Friday, January 3, 2014

1. காஞ்சி முதல் காரைக்குடி வரை : காஞ்சிபுரம்

திருவாலங்காடு

புத்தாண்டை பெங்களூரிலிருந்து வெகு தூரம் ஓடிப்போய் வேறு எங்காவது கழிக்க வேண்டும் என்று 2013புத்தாண்டின் போதே முடிவு செய்திருந்தேன். போன மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீ என்னை அழைத்து நாம் தீர்மானமான திட்டம் எதுவும் இல்லாமல் இரண்டு வருடம் முன்பு KMTR (kalakad Mundanthurai Tiger Reserve) போனது போல மீண்டும் ஒரு பயணம் போகலாமா என்றாள். நானும் கிட்டத்தட்ட இரு வாரங்கள் வறண்ட மனநிலையோடு மாரடித்ததால் இலக்கில்லாத பயணத்தில் ஆர்வம் கொண்டு உடனே சரி என்றேன்.உடன் பணி புரியும் தோழி சுமாவும் புத்தாண்டுக்கு எங்காவது செல்லலாம் என்று சொல்லவே நாங்கள் மூவரும் சேர்ந்த இந்த ஐந்துநாள் பயணம் துவங்கியது. காஞ்சிபுரம்,திருவாலங்காடு, வேடந்தாங்கல், பிச்சாவரம், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம்,கோடியக்கரை(Point Calimere), முத்துப்பேட்டை, மனோரா, சித்தன்னவாசல், காரைக்குடி என்ற இடங்களை குறித்துக் கொண்டோம். 28 ந்‌ தேதி இரவு வேடந்தாங்கல் மற்றும் 30 ந்‌ தேதி இரவு Point Calimere வனத்துறை விருந்தினர் இல்லத்தில் தங்க முன் பதிவு செய்திருந்தோம். டிஸெம்பர் 31 இரவு காரைக்குடியில் நண்பரொருவர் எங்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மூன்று இரவுகள் போக, எங்கேயும் தங்க ஏற்பாடு செய்யாது இருந்த 29ந்தேதி இரவை நாங்கள் இரவுப் பயணத்திற்கு என்று வைத்துக் கொண்டோம். பிறகு பயணத்திற்கு முற்றிலும் உள்ளூர் பேருந்துகளை பயன்படுத்த முடிவு செய்தோம். பயணத்தின் போது, நேரத்தைப் பொறுத்து இடங்களை கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம் என்றும் பேசிக் கொண்டோம்.


26 ம் தேதி சுமா தன் குடும்பத்துடன் மூன்று நாட்கள் பயணத்தில் இருப்பதாகவும் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் தன் திட்டப்படி 27 ம் தேதி காலை பெங்களூர் திரும்ப முடியுமா என்பது சந்தேகம் என்றும் அப்படியே வந்தாலும் மோசமான உடல் நிலை காரணமாக அவள் எங்களுக்கு பாரமாகி விடுவாள் என்று ஐயுறுவதாகவும், எங்கள் உற்சாகத்தை அது குலைக்கும் என்றும் ஒரு (நீண்ட) குறுஞ்செய்தி அனுப்பினாள். உண்மையில் அவள் வர முடியாது போய் விடுமோ என்ற ஐயம் தான் என் உற்சாகத்தை குலைத்தது. உடனே நான் இப்படி ஒரு பயணம் இனி எப்போது என்று தெரியாது நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன் வா என்று பதிலனுப்பினேன். 27 ம் தேதி காலையிலிருந்து வந்துவிட்டாயா வந்ததும் எனக்குத் தெரிவி என்று அவ்வப்போது அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபடி இருந்தேன். 9மணிக்கு வீடு திரும்பி பத்து மணிக்கு என்னோடு வந்து சேர்ந்து கொண்ட போது மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். ஸ்ரீ கோவை காந்திபுர ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து9 மணிக்கும், நானும் சுமாவும் பெங்களூர் சாந்தி நகர் பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10:15 KSRTC யிலும், 28 ந்தேதி காலை காஞ்சிபுரத்தில் சந்திக்க வேண்டி புறப்பட்டோம்.


