பல அடுக்குகள் அல்லது திரைகளை
உதிர்த்து நின்ற ஆத்மாவின் அசலான நிர்வாணத்தை நான் நேற்றுப் பார்த்தேன்.
'மூக்கி' அத்தனை அற்புதமான கூத்து (Theatrical Dance Performance). எத்தனயோ
முறை பார்க்க நினைத்தும் முடியாமல் நேற்று தான் காணக் கிடைத்தது. அது நடை பெற்ற இடம்
'valley School'. எத்தனையோ முறை போக நினைத்தும் நேற்று தான் அங்கேயும்
முதன் முதலாக சென்றேன். மூக்கி ஆறரை மணிக்குதான் என்றாலும் valley இயற்கை
சூழலில் அமைந்திருந்ததால் கொஞ்சம் முன்னாடியே செல்லலாம் என்று நானும் என்
தோழிகளும் ஐந்து மணிக்கு அங்கே சென்று சேர்ந்தோம். அந்த வில்டர்நெஸ்
(Wilderness) என்னை அப்படியே உள்ளே வாங்கிக் கொண்டது. சுற்றி பார்த்தபடி
வந்தபோது சற்று முன்னாக நடந்திருந்த என் தோழி Open Theatre யின் கடைசிப் படியில்
அமர்ந்தபடி யாரோ ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தாள். நான் என்னுடன் நடந்து
வந்த இன்னொரு தோழியிடம் அவங்கள பாக்க எங்க அம்மா மாதிரியே இருக்காங்க
என்றேன். பக்கத்தில் போனதும் தான் முகம் அம்மாவைப் போல் இல்லை என்று
தெரிந்தது. தூரத்தில் இருந்து பார்த்தபோது அவர்களின் நரைத்த முடி எனக்கு
அப்படி தோண செய்திருக்கலாம். தோழி எங்களுக்கு அவரை
நளினி என்று அறிமுகப் படுத்தியதும் அவர் எங்களைப் பார்த்து புன்னகைத்தார்.
அவர் முகத்தில் தான் எத்தனை கனிவு என்று நினைத்துக் கொண்டேன். சில
விநாடிகள் பேசிக் கொண்டிருந்துவிட்டு நீங்கள் மூன்று மணிக்கு கிளம்பியது
அல்லவா நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்க வில்லையே மேலே செல்லுங்கள் அங்கே
பழம் இருக்கும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் மூ..ன்று மணிக்கு
என்று சொல்லும்போது தொனித்த புரிதலும், பரிவும் அவர் கையை பற்றிக் கொண்டு
அம்மா என்று மடியில் தலை சாய்த்திருக்கலாம். பிறகு அவர் கீழே இருந்த மண் பாதையை
சுட்டிக் காட்டி நீங்க அது வழியாக நடந்தால் study center போகலாம்
பார்பதானால் பார்த்து விட்டு வாருங்கள் என்றார். நாங்கள் மூவரும்
விடைபெற்று கீழே இறங்கினோம்.
ஆறு
மணிக்கு நடனம் நடை பெரும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு சிறு
குடில். அதன் படிகளில் இடப்பட்டிருந்த கோலமும் சுற்றிலும்
வைக்கப்பட்டிருந்த எண்ணைய் தீபங்களும் விரிக்கப்பட்டிருந்த பாயும்,
நிகழ்ச்சிக்கென குடிலின் ஒரு பக்கத்தை மறைத்துக் கட்டியிருந்த மேரூன்
பார்டர் கொண்ட கருப்பு பருத்தி சேலையும் இருள் கவிழ கவிழ பூரண அழகில்
மிளிர்ந்தது. விரிக்கப்பட்டிருந்த பாயில் வரிசையாக அமர்ந்து நாங்கள்
'மூக்கி' பார்க்க தயாரானோம். மூக்கி ஒரு நாடக நடனம். 'மூக்கி' என்றால்
கன்னடத்தில் ஊமை என்று பொருள். தாகூரின் 'சுபா' என்ற ஊமைப்பெண் சிறுகதை
தான் அதன் உள்ளுயிர்ப்பு. என்றாலும் அதில் நடித்தவர்கள் தங்கள் சொந்த
அனுபவங்களையும் உள்ளிழைத்திருந்தார்கள்.
