Tuesday, January 21, 2014

3. காஞ்சி முதல் காரைக்குடி வரை : விழுப்புரம்


சரணாலயத்திற்கு உள்ளே பார்க்க வருபவர்களை அமைதி காக்க வலியுறுத்தி ஆங்காங்கே பலகையில் எழுதி வைத்தால் என்ன என்று ஸ்ரீ திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். உள்ளே இருந்து வெளியே வந்ததும், சுற்றுலா வருபவர்களின் இரைச்சல் அதிகமாக இருக்கிறதெனவும் அது பறவைகளுக்கு இடைஞ்சாலாகும் எனவே கொஞ்சம் உள்ளே செல்லும்போது அமைதி காக்க சொல்லக் கூடாதா என்று வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம் ஸ்ரீ வருத்ததுடன் சொன்னாள். நாங்க சொல்லிட்டே தான் இருக்கோம்மா ஆனாலும் எங்கம்மா கேக்கறாங்க என்றார்கள் அவர்கள். அவர்கள் சொல்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்றாலும் உண்மையிலேயே ஏன் நமக்கு அந்த உணர்வே வருவதில்லை? இந்த நமக்கு என்பதில் நானும் தான் சேர்த்தி. வன விலங்குகளுக்கு இடைஞ்சல் எனத் தெரிந்தும், நண்பர்கள் சூழ சூழல் குறித்த பிரக்ஞை மரத்து, யாமம் வரை வனமதிர பேசி தீர்த்த சுயநலம் மிகுந்த அந்த நாள் என் நினைவில் ஆட நான் ஒன்றும் பேசாது அமைதியாக உடன் நடந்தேன்.

 

வாயிலுக்கு அருகில் ஒரு அம்மா சிறு சிறு பிடிகளாக பனங்கிழங்கை கட்டி வைத்திருந்தார். அதை தாண்டி வரிசையாக நிறைய பெட்டிக் கடைகள் இருந்தது. இங்கே பைனாகுலர் வாடகைக்கு கிடைக்கும் என்று சில கடைகளின் முன்னே எழுதி தொங்கவிட்டிருந்தார்கள். அடடா இதைப் பார்காம உள்ளே போய்ட்டமே என்று மூவரும் அசடு வழிந்தோம். தன்னிடம் இருந்த பைனாக்குலரை எடுத்து வரவில்லை என்று செல்வதற்கு முன்னேயே வருத்தப் பட்டுக் கொண்டிருந்த சுமா இப்போது இன்னும் அதிகமான வருத்தம் கொண்டாள். ஒரு கடையின் முன்பு இளநீர் குலைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கவும் இளநீர் குடிக்கலாம் என்று சுமாவும் ஸ்ரீயும் அந்தப் பக்கம் போக நான் டீ குடிக்கிறேன் என்று எனக்கு நேராக இருந்த டீ கடைக்கு சென்றேன். கடைக்கு முன்னே சுக்கு டீ கிடைக்கும் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. நான் அவரிடம் இஞ்சி டீ கிடைக்குமா என்றேன் அவர் ஆம் என்று தலையாட்ட ஒன்னு குடுங்க என்று வாங்கிக் குடித்தேன்.


குடித்துவிட்டு சிறிது தூரம் நடந்ததும் சற்று முன்னால் ஒரு அம்மா அப்பொழுதுதான் வடை சுடத் துவங்கி இருந்தார். வடை கண்ட இடத்தில் எல்லாம் சுமா ஸ்ரீ இருவரின் கால்களும் தாமாக நின்றுவிடும். அதாவது இனிப்பகத்தை கண்டால் அதிலேயே விழுந்துவிடும் என் கண்களைப் போல இவர்களை இழுப்பது வடை. இப்பொழுது என்ன செய்யப் போகிறார்கள் என்று அமைதியாக நோட்டம் விட்டேன். அருகே சென்றதும் இருவரும் தயங்கி தயங்கி நடந்தார்கள். பிறகு விலை என்ன என்று விசாரித்துவிட்டு வாங்காமல் முன்னே நடக்க ஏம்மா காலங்காத்தால விலை கேட்டுட்டு வாங்காம போகாதீங்க அப்புறம் இன்னிக்கு பூரா இப்படி தான் இருக்கும் வியாபாரமே நடக்காது என்றார். எண்ணெய் நல்லாதான் இருக்கு வாங்கிக்கலாம் சொல்லியபடி வடையை ஸ்ரீ வாங்கினாள். அம்மா உங்களுக்கு நல்லா வியாபாரம் ஆகனும்ன்னு தான் எனக்கும் ஆசை ஆனா நீங்க குடுத்த கை என்று சொல்லி நிறுத்தினேன். பாவம் அவர் நான் சொல்ல வந்ததை புரிந்துகொள்ளாமல் சந்தோசம் மா என்று முகம் பூரிக்க சொன்னார். நானும் அப்படியே மழுப்பி முன் நடக்க வடையின் சுவையில் ஸ்ரீ என்னை ஒன்றும் சொல்லாமல் வந்தாள்.


