Tuesday, November 10, 2009

ஒற்றைக் காகிதம்

எல்லா வேலையும் முடிந்து நான் உறங்கப் போகிறேன். உறங்க போவதற்கு முன் சில நல்ல காட்சிகளை கற்பனை செய்வது எனக்குப் பிடிக்கும். அந்தக் காட்சிகள் என்னை ஒரு வித மயக்கத்துக்கு கொண்டு செல்லும் பின் கனவுகளிலும் தொடரும். இன்றும் ஒரு கற்பனை செய்தேன். பச்சை புல்வெளி அதில் ஆங்காங்கே வெண் பஞ்சுப் பூக்கள். நான் வெள்ளை நிற ஆடை உடுத்தி அந்த மலர்களை தடவிய படி நடக்கிறேன். வெண் புரவி ஒன்று ஆற்றை கடந்து வருகிறது. அதை தொடர்ந்து காற்றில் அங்குமிங்குமாய் ஒரு புறா அல்லாடி பறந்து வந்து கொண்டிருக்கிறது. அதன் கால்களில் ஒரு கடிதம் சுருட்டிக் கட்டப் பட்டிருக்கிறது. நான் அதை எட்டிப் பிடிக்க முடிவு செய்தேன். அது எனக்கு சிக்காமல் மேலெழும்பிப் பறந்தது. அதை தொடர்ந்து பின் சென்று கொண்டே இருந்தேன். குதிரையை முதலில் எனக்கு சிநேகம் பண்ணிக்கொள்ள முடிவு செய்தேன். குதிரையை தொடர்ந்து நடக்க நடக்க நான் சிறு வயதினள் ஆகிக் கொண்டே வந்தேன். என் முன் நான் கடந்து வந்த காட்சிகள் ஒவ்வொன்றாய் விரிந்தது. என் முன்னே என் பள்ளி நாட்களும் சில நிகழ்வுகளும் வந்தது.

முதல் வருட விடுதி நாட்கள் நான் அனாதையாக உணர்ந்த நாட்கள். எங்கேயோ தெரியாத கூட்டத்துக்குள் என்னை தொலைத்து விட்டு சென்று விட்டனர் என்னை என்றே தோன்றும். எனக்கு புரியாத இடம், தெரியாத கூட்டம் மூச்சுத் திணறும். இரவு உறங்குவதற்கு முன்னர் ஒரு தரம் என்னைக் கரைத்துக் கொண்டு அழுவேன். யாருக்கும் தெரியாமல் அழ வேண்டும் என்ற முயற்சியில் அடக்கி வைக்கும் விசும்பல்கள் பின்னிரவில் தேம்பல்கலாய் வெளியேறும். அதே ராகமாக ஏதாவது ஒரு நொடியில் நான் உறங்கி போவேன். அப்பா வருகிறாரா என்று விடுதியின் வாசல் கேட்டை பார்த்த படியே ஞாயிறுகள் கழியும். மதியம் வரை காத்திருந்து உள்ளேயே இருந்த கோவிலுக்கு சென்று அப்பா வந்தால் 101 சுற்று வருவதாய் பிள்ளையாரை வேண்டிக் கொண்டு மீண்டும் அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து காத்திருக்கும் நொடிகளை எப்படி நான் விளக்குவது. அப்போது என்னை போல் காத்திருக்கும் ஒவ்வொரு முகங்களிலும் ஏக்கமும் சோகமும் சொட்டும். அன்றைய நாட்களில் நான் என் மனதை கொட்டி எழுதிய கடிதங்களில் சில இன்னும் என் டிரங்கு பெட்டியில் இருக்கிறது. என் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்த கடிதங்கள் தான் ஒரே வழி என்று என் மனது தேர்வு செய்து விட்டது. விடுதியில் இருப்பவர்களுக்கு வரும் கடிதங்களை வார்டன் ஒவ்வொன்றாய் பெயரைக் கூப்பிட்டு கொடுத்தார்கள். நானும் அந்தக் கூடத்தில் வராத கடிதங்களுக்காக காத்திருந்த நிமிடங்களோடு காட்சிகள் முடிந்தது.

