Thursday, May 20, 2010

வலை

இப்போது தான் பார்கிறேன்
மேல் செல்லும் படிக்கட்டில்
ஒரே இரவில்
இத்தனை அழகாய்
இழைத்திருக்கிறது அந்த வலையை
எல்லாத்திசைகளையும் அடைத்து
அளந்து வைத்த நேர்த்தியுடன்
காற்றின் போக்குக்கு அசைந்து
ஆனாலும் கலையாது
எப்படி சாத்தியம்
இந்த அசாத்திய நுண்கலை

எழு சூரிய ஒளியில்
ஒவ்வொரு நூல் இழையும்
மினுக்கிறது பிசு பிசுப்பாய்
ஆர்வம் தொற்ற
ஆராய்கிறேன் மெல்ல
அதன் ஓரங்களெல்லாம்
மூலைக்கொன்றாய் நீள்கிறது
ஒரு நூல் பற்றி
நான் தடுமாறி மேலேற
நீண்டுகொண்டே இருக்கிறது
அந்த ஒற்றை நூல்
முடிவு தெரியாமல்
வலை முழுக்க
சுற்றி வருகிறேன்
நடுவில் அமர்ந்தபடியே
அமிழ்ந்த புன்னகையுடன்
அனைத்தையும் பார்கிறதந்த
கருஞ் சிலந்தி

Tuesday, May 11, 2010

பணிப் பெண்

அலுவலகம் வரும் முன்
இன்னும் பால்மணம் மாறா
என் செல்லக் குழந்தையை
வழியில் காப்பகத்தில் விட்டு
என்றும் சொல்வதை போலவே
இன்றும் சொன்னேன்
பத்திரமா பாத்துக்கோங்க
நீல பாக்ஸ்ல இருக்கறத
இப்போ கொடுத்துடுங்க
பாலை பிரிட்ஜ்ல வெச்சுடுங்க
ஒரு மணி நேரம் கழிச்சு
மறக்காம கொடுங்க
கொடுத்த பிறகு தூங்க வெச்சுடுங்க
அப்பப்போ போன் பண்ணறேன்
ஆயாவும் பொறுமையாக கேட்டு
புன்னகைத்து வழியனுப்பினாள் இன்றைக்கும்

கலங்கிய கண்களுடன்
அலுவலகம் வந்து
பரபர வேலைகள் முடித்து
இ-மெயில் செய்துவிட்டு
குழந்தை என்ன செய்கிறதோ
என்ற எண்ணத்தின் முடிவில்
காப்பகத்துக்கு தொடர்பு கொள்ள
என் குழந்தையின் அழுகுரலில்
நனைகிறதென் மேலாடை

 நான் தற்போது inclusive learning space என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிற, சொல்படியே இயங்க விளைகிற ஒரு alternative school ல் ஆங்கில ஆசிர...