வடையை மென்றபடி அவர்களும், புகைப்படங்களை எடுத்தபடி நானும் நடந்து முன்னே வர ஒரு அழகான குடில் தென்பட்டது. மூவரையும் அது ஒரே நேரத்தில் ஈர்த்தது. பூட்டி இருந்த அதனருகே சென்று சுவற்றுக்கும் கூரைக்கும் இருந்த இடைவெளியில் உள்ளே ஆராய்ந்து விட்டு சில புகைப் படங்களை எடுத்தோம். அங்கே யார் தங்கி இருக்கிறார்கள் என்று அறியும் ஆவல் மிகுந்தது. நாங்கள் வெளியே வர ஒரு சிறுமி வாயிலில் நின்றிருந்தாள். அவளிடமிருந்து அவள் பக்கத்து வீட்டில் குடி இருப்பதாகவும் குடிலில் யாரும் தாங்குவதில்லை எனவும் அவ்வப்போது யாரேனும் வருவார்கள், சும்மா இணைப்புக்கு வேண்டி இதை அமைத்திருக்கிறார்கள் எனவும் அறிந்தோம்.

நின்று நிதானித்து நடந்து ஒரு வழியாக தங்குமிடம் அடைந்தோம். உள்ளே நுழைந்ததும் உணவு மேஜையின் மேல் தயாராக வைக்கப்பட்டிருந்த பொங்கல் மற்றும் இட்லியை வேகமாக உண்டு முடித்தோம். அறைக்கு சென்று ஹீட்டர் போட்டு முந்தின நாள் அழுக்கையும் சேர்த்து நன்றாக தேய்த்துக் குளித்து கிளம்பினோம். உண்மையில் வனத்துறை பங்களாக்கள் நன்றாக பராமாரிக்கப் படுகின்றன. இதை நாங்கள் கலக்காடு - முண்டந்துரையிலும் கண்டிருக்கிறோம். மூவரும் தயாரான பிறகு ஸ்ரீ எங்களுக்கு அங்கே தங்க அனுமதி அளித்த அதிகாரியை அழைத்து எல்லாம் சௌகரியமாக இருந்தது எனக் கூறி ஏற்பாடுகளை செய்தமைக்கு நன்றி தெரிவித்தாள். உதவியவர்க்கு நன்றி சொல்வது, எவர் வீட்டுக்கேனும் சென்றால் பாராட்ட விசயம் கிடைத்தால் தயங்காமல் அவர்களை பாராட்டுவது, சந்திப்பில் பிடித்தவர்களோடு திரும்பி சென்ற பிறகும் தொடர்பில் இருப்பது இதை எல்லாம் அவள் எப்போதும் மறக்காமல் செய்வாள். நான் அதற்கு நேர் எதிர். என்னிடம் சிலாகிப்புகள் மிக மிகக் குறைவு.அவள் பேசி முடித்ததும் கீழே வந்து எங்களுக்கு உதவியவரிடம் நாங்கள் கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் அதற்கு இங்கே இருந்து எப்படி செல்ல வேண்டும் என கேட்க அவர் முதலில் மதுராந்தகம் செல்லும் படியும் அங்கே இருந்து விழுப்புரம் வண்டி கிடைக்கும், விழுப்புரம் சென்றால் கங்கை கொண்ட சோழபுரம் செல்லலாம் என்றார்.


