திற்கு, தங்கள் நேரத்தை மற்ற எல்லோருக்கும் கொடுக்க, ஓய்வாக இருக்கும் இரண்டு அல்லது மூன்று கனவான்கள் தேவைப்படுவர். அப்போதுதான் நாம் சோம்பலாக இருக்கும்போது நமக்கொரு துணை தேவைபட்டால் கைவசம் நமக்கொரு ஆள் இருக்கும்.

பிரதாப்பின் முதன்மையான குறிக்கோள் மீன்பிடிப்பது.  இதிலேயே அவன் நிறைய நேரத்தை செலவிட்டான். அநேகமாக எல்லா மதியத்திலும் அவன் இப்பணியில் மூழ்கி இருப்பதை பார்க்கமுடியும். பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான் அவன் சுபாவை சந்தித்தான். அவன் என்ன செய்த போதிலும் அவனும் ஒரு துணையை விரும்பினான். மேலும் ஒருவர் மீன் பிடிக்கும்போது ஒரு அமைதியான துணையே மிகச் சிறந்தது. சுபாவின் அமைதிக்காக பிரதாப் அவளை மிக மதித்தான். எல்லோரும் அவளை சுபா என்றழைத்ததைப் போல அவன் அவளை 'சு' என்றழைத்து தன் அன்பை வெளிப்படுத்தினான். சுபா வழக்கமாக புளிய மரத்தடியில் அமர்ந்து கொள்வாள், பிரதாப் சற்று தள்ளி அமர்ந்து தன் தூண்டிலைப் போடுவான். பிரதாப் சில வெற்றிலைகளை தன்னோடு எடுத்து வந்தால் சுபா அவனுக்கு அதை தயாரித்துக் கொடுப்பாள். பிரதாப்போடு நீண்ட நேரம்  அப்படி அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதின்  மூலம் அவனுக்கு தான் பேருதவியாற்றுவதாக எண்ணிய அவள் அதை அவள் வெகுவாக விரும்பினாள் என்று நான் நினைக்கிறேன். அப்படி அவள் ஒரு உண்மையான உதவியாக இருக்கும் பட்சத்தில் அவள் உலகத்திற்கு பாரமாக இல்லை என்பது நிரூபணம் ஆகும். ஆனால் அப்படி  ஒன்றுமில்லை. எனவே அவள் படைத்தோனிடம் திரும்பி தனக்கு எதாவது அபூர்வ சக்தி வழங்குமாரு பிரார்த்தித்தாள். அதன் மூலம் அற்புதமான அதிசயம் நிகழ்த்தி பிரதாப்பை திகைப்படைய செய்து  "அட, இப்படி ஒரு காரியத்தை நம் 'சு' செய்ய முடியும் என்று சொப்பனத்திலும் நான் கண்டதில்லை' என்று வியந்துரைக்க வைக்க வேண்டும். 

யோசித்துப் பாருங்கள், சுபா ஒரு நதி தேவதையாக இருந்திருந்தால்,நதியிலிருந்து மெதுவாக எழுந்து வந்து, பாம்பின் கிரீடத்திலிருந்த ரத்தினத்தை கரை சேர்த்திருப்பாள். அப்படி இருப்பின் பிரதாப் தன் பயனற்ற மீன்பிடி வேலையை விட்டு விட்டு, கீழ் உலகுள் மூழ்கி அங்கே வெள்ளி அரண்மனையில் தங்கக் கட்டிலில் அந்த ஊமைச் சிறுமி, பநிகந்தாவின் மகள், 'சு'வைத் தவிர வேறு யாரைப் பார்பான்? ஆம், நம் சு, ஜொலிக்கும் ஆபரண நகரத்தின் மன்னனின் ஒரே மகள்! ஆனால் அப்படி இருக்காது, அது நடக்க முடியாது. எதுவுமே நடக்க முடியாது என்றில்லை ஆனால் 'சு' படல்பூரின் அரச குடும்பத்தில் பிறந்திருக்கவில்லை. பநிகந்தாவின் வீட்டில் பிறந்திருக்கிறாள். மேலும் கோசைனின் மகனை வியப்படைய செய்யும் எந்த வழியையும் அவள் அறிந்திருக்கவுமில்லை.

அவள் படிப்படியாக வளர்ந்தாள். படிப்படியாக தன்னைப் புரிந்து கொள்ளத் துவங்கினாள். முழுநிலா தினத்தில், கடல் மத்தியில் எழும் ஓரலை போல, விவரிக்க முடியாத தன்னுணர்வு அவளை உரசிப் போனது. அவள் தன்னைப் பார்த்தாள், தன்னைக் கேள்விக்குட்படுத்தினாள், ஆனால் அவள் புரிந்துகொள்ளக் கூடிய எந்த பதிலும் அவளுக்கு கிடைக்கவில்லை. 