28:12:2013


காலை 4 மணிக்கு நானும் சுமாவும் காஞ்சிபுரம் சென்று சேர்ந்தோம். ஸ்ரீ வர எப்படியும் இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்பதால் அதற்குள் எங்காவது சற்றே களைப்பாறவும், முதுகில் கனத்துக் கொண்டிருந்த பையை இறக்கி வைக்கவும் அறை கிடைக்குமா என்று பார்க்கலாம் என்று ஒரு ஆட்டோ பிடித்தோம். ஆட்டோக்காரர் நாங்கள் தங்குவதற்கு உகந்த தங்கும் விடுதிக்கு அழைத்துப் போவதாக கூறி அதற்கு முப்பது ரூபாய் கோர,நாங்களும் ஒப்புக்கொள்ள எங்களை ஏற்றிக் கொண்டார். தங்கும் விடுதியின் வரவேற்பறையில் வயதான பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நாங்கள் தங்குவதற்கு ஒரு அறை கிடைக்குமா என்று அவரிடம் கேட்டு முடிக்கும் முன்னேயே இல்லை அறை எதுவும் காலி இல்லை என்றவர் ஒரு நிமிடம் பொறுத்து ஒரே ஒரு சின்ன அறை இருக்கிறது உங்களுக்கு சௌகரியப் படுமான்னு தெரியவில்லை என்றார். நாங்கள் போய் பார்க்கலாமா என்றேன். சரி போய் பாருங்க பிடிச்சிருந்தா தங்குங்க என்றவர் அறையை எங்களுக்கு காட்ட அங்கே பணி புரியும் ஒருவரை எங்களோடு அனுப்பி வைத்தார்.

அவர் அறையை திறந்ததும் ஒரே ஒரு ஒற்றைக் கட்டில் இருந்தது அதை தவிர ஒருவர் நடந்து போக வர சிறு இடம் இருந்தது. எப்படியும் இன்று இரவு இங்கே தங்கப் போவதில்லை குளிக்கவும், பைகளை வைக்கவும் தானே இதையே எடுத்துக் கொள்ளலாமா என்ற நினைப்பு உள்ளே ஓடியது. எங்கே காமன் பாத்‌ரூம் ஐக் காட்டுங்க என்றேன். வரிசையில் இருந்த கழிவறைகள் கொஞ்சம் மோசமாக இருந்தது. சுமாவை திரும்பிப் பார்க்க அவள் முகத்தில் ஒரு ஒவ்வாமை உணர்வு இருந்தது. என்ன பண்ணலாம் சொல்லு என்றேன். நாம அறை எடுக்கறதே பாத்‌ரூம்க்குத் தான் அதுவே மோசமா இருக்கு, தப்பா எடுத்துக்காத நம்ம வேற பக்கம் போலாமா என்றாள். நானும் மறு பேச்சு பேசாமல் சரி என்று கீழே வந்தேன். அந்தத் தாத்தாவிடம் அறை சின்னதாக இருக்கிறது நாங்கள் வேறெங்காவது கிடைக்கிறதா என்று பார்க்கிறோம் என்றேன். சரி பாருங்க என்றார். சுமா திரும்பவும் என்னிடம் ஸாரீ அந்த கழிவறையில் இருந்து ஒருவன் அப்படியே மேலேறிய உடையோடு வெளியே வந்தான் அதான் என்றாள். நான் கவனிக்கவில்லை பரவாயில்லை வா வேறு இடம் போகலாம் என்றேன்.


நான் ஸ்ரீயை அழைத்து அவள் காஞ்சிபுரம் வந்து சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்றேன். அவள் வர இன்னும் அறை மணி நேரம் ஆகும் எனவே அதற்குள்ளாக வேறு எங்காவது அறை கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்றேன் அவளிடம். தாத்தாவிற்கு என்ன தோன்றியதோ நீங்க வேணா இப்போதைக்கு அந்த அறையை எடுத்துக்கறீங்களாம்மா அப்றோமா மாத்திக் கொடுக்கறேன் என்றார். இல்லை நாங்க சாயங்காலம் கிளம்பறோம் அதுவரைக்கும் தான் வேணும் என்றேன்.எங்களை அழைத்து வந்த ஆட்டோக்காரர் இன்னமும் அங்கேயே இருந்தார். அவர் வேறு இடங்களுக்கு அழைத்துப் போவதாகவும் நாங்களே பார்த்து ஏதாவது அவருக்கு கொடுக்கவும் எனவும் கூறினார். விசாரித்த வேறு இரு இடங்களிலும் அறை கிடைக்காது போக, இங்கே ஜாஸ்த்தியாக இருக்கும் என்று சொல்லியபடி ஒரு மஹாலில் கொண்டு வந்து நிறுத்தினார்.

