Wednesday, February 24, 2010

நினைவுகள் நிறைகுகை

நான் அறியா ஏதோ ஒரு மிக நெருக்கமான புள்ளியில் உன்னை நீ என்னோடு இணைத்திருக்கிறாய். எத்தனை முறை நான் அதைக் கண்டறிய முயன்றபோதும் எனக்கு புலப்பட்டதே இல்லை அந்தப் புள்ளி. இனியும் புலப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அது எனக்கு தன்னை அன்றாடம் நினைவு படுத்த தவறுவதில்லை. அந்த புள்ளியிலிருந்து வெளிப்படும் நினைவின் கதிர்கள் என்னை அவ்வப்போது முடக்கி விடுகிறது. பிறகு நான் இயங்க திறனின்றி, நினைவுகள் நிறைந்த குகைக்குள் விழுகிறேன்.

எவ்வழி விழுகிறேன் என்பதோ, எப்படி வெளியேறுவது என்றோ எதுவும் தெரியாமல் குகைக்குள் கேட்கும் நினைவின் குரல் ஒலிக்கும் திசை நோக்கி நடக்கிறேன். அது என்னை உள்ளே உள்ளே இழுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நினைவின் சித்திரமும் அதன் பக்கச் சுவர்களில் வரையபட்டிருப்பது எனக்கு மிகத் தெளிவாய் தெரிகிறது. அந்த சித்திரங்களைப் பார்க்கும் போது அதை சார்ந்த இன்ன பிற நினைவுகள் என்னை வந்தடைகிறது. ஒரு காட்டாற்றின் வேகத்தோடு நினைவுகள் என்னை அடித்து செல்கிறது. அதன் முடிவில் எங்கோ விட்டு செல்கிறது. நான் தொடர்ந்து நடக்கிறேன் இன்னொரு சித்திரம், இன்னொரு பயணம். பிறகு ஒருவழியாய் என்னையறியாமலே எப்படியோ வெளிவருகிறேன்.

நான் வெளிவந்த பிறகும் நான் அறியா ஒரு கணத்தில் என்னில் அந்த புள்ளியை இயக்க என்னைத் தொடர்கிறது. நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன். அது என்னுள் அந்த புள்ளியை மறுபடி இயக்குகிறது. நான் மறுபடி விழுகிறேன். பின் என்னை தொடரும் நம் நினைவுகள்.

4 comments:

உயிரோடை said...

மிக‌ அருமையாக‌ எழுதி இருக்கின்றீர்க‌ள் சுகி. வாழ்த்துக‌ள்

Mohan said...

உங்களுடைய கவிதை நடை மிகவும் நன்றாக இருக்கிறது.

யாத்ரா said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சுகி, மனதை கவனித்தல், அதன் போக்கை துல்லியமாய் படம் பிடித்தது போன்று எழுதுதலை நிறைவாய் செய்திருக்கிறீர்கள். மனதின் அனுபவம் வார்த்தைகளில் மிகத் தெளிவாய் பதிவாகியிருக்கிறது.

//நான் தப்பி செல்ல எடுக்கும் என் எத்தனை பிரயத்தனங்களும் பலனளித்தபாடில்லை. மாறாக என்னை அல்லாது ஒருவரும் போகாத அதன் தனிமையில் நான் கரைகிறேன். விட்டு செல்ல மனமின்றி அதன் கதைகளையும் கேவல்களையும் நான் தொடர்ந்து கேட்கிறேன்.//

என்ன சொல்வது ?

ரௌத்ரன் said...

:))