ஒரு போது, பௌர்ணமி தினத்தின் ஜாமத்தில், அவள் கதவைத் திறந்து கொண்டு மருட்சியோடு வெளியே எட்டிப் பார்த்தாள். இயற்கை, தானே முழு நிலவில், தனிமையான சுபாவைப் போல, கீழே உறங்கிக் கொண்டிருக்கும் பூமியைப் பார்த்தது. அவளது உறுதியான இளம் உயிர் அவளுள் ஒலித்தது. களிப்பு, துக்கம் இரண்டும்  விளிம்பை எட்டி அவளுள் ததும்பி நிறைந்தது. அவள் தன் எல்லையற்ற தனிமையின் எல்லையை எட்டினாள் இன்னும் சொல்லப் போனால் அதைக் கடந்தும் சென்றாள். அவள் இதயம் கனத்தது. அவளால் எதுவும் பேச முடியவில்லை.  மௌனித்துக் கலங்கிய தாயின் ஓரத்தில் மௌனித்து வேதனையுற்ற பெண்ணாய் நின்றாள்.

அவளது திருமணத்தைப் பற்றிய கவலை அவளது பெற்றோரை விழுங்கியது. மக்கள் அவர்களை குறை கூறினர். அவர்களை விலக்கி வைப்பது  குறித்தும் பேசினர். பநிகந்தா வசதியானவர். அவர்கள் நாளுக்கு இருமுறை மீன் குழம்பு உண்டனர். அதன் காரணமாக அவர் எதிரிகளைப் பெற்றிருந்தார் . பெண்மணிகள் தலையிட்டனர், பநி சில நாட்கள் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். தற்போது அவர் திரும்பி வந்து நாம் கல்கத்தாவுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்.

அவர்கள் தாங்கள் அறியாத தேசத்திற்கு செல்ல தயாராகினர். பனிப் போர்த்திய விடியலைப் போல சுபாவின் இருதயம் கண்ணீரால் கனத்தது. தெளிவற்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து  ஒரு ஊமை விலங்கைப் போல் தன் தாய் தந்தையிடம் முரண்டு பிடித்தாள். அவளின் நீண்ட விழிகளை அகல விரித்து அவர்கள் முகங்களில் எதையோ தேட முற்பட்டாள். ஆனால் அவளுக்கு இணக்கமான ஒரு வார்தையும் அவர்கள் வாயிலிருந்து வரவில்லை. இதற்கு மத்தியில் ஒரு மதியம் மீன் பிடித்துக் கொண்டிருந்த பிரதாப் சிரித்துக் கொண்டே "அப்படியானால் 'சு' உனக்கு ஒரு மாப்பிள்ளையை பிடித்து விட்டார்கள்.  நீ திருமணம் செய்துகொள்ளப் போகிறாய். என்னை முழுவதுமாக மறந்துவிடாதே ஜாக்கிரதை!" என்று  சொன்னவன் திரும்பவும் மீன் பிடிப்பதில் தன் கவனத்தை திருப்பினான். அம்பு தைத்த பெண் மான் வேடனின் முகத்தைப் பார்த்து, சொல்ல முடியாத வேதனையோடு "நான் உனக்கு என்ன செய்தேன்" என்று கேட்பது போல சுபா பிரதாப்பைப் பார்த்தாள். அந்த நாள் அவள் அதற்கு மேல் மரத்தினடியில் அமர்ந்திருக்கவில்லை. சுபா தன் தந்தையின் காலடியில் விழுந்து அவரை நோக்கி பார்த்துக் கதறியபோது, பநிகந்தா அவரின் பகலுறக்கம் முடித்து தன் படுக்கை அறையில் அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். பநிகந்தா அவளை சமாதானம் செய்ய முயன்றார், அவரின் கன்னங்கள் கண்ணீரில் நனையத் துவங்கின. 

அவர்கள் நாளை கல்கத்தாவுக்கு செல்ல வேண்டும் என்பது முடிவானது. சுபா அவளுடைய சிறு வயது நண்பர்களிடம் விடை பெற மாட்டு கொட்டகைக்குச் சென்றாள். அவளுடைய கைகளால் அவர்களுக்கு தீவனமிட்டாள். அவைகளின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அவைகளின் முகத்தைப் பார்த்தாள். அவளின் கண்களிலிருந்து உருண்டோடிய கண்ணீர் அவளுக்காகப் பேசியது. பத்தாவது நாள் நிலவு அன்றிரவில் வந்தது. சுபா தன் அறையிலிருந்து வெளியேறி தன்னுடைய ஆத்மார்த்தமான நதியின் அருகே புற்படுக்கையில்  விழுந்தாள். அது எப்படி இருந்ததெனில் பிரபஞ்சத்திடம், வலிமை கூடிய நிசப்தமான தாயிடம், தன் கரங்களை நீட்டி "என்னை உன்னிடம் இருந்து விலக அனுமதிக்காதே, தாயே" என்று அவள் சொல்வது போல் இருந்தது. 