ஒரு
மணி நேரம் மிக உணர்வுபூர்வமாகக் கடந்தது. பங்கு பெற்ற ஐந்து பேரும், ஒரு
கட்டத்தில் கன்னடத்திலும், தமிழிலும், ஹிந்தியிலும் 'எனக்கு பேச்சு வராது,
என்னால பேச முடியாது, அதனால் ஜனங்க நினைச்சுக்கறாங்க எனக்கு உணர்வுகளே
இல்லை' மாறி மாறி சொன்னார்கள். மனம் அங்கேயே நின்று கனத்தது. மிக
சொற்பமான சொற்கள் ஆனால் அதன் உள் இருக்கும் உணர்வுகள் எத்தனை எத்தனை. நடன அசைவுகளிலும் இது தான் சாரம். இதன்
மூலம் அவர்கள் சொல்ல வந்தது, பேச்சு வராதது ஊமைக்கு மட்டுமே இல்லை என்பது,
உரத்த குரல்களின் இரைச்சலில் மென் குரல்கள் அமிழ்ந்து போய் விடுகிறதென்பது,
சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் வரையறைக்குள் அல்லது ஏற்றுக்கொள்ளும்
உறவுகளுக்குள் வந்துவிடாத 'Gay' ஒருவரின் கொந்தளிப்புகள் எப்படியிருக்கும்
என்பது, ஒருவருக்கு பேச்சு திக்குவது அவரின் குறை அல்ல அதை கேட்கும் அளவு பொறுமை கூட
இல்லாதது நம் குறையே என்று சுட்டுவது, பின் மௌனியான இயற்கை எனக்கு
வலிக்கிறது என பல வேளைகளில் சொல்லியும் நாம் கண்டுகொள்ளாமல் கடந்து
விடுவது, இப்படி இன்னும் நிறைய நிறைய. நிகழ்ச்சியின்
முடிவில் அவர்கள் ஐவரும் தங்கள் சொந்த வாழ்வோடு எப்படி இதை தொடர்பு
படுத்திக் கொள்கிறார்கள் என்று பகிர்ந்து கொண்ட போது மூக்கி இன்னும்
அர்த்தம் பொதிந்ததாக ஆனது. எனக்கு மட்டும் தமிழ் இன்னும் நன்றாக
தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கலாம்.
நானும் மூக்கியை மிக நெருக்கமாக உணர்ந்தேன்.என் போதாமைகளை, இயலாமைகளை இன்னும் இன்னும் என்னுள் புரளும் கேள்விகளை
இவ்வுலகுக்கு விளங்கும்படி எப்படி சொல்வேன்? என்கிற ஆயாசம் மிகும்
தினங்களில் நான் ஊமை ஆகி விடுகிறேன். என்னை தனிமை படுத்திக் கொள்கிறேன். ஆனால்
உள்ளே பொங்கும் கொந்தளிப்புகளை நான் என்ன செய்வேன்? என்னுள்ளே அடைத்துக் கொண்டதெல்லாம் 'மூக்கி' யைப் பார்த்துக்
கொண்டிருந்தபோது வெளிவந்தது. நான் அழுதேன். எனக்கு மற்றவர் முன் அழுவது
பிடிக்காது, பிறகு அவர்கள் கேலிக்கு உள்ளாவதும். அதனாலயே நான் படங்களை
தனித்துப் பார்க்க விரும்புவேன். ஆனால் நேற்றோ என்னை சுற்றிலும் அமர்ந்திருந்த
யாரையும் பொருட்படுத்தாது அழுதேன். விழிகள் பொங்கி பொங்கி துளிகள்
கன்னங்களில் உருண்ட படி இருந்தன. எங்கே என் கேவல் எல்லோருக்கும் கேட்டு
விடுமோ என்று ஒரு கட்டத்தில் பயந்து என் முன் வரிசையில் அமர்ந்திருந்த என்
தோழியின் முதுகை தொட்டு ஐ யாம் நாட் ஏபில் டு
கன்ட்ரோல் என்றேன். அவள் தன் கைப்பையில் இருந்த கைக்குட்டையை எடுத்து
என்னிடத்தில் கொடுத்து விட்டு என் கால்களை மெதுவாக தட்டிக் கொடுத்தாள். அது
மேலும் என்னை கரைத்து நான் தலை கவிழ்ந்து அழுதேன். அந்த அழுகை அப்போதைக்கு என்னை
மீட்டது என்றாலும் என்னால் இன்னும் மூக்கியிலிருந்து வெளிவர முடியவில்லை. பங்குபெற்றவர்களில் ஒருவரான பூர்ணிமா நடனம் முழுக்க
இசைத்த அ அஆ அஆ ஆஆ வை தான் மனம் இன்னும் பாடிக் கொண்டிருக்கிறது.