இன்னமும் நான் குதிரையின் பின்னால் நடந்து கொண்டிருக்கிறேன். புறா இப்போது குதிரையின் மேலமர்ந்து இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. குதிரை இன்னும் சளைக்காமல் நடந்து கொண்டிருக்கிறது. நான் குதிரையிடம் பேசிக் கொண்டே நடக்கிறேன். அதற்கு சகா என்று பெயரிடுகிறேன். இப்படி துவங்குகிறேன். சகா நான் பேசறது உனக்கு புரியுமான்னு தெரியல. எனக்கு எல்லா மொழியும் புரியும் நீ பேசு என்றது. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. நான் தொடர்கிறேன். நான் ஏன் உன் பின்னாடி வரேன் தெரியுமா? தெரியும் என்றது. நான் சந்தேகத் தொனியில் எதுக்குன்னு நீயே சொல்லு என்றேன். உனக்கு இந்த காகிதம் வேணும் என்றது குதிரை.

எனக்கு குதிரை கடிதத்தை காகிதம் என்றதும் சிறு கோபம் எழுந்தது. அது வெறும் காகிதம் அல்ல ஒரு கடிதம். அது ஒரு வேறு மொழி. மனதோடு நேரடியாக பேசும் மொழி. எனக்கு கடிதங்கள் நிறைய பிடிக்கும். அதிலிருக்கும் உண்மை பிடிக்கும். அதன் உள்ளிருக்கும் உணர்வுகள் பிடிக்கும். அழுகை பிடிக்கும். தெளிக்க பட்டிருக்கும் அன்பு பிடிக்கும். அதை நெஞ்சோடு அணைக்கப் பிடிக்கும். அது என்னுடையது என்ற உரிமை பிடிக்கும். என்னை நினைத்துக் கொண்டே எனக்காகவே எழுதியது என்ற நினைப்பு பிடிக்கும். இப்படி ஒரு கடிதத்தின் அருமை தெரியாத உன்னை அனுப்பி கடிதம் கொடுத்து வர சொல்லி இருக்கிறார்களே என்றேன். உனக்குத் தான் இந்தக் கடிதம் என்றது குதிரை. எனக்குள் மழை பெய்தது என் முகமெல்லாம் பரவசமும் குழப்பங்களும் மாறி மாறி வந்து போனது. யா.. யார் கொடுத்தாங்க என்றேன். அதற்கு பதில் வருவதற்கு முன்னரே வேண்டாம் வேண்டாம் நீ சொல்ல வேண்டாம் நானே பார்த்து கொள்கிறேன் அதை கொடு இப்படி என்றேன். குதிரை என்ன மொழியில் புறாவுக்கு சொன்னதென தெரியவில்லை. புறா என் தோள்களில் அமர்ந்தது நான் அவசரமாய் அதன் கால்களில் கட்டி இருந்த கடிதம் பிரித்தேன். குதிரையும் புறாவும் மறைந்தது. என் கைகளில் ஒற்றை காகிதம் இருந்தது.


5 comments:

யாத்ரா said...

romba nalla irukku sugi. romba nalla ezhuthi irukkeenga.

உயிரோடை said...

ந‌ன்றாக‌ எழுதி இருக்கின்றீர்க‌ள். விடுதியில் விடுமுறை நாட்க‌ளில் யாராவ‌து வ‌ருவார்க‌ளா என்றும் க‌டித‌ங்க‌ள் வ‌ந்திருக்கிற‌தா என்றும் தேடும் காட்சிக‌ள் க‌ண்முன்னே கொண்டு வ‌ந்திருக்கின்றீர்கள். எல்லோருக்கும் இந்த‌ அனுப‌வ‌ம் வாய்த்திருக்கும். க‌ன‌வு போன்ற‌தொரு நினைவும் அதை ச‌ம்ப‌வ‌மாக்கிய‌ உங்க‌ள் ந‌டையும் ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து. வாழ்த்துக‌ள்

Sugirtha said...

நன்றி யாத்ரா!! :)
நன்றி லாவண்யா - உங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்துக்கும்!!

மண்குதிரை said...

nice...

Sugirtha said...

நன்றிங்க மண்குதிரை!