தூக்கமுடியாமல் பைகளை தூக்கி முதுகில் சுமந்தபடி பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தோம். அன்று பயண நேரம் அதிகம் என்பதால் முன்னேயே பிஸ்கட் பாக்கெட் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று பேசி இருந்தோம். பெட்டிக் கடை கண்டதும் சுமா பிஸ்கட் பாக்கெட் ஒன்று வாங்க நினைவுறுத்தினாள். நான் கடையை பார்த்ததும் ஜாடியில் இருந்த தேன் மிட்டாய் என்னை ஈர்க்க நான் கடைப் பக்கம் செல்ல அவர்கள் பேருந்து நிறுத்தத்தை சென்றடைந்தார்கள். பிஸ்கட் பாக்கெட் வாங்கி விட்டு தேன் மிட்டாய் மூன்றையும் வாங்கினேன். அதற்குள் கூட்டு ரோடு செல்ல ஸ்ரீ ஒரு ஆட்டோவை பிடித்து விட்டு அங்கே இருந்து என்னை சைகையால் துரிதப் படுத்தினாள். நானும் விரைந்து சென்று ஏறிக் கொள்ள பதினைந்து ரூபாய் வாடகை என்றார். அது ஷேர் ஆட்டோ என்பதால் எங்களோடு இன்னும் ஒரு அம்மாவும் ஒரு சிறுமியும் பயணித்தனர். பயண வழியிலேயே நூறு ரூபாய்க்கு இதே ஆட்டோவில் மதுராந்தகம் செல்ல முடிவு செய்தோம்.


மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோக்காரரின் பரிந்துரைப்படி விழுப்புரம் பேருந்துக்கு காத்திருக்காமல் மேல்மருவத்தூர் பஸ் பிடித்தோம். மருவத்தூர் சென்று இறங்கி சில நிமிடங்களிலேயே விழுப்புரம் வழியாக ஏதோ தொலை தூர ஊருக்கு செல்லும் பஸ் கிடைக்க அதில் ஏறினோம். அரசு பேருந்தின் இருக்கைகள் அத்தனை வசதியாக இருக்கும் என அன்றே நான் உணர்ந்தேன். மனம் மிக உல்லாசாமாக இருந்தது. சிக்கென் பிரியாணி சாப்பிட்டால் தான் அன்றைய விரதப் பலன் கிடைக்கும் என்று ஸ்ரீ கறாராக சொல்லி விடவே விழுப்புர பேருந்து நிலையத்தில் இறங்கி அதற்கு எதிர்புறம் இருந்த அசைவ உணவகத்தில் நாங்கள் பிரியாணியும், சுமா ரசம் சோறும் சாப்பிட்டு வெளியே வந்தோம்.


வெளியே வந்ததும் ஸ்ரீ, தோள்பட்டை வலியைக் குறைக்க தான் ஒரு விசயம் கண்டுபிடித்திருப்பதாகவும் பையின் பளுவை கொஞ்சம் பின்புறத்தை தூக்கி அதற்கு ஷிஃப்ட் செய்து நடந்தால் சுமை அவ்வளவாக தெரியவில்லை என்று என் முன்னே நடந்து காண்பித்தாள். கொஞ்சம் போல நடந்து பின்பு என்னை திரும்பிப் பார்த்து பெருமிதத்துடன் எப்படி என்றாள். சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு செம்ம ஐடியா ஆனா என்ன நீ போன பிறகு அது ஒரு கிலோ மீட்டர்க்கு பின்னால வருது என்றேன். ஏய் நிஜமாவா என்று அவள் கேட்டு முடிக்கும் முன்னே இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்ததில் என் கண்கள் ததும்பத் துவங்கி இருந்தது. பாஷை புரிந்ததோ என்னவோ சுமாவும் ஒரு ஓரமாக நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். அதுவரைக்குமான பயணமும் அனுபவமும் மிக நன்றாகவே இருந்தது.


திரும்பவும் பேருந்து நிலையம் வந்து கங்கை கொண்ட சோழபுரம் பஸ் குறித்து விசாரித்தால் முதலில் கும்பகோணம் கூட்டு ரோடு போக வேண்டும் என்று சொல்லி பிறகு அங்கே இருந்து கும்பகோணம் பேருந்தில் ஏறி ஜெயங்கொண்டான் கூட்டு ரோடில் இறங்கி அங்கே இருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்றார்கள். கேட்கவே தலை சுற்றியது பிறகும் தொடர்ந்து எப்படியும் அங்கே செல்ல ஆறு மணி ஆகிவிடும் என்று தகவல் சொன்னவர்கள்  கூறவே எங்களுக்கு அன்று கங்கை கொண்ட சோழபுரம் பார்த்து விட்டு தாராசுரமும் பார்த்து வேதாராண்யம் போக முடியுமா என்ற சந்தேகம் வலுத்தது.
 
-தொடரும்-
 

 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விரதப் பலன் கிடைத்தது சந்தோசம்...! தொடர வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

Sugirtha said...

நன்றி தனபாலன்.