Monday, February 25, 2013

சும்மா ஒரு ஹலோ

அமுதன்,

நலமா? போன வாரம் உங்களை பார்த்தது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. நீங்கள் என்னோடு நிறைய பகிர்ந்து கொண்டீர்கள். மிகவும் இயல்பாக இருந்தீர்கள். நண்பர்களோடு அமர்ந்திருந்த இரவில் உச்ச போதையில் நீங்கள் என்னிடம் சொன்னீ ர்கள் உங்களுக்கு பெண்களைப் பிடிக்கும் என்று. இன்னும் சரியாக சொல்லப் போனால் பெண்களை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று. ஆண்கள் போதையில் எப்படி இத்தனை அழகாக, உண்மையாக (உண்மை என்று நம்பலாமா:-)?) பேசுகிறீர்கள். சுற்றிலும் உயர்ந்து நின்ற மரங்கள் எத்தனை அமைதியாய் இந்த ஆர்ப்பாட்டங்களை கண்டு ரசித்தது.

என்னை வார்த்தைக்கு வார்த்தை தோழி என்று விளித்து உங்கள் தோழியாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நண்பர்களுக்கு இடையில் தான் கவிதை ஆகும் தருணங்கள் எத்தனை எத்தனை. எனக்கு உங்களிடம் கேட்க ஒரே ஒரு கேள்வி இருக்கிறது.  எப்படி அத்தனை பெண்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. இதைப் படிக்கும்போது நீங்கள் உரக்க நகைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும்.இருந்தாலும் கேட்கத் தோன்றியது.

 நண்பர்களோடு இருக்கும்போது நாம் ஏன் சந்தோசமாக இருக்கிறோம் என்று  பேசிக் கொண்டோம். நான் அதை இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் நம்மை விட்டுப் போய்விடுவார்கள் என்ற பயம் இன்றி மிக இயல்பாக இருப்போம் அதனாலா? ஏதாவதொரு வகையில் நாம் நம் நேசத்தை வெளிப் படுத்துவோம் அதனாலா? இந்த அன்பு நம்மை நசுக்காது அதனாலா? எனக்கு உறுதியாய் தெரியவில்லை அமுதன் ஆனால் நண்பர்கள் இல்லாத ஒரு வாழ்கை என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது . இப்படி உரையாட ஒருவரும் இல்லாத இரவில் கடிதமென ஒன்றை எழுதவேணும் நண்பர்கள் வேண்டும் இல்லையா?

அன்புடன்,
இனியா

Wednesday, February 6, 2013

வாசிப்பு - 19 டி.எம். சாரோனிலிருந்து

நீண்ட நாட்களுக்கு பிறகு எனக்கு சமீபமாக ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. 19 டி.எம். சாரோனிலிருந்து இந்தப் பெயரைக் கேட்டதுமே ஏனோ படிக்க வேண்டும் என்று தோன்றியது. இன்னதென்று தெரியாமல் அந்தப் பெயர் எனக்கு மிக பிடித்திருந்தது. பிறகு தான் ஆசிரியர் பெயர் பார்த்தேன் பவா செல்லதுரை. அழியாச் சுடரில் இவரின் "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" என்ற ஒரு சிறுகதை படித்திருக்கிறேன். அப்பொழுதுதான் முதன் முதலாக அவர் கதையைப் படிக்கிறேன். படித்து நீண்ட நேரம் அதையே சுற்றி வந்தது மனது. அவ்வளவு அழுத்தமான கதை. படிக்கும்போது அடி வயிற்றை தடவிப் பார்க்கும் கர்ப்பிணியின் மனதை பெற்ற இதயம் கதை படித்து முடித்த பிறகும் சில நொடிகள் திக் திக் என்று விட்ட பிறகே ஆசுவாசப் பட்டது.

அதற்குப் பிறகு என் நண்பர் அறிமுகப் படுத்திய கூடு இணையத்தளத்தில் கதை சொல்லிப் பகுதியில் பவா, வம்சி, மானசி மூவரின் கதைகளையும்  இரண்டு முறை கேட்டிருக்கிறேன். ரொம்ப தெளிவாக நேர்த்தியாக கதை சொல்லி இருந்தார்கள். ஷைலஜாவின் சிதம்பர நினைவுகள் மொழிபெயர்ப்பை படித்திருக்கிறேன். மிக பிடித்திருந்தது. ஒட்டு மொத்த குடும்பத்தின் கலை ஆர்வம் வியப்பாய் இருக்கிறது.

போன வாரம் எப்படியோ வம்சி இணையதளத்திற்கு சென்று ஏழு புத்தகங்களை ஆர்டர் செய்தேன். எனக்கு மிக குறைந்த வாசிப்பனுபவம் மற்றும் மிக குறைந்த எழுத்தாளர்களை மட்டுமே தெரியும் என்பதனால், ஏழு புத்தகங்களில் பவாவுடைய மூன்றையும் மாதவிக் குட்டி கதைகளையும் தவிர மற்ற மூன்று புத்தகங்களை வெறும் தலைப்புகளை கொண்டு மட்டுமே தேர்வு செய்தேன். புத்தகங்களைப் பெற்றுக் கொண்ட பின் முதலாக அகிலின் "கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத் தொகுப்பிலிருந்து முதல் சிறுகதைப் படித்துவிட்டு பின் சாரோனை எடுத்தேன்.

பவாவின் 19 டி.எம். சாரோனிலிருந்து ஒரு கட்டுரை தொகுப்பு என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. எதுவாக இருப்பினும் அதை படிக்க வேண்டும் என்று மட்டுமே தோன்றியது. எடுத்து படிக்க துவங்கியதும் கீழே வைக்கவே மனதில்லாமல் போனது. படிக்க படிக்க அத்தனை பரவசமாக இருந்தது. புது புது மனிதர்களையும் புது புது அனுபவங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதிலும் அந்த அனுபவங்கள் எல்லாம் கலைஞர்களுடனானது என்பது விசேஷமானது. எவரைக் குறித்தும் தனியான நீண்ட விளக்கங்கள் எதுவும் அற்று அந்த நிகழ்வின் ஊடேயே விவரித்திருந்தது வெகு இயல்பாய் இருந்தது.  பாதி படித்துவிட்டு எப்பொழுது தூங்கினேன் தெரியவில்லை.

காலையிலும் எழுந்து எல்லா வேலைகளையும் மற்றும் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பையும் கொஞ்சம் ஒத்தி வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு லீவ் போட்டுக் கொண்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. அது முடியாது என்பதால் அலுவலகம் சென்று வந்து தற்போது தான் படித்து முடித்தேன்.

காயத்ரி கேம்யூஸின் புகைப்படத்தை அந்தக் கட்டுரையைப் படித்தபிறகும் எத்தனை முறை திருப்பி பார்த்திருப்பேன் என்று தெரியவில்லை. அதுமட்டுமில்லாது பினுவின் பூனைக் குட்டி, வல்சனின் சைக்கிள் பயணம், திருவண்ணாமலையின் தெருக்கள் இங்கு எல்லாம் அல்லது இதிலெல்லாம் இன்னும் அலைந்தபடி இருக்கிறது மனது. தலைப்பு/ முகவரி முதன் முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறை வாசிக்கும் போது வசீகரித்தபடியே இருக்கிறது.

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...