வெளி கேட்டை திறந்து கொண்டு அப்போதுதான் ஒரு வயதான மனிதர் வெளியே வந்தார். இங்கே தங்க அறை கிடைக்குமா என்றேன். முன் பதிவு செய்திருக்கிறீர்களா என்றார். இல்லை என்றேன்.அப்படின்னா அறை எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு நாங்கள் ஆட்டோவை திருப்பிய கணத்தில் எவ்ளோ நேரம் வேணும் என்றார். நாங்கள் மாலை காலி பண்ணிவிடுவோம் என சொல்ல ஒரே ஒரு அறை காலியாக இருக்கிறது பார்க்கிறீர்களா என்றார். நாங்கள் சரி எனவும் இருங்க வரேன் என்று உள்ளே சென்றார். நான் சுமாவை ஆட்டோவிலேயே இருக்க சொல்லி விட்டு அவரைப் பின் தொடர்ந்தேன். வரவேற்பறைக்கு அருகே இருந்த சோஃபாவில் ஒருவரும், தரையில் இன்னொருவரும் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு படுத்திருந்தார்கள். டேய் இந்நேரத்திக்கு இங்கே படுக்காதீங்க என்று சத்தமாய் எழுப்பினார். அவர்கள் எழாமல் வெறுமனே நெளிந்து இன்னும் குறுக்கிக் கொண்டு படுத்தார்கள். அப்போதுதான் பின்னே நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்தவர் எந்திருஞ்சு ரூமை காட்டுங்க என்று அவர்களிடம் சொன்னபடி என்னிடம் ஆயிரத்து இருநூறு ரூபாய் வாடகை என்றார். சரி ரூமை காட்டுங்க என்றேன். அதற்குள் சுமாவும் ஆட்டோவை அனுப்பிவிட்டு என் பின்னோடு வந்தாள்.

அரைத்தூக்கத்தில் எழுந்து வந்த பையன் எங்களை மேலே அழைத்துச் சென்றான். பின் திருமணங்களுக்கோ, பிற விசேஷங்களுக்கோ பயன்படுத்தக் கூடிய ஒரு பிரமாண்டமான ஹாலுக்குள் எங்களை நடத்திச் சென்றபோது எனக்கு லேசாகப் புரிந்தது. எங்களை நேராக மணமகன் அறைக்கு அழைத்து சென்றான், நான் மணமகன் அறை என்று வாய்விட்டுப் படித்தேன்.அப்டின்னா என்ன என்று வினவினாள் சுமா. groom's room என்றேன். ஐ தாட் சோ என்றவள் ஒரே நிமிடத்தில் என்ன ஒரு சாதுரியமான வியாபார யோசனை என்றாள். ஆம் என்று தலை அசைத்தேன். அது உள்ளே பூட்டி இருந்தது. திரும்பவும் சாவியை நுழைத்து இரு முறை அசைத்துப் பார்த்தவன் திறக்க முடியாது போகவே அதற்கு எதிர்ப்புறத்தில் இருந்த மணமகள் அறைக்கு அழைத்து சென்றான். அறையை அவர் திறந்து காண்பிக்கவும் மிக மோசமாக பராமரிக்கப் பட்டிருப்பது தெரிந்தது. வாடகையை குறைத்துக் கொள்வாரா என்று கேட்டேன்.நீங்கள் கீழே வந்து கேளுங்க என்றான். அன்றைக்கு ஏதோ கூட்டம் நடைபெறுவதால் அங்கே உள்ள எல்லா ஹோட்டேல்களும் புக் ஆகி விட்டதாகக் கூறினான். மோசமான அறையாக இருந்தாலும் திரும்பவும் அலைய முடியாது என்பதால் அதையே எடுத்துக் கொள்ள முடிவு செய்து கீழிறங்கி வந்தோம். அவரிடம் என்ன பேசியும் அவர் மசியவில்லை முழுத் தொகையையும் கொடுத்துவிட்டு அறைக்குப் போக சொன்னார். நான் கொடுத்ததும் அவர் ரசீது எதுவும் கொடுக்கவில்லை, எங்கே கேட்டால் காலி பண்ண சொல்லி விடுவாரோ என்று ஒன்று பேசாது மேலேறி வந்தோம். அறைக்குள் நுழைந்ததும் ஸ்ரீ அழைத்தாள். அப்படியே ஒரு ஆட்டோ பிடித்து மஹாலுக்கு வந்து மேலே மணமகள் அறைக்கு வர சொன்னேன். அதை சொல்லும்போது எனக்கு ஏனோ சிரிப்பாக வந்தது. பேசியபடியே நிமிர அங்கே வைத்திருந்த பீரோவின் மேல் கரப்பான் பூச்சி ஒன்று மீசையை சுற்றிக் கொண்டு மேலேறிக் கொண்டிருந்தது.