ஒரு நாள் கல்கத்தாவில் ஒரு வீட்டில் அவளுடைய தாய் அவளுக்கு அதீத அக்கறையுடன் அலங்காரம் செய்வித்தாள். சரிகை இழை கொண்டு அவள் கூந்தலை இறுக்கி முடிந்தாள். ஆபரணங்களைத் தொங்கவிட்டாள். அவளால் எவ்வளவு சிறப்பாக மகளின் இயற்கை அழகை கெடுக்க முடியுமோ அவ்வளவையும் செய்து முடித்தாள். சுபாவின் விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அவளுடைய தாய், இந்தக் கண்ணீரால் கண்கள் வீங்கி விடுமே என்று அஞ்சி அவளைக் கடுமையாக வைதாள். ஆனால் கண்ணீர் வசையை பொருட்படுத்தவில்லை. மாப்பிள்ளை தன் தோழனோடு மணமகளை பரீட்சிக்க வந்திருந்தான். தெய்வம் தன் பலியாட்டை தேர்வு செய்ய வந்திருப்பதைப் பார்த்ததும் அவளது பெற்றோருக்கு பயத்தாலும், கவலையாலும் தலை சுற்றத் துவங்கியது. திரைக்குப் பின்னால், பரிசோதகர் முன்னிலையில் அனுப்புவதற்கு முன், தாய் தன் அறிவுரைகளை உரக்கச் சொல்லி மகளின் கண்ணீரை இரண்டு மடங்காக்கினாள். அந்த சிறந்த மனிதன், தன்னுடைய நீண்ட பரிசோதனைக்குப் பிறகு "அவ்வளவொன்றும் மோசமில்லை" என்று கண்டறிந்தான்.

அவளுடைய கண்ணீரை முக்கியமாகக் குறித்துக் கொண்ட அவன் அவளுக்கு மென்மையான இதயம் என்றெண்ணிக் கொண்டான். தன் பெற்றோரைப் பிரிய அந்த இதயம் இன்றைக்கு இத்தனை வேதனை அடைகிறது என்றால் இது உபயோகமான உடைமைதான் என வாதிட்டபடி அவன் அந்தக் கண்ணீரை அவள் கணக்கில் வரவில் வைத்துக் கொண்டான். சிப்பியின் முத்தைப் போல அந்தக் குழந்தையின் கண்ணீர் அவளின் மதிப்பைக் கூட்டியது. அவன் அதற்கு மேல் வேறொன்றும் பேசவில்லை.

பஞ்சாங்கம் பார்த்து ஒரு மங்களகரமான தினத்தில் திருமணம் நடந்தேறியது. தங்கள் ஊமை மகளை வேறொருவரின் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு அவள் பெற்றோர் வீடு திரும்பினர். நன்றி தெய்வமே! இவ்வுலகில் அவர்கள் சாதியும், மறு உலகில் அவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப் பட்டது! மாப்பிள்ளையின் வேலை மேற்கில் இருந்தது எனவே 
அவன் திருமணம் முடிந்த உடனே தன் மனைவியை அங்கே அழைத்து சென்றான். 

பத்து நாட்களுக்குள்ளாகவே அவள் ஊமை என்று எல்லோருக்கு தெரிந்து விட்டது. யாரும் சொல்லவில்லை என்றாலும், குறைந்த பட்சம் இது அவளுடைய பிழையல்ல. ஏனென்றால் அவள் யாரையும் ஏமாற்றவில்லை. அவளுடைய விழிகள் அவர்களுக்கு எல்லாவற்றையும் சொன்னது ஆனால் யாரும் அதை புரிந்துகொள்ளவில்லை. அவள் ஒவ்வொரு திசையிலும் பார்த்தாள், எங்கும் எந்தப் பேச்சுமில்லை. அவள் பிறப்பிலிருந்து தனக்கு பரீட்சியமான, தன் ஊமை மொழியைப் புரிந்துகொண்ட முகங்களை நினைத்து ஏங்கினாள். அவளுடைய மௌனமான இதயத்தில், முடிவற்ற, குரலற்ற அழுகை வெடிக்கிறது அதை இதயங்களை தேடுபவரால் மட்டுமே கேட்க முடியும்.

~ரவீந்திரநாத் தாகூர்  
~தமிழில் சுகிர்தா தண்டபாணி

#மொழிபெயர்ப்பு 

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...