ஸ்ரீ வந்ததும் மூவரும் கிளம்பி திருவாலங்காடு சென்றோம்.அங்கே இருந்த ஒருவர் அதன் வரலாற்று சிறப்பை சொல்லிக் கொண்டிருந்தார்.

கோவிலுக்கு அருகிலிருந்த ஒருவீட்டின் வெளியே அண்ணா அவர்களின் கழுத்தில் கட்டப்பட்டு ஒரு ஆடு நின்று கொண்டிருந்தது.
 

ஒரு சில வீட்டு வாசலில் கோலமும் பூசணிப் பூவும் வைக்கப் பட்டிருந்தது. கோவிலுக்கு பின்னாலிருந்த நீர்நிலை படிக்கட்டில் சற்றும் நேரம் அமர்ந்து மௌனித்தோம்.

பிறகு திரும்பவும் காஞ்சிபுரம் வந்து முக்கியமாக பார்க்க நினைத்திருந்த காஞ்சி குடிலுக்குப் போனோம்.
 
காஞ்சி குடில் விவசாய சமூகத்தை சேர்ந்த வெள்ளாள குடும்பத்தின் பழைய வீடு. அந்தக் காலத்தில் பயன்படுத்திய தொட்டில், சமையல் சாமான்கள், தூக்குப் போசி முதலான பெரும்பாலான சாமான்களை பாதுகாத்து வைத்திருந்தார்கள். காஞ்சி குடில் மனதைக் கவர்ந்தது. கிணற்றிலிருந்து நீர் இறைத்து வெகு காலம் ஆகி இருந்ததால் அங்கே கிணற்றில் நீர் இறைக்கலாமா என்று கேட்டேன். அந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருந்தவர் சரி எனவும் பித்தளைக் குடத்தை உள்ளே விட்டு தண்ணீர் எடுத்தேன்.

பிறகு வேக வேகமாக கைலாசநாதர் கோவில் மற்றும் சகுந்தலா ஜெகன்நாத் ம்யூஸீயம் பார்த்துவிட்டு அறைக்கு வந்து காலி செய்து விட்டு வேடந்தாங்கல் செல்ல கிளம்பினோம். ம்யூஸீயத்தில் நாட்டுப்புற இசைக் கருவிகளை பாதுகாத்து வைத்திருந்தார்கள். அவர்கள் பூட்டும் நேரம் ஆகிவிட்டதால் சரியாக முழுவதையும் பார்க்க முடியவில்லை என்றாலும் யாழைப் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. 

காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் பஸ் பிடித்தோம். என்னருகே அமர்ந்து இருந்த பெண்மணி என்னோடு பேச்சுக் கொடுத்தபடியே வந்தார். பஸ் மக்கள் கூட்டத்தில் திணறிக் கொண்டே ஓடியது. தினமும் இப்படிதான் இருக்குமா என்றேன். ஆமா மாலை நேரத்தில் இப்படி இருக்கும் என்றார். அவர் இறங்கும்போது வாங்க வீட்டுக்கு என்று புன்னகைத்தார்.

உத்திரமேரூர் வந்து உத்திரமேரூரிலிருந்து பஸ் பிடித்து புழுதிவாக்கம் வந்திறங்கி அங்கே இருந்த பானிபூரி கடை தம்பதியரிடம் அங்கே இருந்துவேடாந்தாங்கலுக்கு செல்லும் பஸ் எப்போது வரும் என்று கேட்டோம். இப்போதானே போச்சு இன்னொரு பஸ் வரும் காத்திருங்க என்றார்கள். பஸ் வந்ததும் ஏறினோம் அவ்வளவு கூட்டம் இல்லை ஆனால் பஸ் முழுக்க எங்களையே கவனித்தபடி இருந்தது. எங்கே இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் கேட்க அவர் சரியான பதிலை சொல்லவில்லை. நேரடியாக விசாரிக்க முடியாமல் ஒன்றிரண்டு பேர் என்னடா ஆராய்ச்சி பண்ணப் போறாங்களா என்று சத்தமாக வினவும் தோரணையிலும் தங்களுக்குள்ளுமாக பேசிக் கொண்டார்கள். பஸ்ஸில் இருந்த ஒன்றிரண்டு பெண்கள் அக்கறையாக எங்களுக்கு இறங்க வேண்டிய இடத்துக்கான தகவலை சொல்லிவிட்டு பத்திரமாக செல்லும்படி அறிவுறுத்தினார்கள். நாங்கள் விடுதியில் இறங்கியபோது மணி இரவு ஒன்பது ஆகி இருந்தது.

 


-தொடரும்-

 

 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்... தொடருங்கள்...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

shri Prajna said...

Nice Write up da... Waiting for the Next part...